Girl in a jacket

தமிழ் வேரிலிருந்து ஓர் அதிசய படைப்பாளி - தமிழவன்

மா. அரங்கநாதனின் மொத்த சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு முன்னுரை எழுதும் இன்று எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மா. அரங்கநாதனின் ‘பஃறுளியாற்று மாந்தர்’ புதினம் சாகித்திய அக்காதமியின் இறுதித் தேர்வில் இருந்தது. மூன்று நிபுணர்களில் இருவர் மா. அரங்கநாதன் பற்றிய தத்தம் அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொண்ட செய்தியை அவர்களில் ஒருவர் சமீபத்தில் சொன்னார். ‘அய்யா, நான் அரங்கநாதனுக்குப் பரிசு கொடுத்தால் மொத்தத் தமிழ்ச் சூழலும் மாறும் என்றாலும் அவர் எனக்கு அரங்கநாதன் யார் என்று தெரியாதே என்று அல்லவா கூறிவிட்டார்.’ இதுதான் அந்த இரண்டாம் நபர் பற்றிய முறையீடு.

ஆக அரங்கநாதனின் முதல் நாவலே பரிசுக்குரியது என்று ஒருவரும் அவர் யார் எனத் தெரியாது என இன்னொருவரும் கூறும் நிலை. பெரும்பாலும் தமிழிலக்கிய உலகமே இந்த இரு போக்கையும் கொண்டதுதான். இந்தப் பின்னணியில்தான் மா. அரங்கநாதன் பற்றிய மதிப்பீட்டைச் செய்ய வேண்டும்.

எனக்கு அரங்கநாதன் அவர்களின் கதைகள் பரிச்சயம் ஆனது பெரும்பாலும் முன்றில் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட பிறகுதான் என்று எண்ணுகிறேன். ஏதோ ஒரு கதையைப் படித்தேன். கதை நினைவில்லை. ஆனால் அந்தக் கதை என்னை இவர் யார் என்று அறிந்து கொள்ளத் தூண்டியது. அதன் பின்பு ‘உவரி’ என்ற கதையைப் படித்தபோது வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு தன்மையைத் தொடர்ந்து போய்க் கொண்டிருப்பவர் இவர் என்று மனதில் உறைத்தது. அன்றிலிருந்து இவர் கதைகள் எங்குத் தென்பட்டாலும் படிக்க ஆரம்பித்தேன்.

நாங்கள் ஒரு சில நண்பர்கள் சேர்ந்து ‘வித்யாசம்’ என்ற இதழ் கொண்டு வர எண்ணி ஓரிரு இதழ்கள் கொண்டு வந்திருந்தோம். அடுத்து மா.அரங்கநாதன் சிறப்பிதழும் வள்ளலார் சிறப்பிதழும் கொண்டு வரவேண்டும் என்று ஆசிரியர் குழுவில் நான் ஒரு திட்டத்தை முன்வைத்தேன். இவ்விரு சிறப்பிதழ்களுக்கும் நான் கொண்ட அடிப்படை தமிழ் வேரிலிருந்து நவீனப் படைப்பை இனம் காணும் ஒரு முயற்சி வேண்டும் என்று. இப்போது கூட இவரது பெரும்பான்மைக் கதைகளையும் ஒருசேரப் படிக்கும்போது இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் தமிழ் மைய அடையாளம் கொண்ட ஆகிருதி இவருடையதாக எனக்குப் படுகிறது. இந்த இடத்தில் சர்ச்சைகள் வரும். அதனால் என் கருத்தைத் தெளிவாக்க வேண்டும். தமிழ் மையம் என்று நான் கருதுவது குறிப்புப் பொருள், அப்படியே வந்து உள்ளுறை, இன்னும் சற்று தூரம் அப்படியே வந்தால் தமிழில் கிடைக்கும் பக்தி சார்ந்த திருமூலரின் தத்துவக் கவித்துவம், இவையும் இவற்றின் படைப்புத் தன்மை கொண்ட தொடர்ச்சியும். அரங்கநாதன் ஏன் புரட்சிகரமான கதை எழுத்தாளர் என்றால் (மரபை உடைப்பது புரட்சி) தமிழ் மைய மரபில் கவிதைக்கு இடமுண்டு. கதைக்கு இடமில்லை. அதாவது உரை நடையில் எழுதப்படும் கதைக்கு. இது பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்பு தமிழுக்குக் கிடைத்தது. அதாவது உரைநடை மூலம் கதை எழுதி இலக்கியம் உருவாக்கும் போக்கு. இந்தப் போக்கை ஆங்கில மரபில்தான் பலர் இனம் கண்டார்கள். பழம் தமிழிலக்கியத்தில் ஊறித் திளைத்த மறைமலையடிகள் கூட தமிழ் மரபில் கதை எழுத முடியும் என்று நினைக்கவில்லையே. நினைத்திருந்தால் நாவல் துறையில் ஈடுபட்ட அவர் அப்படிச்செய்திருப்பாரே. அப்படிப் பார்க்கும்போது மா. அரங்கநாதனின் முக்கியத்துவம் தெளிவாகும் என்று நினைக்கிறேன்.

இங்கு ஒரு கேள்வி வரும். இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கதை இலக்கியத்தில் மிகவும் உச்ச நிலையைத் தொட்டவர்கள் என்று கருதுகிற புதுமைப்பித்தனும் மௌனியும் மா. அரங்கநாதனின் முன் எத்தகைய ஆகிருதியை (Stature) கொண்டர்களாய் உருவாவார்கள் என்பது. இந்த மூன்று பேருடைய ஒப்பீட்டையும் செய்யும்போது, உடனடி நடக்கும் அரசியல் சர்ச்சையைக்கூட நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில் தப்பில்லை. கடந்த 50 ஆண்டுகளாகப் பிராமணர் பிராமணரல்லாதார் சர்ச்சையைத் தவிர்த்து இலக்கியம் பற்றிப் பேசமுடியாத நிலை, தமிழில் உண்டு. எனவே மா.அரங்கநாதன் மரபு, 2000 ஆண்டுகளாகத் தொடரும் மொத்த தமிழின் பிராமணரல்லாத செல்நெறி வழி கிளைவிடுகிறதா என்ற கேள்வியும் இங்கு உக்கிரத்தோடு எழும் என்பது சொல்லத் தேவையில்லை. சமூகவியல் என்பது இலக்கியத்தில் தவிர்க்கவியலாத பார்வை நெறி. எனவே பதில் சொல்லத்தான் வேண்டும்.

இந்தக் கேள்விகளைக் கேட்பதால் உடனடியாகப் பதில்களுக்கு வரும் முன் இன்றைய இலக்கியம் பற்றிய எல்லா போக்குகளையும் உள்ளடக்கிய பார்வை எப்படி அமைகிறது என்ற சுட்டிக் காட்டலும் தேவைப்படுகிறது. அதனால் இரண்டொரு வார்த்தைகள். எண்பதுகளில் இருந்து நான் உட்பட அமைப்பியல் சார்ந்த சொல் பிரயோகத்தைத் தமிழில் கொண்டு வர விழைந்தோம், இதுபற்றிய பெரிய சர்ச்சை தேவையில்லை, எனினும் இந்தப் புதுப்போக்குகள் இலக்கியம் பற்றிய புரிதலை ஜனநாயகப்படுத்தியிருக்கிறது என்பது எல்லோராலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. ஆனால் நவீனக் கல்விக்கே இயல்பாயுள்ள கலைச் சொற்களின் (technical terms) வரவு, இலக்கிய விமரிசனத்தில் பட்டப்படிப்பு உள்ளவர்கள் மட்டுமே செயல்பட முடியும் என்ற ஏற்படுத்தியது. இன்னொன்று, ஆங்கில மோகம் உள்நுழைந்த்து. எனவே இன்று விமரிசனம் செய்யும் நாம் எளிமையாக விமரிசனம் எழுதுவதற்காகச் சில பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும். அதாவது அமைப்பியல் மற்றும் அதன் தொடர்ச்சியாக உருவான எல்லாத் தலைப்புச் சார்ந்த சிந்தனைகளும் நம்புரிதலுக்குள் உள்ளுறைந்து கரைந்து நிற்க வேண்டும். அதே நேரத்தில் அதில் தமிழ் மரபும் இருக்க வேண்டும். உலகமயமாதல் போக்குக்குள் சிறு கலாச்சாரங்கள் அடித்துச் செல்லாமல் இருக்க வேண்டுமானால் இந்த தந்திரோபாயத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும். இப்படிப் பார்த்தால் மா. அரங்கநாதன் மொத்த தமிழ் மரபிலும் - அதே நேரத்தில் அகில உலக கதை எழுத்து மரபில் - எந்த இடத்தில் இருக்கிறார் என்று கண்டு பிடிக்க முடியும்.

II

இலக்கியம் என்பது என்ன என்று இன்றுவரை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வரையறையை யாரும் சொன்னதில்லை. இலக்கியம் தொடர்ந்து மிகவும் முக்கியமான மனிதச் செயல்பாடாக இருப்பதற்கும் இந்தத் தன்மைதான் காரணம். இப்படிப்பட்ட சொல்லமுடியாத தன்மையை மா.அரங்கநாதன் கதைகள் முக்கிய விஷயமாக்க் கொண்டிருக்கின்றன. இந்தப் புதிர் தன்மை, தமிழின் பழைய இலக்கியங்களில் குறிப்புப் பொருள் என்றும் உள்ளுறை என்றும் ஆழமான இலக்கியக் குணங்களாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் பழைய இலக்கியங்களில் குறிப்புப் பொருள் என்றும் உள்ளுறை என்றும் ஆழமான இலக்கியக் குணங்களாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் பழைய இலக்கியம் பற்றிய சர்ச்சையிலும் சரி, மேற்கத்திய மாதிரியில் தமிழிலக்கியம் பற்றி உருவான 20ஆம் நூற்றாண்டின் எண்ண அமைப்புகளிலும் சரி, இந்தப் புதிர்த்தன்மை முக்கியமானதாக்கப்படவில்லை. சமஸ்கிருதத்தைப் பின்பற்றிய இந்திய மொழிகள் சில இந்தப் புதிர்தன்மையைத் தற்கால இலக்கிய சர்ச்சைக்குள் தந்து அவர்களின் மொழிகளைக் காப்பாற்றிக் கொண்டன என்பது தமிழோடு ஒப்பிட வேண்டிய தகவல். மார்க்சீய இலக்கியச் சிந்தனைகளிலும் புதிர் தன்மை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மிகச் சமீபத்தில் டெர்ரி ஈகிள்டன் மற்றும் வால்டர் பெஞ்சமின் போன்றோரின் சிந்தனைகள் இவ்விஷயம் பற்றி சிரத்தை காட்டுகின்றன.

வாழ்வு பற்றிய புதிர்

அரங்கநாதன் கதைகளில் இந்தவித புதிர், வாழ்வு பற்றிய புதிராய் பலமுறைகளிலும், வடிவங்களின் கதையுக்திகளிலும் நடையமைப்பிலும் வந்து நம்மை வியக்க வைக்கின்றன. இந்தவித மாயத் தன்மையை சைவ நூல்களை அடிக்கடிக் குறிப்பிடுவதன் மூலமும் திருக்குறள் மற்றும் சேக்கிழார், மெய்கண்டார் போன்ற சமயத் தமிழ் நூல்களைப் போகிறபோக்கில் தொட்டுச் செல்வதின் மூலமும் விதவிதமான கோயில்கள் பற்றிய பின்னணிக் குறிப்புகள் தருவதன் மூலமும் அடிமனதில் கிளப்பிவிட்டு மேல்மனதில் இன்னொரு கதையைச் சொல்வதுபோல் போக்கு காட்டுகிறார். சிலவேளை விண்மீன், சிலவேளை மரம், இன்னும் சிலவேளை ஊர்களின் புராதனம், மலை, பனை, தென்னை, அன்னாசிப் பழம் இப்படி ஒவ்வொரு தமிழகப் பொருளும் சுண்டியிழுக்கும் அர்த்தங்கள் கொண்டதாய் வந்து, வந்ததுபோலவே ஒரு சாயலை ஏற்படுத்தி விட்டுப் போகின்றன. இந்தத் தமிழ் கூட திராவிடப் பரம்பரை நினைவுபடுத்திய தமிழ்தான். திராவிடப் பரம்பரை மறுத்த சமஸ்கிருத்த்தோடு உறவு கொண்டவைகளில் லேசான (வெறும் லேசான தான்) நிராகரிப்பும் உண்டோ என்றும், தலித் பற்றிய சில பிரஸ்தாபங்களில் தென்படுகின்றன. ஆனால் திராவிடப் பரம்பரை போற்றிய மேல்நாட்டு நாத்திகம் ஒவ்வொரு வரியிலும் நிராகரிக்கப்படுகின்றது. தமிழர்களின் மரபுகளுக்குள். அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் கோயிலும், குளமும், சுற்றுப்பிரகாரமும் அர்த்தங்களைக் கோஷித்து வெளிப்படுத்துகின்றன. சமீபத்திய தமிழர்களின் சரித்திரத்தில், இயக்கங்களும், ஊர்வலங்களும், மேடைகளும் வகிக்கும் ஸ்தானம் இவரின் மனஇயக்கத்தில் புறந்தள்ளப்படுகின்றது. இவரது எழுத்துக்களில் வெளிப்படும் அரங்கநாதனுக்கு ஒரு ஆயிரம் வருஷம் வயது. அந்த ஆயிரம் வருஷமும் தமிழ் சார்ந்த வருஷம். தமிழுக்குள் இருந்த ஆழ்ந்த மனித நேசம், புராதனம், எதிர்கால அக்கறை, அன்பு, வெளிப்படும் வெறுப்பை (மனிதர்கள் என்றால் இது சகஜம்) மனித இன சரித்திரத்தில் அங்கீகரிக்கும் - மறக்கும் முறைகள், இவைகள் எல்லாம் இவர் கதைகளில் வருகின்றன. இவை இன்று திரைப்பட, டி.வி. போன்ற அலங்கோலங்களில் தன்னை இழந்த தலைமுறைக்கான மௌன எதிர்ப்புப் பாடங்கள் என்றுதான் எனக்குப் படுகின்றன.

இலக்கியம் சொல்லும் தமிழ் பாரம்பரிய மாயத்தன்மை எப்படி நம்மிடமிருந்து அகற்றப்பட்டது? இந்த மாயத்தன்மை வழிபட்ட இலக்கியத் தத்துவம் சிறுகதைகளில் பாத்திரங்களைப் படைக்கையிலும் சரி, இந்துவுக்கும் கிறிஸ்தவனுக்கும் உள்ள வேறுபாட்டை அணுகும் முறையிலும் சரி (சிறிய புஷ்பத்தின் நாணம்) ஆணும் பெண்ணும் என்னும் வேறுபட்ட இனத்தினர் வாழ்க்கை சம்பந்த்த்தை அணுகும் வித்த்திலும் சரி (மைலாப்பூர்), மேற்கத்திய கலாச்சாரமும் இந்தியக் கலாச்சாரமும் பற்றிய வேறுபட்ட பார்வைகள் இணையும் தளத்திலும் சரி, முரண்பாடு இருந்தாலும் அந்த முரண்பாடுகள் தம்மை வெளிப்படுத்துவதில உள்ள நளினம் தமிழை, தமிழ் மக்களைப் பற்றிய புது ஆவணமாக வாசிப்பவர்களிடம் பரவும். தமிழர்கள் என்றால் அரசியல் கட்சி நடத்துபவர்கள்/அல்லது அக்கட்சிகளின் தொண்டர்கள் என்று வெளிப்படுத்தும் இன்றைய தமிழ் சரித்திரத்தின் அபத்தம் ஒவ்வொரு வரியிலும் சப்தமின்றி வெளிப்படுத்தப்படுகின்றது. மேற்கத்திய முறை முரண்பாடு பகை வழியில் பிறந்த்து. பாரதீய / தமிழ் வழி முரண்பாடு பகையின்மை வழி பிறந்த்து என்று இந்தக் கதைகளை உதாரணப்படுத்தி வெளிப்படுத்தும் அரங்கநாதன் பிற கதைகளிலும் சுபாவமாக இவ்விஷயங்களையே வைக்கிறார்.

மாந்திரீகமும் வாழ்வும்

வேறு சில கதைகள் இருக்கின்றன. தமிழ் மரபின் வாழ்க்கைப் பார்வையில் அடியோட்டமாய் அமைந்து இந்த 2000 ஆண்டு காலமும் தாண்டி இன்றும் கூட கணம் கணமும் கொப்புளித்துக் கொண்டிருக்கும் மாந்திரீகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். மாந்திரீகம் என்பது வாழ்வின் பிரச்சனைகளின் சந்தர்ப்பத்தில் அதை மேலெடுத்துச் செல்லும் பாரம்ம்பரிய அறிவியல்தான். ஒரு இயக்கம் வந்து இதற்கு எதிராய் பிரச்சாரம் செய்து படித்தவர்களை இலக்கியம் சம்பந்தப்பட்டவர்களாய் மாற்ற மறந்து போனது. எனவேதான் படிக்காதவர்கள் – வாழ்வுக் கணக்கில் தவறியவர்கள் – இன்றைய தமிழிலக்கியத்தில் பங்களிப்பு செய்பவர்களாய் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். அரங்கநாதன் ஓரளவில் வாழ்வில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவராய் இருந்தும் இன்றைய இயக்கங்களின் பிரச்சாரத்தையும் அதன் அகங்காரத்தையும் எப்படி நிராகரிக்க முடிந்த்து? ஒருவேளை இவர் பிறந்த மண்ணின் மரபு இறுக்கத்துக்குள் கட்சி, இயக்க கோமாளித்தனங்கள் புகமுடியாமல் போனது காரணமாகலாம். தமிழக நவசரித்திரத்தில் தெரியாமல் மாட்டிக் கொண்டவர்கள் மந்திரிகள் ஆகலாம் அல்லது உயர் பதவிகள் பெறலாம். ஆனால் தமிழின் பரம்பரையினர் ஆக முடியாது என்பதைத்தான் இந்த மனிதரின் கைகயில் இருந்து அவ்வப்போது சிறுசிறு எழுத்து ரூபங்களாய் வெளிப்படும் கதைகள் ருஜுப்படுத்துகின்றன. சரி, மாந்திரீகத்துக்கு வருவோம். ‘அழல் குட்டம்’ என்று ஒரு கதை. விண்மீன்களையும் மலையையும் சேர்த்துப் பார்க்க முடியவில்லையே என்ற குறையுடைய ஒரு பாத்திரம் வருகிறான். அவன் ‘படித்தவைக்ள அவனை மிஞ்சி நின்றான்.’ அப்படி வருணிக்கப்பட்ட பாத்திரத்திடம் கடன் வசூலிக்க வந்தவன் அப்பாத்திரம் எழுதி வைத்திருக்கும் கோடுகளைப் பார்க்கிறான். உடனே ‘சரணம் ஐயப்பா’ என்று மயங்கி மேசை விளிம்பில் தலை அடிபட விழுகிறான். சற்று நேரத்தில் எழுந்து பலவற்றைப் பேசிவிட்டுப் புறப்படுகிறான் வந்த நபர். அவன் தன்னிடம் ஒரு ஆற்றல் வந்து ‘விழுந்து விடு’ என்று கூறியதாய் சொல்கிறான். இங்குக் கடன் வசூலிப்பவனைச் சந்திக்கும் இந்தப் பாத்திரம் தனது சாவு எப்போது என அறிகிறது. வேறொரு கதை. ஒரு பக்கக் கதை. ‘கண்ணோட்டம்’ என்று தலைப்பு. ஒருவன் நடந்து செல்லும் பெண்ணின் சங்கிலியை பறித்துவிட்டு சைக்கிளில் வேகமாகப் போகிறான். அப்பெண், பலரின் பார்வைக்கு ஆட்பட்டாலும் அப்படியே நிற்கிறாள். சங்கிலியைப் பறிகொடுத்த அப்பெண் எந்த அசைவும் இன்றி சங்கிலியைப் பறித்தவன் சைக்கிளில் சென்று மறைந்த திசையிலிருந்து கண்ணை எடுக்காமல் நின்று கொண்டேயிருக்கிறாள். சற்று நேரத்தில் சைக்கிள் பேர்வழி போன திசையிலிருந்து செய்தி வருகிறது, லாரியில் மோதி சங்கிலி திருடன் துண்டு துண்டாகச் சிதைந்து கிடக்கிறான் என்று. இதுபோலவே ‘உள்ளே’ இருப்பதிலிருந்து ஒரு குரல் கேட்கிறது இன்னொரு கதையில். கதையின் பெயர் தோற்றம். தன் தந்தையின் எதிர்பார்ப்பை மீறி பணம் சம்பாதித்துப் பெரிய மனிதர் ஆகும் ஒருத்தன், தந்தையால் முழயாதபோது பல லட்சம் செலவர்த்து தன் தங்கையை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்கிறான். ‘‘நான் இல்லாட்டா நீ என்ன செய்திருப்பே’’ என்று தந்தையைக் கேட்கும் குரல் அவனிடமிருந்து இப்போது தோன்றுகிறது.

ஆனால் கதை சொல்லி கதையை இப்படி முடிக்கிறார்.
‘‘அப்போது அது தோன்றியது.
‘அது சரி-நான் இல்லாட்டா நீ என்ன செய்திருப்பே’ – ஒரு குரல்.
ஆனால் அது அப்பாவின் குரல் அல்ல.’’


இந்தக் கதைகளில் எல்லாம் நடக்கும் மாயம் தெளிவாக சொல்லப் பட்டிருக்கின்றன. பகுத்தறிவு வாதம் என்ற பெயரில் வாழ்வின் அல்லது மரபின், தன் பரம்பரையின், அழுத்தங்களுக்கும் வடிவங்களுக்கும் செவி சாய்க்காத ஒரு ஓட்டம் தற்சமயத் தமிழனின் சித்திரத்தில் வந்போது ஓர் எதிர்ப்புக் குரலாய் இக்கதைகள் மௌழுகத்தில் கால்கொண்டு நிற்கின்றன. ஆனால் உரத்துச் சொல்லுதலை இவரது பிற கதைகளைப் போலவே இக்கதையும் செய்யாத்தால் இலக்கியம் என்னும் அனைத்துலக மௌழுக சுர்லுக்குள் வாசகனை அழைத்துச் செல்லும் நவ கதையாக இது மிஞ்சுகிறது. ஜார்ஜ் லூயி போர்ஹெஸ் போன்றோர் இங்கு நினைவுக்கு வரவேண்டும். ஜார்ஜ் லூயி போர்ஹெஸ் கதைகளைப் படிக்கும் இலக்கிய மார்க்கம் தெளிவாகிறவர்களுக்கு மட்டுமே மா.அரங்கநாதனின் அத்தனை பிமாணங்களும் விளங்கும். ஒரு முறை அடக்க முடியாமல், ஒரு கடித வடிவில் போர்ஹெஸ் கதைகள் போல் எழுதுகிறீர்களே என்று கூறி ஒரு கடிதம் கூட அரங்கநாதனுக்கு நான் எழுதினேன் என்று நினைப்பு.

இங்கெல்லாம் மாந்திரீகம் என்பது ஒரு புறவெளிச் சக்தியின் வல்லமையின் பெயராகிறது. இந்தச் சக்தி தமிழ் போன்ற பிராந்திய கலாச்சாரத்துக்கு நாட்டுப்புறத் தெளிவு ஒன்றை நல்குகிறது. இதைப் புரிந்து நம் மண்ணின் அத்தனை நிறங்களையும் அங்கீகரித்து, நேற்று வந்த மேற்கின் சோகை வழிப் பார்க்கும், பித்தம் பிடித்த, பார்வையை நிராகிக்கும் கோணத்தில் செயல் பட்டால் அரங்கநாதனின் மரபுத் தெளிவு பிடி கிடைக்கும். ஒரு அநியாயத்தை உணர்ந்து திக்பிரமை பிடித்து நிற்கிற – சிங்கிலியை யாரோ ஒருவனுக்குக் களவு கொடுத்து நிற்கிற ஒரு பெண் – திடீரென்று தெய்வத்தன்மையின் மன ஆற்றல் பெறுகிறாள். ஏதோ சில கோடுகள் வழியாக வெளிப்படும் ஆற்றல், அவனைப் பார்த்துக் கொடுத்த கடனை வசூலிக்க வந்தவனை கீழே விழுந்து தப்பித்துப் போய்விடு என்கிறது. ‘ஒரு பிற்பகல் நேரம்’ என்ற கதையில் என்ன நடக்கிறதென்றால் பிரதான பாத்திரமான முத்துக்கறுப்பனை ஏமாற்றுகிறவர்கள் எல்லாம் செத்துப் போகிறார்கள். இந்த மண்ணுக்குள் பரவி நிற்கும் – காற்றில், கல், மண், மரம், வானம் முதலிய எல்லாம் ஆற்றல்களின் இருப்பிடங்களிலும் தெய்வீகம் – இதுதானே இந்து தர்மத்தின் கவர்ச்சி? இந்த மாயத்தை மீண்டும் தமிழ்க் கதைகளுக்குக் கொண்டு வந்துள்ளார் அரங்கநாதன்.

‘இந்துத்துவம்’ என்ற மேற்குமயப்படுத்தப்படும் போலி அதிகார அரசியல் இன்று பரவிவரும் காலத்தில் வேறொரு தர்மத்தைத் தன் கதைகளின் வழி பிரச்சாரம் செய்யும் இந்தக் கதையாசிரியரை விட பெரிய முற்போக்காளர் வேறு யார் இருக்க முடியும்? இப்படிப் பார்க்கும்போது மா.அரங்கநாதன் சுப்பிரமணிய பாரதியின் தொடர்ச்சியே ஒழிய பாரதிதாசனின் தொடர்ச்சியல்ல என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் பாரதியில் தான் தொடும் இடமெங்கும் தெய்வீகம் மீதாடிய ஒரு தமிழ்த்தன்மை வெளிப்பட்டது. பியார் பற்றிய விமர்சனத்தின் அடிப்படையை இப்படித்தான் அரங்கநாதன் வெளிப்படுத்துகிறார். பாரதியிடம் சக்தி பற்றிய பல பாடல்கள் இருந்தாலும் கண்ணன் பாட்டுத்தான் மொத்த தமிழின் ஆற்றல் கொண்ட தத்துவச் சக்கரத்தை வெளிப்படுத்துகிறது. கண் விழித்ததிலிருந்து இரவில் தூங்கச் செல்வது வரை தமிழ்க் கிராம, நகரப் பெண்கள் மற்றும் முதியோர் வழி சதா வெளிப்படும் இயற்கை சார்ந்த ஆற்றல் என்னும் தெய்வ வழிபாடு எப்படி ஒரு போலி நாத்திகப் பிரச்சாரத்தால் வழி தப்பிப் போயிற்று என்ற ஆத்திரமான கேள்வி அரங்கநாதனின் கதைகளின் உள்தளமாகிறது. இப்படிப் பார்க்கும்போது புதுமைப் பித்தனையோ, மௌனியையோ தாண்டி முக்கியத்துவம் பெறுகிறார் மா.அரங்கநாதன்.

அத்வைத அழகியல்

இன்னும் சில கதைகள் இருக்கின்றன. ‘தரிசனம்’, ‘அசலம்’ மற்றும் ‘ஜேம்ஸ் டீனும் சென்பகராமன் புதூர்கார்ரும்’. ஒவ்வொரு கதையிலும் வரும் பாத்திரங்கள் தெளிவிலிருந்து தெளிவற்ற பிராந்தியமாய் மாறித் தெரிகிறார்கள். இதுதான் முக்கிய அம்சமே. இந்தியர்கள் தம்மிடம் ஒரு தத்துவம் பிறந்ததைப் பற்றிக் கூறுகிறார்கள். அத்வைதம். அத்வைத்த்தின் சாயலில் தமிழ்ச் சைவமும் தன்னைத் தகவமைத்துப் பல மடங்களைக் கட்டி அந்தத் தத்துவத்தை சாசுவதமாக்க முனைந்த்து. இருபதாம் நூற்றாண்டில் மறைமலை அடிகள் இந்த்த் தமிழ் சைவத்தைப் பற்றி மிகவும் நம்பிக்கை வைத்து அதனை மேற்கத்திய தத்துவங்கள் சிலவற்றோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி எல்லாம் செய்து பார்த்திருக்கிறார். மா. அரங்கநாதனும் தமிழ் சைவத்திற்குள் இருக்கும் பாதை வழி பயணப் பட்டிருக்கிறார். தமிழ் மரபு வாதியான அவர் அந்தக் காரியம் செய்யாமலிருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும். சரி, கதைகளுக்கு வருவோம். ‘தரிசனத்தில்’ ஆரம்பத்தில் எதிர் வீட்டுக்காரராக சாதாரணமான மனிதராக வரும் நபர் கதையிறுதியில் கதாநாயகன் முத்துக்கறுப்பனைப் போலவே மரங்களை உற்றுக் கவனிப்பவராக மாறுகிறார். அவருக்குத் தோன்றிய கனவில் ‘‘தூரத்து வயல் வெளிகளுக்கிடையில் வெண்முடி புரள ஒருவர்சென்று கொண்டிருக்க பயிர்கள் அசைந்து கொடுத்தன. அந்த அசைவிற்கு ஈடுகொடுத்தாற்போல, விரல்கள் அசைந்து ‘இது அல்ல – இது அல்ல’ என்று எல்லாவற்றையும் தள்ளிக் கொண்டே அவரது நடை வேகமாகி – தனியாகி – தூரத்தில் புள்ளியாக மறைந்து போயிற்று.’’ இப்படித் தெரிகிறார். இப்படித் தோன்றும் நபரை ஃபிராய்ட் படித்த முத்துக்கறுப்பன் ‘‘தான் கண்ட வயற்காடு தன்னைத்தான் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தன்னைவிட்டு பிகிறார் என்றும் கருதுகிறான்.’’ இங்கு இருவர் ஒருவராதல் நடைபெறுகிறது. மீண்டும் ஒருவர் பிகிறார். ‘அசலம்’ கதை மிகவும் சிக்கலும் ஆர்மும் ஆழமும் கொண்டது. முத்துக் கறுப்பனும் இராமனும் சந்தித்தல். ராமன் என்றால் கம்பராமாயணத்தில் வந்தவனும் ஒரு சாதாரண மனிதன் ராமனும் என சித்திரம் வரும்படியான எழத்து. அந்த ஊரில் உள்ள பல ஆவுடையப்பன்களில் ஒருவர் அவர். இங்கு மனிதர்கள் தனிப்பட்ட மனிதர்களாய் இல்லாமல் பொது மனிதர்களில் அடங்கிய மனித அம்சத்தின் பெயர் என சூசனையாய் சொல்லப்படும் மிகவும் ஆழம்கொண்ட எழுத்து. பத்துப் பக்கங்களில் எழுதப்பட்ட நவீன காவியபரிமாணம் கொண்ட எழுத்து. (இதன் மொழிபெயர்ப்பு ஆங்கிலம் வழி ‘ஜேம்ஸ் டீனும் செண்பகராமன் புதூர்க் கார்ரும்’ கதையில் ஜெம்ஸ் டீன் என்ற அமெரிக்க நடிகரும், செண்பகராமன் புதூரிலிருந்து பாண்டிச்சி வழி பாரீஸ் சென்று பின்பு அமிக்காவில் பிர்ஞ்சு ஆசிரியராய் வாழ்ந்து மறைந்த முத்துக் கறுப்பனும் (முத்துக்கறுப்பன் என்ற பெயர் இவர் கதைப் பாத்திரங்களில் நாயகனின் பொதுப் பெயர் என்பது திந்த விஷயம்) ஒருவர் என மனபிம்பம் வருகிறது. ‘‘நான் ஜேம்ஸ் டீன் பற்றித் தங்களுக்கு எழுதுவது குறித்து வியப்ப்படையக்கூடும். அதற்கு ஒரு காரணம் உண்டு. இந்த ஜெம்ஸ் டீன் போலவே முத்துக்கறுப்பன் அவர்களும் இரண்டு நாள் முன்பு ஒரு விபத்தில் காலமாகி விட்டார்...’’ என்று சித்திக்கும் கதையின் ஒரு இடத்தில் ஜேம்ஸ் டீன் இறந்த செய்தி கேட்டதும் முத்துக்கறுப்பனுக்குச் செண்பகராமன் புதூரில் இருக்கும் ஒருவரிடம் கடன் வாங்கிக் கொண்டு பாண்டிச்சேரிக்குப் புறப்பட்ட நினைப்பு வருகிறது. அன்றே சாகிறார் அவரும். இங்குப் பூடகமாக ஒரு அமிக்கனும் ஒரு நாகர்கோயில் பக்கத்துக் கிராமத்தவனும் ஒருவர் என்ற அர்த்தங்களுக்கெல்லாம் அர்த்தமான பூடகார்த்தம் வெளிப்படுகிறது.

உலகமயமாதல் பற்றிப் பேசுபவர்கள் இந்தக் குறிப்பிட்ட கதை ப்பற்றிச் சர்ச்சிக்க வேண்டும். அனைத்துலக மனிதன் என்ற பொது சரடு இங்கு அழுத்திச் சொல்லப்படும் விஷயம். மீண்டும் இந்த இடத்தில் அந்த அர்ஜைன்டினிய எழுத்தாளர் ஜார்ஜ் லூயி போர்ஹெஸ் பற்றித்தான் எனக்கு நினைவு வருகிறது. அவருடைய கதைகளிலும் இரண்டு பேர் ஒன்றாக இருத்தல் என்ற பிம்பம் வரும். ‘‘பியர்மனார்ட், குக்ஸாட் எழுதிய ஆசிரியன்’’ என்ற தலைப்பில் உள்ள கதையில் இரு ஆசியர்கள் ஒன்றாய் ஆதல் என்ற த்த்துவ அம்சம் பற்றிய விவிப்பு வரும். இலக்கியம் வேறு த்த்துவம் வேறு. ஆனால் சமீபத்திய உலகத்தரம் வாய்ந்த எழுத்தைத் தரும் சிலர் த்த்துவ அம்சத்தைத் தூக்கலாக்கி சுயமான இலக்கியம் எழுதிக் காட்டுகிறார்கள், போர்ஹெஸைப போலவே. அந்த அளவில் உலகத்தரம் மா.அரங்கநாதன் கதைகளில் அமைவதாக கருதுகிறேன். இந்த்த் த்த்துவம் நம் மண்ணிலிருந்து பச்சைத் தமிழ் உயிர்கொண்ட சைவச் சித்தாந்த்த்தின் சூழலில் எழுந்த்து என்பதை விலியுறுத்தும்போது தொடர்ந்து நான் கூறிவரும் தமிழ் அடையாளம் சார்ந்த மையப் படைப்பு இயக்கம் அரங்க நாதனில் இருந்து மறு வரலாற்றை எழுத்த் கோருகிறது. ஆக, உலக தரம் நோக்கி இந்தியாவின் கடைசி மூலையில் இருக்கும் தமிழ் மனம் ஒன்று எழுந்து எந்தச் சிரமமும் இல்லாமல் வியாபிக்கும் அதே நேரம், தன் வேரையும் சிக்கென பிடித்து அதன் வலிவு தொய்வுறாமலே வளம் காண்கிறது. பிரபஞ்ச மன இயக்கமும் பிராந்தியத்தில் கட்டியாய் அதன் வரலாற்றோடு வேர் பிடித்திருப்பதும் முரண்பாடானவையல்ல என்ற அபூர்வநெறி இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டங்களில் தியாஸபிகல் போக்குகளிலும் அதுபோல் ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்றவைகளிலும் அரவிந்திலும் பொதுத் தன்மையாய் முகம் கூட்டின. இந்தப் போக்குகளை உள்ளேற்ற பல தமிழர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள். அவர்கள் யாரும் படைப்பில் செயல்படவில்லை. சுதந்திர காலகட்டத்தில் இந்த்த் தன்மைகளின் வலிமை வெளிப்பட்டது. எத்தனை மரபு சார்ந்த சுயசிந்தனையாளர்களைப் பாரதம் தந்த்து! இந்தச் சிந்தனையாளர்களைப் போல் தமிழகம் யாரையும் தரவில்லை. உதாரணத்திற்கு மேற்கு வங்காளம். தமிழகத்தில் யார்? ஆனால் தமிழகம் இந்தப் போக்குகளைக் கவனித்த்து. பிரம்ம சமாஜமும், ஆய சமாஜமும், அரவிந்தின் ஆதரவாளர்களும் தமிழகத்திலும் வியமாய் செயல்பட்டார்கள். எல்லா வளமும் ஒரு காட்டுத் தீயில் கருகியது! இந்தக் காட்டுத் தீ 50களுக்கு பிறகு தமிழகத்தைப் பாலைவனமாக்கியது உண்மை என்றால் 2000-ன் இறுதிப் பகுதியில் மீண்டும் தமிழகத்தில் துளிர்கள் தென்பட ஆரம்பித்துள்ளதின் அடையாளமா மா. அரங்கநாதனின் வீரியம் மிக்க படைப்பு இயக்கம்? அறுபது வயதைத் தாண்டிய அரங்கநாதன் இளைஞர்கள் என ஒரு உடல் வகை வுகம் காட்டி எழுதி வரும் ஓரிருவரைப் போன்றவர் அல்லர் என்பது கூட நம் சூழலின் இன்றைய ஆரோக்கியத்தையே சுட்டிக் காட்டுகிறது.
சரி விஷயத்திற்கு வருவோம். இரண்டாயும் இரண்டற்றதாயும் மனித அடையாளம் நிற்பதென்பது என்ன? தத்துவத்தில் இப்படிப் பேசுவது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இலக்கியத்தில் சாத்தியமற்றதன் ஒரு வகைக் குறியீடு தான் இரண்டு என்பது இரண்டற்றது என்பது. அதுபோல் ‘இல்லை என்றால் உண்டு’ என்பார்கள் சைவ சித்தாந்திகள். இந்த முரண் தன்மை மா.அரங்கநாதனின் தரிசனம் கதையின் இறுதி வரிகளில் இப்படி வெளிப்படுகிறது. ‘முத்துக்கறுப்பனுக்குத் தன் மீது வெறுப்பும் அதனால் ஏனோ ஒரு வகை நிம்மதியும் பிறந்த்தாகத் தோன்றியது.’ அதாவது முரண் உணர்வுகள் சமனம் கொள்கின்றன. திசனம் கதையிலும் இருவர், ஒருவரா என்ற பிம்பம் எழுகிறது. அவ்வளவுதான் கதை. மௌனியில் இந்த்த் தன்மையிருந்தாலும் அது வேறு என்று விளக்க முடியும். அரங்கநாதனிடம் காணப்படும் மரபுப் பலம் மௌனியிடம் இல்லை என்றுதான் அரங்கநாதனின் எல்லாக் கதைகளையும் ஒரு சேரப் படித்துப் பார்க்கும்போது படுகிறது. இலக்கியம் என்பது அசாத்தியத்தைச் சாத்தியமாக்குகிறது மொழியின் மூலம் என்ற கூற்று உண்மையானால், மொழி தன் இயல்பில் உள்ள இன்மையை – சூனியத்தை அர்த்த்த்தோடு சதா உரசலில் வைக்கிறது, இலக்கியம் எல்லா சமூக விஞ்ஞான அறிவையும் விட உயர்ந்த்தாய் ஏன் இன்று கணிக்கப்படுகிறதென்றால், இந்த ஒலிக்கும் மௌனத்துக்கும் உள்ள உறவாய் மொழி வந்து இலக்கியத்தில் செயல்படுவதுதான். தமிழில் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஒரு சலசலப்பைத் தேவைக்காக ஏற்படுத்தி, எல்லோரையும் அசைத்து விட்டுப் போன அமைப்பியல் சார்ந்த சிந்தனைகள் இந்த – முந்தின வாக்கியத்தில் சொன்ன விஷயத்தை வலியுறுத்தி விட்டுச் சென்றிருக்கின்றன. பெரியார் காலத்தில் வந்த ‘இலக்கியம் அறிவு தரும்’ என்ற அடிப்படையையும் கலை கலைக்காக என்ற குழுவினரின் ‘அறிவுக்கு எதிரானது இலக்கியம்’ என்ற நிலைபாட்டினையும் அமைப்பியல் அசைத்துப் புது அழுத்தம் தந்து இரண்டையும் இணைணத்து விட்டுச் சென்றிருக்கிறது. இந்தக் கட்டத்தில் நாம் கருத்துச் செலுத்திப் படிக்க வேண்டிய படைப்பாளி மா. அரங்கநாதன். அரங்கநாதனில் அறிவும் உணர்வும் சம்மாய் கலக்கிறது. அரங்கநாதன் தோன்றவும் அவரை அறயவும் தமிழ் மொழியும் அதீத்த்தில் வாழப் பழகிக் கொண்ட சில தமிழரும் காரணம். தமிழ் மொழி எந்த பிற இந்திய மொழிக்கும் சளைத்த்தில்லை என்று பிற மொழிகளுடன் உள்ள என் பழக்கத்தில் சொல்லத் தோன்றுகிறது. இருவர் இருவரல்ல என்பதோ, ராமன், ராமனில்லை என்பதோ, ஜேம்ஸ் டீன், செண்பகராமன் புதூர்காரர் தான் என்பதோ ஒரு வித வறட்டுத் தர்க்கத்துக்குக் கூட இட்டுச் செல்ல்லாம். அரங்கநாதனில் அப்படிச் செயல்படவில்லை. அவரது கதையில் நிறையும் வாக்கியங்கள் இந்த உள்ளடக்கத்தின் கனத்தைத் தாங்க மௌனத்தை கதைக்குள் அழைத்து வருகின்றன. வாக்கியம் பூடகமாகிறது. உள்ளடக்க அசாத்தியம் நடையியல் அசாத்தியம் ஆகியது. உதாரணத்திற்கு ஒருவாக்கியம்:

‘‘செத்துப் போன பழைய எண்ணங்களும் ருசியும் ஒரு வகையில் ஒன்று தான்’’ (தரிசனம்)
இதுபோன்ற வாக்கியப் பூடகத் தன்மையை உத்திரீதியாக கதைக்குள் கொணர்வதற்குப் போர்ஹெஸ் ஆங்கில மாதிரி வாக்கியங்களை, தான் எழுதும் ஸ்பானிஷ் மொழிக்குள் கொணர்வதாக விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த வித்த் தன்மை அரங்கநாதனின் வேறு கதைகளிலும் வருவதற்கு மௌனம் கொண்ட வாக்கியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

‘‘நியாயமாகச் சம்பாதித்தல் – சேமித்தல் – முன்னேறுதல் போன்ற சொற்றொடர்கள் எல்லாம் பழக்கத்தின் காரணமாகவே நன்றாக நம் காதில் விழுகின்றன என்று தோன்றிற்று.’’ (ஜங்ஷன் என்ற கதை)
மொத்த்த்தில் இலக்கியத்தின் மையக் குணம் ஒருவித பூடகத்தை வாழ்வாய் நாம் அறிதலில்தான் என்று அடித்துச் சொல்லும் கதைகள் அரங்க நாதனின் கதைகள் எனலாம்.

பழமை என்னும் உள்ளடக்கம்:

அரங்கநாதனின் இன்னொரு முக்கிய குணாம்சம் என்று அவர் கதைகள் விவாதிக்க முன்வைக்கும் பழமை பற்றிச் சொல்ல்லாம். ‘ஜேம்ஸ் டீனும் செண்பகராமன் புதூர்க்கார்ரும்’ என்ற அரங்கநாதனின் புகழ் பெற்ற கதையில் ஒரு வேட்டி அமெரிக்காவில் இருந்து பாதுகாக்கப்பட அனுப்பி வைக்கப்படுகிறது. அதுபோல் பழமை பற்றிப் பேசும்போது ‘வீடுபேறு’ என்ற கதை விசேசமாய் சர்ச்சிக்கப்பட வேண்டும். இக்கதையில் பாலகிருஷ்ணன் என்பவர் அமெரிக்காவிலிருந்து தனது மனைவியான அமெரிக்கப் பெண்மணி ‘எடித்’துடன் வருகிறார். அவர் வாழ்ந்த பழைய வீட்டைப் பார்க்க வருகிறார். அந்த வீட்டில் முத்துக்கறுப்பன் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாற்பது வருஷம் கழித்து இந்தப் பழைய ஊரைப் பார்க்க வரும் பாலகிருஷ்ணனுக்குப் பழமை மூலம் சாவஜ அர்த்தமாகிறது. தன் தாயின் சாவஜம் தந்தையின் சாவும். அதாவது அவர் பார்க்க வந்த்தில் சாகாமல் இருக்கும் வஸ்து பழமை. பழைய ஊர், கட்டடங்கள் இத்யாதி. இப்போது முத்துக்கறுப்பன் இருக்கும் வீட்டின்மேல் உள்ள விட்டத்தில் வந்தவரின் தாய் தூக்குப் போட்டு செத்தாள். தந்தை திண்டிவனத்தில் வயல்வரப்பில் பாலகிருஷ்ணனின் மடியில் சாகிறார். முத்துக் கறுப்பனும் பாலகிருஷ்ணனிடம் தன் தாய், தந்தை, மகள் சாவுகளைச் சொல்லித் தான் அறிமுகப்படுத்துகிறார். கதை இறுதியில் தாய் தொங்கிய மேல் அறையைப் பார்க்காமல் புறப்படுகிறார் பாலகிருஷ்ணன்.

பழமையை ஒரு உள்ளடக்கமாக வைத்துத் தமிழில் யாராவது கதை எழுதியிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். பழமை, தமிழர்களுக்கு முக்கியமான வஸ்து. தற்காலம் ஆதரவைத் தராதபோது பல புராதன சமூகங்களைப் போல், தமிழர்கள் பழமையைத் தனக்குப் பிடித்த்துபோல் உருவாக்கி மகிழக் கூடியவர்கள். எனவே சிறுகதையை ஒரு இலக்கிய வடிவமாய் உருவாக்கிய மேற்கத்தியர்களைப் போல்ல்லாது தமிழர்கள் சிறுகதை வடிவத்தைத் தமிழ்ப் படுத்தி விட்டார்கள் என்று கூறவேண்டுமானால் தமிழர்களின் வாழ்வும் கனவும் தமிழிற்குக் கொண்டு வரப்பட வேண்டும். அப்போது தமிழ்க் கதை வழவம் புதிதாக ஏற்படும். ஆகையால் தான் அரங்கநாதனின் கதைகள் பெரும்பாலும் சாதாரண வாசகர்களையோ, பரிசுக் கமிட்டிகளையோ, ‘கதா’ போன்ற சிறுகதை நிறுவனங்களையோ கவராமல் போகின்றன. இவர்கள் எல்லாம் தங்களுக்கு வேண்டிய எதையோ கவராமல் போகின்றன. இவர்கள் எல்லாம் தங்களுக்கு வேண்டிய எதையோ தேடுகிறார்கள். அது அரங்கநாதன் கதைகளில் எதிர்பார்க்க முடியாது. முன் தீர்மானங்கள் பொதுவாய் இலக்கியத்திற்கு எதிரி. அரங்கநாதன் கதைகள் ‘தனது’ வடிவத்தைக் கொண்டவையாய் இருப்பதால் தொடர்புறுத்தல் (கம்யுனிக்கேஷன்) கூட பலவேளை சிரம்ம்தான். ஆனால் இவர் கதைகளை அறிந்தவர்கள் மீண்டும் மீண்டும் படித்து அனுபவிக்க முடியும்.

அரூபக் கோட்பாடு:
ஒரு பிரத்தியேக வடிவமைப்பை இவர் கதைகளுக்கு அளிக்கும் வல்லமை எங்கிருந்து வருகிறது? அது கதைகளின் உள்ளிருந்து வருகின்றது. ‘உள்’ என்பது தமிழர்களின் கவிதைத் த்த்துவத்தின்படி புறம். அகம் என்பதும் புறம் என்பதும் அகங்கை புறங்கை போல பூடகமானவை என்பது நச்சினார்க்கினியர் உரை. தமிழ்ப் புலவர்கள் இதனை நச்சு பண்ணி ஒரு வழி பண்ணி விட்டார்கள். பின்பு வழி வழி வந்தவர்கள் பொய் மரபு ஒன்றை ஸ்தாபித்து காலம் காலத்துக்கும் கவித்வம் தெரியாதவர்கள் தமிழர்கள் என்று அவப்பெயர் வந்துவிட்டது. உள் மற்றும் புறம் என்ற எதிர்வற்ற எதிர் தன்மை வழியாகப் பார்க்கும்போது மொழி உள்ளதாகவும் இல்லாத்தாகவும் சாயை காட்டுவது. மௌனி இந்த அரூபம் பற்றித் தன் கதைகள் மூலம் கண்டுபிடிக்க முயன்றிருக்கிறார். இங்கு அரங்கநாதனின் அரூபக் கோட்பாடு பற்றித் திந்து கொள்ள வேண்டியது நமது கடமை. ‘திருநீர் மலை’ என்ற கதை எளிமையான கதை. உறவுக்காரர்களை எதிர்த்துத் திருமணம் செய்த முத்துக்கறுப்பன் தன் நண்பர் வாகீசனின் பெண் அப்படித் திருமணம் செய்வதை கதையிறுதியில் அறிகிறான். அவ்வளவுதான் கதை. சகஜத் தன்மை, மேல்நாட்டுப் பாணி கதை சொல்ல்லில் கொண்டு கூட்டி முடிப்புத் தருகையில் கதை புரியாமலாகிறது. பொதுவாய் அரங்கநாதனின் புதிர் தன்மை தியாமையிலிருந்து வருவதில்லை, தெரிந்த சகஜத் தன்மையிலிருந்து வருகிறது. மௌனி என்றொரு கதை. மௌனி கதையின் கதாநாயகன் மிகவும் பழத்தவன். கடைசியாக திருமண வீட்டில் நடக்கும் சர்வசாதாரணமாக சடங்குகளை அறிவதில்தான் தன் உண்மையான ஞானம் அடங்கியிருப்பதாக நினைக்கிறான். இது கதையென்று பலருக்குப் படாது. கதையென்றால் ஒரு முரண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு ஒரு புரிதல் முறை வந்து விட்டது. ஆரம்பத்தில் சொல்லப்படுவதற்கு நேர் எதிராக கடைசியில் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முரண்பாடு வாசிப்ப்பவர்களைப் பொறுத்தது. திருமணச் சடங்கு பெரிய விஷயம் என்று வலியுறுத்த விரும்பும் கதை. சாதாரண விஷயமாக முதலில் சொல்லித் திருமணச் சடங்கை இறுதியில் சொல்லுகிறது. திருமணச் சடங்கின் முக்கியத்துவத்தை உணர மறுக்கிற – அதை சாதா விஷயம்தானே என்று மட்டும் அறிந்த மனம் இக்கதையை ஏற்காது. உத்தி மூலமாக அர்த்தம் சிருஷ்டிக்கப்படுகிறது அல்லது அர்த்தம் பிரதானப்படும்போது உத்தி உற்பத்தியாகிறது. கதை பற்றி புரிந்து கொள்ளலும் புரிய முடியாமையும் நாம் கதைக்கு கொடுக்கும் அர்த்த்த்தைப் பெறுத்த்தாக ஆக்கப்படுகிறது. எனவே சாதாரணமாக்க் கதை முடியும்போது உப்பு சப்பற்ற கதைபோல் தென்படக் கூடிய கதை ‘மௌனி.’ இது மாதிரி சில கதைகள் அரங்கநாதனால் எழுதப்பட்டுள்ளன. அவைகளில் முடிப்புக்குரிய அழுத்தம் வேண்டுமென்றே இருக்காது. சாதாரணமாய் கதை முடியும். அழுத்தம் கதையின் வேறு பகுதிகளில் தென்படும். மொத்தத்தில் இவர் கதைகள் மொத்தமும் ஜீவ அர்த்தம் கொண்டவை. அதாவது கதை, தொடக்கம், முடிப்பு எல்லாம் அந்த அர்த்த்த்திற்குள் அடக்கம். ‘ஆதல்’ என்றொரு கதை. ஓர் ஊரை விட்டு முத்துக்கறுப்பன் தந்தைக்கு மாற்றலாகி, இன்னொரு மொழி பெசும் ஊருக்குப் போகிறார்கள். புறப்படலின் உணர்வு, அழுத்தம் பெறுகிறது. புது ஊரில் ஆட்கள் பழகுகிறார்கள். முத்துக்கறுப்பன் புது ஊரில் பரீட்சை எழுதப் புறப்படுகையில் பக்கத்து வீட்டுப் பெண், குழந்தையுடன் நல்ல சகுனத்திற்காக வருகிறாள். ஆனால் மாலையில் முத்துக் கறுப்பன் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்புகையில் அதே பக்கத்து வீட்டில் யாரோ இறந்து போயிருக்கிறார்கள். கதையின் இறுதி வரி பயணம் புறப்பட்ட ஊரிலும் இதே ஊர்போல செம்பருத்தி சிவப்பாகத்தெரிந்த்து என்று முடிகிறது. முடிப்பு மூலம் அர்த்த விகசிப்பு எழவில்லை. அர்த்த விகசிப்பு கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் என பரவலாக்கப்படுகிறது. எனவே எங்கோ தொடங்கி எங்கோ கதை முடிகிறது. இதில் என்ன இருக்கிறது என்று தான் கேட்பார்கள். இப்படி சகஜம் என்ற அர்த்தச் செறிவு உத்தியை, தானே உருவாக்குகிறார் அரங்கநாதன். புதிர் தந்மையைப் புதிர்மையின்மையில் நாம் இங்கெல்லாம் காண்கிறோம்.

III

இவ்வாறு அரங்கநாதனின் கதை உலகு, பெரும்பாலும் எதார்த்தமாய் நடக்கும் சம்பவங்களைச் சுற்றி நடந்தாலும் ஒரு அதீத்த்தின் அல்லது மிகையின் சாயலை எப்படியோ தந்து அதன் மூலம் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ் வாழ்வை, பெரியார் மூலம் பகுத்தறிவு சார்ந்த அடையாளமாய் பார்க்கும் பிரயத்தனங்கள் நடந்தன. ஆங்கிலப் படிப்பு, அரசியல், விஞ்ஞானம் போன்றனவும் நமக்கு 20-ஆம் நூற்றாண்டில் எதார்த்தம், பகுத்தறிவு, ‘நேரில் பார்ப்பது நிஜம்’ போன்ற உண்மைகளை வலியுறுத்தின. மா.அரங்கநாதன் இங்குச் சற்று மாறுபட்டு மாயத் தன்மை, புதிர், இருண்மை போன்றவையும் முக்கியம் என்கிறார். உண்மைகள் ஆழமானவை, தர்க்கம் என்பது கணித ரீதியானது மட்டுமல்ல, அதர்க்கமும் ஏற்கத்தக்கது; ‘தற்சமயம்’ எவ்வளவு முக்கியமோ அதுபோல் பழமையும் முக்கியம்தான், மாந்திரீகம் என்பதில் உண்மைத் தன்மை இல்லாமல் இல்லை – இப்படி இப்படிப் பேசுகிறார் இவர். எடுத்த எடுப்பில் தமிழ்த் தன்மை என்று கூறி வலியுறுத்தப்படும் இவை மிகவும் புதிராய் இதுவரை யாரும் அறிமுகப்படுத்தாத விதமாய் கதைகளாக்கப்படுகின்றன. கதை என்பது உண்மைக்குப் புறம்பான உத்தி. அதாவது அது உண்மையைப் பேசும் விதம் மாறுபட்டது. அதற்காக்க் கதைகளில் உண்மையில்லை என்று ஆகாது. கதை முறையில் எபுதப்படும் உண்மையைப் புரிந்து கொள்ள வேறுவித பயிற்சி வேண்டும். இலக்கியப் பயிற்சி. ஏனெனில் இலக்கியமும் உண்மையைப் பல ஆயிரக்கணக்கான கற்பனை வழிகளில் சொல்ல முடியும் என்று காட்டியுள்ளது. அதாவது நான் வலியுறுத்த விரும்புவது, கற்பனையும் உண்மையும், உண்மையைச் சொல்வதில் உள்ள இரு முறைகள். தமிழ் இதை தனது இரண்டாயிர வருஷ உருவமைப்பில் காட்டித்தந்த்து. அதை மா.அரங்கநாதன் மீண்டும் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வகை ஒன்று மூலமாக உலகுக்குப் பிரச்சாரப்படுத்துகிறார். அதாவது ஒரு வகையில் பெரியாரா? மா. அரங்கநாதனா? என்று கேள்வி. எனவே பொருள் முதல் வாதம் என்ற த்த்துவம் பிரச்சாரத்துக்கும் மேடைக்கும் என்று ஒதுக்கப்பட்டு, லட்சோப லட்சம் மக்கள் தினம் பொருள் முதல் வாத்த்துக்குப் புறம்பாய், சாணியை, இலையை, ஜோதியை, வர்ண கோடுகளை, மண்ணை, உருவத்தை, பூவை, காற்றை, சூரியனை எல்லாம் நிஜம் என வணங்கும் கலாச்சாரம் மா. அரங்கநாதன் மூலம் புது ரூபம் பெற்று பண்பாட்டுத் தளத்தில் முழங்க ஆரம்பித்திருக்கிறது. வாழ்வைத் தாண்டிய தத்துவமில்லை. ஆகையால் மா. அரங்கநாதன் கதைகளைப் பற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வராமல் எந்த இயக்கமோ, மேடை அரசியலோ, தமிழ்த் தேசிய விவாதமோ, இடது சாரியோ செயல்பட முடியாதென்றாகியிருக்கிறது.

 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved