சிறுகதைகள்
கேணிபேருந்து கொண்டு வந்து சேர்த்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று மைல் நடக்க வேண்டும். தூரத்தே கண்ணுக்கெட்டியவரை வெட்டவெளிதான். புல் பூண்டு கூட இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் அதுமட்டும் கண்ணில் பட்டது. அது மட்டும்தான் நன்றாகத் தெரிந்தது. •••• கிட்டத்தட்ட வரிசையில் நின்ற அனைவருமே இருபத்தேழு தடவை ஊற்ற வேண்டியவர்களானபடியால் நேரம் சென்றது நிற்பது கஷ்டமாக இருந்தது. பையனிடம் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டு வந்தார். அவர் அடிக்கடி சொல்வதுதான். கோவில் வந்து விடவே, கைகளை உயர்த்திக் கும்பிட்டார். அந்தக் கைகள் கீழே இறங்கவில்லை. அப்படியே, எங்கோ பார்த்துக் கொண்டிருந்த பையன் மீது பட்டும் படாதவராய், துவண்டு தரையில் வீழ்ந்தார். () () () இன்றே துக்கம் கேட்கும் நாள் என்பதுபோல நடராசனும் தட்சிணாமூர்த்தியும் வாயடைத்து நின்றனர். மேற்கொண்டு விவரம் கேட்கும் துணிவு இல்லை. பலகாரம் சாப்பிட வேண்டும் என்று சொன்னவன் கைகள் கட்டி நின்றான். நடராசன் வெகுநேரம் கழித்துப் பேசினார். "போகலாம் வா முத்துக்கறுப்பன்." மூவரும் நடந்தனர். அந்தத் தெருவிலிருந்த கடையிலேயே ஏதாவது சாப்பிட்டு விடலாம் என்றான். எதிரே ஒரு சோதிட சாத்திரக் கூடம். இட்டலி-காப்பி பசிக்கு இதம். பேசாது சாப்பிட்டனர். முத்துக் கறுப்பன் நிறையவே சாப்பிட்டான். ஒரு விள்ளல் இட்டலியைப் பிட்டவர் சாப்பிடாது கைகளை உயர்த்தியவாறு, "எப்படி சமாளிச்சே" என்று மெதுவான குரலில் கேட்டார் நடராசன். "அப்பாகீழே விழுந்துட்டாரே என்றுதான் தோணிச்சு. அவரைத் தூகக்ப பார்த்தேன். ஆனா தெருக் கோடியில் இரண்டு பேர் ஓடி வருவதும் பின்னால் ஒருவர் விரைந்து வரதும் தெரிஞ்சுது. பின்னால் வந்தவர் தாடிக்கார்." சாப்பிட்டு முடிந்து வெளியே வந்ததும், ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான் முத்துக்கறுப்பன். () () () இரண்டு பேர்களை முதலில் ஓடிப் போகச் சொல்லி விரைந்து வந்தார்தாடிக்காரர். தகப்பனும் பிள்ளையும் கோவில் பக்கம் செல்வதை அவர் பார்த்திருக்க வேண்டும். வந்தவர்கள், கீழே விழுந்தவரத் தூக்க, அவர் நாடி பார்த்தார். பிறகு அந்த நிலையிலேயே தகப்பனாரைப் பார்த்து இரு கைகளையும் கூப்பினார். மடத்தைச் சேர்ந்த அடியார் சாதாரணமாக கைகூப்புவதில்லை. "முதற் தீ எரிந்த காடு" என்று அவர் வாய் விட்டுச் சொன்னார். உடன் வந்த இருவரும் வேலைகளைக் கவனித்தனர். ஊர்ப் பெரியவர்களாக இருவர் வரவழைக்கப்பட்டனர். ஒரு வீட்டுத் திண்ணையில் 'அது' கிடத்தப்பட்டது. "எங்கிட்ட ஐம்பது ரூபா இருக்குது" என்று தழதழத்த குரலில் சொன்னான் முத்துக்கறுப்பன். "என்னிடமும் ஐம்பது ரூபா தந்திருக்காரப்பா - அவர் மடியிலும் ஐம்பது இருக்குதாம். எல்லாம் சொல்லிட்டுத்தான் போயிருக்காரு உங்க அப்பா" என்று சொல்லிப் பையனைத் தன்னோடு சேர்த்துக் கொண்டார். அத்தனை போதுமானதாகவிருந்தது. எடுத்துச் செல்ல மாயவரத்திலிருந்து கார் கொண்டு வரச்சொல்லி, அவனோடு ஓர் ஆளும் வர ஏற்பாடாயிற்று. காரின் முன்பக்கம் உட்கார்ந்திருந்த அவன், ஊர் வரும் வரை பின்னிருக்கைப் பக்கம் திரும்பவேயில்லை. () () () அம்மையப்ப பிள்ளை தாடிக்காரரை முன்பின் பார்த்ததில்லை. ஆனால் வள்ளியூர் அண்ணாச்சியின் பெயர் வேலை செய்தது. தாடிக்காரர் பழைய ஊர் நினைவில் மூழ்கியிருக்கக்கூடும். ஆனால் உடனடியாக வந்த நேரடிக் கேள்வியொன்றால் தாக்குண்டார். "அடியார் ஒருவரை அகப்பையால் அடித்ததுண்டா?" அம்மையப்ப பிள்ளை கேட்ட இந்தக் கேள்வியும் அவரறியாது தானாக வந்தது போன்றிருந்தது. அவர் யாரிடமும் வரம்பு மீறிப் பேசாதவர். பேசுவதும் குறைவு. தாடிக்காரர் சிறிது நேரம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு தலையசைத்தார். பிறகு தன்னிலைக்கு வந்தவராக கேட்டார். "இந்த முருகன் யார்?" "என் மகன்-முத்துக்கறுப்பன்." "முருகன் தம்பியே-வா." அவர்கள் இருவரும் பிறகு பேசிக் கொண்டிருந்தவை யாவும் வேறு மொழிபோலவிருந்ததால், முத்துக்கறுப்பன் அப்பாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். "இங்கேயே உட்காரலாம்" என்று கூறி உள்ளே சென்றவர் இரண்டு மலைவாழைப் பழங்களுடன் தண்ணீரும் கொண்டு வந்தார். "இரவு சாப்பாடு இங்கே-சொல்லி விட்டேன்." அன்றிரவு அம்மையப்ப பிள்ளை அவரிடம் சொன்ன விஷயம் இதுதான். சுர வேகத்தில் தவித்து முனகிக் கொண்டிருந்த காலை - ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு - நினைவை இழந்து, தன் பெயரே மறந்து விட்டாலும், மறக்கவொண்ணாத காட்சி. காட்சியும் அல்ல அது - ஒரு வெளி - வெளிச்சமான நிலை. அப்போது சுரமும் இல்லை, எதுவும் இல்லை. துன்பமும், வெறுப்பும், அழுக்காறும், அச்சமுமில்லாத ஓர் இருத்தலில் எத்தனை நேரமோ - அதுவும் மறந்தாயிற்று. விழிப்பு ஏற்பட்ட கண முதல் நினைவுள்ளதெல்லாம் கேட்ட ஒலி மட்டும்தான். அல்லது கண்ட ஓர் ஒலி என்று கூறுதல் சரிதாமோ - போ - முதற் தீ எரிந்த ஒரு வேளூரில் நிறைவு பெறு - அழல் குட்டம் - திங்கள் - முன் பனியில் நிற்க - எரித்த பன்னூறு விலங்குகள் அடையும் சாந்தி. விண்ணின் ஒலி-ஓசை-ஓதம்-ஓம்ம்ம்ம்-எல்லாம் ஆக. ஒப்புவித்த பாடல் தவிர வேறு தமிழறியா அவரது நினைவில் நின்ற சொற்றொடரின் பொருள் அவருக்குப் புரிந்ததுதான் விந்தை. எந்த வேளூர் என்று கேட்டான் ஒரு பண்டிதன். அன்றே அவர் தீர்மானித்து விட்டார், இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாமென்று. சுர வேகம் வந்தது போல் நீங்கி நலம் பெற்றதும், மனைவியிடமும் கூறவில்லை. புறப்படும் போதும் சொல்லத் தகுந்த விஷயமல்லவே என்றிருந்தார். விவரம் அடிகள் அறிய வேண்டும். நாளை கிருத்திகை-திங்கள்-இது முன்பனி. அம்மையப்ப பிள்ளை சொல்லாத - சொல்லத் தெரியாத விவரங்களும் உண்டு. இறைவன்வாளை உருவிக் கொண்டான். வாள் செய்து தந்தவனை மட்டும் பக்கத்திலிருத்திக் கொண்டான். கருவறையில் பூசனை செய்ய வந்த அறிவர் - ஆதி சைவர் நடுங்கினர். நீங்கள் எல்லாருமே போய் விடுங்கள். நீங்கள் எல்லாருமே கொலை செய்தவர்தாம். உங்கள் உறவு ஆட்கள்-வயல்வெளி மாந்தரையும் அழைத்துக் கொண்டு நீங்குங்கள். கொங்கணத்திலிருந்து வந்த பட்டர்கள் இனி கருவறையில் பூசனை செய்வர். அவர்கள் மடப்பள்ளியில் இனி இருக்க வேண்டாம். அவர் தம் மந்திர மொழி நன்றாகவே உள்ளது. இன்னொரு ஊருக்கு உங்கள் மறை மொழியொடு செல்க. வாள் வலி பெரிது - மழைக்கு இனி கோவிலில் ஒதுங்க முடியாது. கேட்ட குடி மக்கள் சொல்கிறார்கள். எங்களுக்கு எதுவும் தெரியாதே எங்கு செல்வோம் என்று-போங்களேன்-பழையபடி மலைக்கு-காட்டிற்கு-கடலுக்கு-இங்கே வேண்டாம். இவ்வயல்களை நான் பார்த்துக் கொள்வேன்-நீங்கள் வேண்டியதில்லை-வாள் பேசியிருக்கிறது-தீக்கடவுள் இனி உங்கள் பக்கமில்லை என்றுரைக்க அம்மக்கள் ஒவ்வொரு மூலையாகச் சென்றனர். தேனெடுக்க- எருமையின் பின்னால்-மீன் பிடிக்க, கடலுக்கென்று-சிலர் இரவலராக - ஒரு கூட்டம் தந்திரமாக வேறு திசை செல்கிறது - போகட்டும் - கொஞ்ச காலந்தான் - ஒரு நீலி வரும் வரை. அவர்கள் பொறுத்திருக்கட்டும் - தீ விடாது - ஒரு நாய் அஞ்ஞானமாய் குரைக்க, வெகு தூரத்துப் புதரில் நரியொன்று கை கொட்டிச் சிரிக்கும். பின்னாளில் மருதநில மாந்தர் நீதி தவறி தீயில் மாண்டதாக பழையனூர் ஏடு கூறிற்று. () () () பேருந்து நிலையம் நோக்கி நடந்தனர். "அந்தத் தாடிக்காரரை நீ திரும்பவும் பார்க்கலியா?" "ரொம்ப வருசம் கழிச்சு ஒரு தடவை பார்த்தேன். விசேடமா ஒண்ணும் சொல்லல்லே. ஞாபகம் மட்டும் இருந்தது. அப்புறம் சென்னை வந்த பிறகு வருசந்தோறும் வாரேன்-அவ்வளவுதான்." காப்பிக் கடைப் பக்கம் சென்று பைகளை எடுத்துக் கொண்டு அம்முதிய பெண்மணிக்கு பணமும் தந்துவிட்டு, கேட்டார் நடராசன். "உங்கப்பாவுக்கு சோதிடத்திலே நம்பிக்கையிருந்ததா?" "இல்லவேயில்லை" என்றான் முத்துக்கறுப்பன். "அதென்னது." "ஆமா - சாத்திரத்திலே உங்க சென்மங்க எல்லாம் சொல்லி இந்த நாளைக்கு இந்த நேரத்திலே வந்து சோதிடம் பாப்பீங்க அப்படிங்கற செய்தியும் அந்த ஓலையிலேயிருக்கும்." நடராசன் மகிழ்ச்சியுடன் அதிர்ந்து போய் விட்டார். இது ஒரு செய்திதான் அவருக்கு. உடனேயே பார்க்க முடிவும் எடுத்தார். "அறுபது ரூபா வரைக்கும் ஆகலாம் - அதுவும் ஒரு காண்டம் தான்" என்றான் முத்துக்கறுப்பன். யோசனை செய்ய வேண்டிய விஷயம். "நீ என்ன சொல்றே - பாக்கலாமா வேண்டாமா அதைச்சொல்லு. இத்தனைப் பேசறியே, இந்த சாத்திரத்திலே நம்பிக்கை இருக்கு இல்லை அப்படின்னு சொல்ல மாட்டேங்கறியே - 'டக்'குன்னு ஒளிவு மறைவில்லாமப் பேசேன் - இப்போ நான் சொல்றேன் - உனக்கு இதிலே நம்பிக்கையிருக்கு - கோவில் இந்த சாத்ரம் எல்லாத்திலேயும் நம்பிக்கையிருக்கு - என்னங்கறே." "அப்படியும் இருக்கும் சார் - ஆனா அது அவசியமில்லே. இப்போ ஏதோ ஒண்ணி நம்பிக்கை வைச்சா மருந்து சாப்பிடறாப்பிலே நல்லது அப்படின்னு தெரிஞ்சா நல்லதா எடுத்துக்கங்களேன். இப்படிச் சொல்றதுதான் ஒளிவு மறைவில்லாத பேச்சு. இந்த சோதிட சாத்திரம் நான் பாத்திருக்கேன். எனக்கும் ஏதோ ஒரு வித நம்பிக்கை ஆசை எல்லாம்தான். செவ்வாயும் சனியும் இருக்கிற இந்த வெளியிலேதான் நாமும் இருக்கோம்." நடராசன் நம்பிக்கையோடு கேட்டுக் கொண்டிருந்தார். "அதுக்காக நீங்க பிறந்த இடம் அப்பா அம்மா பேரு எல்லாமே இந்த ஓலையிலே எழுதி வைச்சிருக்காங்கன்னு ஏன் நம்பணும் - சோசியம் உண்மையா பொய்யா அப்படின்னு கேட்கிற கேள்வியே இங்க வரலையே. அஞ்சாயிரம் வருசமா எத்தனையோ நம்பிக்கை - ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்ணு. உலகத்திலே இந்தப் பக்கம் கோவில் அப்படி இப்படின்னு. வேறே இடத்துக்குப் போனா, இடத்தையே கும்பிடலாம். சாப்பாடு போட்டவனை-நம்மை காப்பாத்தின ஒரு பலசாலியை - நல்லதுன்னு நாம நினைக்கிற குணத்தைக் கொண்ட ஆளை - இப்படி எல்லாரையும் கும்பிட்டாச்சு. பெருஞ்சோறு போட்டவன், வீடு கட்டித்தந்தவன் எல்லாம் கூட இந்த ரகம்தாம். அந்தக் கடவுளைக் கும்பிடாதே என்னைக் கும்பிடு அப்படின்னு ஒரு கடவுள் சொல்லும். கடவுளுக்கிருக்கிற கவலை அப்படி - இப்படி ஒவ்வொருச் சங்கிலியா வந்து கிட்டு இருக்கு. முதல் சங்கிலித் துண்டு கடைசித் துண்டுன்னு கிடையாது. ஆனா எந்தச் சங்கிலித் துண்டும் எங்கேயும் போயிடல்லே. எல்லாம் புள்ளிகளா இங்கேதானிருக்கு. நாமும் புள்ளிங்கதான் - சார் இங்கேயிருந்து செவ்வாய்க் கிரகத்தைப் பார்க்கிறோமில்லியா - அங்கேயிருந்தும் பார்க்கலாம். ரெண்டு புள்ளிங்க ஏதோ சந்தர்ப்பத்திலே ரகசியம் பரிமாறிக் கொள்ளலாம். அந்த விசேடம் கொஞ்ச காலத்துக்கு. அந்தக் காலமே அஞ்சாயிரம் வருசம் ஆகிப் போச்சு. எல்லா விசேடமும் நம்பிக்கையைத் தான் கொண்டு வரும். எனக்கு உங்க மாதிரி நம்பிக்கையில்லை - கோவில் எதிலேயும். அதுக்காக நான் இங்க வரல்லே." "ஓ சரிதான் - கோவிலிலேயே நம்பிக்கையேயில்லைன்னா இந்த சோதிட சாத்திரத்திலே என்ன வாழுது." "அப்படி நீங்க ஏன் எடுத்துக்கணும். தெரியாத ஒண்ணை கடவுள்னு சொல்லிக்கிட்டுத்தான் கடைசி வரைக்கும் இருக்கப் போறோம். இனி மேலும் தெரிஞ்ச கடவுளை தள்ளிப் போட்டுட்டு இருக்கப் போறோம் - நாகரீகப் புடவை சமாச்சாரம்தான்." புரியவில்லை என்பது போல நின்று கைவிரல்களைத் தாளம் போட பயன்படுத்தினார் நடராசன். "சார் - ஒரு கருத்தரங்கத்திலே நண்பரொருவர் கேட்டார் - ரொம்ப நல்லாயிருந்தது. ஆபாசம் - ஆபாசம்னு சொல்லிக்கிட்டிருக்கீங்களே, கடவுளை விட எது ஆபாசம்? அப்படின்னு." "ஐயையோ." "அது கேள்வியில்லை சார் - பதிலுக்குப் பதில் - நினைச்சுப்பாருங்க - இந்த இடத்தையே பாருங்க. இதெல்லாம் இத்தனை குடியிருப்புக் கொண்டதாகவா இருந்திருக்கும். எல்லாம் வயல்களுக்கு மத்தியிலேயிருக்கும் பத்து பதினைஞ்சு குடியிருப்பாத்தானே இருந்திருக்கும். அதுக்கு முன்னாலே இங்கே எத்தனை எத்தனை மிருகங்களை விரட்டியிருக்கணும் - எத்தனை தடவை அதுக எல்லாம் இடத்தை மறக்காம வந்து திரும்ப திரும்ப சுத்தியிருக்கணும். அதுகளின் பொந்தும் புதரும் எத்தனை தீயில் பொசுங்கிப் போயிருக்கும். அதுக திரும்பவும் இங்க வந்தா விரட்டலாம். அல்லது வரக்கூடிய நேரத்தைத் தெரிஞ்சுக்கிட்டு தீயைக் கொளுத்தி மேளத்தைக் கொட்டி பயமுறுத்தலாம். அதெல்லாம் செய்து மறந்தும் போச்சு - மேளம் கொட்டற நேரத்தை மட்டும் மறக்காம கொட்டறோம். மிருகங்கள் இல்லே இப்போ - எல்லாம் மாறிப் போச்சு - மறந்து போச்சு - இன்னொண்ணு - மறக்காமலிருந்தா அடிபடுவே அப்படின்னு சொன்னான் ஒருத்தன் - அவன் பலசாலி. மத்தவங்க பணிஞ்சாகணும் - இனிமே தீயை வயல் வெளிலே மூட்ட வேண்டாம் நிரந்தரமா என்னுடைய இடத்திலேயே வைச்சுடலாம் - நீங்க வந்து கும்பிடலாம் அப்படிண்ணும் சொன்னான் - நல்லதுதானே - கும்பிடு போட்டுக் கிட்டேயிருந்தா நெல் விளையாது - வேலை நடக்கணும் - பயிர் உண்டாகணும் - வேலையைப் பாருங்க அப்படின்னான். இந்த இடம் அப்படி உண்டாச்சுது மிருகங்களும் இந்த இடத்தில் குறைஞ்சு போச்சு. சிலது வேறே இடத்துக்கு ஓடிப் போச்சு. அங்கேயும் தீ இருக்கும் - நேரத்திற்கு மேளம் கேட்கும் - இந்த மாதிரி இடமும் உண்டாகும்." நடராசன் மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். எதிர் கேள்வி ஏதுமில்லை. திடீரென பின்வரும் வெண்பாவொன்றை சொல்லி நிறுத்தினான் முத்துக்கறுப்பன். செந்தில் முருகா திருமால் மருகாவென் "இதென்னது - கவிமணி பாடினது மாதிரியிருக்கு." முத்துக்கறுப்பன் சிறிது சிரிப்புடன் "அவருடையதுதான் - நான் கொஞ்சம் மாத்தி உங்க பேரை போட்டேன. இப்ப நினைச்சுப் பாத்துச் சொன்னதுதான்" என்றான். 'மா' முன் நிரையும் 'விள' முன் நேரும் சரியாக இருக்கிறதாவென்று கணக்கிட்டுக் கொண்டிருந்தார் நடராசன். "நல்லாத்தானிருக்கு" என்று முகமலர்ச்சியுடன் சொல்லிவிட்டு "என்ன இப்ப திடீர்னு கவிலே இறங்கிட்ட" என்று கேட்டார். "நான் ஒரு நிமிஷத்திலே இதைச் சொல்ல முடிஞ்சா, ஒரு மணி நேரத்திலே எத்தனை எழுதலாம் - சொல்லுங்க - ஏட்டிலே பாட்டிருக்கு அப்படீன்னு சொன்னேளே - தேசிக விநாயகம் பிள்ளை கிட்டேயிருந்து கொஞ்சம் நான் எடுக்க முடிஞ்சா, எத்தனை தமிழ்ப்பிள்ளைங்க இங்க இருந்திருக்கா - ஒவ்வொருத்தர்கிட்ட இருந்தும் வரி எடுத்து பத்து, இருபது, அறுபது பாட்டுன்னு எழுதி சந்திரன் எழிலே - பெண்ணால் துன்பம் - செவ்வாய் மூணிலே - தைரியம் அப்படின்னு போட எவ்வளவு நேரமாகும் - அல்லது ஏற்கனவே நாளும் நேரமும் கணக்குப்படி எழுதி வைக்க எவ்வளவு நேரமாகும்." "அது சரி-எங்க அப்பா அம்மா பேரு வருதாமே." "அதுவும் அப்படித்தான். முதல் எழுத்து இதுதானே இதுதானே என்று கேட்டு ஏட்டைப் படிச்சுக் காட்டினா, நீங்க தலையாட்டுற பேருதான் அப்பா அம்மா பேரு." நடராசன் மௌனமாக இருந்தார். அவன் மீது கோபங்கூட ஏற்பட்டது. "பின்னே எதுக்குத்தான் கோவிலுக்கு வந்தே - சொல்லு - இப்படி இந்த இடத்தில் நிண்ணுக்கிட்டிருக்கவா." முத்துக்கறுப்பனின் மௌனத்தில் 'ஆமாம்' இருந்தது. "ஆமா" என்றான். "முப்பத்தஞ்சு வருசம்" என்றான். "எங்க அப்பா இந்த இடத்திலேதான் செத்து விழுந்தாரு - வயது எனக்கு அப்போ..." என்று சொன்னவன் குரலில் தளர்ச்சியில்லை. () () () பத்து வயதிருக்கும். அந்த வயதிலே அவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு போக வேண்டாமென்றுதான் அவன் தகப்பனார் கூறினார். ஆனால் தாயாரின் வேண்டுதல் ஒன்று உண்டு. அவனால் போய் வர முடியாதாகையால் மகன் போய் வந்தால் நல்லது என்று நினைத்தான். வேண்டுதல் நடக்க வேண்டும். வெகுதூரம் என்றுதான் சொன்னார்கள். முதலில் இராமேசுவரம் - பிறகு இந்தக் கோவில். கடைசியாக காளத்தி. அங்கிருந்து சென்னைவந்து வீடு திரும்ப வேண்டும். ஒரு வாரம் ஆகி விடும். தகப்பனாரின் ஆரோக்கியத்திற்கு ஒன்றுமில்லை. பையன்தான் பூஞ்சை உடம்பு. வருடந்தவறாமல் ஏதாவது ஒரு நோய் பற்றிக் கொள்கிறது. வேண்டுதலே அவனைப் பற்றியதுதான் - போய் வரட்டும். இராமேசுவரத்தில் கஷ்டமில்லை. தகப்பனார் பல தடவை போய் வந்த இடம். அடுத்தநாள்தான் இந்த கோயில். மடத்தில் தங்கிவிட்டு கோவில் சென்று திரும்பி, பிச்சைக்காரர்களுக்கு இரண்டு நாணயங்களைத் தந்துவிட்டு நடந்தபோது தென்பட்டது. இந்த சோதிடம். எழுத்துக் கூட்டி அதைப்படித்தான். 'அது என்ன அப்பா' என்று கேட்டான். தகப்பனார் பதில் சொல்லவில்லை. அவன் கையைப் பற்றி விருவிருவென்று நடந்து மடத்திற்கு வந்து சேர்ந்தார். மடத்தில்தான் சாப்பிட்டார்கள். அங்குள்ள தாடிப் பெரியவரோடு அப்பா பேசிக் கொண்டிருந்தார். இரவு தங்கிப் போகலாம் என்று அவர்தான் வற்புறுத்தினார். இத்தனை தூரமுள்ள இடத்தில் இந்தப் பெரியவரை அப்பாவுக்கு எப்படித் தெரியும் என்று அவன் யோசித்துப் பார்த்தான். மாலையும் கோவிலுக்குச் சென்றார்கள். இரவு வெகு நேரம் வரை பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். திருக்காளத்திக்குப் போவது பற்றியிருக்கும் என்று அவன் நினைத்துக் கொண்டே தூங்கி விட்டான். அவர்களின் சிலவகை பேச்சுகளின் மொழியே அவனுக்குப் புரியவில்லை. காலை மடத்தில் விடை பெற்று பக்கத்தில் வண்டியேறும் இடத்திற்கு வந்ததும், நேரம் இருந்தால் ஒரு நடை நடந்து கோவில் வெளிப்பக்கமிருந்தே ஒரு கும்பிடு போட்டு வந்து விடலாமென, அப்பா அவன் கைகளை பிடித்துக் கொண்டு நடந்தார். கிருத்திகையானபடியால் முருகவேளின் சந்நிதியில் கூட்டமிருக்கும். "லேய்-நீ தைரியமா இருக்கணும். எல்லாத்துக்கும் வழி உண்டு. எது வந்தாலும் கலங்கக் கூடாது. ஏத்துக்கணும் - அது முக்கியம்." முதற்தீ எரிந்த காடுகாலை நான்கு மணிக்கே அங்கு சென்று விட முடியும். காப்பி கிடைக்கலாம். குளிப்பதற்கு வெந்நீர் வேண்டும். மூன்று பேரில் ஒருவருக்கு கணக்கிலடங்காத நோய்கள். அறையொன்று தேடிப் பிடித்து, குளித்து விட்டு கோவில் - ஊர் எல்லாவற்றையும் பார்த்து அங்கிருந்து திரும்பும் வழியில் பக்கத்து ஊர் வந்து பகலுணவு சாப்பிட்டு விட்டு மாலையில் அம்பலவாணரைக் கும்பிட்டு இரவு சென்னை திரும்ப வேண்டும். இதுதான் முறைப்படி போட்ட அட்டவணை. அதன்படியே எல்லாம் நடந்தேறி விட்டது. காலை நாலரை மணியிருக்கும். சென்னை விரைவு வண்டி அங்கே நிற்காது. மாயவரம் சென்று விடும். நடத்துநரிடம் கேட்டுக் கொண்டபடியால், வண்டி நின்றது. நன்றி சொல்லி விட்டு இறங்கினால் எதிரிலேயே ஒரு காப்பிக்கடை. அதோடு சேர்ந்து வீடு. பின்கட்டில் குடியிருப்புகள் இருக்கலாம். கடைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள், ஒரு முதிய பெண்மணி. "சுடு தண்ணி வேணுங்களா-இங்கேயே குளிச்சுடலாம்" என்று சொல்லவும், மூவரில் மூத்தவரான நடராசன் அந்த அம்மாளுக்கு ஒரு கும்பிடே போட்டு விட்டார். ஒரு தடவை திருத்தணி போய் பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு, தலையைக் கூட துவட்ட முடியாத நிலையில் உடல் நடுங்கி, கொண்டு வந்திருந்த மருந்தை அந்தக் குளியலறையில் இருந்து கொண்டே சாப்பிட்டவர். குளியல் பிரச்னை தீர்ந்தது. மூவரில் தட்சிணாமூர்த்தி இளையவன். மார்கழி, தை, சித்திரை, வைகாசி எல்லாம் அவனுக்கு ஒன்றுதான். அப்படியும் ஓர் ஆள் உடனிருக்க வேண்டும். ஊர் விட்டு வந்து வேறிடத்தில் படுத்துக் கொண்டால், பண்டுவம் யார் பார்ப்பது? தட்சிணாமூர்த்தியை அப்படியெல்லாம் மட்டும் சொன்னால் போதாது. அவன் சுத்த சைவம். எல்லா சிவன் கோவில்களையும் பார்த்தாகிவிட்டது. ஸ்தல புராணங்களை யாராவது சொன்னால், அந்தக் கோவிலுக்குச் செல்லும் வழியைக் கேட்டுத் தெரிவான். ருசிகரமான இன்னொரு விஷயம் அவன் கையோடு கொண்டு வரும் உணவுப் பண்டங்கள். சாதாரணமாக ஹோட்டலில் சாப்பிடுவதையோ தங்குவதையோ விரும்ப மாட்டான். சில கோவில்களுக்குச் செல்லும்போது சென்னையிலுள்ள ஆதீன அலுவலகக் கடித மூலம் அறிமுகம் செய்து கொண்டு மடத்துச்சாப்பாடே கிடைக்கும்படிச் செய்வான். நடராசன் மாமிச பட்சிணியானாலும், அதெல்லாம் சில குறிப்பிட்ட நோய்க்கு அந்தச் சாப்பாடு அவசியமிருப்பதால் அப்படி - மற்றபடி தமக்கு அதில் இஷ்டமில்லை என்பார். நோய்களைக் கிரகங்கள் ஆட்சி செய்வதால் அந்தந்த நோய்க்குத் தகுந்தாற்போல கிரகங்களின் இருப்பிடக் கோவில்களுக்குச் சென்று வணங்குவார். ஆனால் அவர் தம் நோய்களைக் கணக்கில் கொண்டால், கிரகங்களின் எண்ணிக்கை அற்பம். எல்லாவற்றிற்கும் மேலாக போன வாரம், அவர் படுத்துக் கொண்டிருக்கும்போது, இசைகேடான இடத்தில் ஒரு பல்லி விழுந்து, பலன் பார்த்ததில் வயிறு கலங்கிற்று. இரத்த காயத்திற்கும் செவ்வாய் கிரகத்திற்கும் சம்பந்தம் உண்டு. எனவேதான் இந்த ஊர் விஜயம். இந்த மூவரில் முத்துக்கறுப்பன் வந்திருக்க வேண்டிய அவசியம் மற்றவர்களுக்குத் தெரியாது. அவன் மற்ற இருவரையும் போல சிவ பூசனை செய்பவனல்லன். சொல்லப் போனால் கடவுளை நிந்திக்கவும் மாட்டான். நிந்திக்க வேண்டுமானால் ஒன்று இருந்தாக வேண்டுமல்லவா? ஆனால் இந்தக் கோவிலுக்குப் போகப் போவதாகச் சொன்னதும், தானும் வருவதாகச் சொன்னான். ஒரு வகையில் இந்த முத்துக்கறுப்பன் கோவில்கள் பற்றிய வரலாறுகள் அனைத்தும் அறிந்த பண்டிதன். ஆவுடையார் கோவிலுக்குப் போக மற்ற இருவருக்கும் எண்ணம் வந்ததே இவன் சொன்ன சில விவரங்களால்தான். ஆனால் உடன் வர மறுத்தான். இப்போது இந்தக் கோவிலுக்குப் போவதாகச் சொன்னதும், தானும் வருகிறேன் என்று புறப்பட்டு விட்டான் - அதிசயம்தான். கடைப் பக்கத்திலுள்ள ஓர் இருக்கையில் மூவரையும் உட்காரச் சொல்லிவிட்டு, அவர்கள் குளிக்க வெந்நீர் ஏற்பாடு செய்து விட்டாள். அம் முதிய பெண்மணி. அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. குறித்தவுடன் கிடைத்த காப்பியும் நன்றாகவேயிருந்தது. வேட்டி மாற்றிக் கொண்டு மூவரும் வெளி வருகையில் பலபலவென விடியத் தொடங்கியிருந்தது. கொண்டு வந்த பைகளை அவ்வீட்டிலேயே விட்டிருந்தனர். பணந்தர முயற்சித்தபோது, 'போகும்போது தந்தால் போதும்' என்று அந்த அம்மாள் சொல்லி விட்டாள். எனவே அறை தேடி அலையும் பிரச்னை இல்லை. மெதுவாக நடந்து சென்றனர். சிகரெட் வாங்க முத்துக்கறுப்பன் முயன்றபோது, நடராசன் தடுத்து விட்டார். மடத்திற்கு சென்று கொண்டு வந்த கடிதத்தைக் காட்டிவிட்டு அப்புறம் கோவில் செல்லலாமே என்று தட்சிணாமூர்த்தி சொன்னதையும் 'வேண்டாம்' என்று மறுத்தார். "நேரா கோவில் - மற்றது எல்லாம் அப்புறம்." முத்துக்கறுப்பன் வழி காட்டினான். சென்னையை விட அந்த ஊர் பழக்கப்பட்டது போல் நடந்தான். கோவில் தூரமில்லை. சொல்லப் போனால் அது ஒன்றுதான் அடையாளந் தெரிகிற இடம். "இங்கே சோதிட சாத்திரம் பாக்கலாம்" என்று ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினான். நடராசன் யோசித்து விட்டு, சிறிது நேரம் அந்த இடத்தையே பார்த்தார். 'சாதகம் கொண்டு வரலையே' என்று வருத்தப்பட்டார். "தேவையில்லை - ஒரு விரல் ரேகை போதும்." "அதெப்படி? கிரகபலன் கண்டு பிடிக்க வேண்டாமா என்ன - நாளும் நேரமும் தெரியணும் - இது ரேகை சாத்திரமில்லை." "இல்லே சார். நீங்க கைரேகை கொடுக்கறீங்க - அவங்க ஏடுதேடிக் கண்டு பிடிச்சு பலன்களைப் படிப்பாங்க - முன்பின் சென்மங்க எல்லாம் தெரியும்." "அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கேன் - அப்ப சாதகம் வேண்டாங்கறியா." "எதுமே வேண்டாம் - கொஞ்ச நேரம் உங்ககிட்ட பேசிக் கிட்டிருந்தா நானே சொல்லிடுவேன் எல்லா பலனையும்." "இதுதானே வேண்டாங்கறது - அப்பா பேரு அம்மா பேரு கூடவா சொல்ல முடியும் - அதுவுமா ஏட்டிலே இருக்கும்." "ஏட்டிலே தானாக எப்படியிருக்கும் - எழுதி வைச்சாத்தான் இருக்கும் - இல்லே மனசிலேயாவது அழியாம எழுதி வைச்சிருக்கணும்." கோவில் எதிராக வந்து நின்றபோது, இவர்களை காலை வண்டியிலேயே கவனித்துவிட்ட பூசனைப் பொருள் வியாபாரி அருகே வந்து நின்றான். இரண்டு தட்டு வாங்கிக் கொண்டனர். முத்துக்கறுப்பன் வேண்டாம் என்று சொல்லி விட்டான். "ரொம்ப பழைய கோவில்" என்றார் நடராசன். அவர் இங்கு வருவது இதுதான் முதல் தடவை. தட்சிணாமூர்த்தி இவ்வாராய்ச்சிகளுக்கு அப்பால் - கும்பிடு போடுவதோடு சரி. "இன்னும் நேரமாகல்லே. கொஞ்சம் இப்படி நிற்கலாம்" என்று நடராசன் கூறவும், எல்லாருமாக கோவிலின் எதிர்த்தெரு முனையில் சென்று நின்றனர். "அப்போ இந்த நாடி சாத்திரம் எல்லாம் வெறும் பம்மாத்து தானா" என்று நேரடிக் கேள்விக்கு வந்தார் நடராசன். "சார் - நாம உண்மையா நம்பற சில விஷயங்க கூட வெறும் பம்மாத்துத்தான். நம்பணுங்கற ஆசை - சில சமயம் வெறி - உள்நோக்கம் - ஒரு ஐயாயிரம் வருசமா இருந்துகிட்டிருக்கிற எண்ணம். அது நம்ம ரத்தத்திலேயிருக்கு - நம்பறதுக்கு காரணம் இருந்தா, அதை பம்மாத்துன்னோ மோசடின்னோ எப்படிச்சொல்ல முடியும்." "ஆசைதான் காரணங்கிறே நம்பறதுக்கு இல்லையா?" நடராசன் சில விஷயங்களில் பேச்சை விடாது பேசுவார். சலிக்க மாட்டார். ஆனால் முத்துக்கறுப்பன் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியையே பார்த்துக் கொண்டிருந்தான். "என்ன சார் போலாமே" என்று மெதுவாகக் கேட்டான் தட்சிணாமூர்த்தி. "ஆமாமா - போலாம்" என்று நடராசன் சொல்லவும் மூவரும் அந்தக் கோபுரத்தைப் பார்த்தவாறே கோவிலுக்குள் நுழைந்தனர். () () () பரந்து கிடந்த அந்தக் கோவில் பிரகாரங்களின் வழி நீண்டு செல்ல, நடராசன் அதிசயித்தார். காலை பூசனை முடிவுறவில்லை. கும்பிட்டுவிட்டு, மூலவறையில் பிரகாரத்தைச் சுற்றும்போது, நடராசன் அங்கிருந்த மூன்று வித்யாசமான அளவு கொண்ட இலிங்கங்களைக் கண்டார். முத்துக்கறுப்பன் அப்பகுதியின் மேலுள்ள சுவரெழுத்துக்களைக் கவனித்துப் பார்த்தான். அவன் ஏற்கனவே இவைகளையெல்லாம் கண்டிருக்க வேண்டும். முத்துக்குமரனையும் கும்பிட்டாயிற்று. சுற்றுப் பிரகாரத்திலிருந்த நவக்கிரகங்களையும், செவ்வாய்க்கென இடம் பெற்ற சந்நிதானத்தையும் நடராசன் பயத்துடன் கும்பிட்டுக் கொண்டார். அக்கணமே அவருடைய நோய் ஒன்றின் குணம் தென்பட்டது. கோவிலின் பிரசாதமான உப்பையும் வாங்கிக் கொண்டார். வெளியே வந்தபோது, முத்துக்கறுப்பன் அங்கே வரிசை பெற்றிருந்த நபர்களில் ஓர் ஆண் - ஒரு பெண் இருவருக்குமாக சில நாணயங்களை அளித்தான். நடராசன் மூன்று கேள்விகளைத் தொடர்ந்து கேட்க நினைத்திருந்தார். பிச்சை போட்டு விட்டு முத்துக்கறுப்பன் விடுவிடுவென நடந்து கோவிலுக்கு எதிராக, முன்னர் எல்லாருமாக நின்று கொண்டிருந்த எதிர்த் தெரு முனையில் போய் நின்றான். அந்த இடத்தின் தரையைச் சுற்று முற்றுமாகப் பார்த்தான். நடராசன் இப்போது நான்கு கேள்விகளைக் கேட்க நினைத்தார். தட்சிணாமூர்த்தி மெதுவாக "என்ன சார் - பலகாரம் சாப்பிட்டு விடலாமா" என்று கேட்டான். இருவரும் முத்துக்கறுப்பன் பக்கமாக வந்து நின்றனர். முத்துக்கறுப்பன் நகரவில்லை. நின்றவிடத்தையும் அந்தப் பிச்சைக்காரர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆயாசம் தீர நடராசன் கொஞ்ச நேரம் கோபுரத்தையும் வானத்தையும் பார்க்க, தட்சிணாமூர்த்தி வருவோர் போவோரில் மடத்து ஆட்கள் தென்படுவார்களா என்று கவனித்துக் கொண்டான். கூட்டம் அதிகமில்லை. "அப்ப இந்த சோதிடம் பாக்கணுமா வேண்டாமா - சொல்லு" என்று கேட்டார் நடராசன் திரும்பவும். "பாருங்களேன் - ஒரு வேளை அதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சுத் தான் நீங்க அங்க போகணும்னு இருக்குதோ என்னவோ." |
||
|