மா. அரங்கநாதன் நேர்காணல்! தமிழ் புனைவு உலகில் மிகுந்த தனித்துவமும் கலைத்துவமும் கைவரப்பெற்ற எழுத்தாளர் மா.அரங்கநாதன். சுமார் 56 ஆண்டுகளாக எழுதிவரும் இவரது சிறுகதைகள் புதுமைப்பித்தனின் சிறுகதைகளுக்குச் சற்றும் குறைந்துவிடாத பரீட்சார்ந்த குணம் கொண்டவை. தமது வாழ்வனுபவத்தோடு தத்துவார்த்த விசாரணைகளோடும் விரியும் புனைவு வெளி, ஆரிய வைதீகத்தைக் கடுமையாக அதேநேரம் மௌனமாகத் தகர்க்க முயன்று வெற்றி பெறுகிறது. இவரது பாணியும் மொழியும் தேர்ந்த சொற்களாலும் வடிவ நேர்த்தியாலும் பேசப்படும் அதேநேரம், முத்துக்கருப்பன் எனும் பாத்திரத்தைத் திரும்பத் திரும்ப கதைகளில் பயன்படுத்துவதன் வழியே தமிழ் வாழ்வியலின் மையத்தை பிரதிநிதித்துவதப்படுத்தும் இலக்கிய செயல்பாடும் இயல்பாக நிகழ்ந்து விடுகிறது. நாஞ்சில் நாட்டுக்காரரான மா. அரங்கநாதன், அரசு ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது சென்னை வாசத்திலிருந்து விடுபட்டு அமைதியான புதுச்சேரியில் குடியேறி வாழ்ந்து வருகிறார். இவரது படைப்புகள். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவரின் இலக்கியச் சாதனைக்காக தமிழக அரசு விருது, கோவை லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் பெற்றுள்ளார். ‘இனிய உதயம்’ இதழுக்காக மா. அரங்கநாதன் பேசியதிலிருந்து....
தமிழின் ஆச்சரியமான சிறுகதை ஆசிரியர் 19.03.2011 அன்று 79 வயது எழுத்தாளரான மா. அரங்கநாதனை பாண்டிச்சேரியில் அவரது வீட்டில் அ. இலட்சுமி, தி. முருகன், வி. ராஜீவ் காந்தி, வி. தனசேகரன் ஆகியோர் எடுத்த பேட்டியின் முதல் பகுதி பிரசுரிக்கப்படுகிறது. பேட்டியை எழுதியவர் அ. இலட்சுமி. கேள்வி: நகுலன், கா.நா.சு உங்கள் கதைகளைப் பாராட்டியுள்ளனர். எப்படி? பதில்: நகுலனும், கா.நா.சுவும் என்னிடம் ஒரே கேள்வியைக் கேட்டனர். சான்பிரான்சிகோவிலிருந்து திருவல்லிக்கேணிக்கு வந்தவன் வீட்டு மேலறையைப் பார்க்காமலே வீட்டுக்காரருடன் பேசிவிட்டுச் சென்று விட்டான். அதற்காகவே வந்தவன் அவன். ஏன் வீட்டறையை பார்க்காமலே போனான் என்று கேட்டார். நான் எனக்குத் தெரியாது என்று சொன்னேன். இதே கேள்வியை நகுலனும் என்னிடம் கேட்டார். இதே கேள்வியைத்தான் கா.நா.சுவும் என்னிடம் கேட்டார்னு சொன்னேன். அதற்கு அவர் தெரியாமல் இருப்பதால்தான் நாம் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்றார்.
|