முன்றில்
‘முத்திப் போச்சு’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஆவடையப்பப் பிள்ளை. பேத்தியின் சாமர்த்தியத்தைச் சொல்லிக் காட்டுவதில் சலிப்பில்லை. கேட்பவர்களுக்கும் அது தெரியும். குட்பதன் மூலம் பலவகையான கடன்களை அவர்கள் அடைத்து விடுகின்றனர்.
பேத்திக்கு தன்னைப் பற்றிய விமர்சனம் மீது அக்கறையில்லை. முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். வீட்டு வாசலில் ஏறும் போதே, அவள் முற்றத்தில் காட்சி தருவாள். ஏப்போதாவது பக்கத்து வீட்டுக் குழந்தை விளையாட வருவதுண்டு. யாரும் வரவில்லை யென்றாலும், ‘‘கீச்சு கீச்சு தம்பலம்’’ முதல் பாண்டி விளையாடுவது வரை தானே இரண்டு பேராக விளையாடி முடிக்க முடியும்.
‘‘அப்பா ஞாபகம் ஏதாம் வரதுண்டா’’ என்று வந்தவர் ஒரு தடவை கேட்டதற்கு, ஆவடையப்பர் ‘ம்’ என்று சொல்லி தலையசைத்து விட்டார். பிறகு வந்தவர் போவது வரை எதுவும் பேசவில்லை.
தொழுவத்தில் மாடு கூப்பிட்ட சப்தம் கேட்டது. கூறிது நேரம் அந்தப் பக்கம் பார்த்திருந்து விட்டு குழந்தை படபடவென வீட்டினுள் ஓடியது. ஊறங்கிக் கொண்டிருந்த ஆச்சியை தாறுமாறாக எழுப்பி விவரம் சொன்னது. ஆச்சி பால் கநற்து கொள்ள தொழுவம் செல்கையில், தூக்க முடியாது ஒரு செம்பைத் தூக்கிக் கொண்டது.
மழை பெய்யும்போது சன்னல் வழியாக மழையைப் பார்ப்பதில் குழந்தைக்கு ரசனை இல்லை. நடு முற்றத்தில் மழை பெய்வதைத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பார்க்க வேண்டும். முதற்தடவை மழையைப் பார்த்து பயந்தது பற்றி தாத்தா நீண்ட நாள் பேசிக் கொண்டிருந்தார். மழையை வரவழைக்க ஒரு மந்திரம் தனக்குத் தெரியும் என்று குழந்தையிடம் சொல்ல - பன்னிரண்டு தடவை ‘‘முருகன்’’ பெயர் சொன்னபோது - உண்மையிலே மழைத் தூற்றல் போட்டது. ஆனால் காலமில்லாத காலத்தில், மழையை வரவழைக்க மந்திரம் சொல்லச் சொல்லி அழ ஆரம்பித்தபோது, ஆச்சி திட்ட ஆரம்பித்தாள் கிழவரை. அவருக்கு வேண்டும்.
இது பரவாயில்லை. சாப்பிடும்போது ‘‘எனக்கு முத்தத்தில் வைச்சு சோறு போடு’’ என்று கேட்டால், எந்தக் கிழவிக்கும் கோபம் வரத்தான் செய்யும். முற்றத்தில் உட்காருவது தெருவில் இருப்பதைப் போல. நடந்து போவார் எல்லாருக்கும் சாப்பாட்டுக் கடை தெரியும். ஆச்சி கோபித்தால், கிழவர், ‘‘சரிதான்-அங்கேயே எனக்கும் சோத்தைக் கொண்டா’’ என்பார்.
‘‘ஏண்டி-மணியாச்சு-தாத்தாவை எழுப்பி சாப்பிடச் சொல்லு.’’
அடுக்களையிலிருந்து ஆச்சி குழந்தையை அனுப்பி வைத்தாள். ஆடி ஆடி ஆச்சிக்கு ஒரு வலிப்புக் காட்டி விட்டு தாத்தாவின் கட்டிலுக்குச் சென்றால், அவர் முகத்தின் மீது பஞ்சாங்கம் கிடந்தது. அதை எடுத்து, அவர் வீசுவது போல் தனக்கு வீசிக் கொண்டு, ‘என்ன உஸ்ணம்’ என்று அவர் மாதிரியே சொல்லிக் கொண்டது.
நேரமாகிக் கொண்டிருக்க ஆச்சி வந்து பார்த்தால், குழந்தை தாத்தாவிடம் ஒட்டிக் கொண்டு நல்ல உறக்கத்தில் இருந்தது. ஆச்சிக்கு சிரிப்பு. நல்ல கூத்து. கிழவரை எழுப்பினாள், ‘‘பாருங்க - உங்களை கூப்பிடச் சொன்னால், அதுவும் உறங்கியாச்சு’’ என்று குழந்தையை எழுப்பினாள். ‘‘இரேன்-கொஞ்சம் உறங்கட்டும், கன வெயில்’’ என்று தடுத்தார்.
முற்றத்தில் நல்ல வெயில். அதன் ஓரத்தில் ஒரு அவரையை படர விட்டிருக்கலாம். அப்படிச் செய்தால் ஆகாயத்தைப் பார்க்க முடியாது.
ஆகாயத்தைப் பார்த்தல் என்பது கிழவருக்கு முக்கியமான சங்கதியல்ல. தவிரவும் கழுத்துச் சுளுக்கு. ஆனால் எப்போதும் காகங்கள் பறந்து போகும்போது குழந்தை அவசரமாக வந்து தாத்தாவைக் கூப்பிடும். வீட்டு ஓடுகளில் துள்ளித் துள்ளி வரும் காகத்தை ‘‘எங்காக்கா’’ என்றும் தள்ளாடி வரும் ஒன்றை ‘‘தாத்தாகாக்கை’’ என்றும் சொல்லும். காகமும் ஆகாயமும் மிகவும் முக்கியம்.
பிற்பகலில்தான் அந்தக் கடிதம் வந்தது. ஓலைச் சுவடியைப் பிரித்து குழந்தையின் சாதகக் குறிப்பைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அது வந்தது. முற்றத்தின் நான்கு மூலைகளுக்குமாக குழந்தை ஓடிக்கொண்டிருந்தது.
‘‘நாக்குட்டித்
தங்கம் -
நான் செத்துப்
போனா-
நீ என்ன
செய்வே -
தெருவிலே
நிப்பேன்
வாணிச்சி
வருவா -
புண்ணாக்குத்
தருவா -
புட்டுப் புட்டுத்
திம்பேன்.’’
கடிதத்தை மறந்து தொட்டு விளையாடுகிற பாட்டைக் கேட்டு நின்ற இருவரையும் கள்ளத்தனமாகப் பார்த்து சிரித்தது குழந்தை.
‘‘எழுதி இருக்காராக்கும்’’ என்று இபுத்த குரலில் கேட்டாள் கிழவி.
பதில் சொல்லும் சுரத்தில் கிழவர் இல்லை. உடம்பில் நடுக்கம் இருந்தது. அவர் யோசித்துக் கொண்டிருந்தார்.
‘சடக்’கென மடியில் வந்து விழுந்தது குழந்தை.
இருவரின் முகங்களை ஒரு தடவை பார்த்து விட்டு வாயைக் கோணிக் கொண்டது.
‘‘ஏட்டி - தேரோட்டம் பாக்க போகாண்டமா.’’
‘‘வேண்டாம் போ.’’
‘‘பஞ்சி முட்டாசி வேண்டாமா?’’
‘‘வேண்டாம் போ.’’
‘‘அப்பா வேண்டாமா அப்பா.’’
ஆச்சி கேட்க, சிணுங்கியது. கிழவர் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தார்.
அந்த ஊரின் பெயரைக் கொண்ட ரயில் நிலையத்திற்கும் அந்த ஊருக்கும் அவ்வளவு தொடர்பு கிடையாது. நடக்க வேண்டும். ஒற்றையடிப் பாதையாகவும் வழி மாறும். பாதைத் திருப்பத்தில் வேப்பமரம் ஒன்றிருந்ததால் மாலை நேரம் வந்து விட்டதால் ஆள் நடமாட்டம் அங்கு குறைவு. இந்த லட்சணத்தில் ஒரு ரயில் வண்டி அங்கே நிற்கும் நேரம் இரவு மூன்று மணி.
சுடலைமாடன் கோவிலையும் வேப்பமரத்தையும் தாண்டி நடந்தால் தூரத்தில் மூன்று ஓட்டு வீடுகள் தென்படும். இருக்கும் வேறு வாசஸ்தலங்கள் கண்ணிற்குப் புலப்படாது. தலையைத் திருப்பி அந்த வழியைப் பார்த்தால் ரயில் நிலையமும் தெரிய வராது.
தயங்கித் தயங்கி நடந்தால் நாய் மட்டும் குரைக்கும். மூன்று வீடுகளுக்குரிய நபர்கள் வெளித் திண்ணையில் படுத்திருந்தால் எழுந்து யாரென்று பார்ப்பார்கள்.
மூன்று வீடுகளையும் ஒரு பெண் தெய்வக் கோவிலையும் தாண்டி விட்டால் முன்பக்கம் விசாலமான திண்ணையுடன் கூடிய வீடு.
அவன் அங்கு வந்து சேருகையில் கிழவர் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு கையில் விளக்குடன் நின்று கொண்டிருக்கிறார்.
‘‘சம்பகம் சௌக்யந்தானே’’ என்று கேட்கிறார் கிழவர்.
தலையை பலமாக ஆட்டி இரண்டு தடவை ‘ஆமாம்’ என்கிறான்.
பூட்சை கழற்றி, தூசியைத் தட்டி உட்காருகிறான். முற்றத்தில் லேசாக ஈரம். சுற்று முற்றும் பார்த்துக் கொள்கிறான். இரண்டொரு விநாடி பாயிலே போர்த்திக் கொண்டு தூங்கும் குழந்தையிடம் செல்கிறது.
‘‘தூங்குதாக்கும்’’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறான்.
அதிகாலையில் மண்வெட்டியை தோளில் சாய்த்துக் கொண்டு நடந்த ஒருவன் சற்று நின்று வீட்டினுள் நுழைகிறான்.
‘‘என்னா - தம்பியாபிள்ளை எப்ப வந்தது’’ என்று உரிமையுடன் கேட்கிறான்.
அவன் எழுந்து நிற்கிறான். பதிலை எதிர் பாராது வந்தவன் பேசிக் கொண்டிருக்கிறான்.
‘‘பட்டணத்திலே நல்ல மழையாமே - நேத்தைக்கு ஆண்டிப் பிள்ளை வந்திருந்தான் மாமா. வந்து பாக்கணும்னு சொல்லிக் கிட்டி ருக்கான்’’ என்று கிழவரிடம் கூறிவிட்டு ‘‘என்னா - பல் தேச்சுருங்களேன்-யத்தே-இன்னும் காப்பி போடலையா’’ என்று குரல் கொடுக்கிறான்.
கதவில் ஆச்சியின் சேலைத் தலைப்பு மறைந்து, கொஞ்ச நேரத்தில் உமிக்கரியும் செம்பும் திண்ணை நடையில் வைக்கப்படுகின்றன.
அவன் பெட்டியைத் திறந்து பரஷை எடுத்த வண்ணம் குழந்தையை ஒரு தடவை பார்த்துக் கொள்கிறான்.
‘‘குட்டி தூங்குதா’’ என்று கேட்டு விட்டு வந்தவன் மண் வெட்டியுடன் புறப்படுகிறான்.
கிழவர் செம்பை எடுத்துக் கொடுக்கிறார். அவன் பழக்கப் பட்டவன் போல் ‘‘இப்படியே ஓடைக்கரை வரை போய் வாரேன்’’ என்கிறான்.
‘‘எதுக்கு இப்பதானே வந்தது - பிறகு போலாமே.’’
‘‘இல்லை, பாத்து ரொம்ப நாளாச்சே?’’
() () ()
வெளியே வெள்ளை சிறிதாகப் பரவி வந்து கொண்டிருக்கிறது. கலகலப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது.
ஓடை அங்கிருந்து வெகு தூரமில்லை. வயல் வரப்பிலேயே நடக்க வேண்டும். வரப்பிலே கஷ்டமில்லாது நடக்கிறான். ஊரின் கீழ் எல்லையில் அது ஓடிக் கொண்டிருக்கிறது. ஆற்றிலிருந்து பிரிந்து அதே ஆற்றில் போய்ச் செருவது வரை ஓடையாக அந்த ஊரைக் கடக்கிறது.
பல்லைத் தேய்த்துக் கொள்கிறான். யாருமில்லை. முதன் முறையாக இந்த ஓடைக்கு வந்தபோதும் யாருமில்லை. ஆனால் அவன் தனியாக வரவில்லை அப்போது.
பல்லைத் தேய்த்துக் கொள்கிறான். யாருமில்லை. முதன் முறையாக இந்த ஓடைக்கு வந்தபோதும் யாருமில்லை. ஆனால் அவன் தனியாக வரவில்லை அப்போது.
அசதியாகவிருந்தது. கல்லில் உட்காருகிறான். நீரோடும் சப்தத்தை தவிர வேறொன்றுமில்லை. ஓடையை மிக அனாயசமாக ஒர் ஆடுதாண்டிச் செல்கிறது.
() () ()
தூரத்தில் காகம் ஒரு தடவை கூப்பிடுகிறது.
கிழவர் முற்றத்தையும் ஆச்சி தொழுவத்தையும் இமைக்காது பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பசு அம்மா என்றலறுகிறது. அந்த ஒலியில்தான் என்ன மாயம் இருக்கிறதோ?
தலையணையையும் பாயையும் தூக்கிக் கொண்டு, தாத்தாவிடம் சிணுங்கிக் கொண்;டே வருகிறது குழந்தை.
இடுப்பிலிருந்த துணியை சரி செய்து விட்டவாறே ‘ஏய்-இதுக்கு முகத்தைக் கழுவி, புதுசு ஏதாவது போட்டு வை’ என்கிறார் கிழவர்.
குரல் கேட்டு ஆச்சி வெளிவருகிறாள்.
‘‘ஏட்டி எழுந்திருச்சிட்டியா-அதோ பாரு’’ என்று பெட்டியையும் தோற்பையையும் காட்டுகிறாள்.
மூஞ்சியைச் சுளித்துக் கொண்டே கண்களில் வியப்பு எழ, ஆச்சியைப் பார்த்து கைகளை விரித்துக் கொள்கிறது.
பல்லை விளக்கி உடுத்தி விடுகிறாள். சற்று நேரத்தில் சமையலறையில் பலகாரத்தின் வாசம் சூழ்கிறது.
புதுக்களையுடன் முற்றத்திற்கு வருகிறது குழந்தை. மணி ஏழடித்து முடிகிறது. சமையலறையில் ஆச்சி கண்களைத் துடைத்துக் கொண்டிருக்கிறாள். கிழவர் உள்ளே வந்தவர், ஒரு நிமிடம் அவளைப் பார்த்துவிட்டு அப்பக்கமாக நடந்து தொழுவத்திற்குக் கெல்கிறார். குழந்தையின் பாட்டுச் சத்தம் முற்றத்திலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறது.
சேற்றுத் தண்ணீரைக் குடித்து விட்டு ஆகாயத்தை நோக்குகிறது சேவல்.
திடீரென்று குழந்தையின் பாட்டு நிற்கிறது. மெதுவாக உள்ளே நுழைகிறான் அவன்.
கண்களை இரண்டு தடவை மூடி மூடி விழிக்கிறது.
‘‘என்னட்டி.’’
மெதுவாகச் சிரிக்கிறான். குழந்தை அவனை வெறிக்க வெறிக்கப் பார்க்கிறது.
கைகளை நீட்டுகிறான் அவன். ‘படக்’கென்று திரும்பி வீட்டினுள்ளே ஓடுகிறது. தொழுவத்திலிருந்து வந்து கொண்டிருந்த கிழவர் தூக்கிக் கொள்கிறார்.
காப்பி - பலகாரம் சாப்பிடும்போது, குழந்தையின் பார்வைக்கு தலைகுனிகிறான். ரொம்ப நேரம் முகத்தைத் தாழ்த்தி வைத்துக் கொண்டிருக்கிறான்.
கிழவரின் காதோடு ‘‘இதுதான் பட்டணத்து அப்பாவா’’ என்று கேட்கிறது குழந்தை - ரகசியமாக.
குழந்தையின் தலையிலே தன் கண்களை அழுத்திக் கொள்கிறார்.
() () ()
ஒரு சின்னப் பையில் துணிகளை அடைத்துக் கொண்டிருக்கிறாள் ஆச்சி. பெட்டியைத் துழாவி வளையலொன்றையும் - கொன் வளையல் - பைக்குள் போடுகிறாள். உள்ளறையின் இருளடைந்த சுவரிலிருந்த போட்டோவையும் நோக்கிக் கொள்கிறாள்.
தெருவிலே வண்டி குலுங்குகிறது. ‘‘இங்கே வாட்டி’’ என்று கைகளை நீட்டுகிறான் அவன்.
தொழுவிலே மாடு ‘அம்மா’ என்கிறது. உள்சுவரைப் பார்த்துக் கொண்டு ‘‘அப்போ போயிட்டு வாரேன்’’ என்று சொல்லிக் கொள்கிறான். குழந்தையிடம் ‘‘நீயும் ஆச்சிகிட்டே சொல்லு’’ என்கிறான்.
எங்கேயோ பார்த்திருந்துவிட்டு, ‘ஓ’ என்று கத்த ஆரம்பிக்கிறது குழந்தை.
குழந்தையைத் தூக்கிக் கொண்டு தானே முதலில் வண்டி யேறுகிறார் கிழவர்.
காற்சட்டையின் இரு பைகளிலும் கைகளை இட்டுக் கொண்டு, வாசற்படியருகே நிற்கிறான்.
முற்றத்தைக் கடந்து செல்லும் இடத்திலே, வாசற்படிக்குச் செல்லும் வழியில் இருந்த அகல்விளக்கு வைக்கும் மாடக்குழி எண்ணை படர்ந்து திருக்கார்த்திகையை நோக்கி நிற்கிறது. ரொம்ப காலத்திற்கு முன்பு கூட அது அப்படித்தானிருந்திருக்கிறது.
அதிலே கையை வைத்துக் கொண்டு, இன்னொரு கையால் அவனது முகவாயைத் தொட்டு, ‘எழுத்து போடாமலிருக்கக் கூடாது’ என்று ஒரு பெண் தெய்வம் பொங்கல் சமயம் கொஞ்சியது.
மாடக்குழிக்கு அழிவே இல்லை. எருமை மாட்டை சாட்டையால் விளாசிக் கொண்டிருக்கிறான் தெருவில் ஒருவன்.
மெதுவாக ‘‘அந்த போட்டோவையும் எடுத்து வையுங்கோ - சரசுவதி போட்டோவை’’ என்கிறான் அவன். விம்மலை எப்படியோ சமாளிக்கிறான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் வண்டியிலிருந்து இறங்கி, தள்ளாடிச்சென்று, போட்டோவை எடுத்து வருகிறார்.
தொடர்பே இல்லாத அந்த ஊர் ரயில் நிலையத்திற்கு வண்டி செல்கிறது.
() () ()
நிலையத்தில் கூட்டமில்லை. கையில் டிக்கட்டுடன் அவனும் குழந்தையுடன் அவரும் பெஞ்சில் உட்காருகின்றனர்.
குழந்தை அவர் கண்களைத் தடவுகிறது. ‘‘தேரோட்டம் பாக்க ஆச்சி வேண்டாமாக்கும்’’ என்று முணுமுணுக்கிறது.
அரைமணி நேரமாகி விடுகிறது ரயில் வர. பெட்டியில் ஏறி உட்காருகிறார்கள். ‘ஐயோ-என் பொஸ்தகமில்லியே’ என்று கேட்கிறது குழந்தை.
நேரமாகிறது. ‘‘கொஞ்சம் ஆரஞ்சுப் பழம் வாங்கிக்கிட்டு வாருங்க’’ என்று குழந்தையின் காதில் விழும்படி உரத்து கூறுகிறான் அவன்.
குழந்தையின் தலையைத் தடவியவாறு நின்று கொண்டிருக்கிறார் கிழவர்.
‘‘சீக்ரமாபோ-நேரமாச்சு-வாங்கிட்டு வா’’ என்று குழந்தையும் அவசரப்படுத்துகிறது.
நகர்கிறார். ஒரு மூலைக்குச் செல்கிறார். ரயில் நகர்கிறது. அதன் கூக்குரலையும் மிஞ்சி வேறு எதுவோ கேட்பது போலிருக்கிறது அந்தக் கிழவருக்கு.
வீடு வந்து படியேறுகையில், முற்றத்தில் அணில் ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது.
() () ()
பிறகு தொழுவத்தில் அந்த மாடு அவ்வளவாகக் கூப்பிடுவதில்லை. காகங்கள் வந்து போகும்.
வாசற்கதவை சாத்திவிடப் போன கிழவரிடம் ஒரு கடிதத்தைத் தந்துவிட்டு போனான் தபால்காரன்.
பட்டணத்திலிருந்துதான் கடிதம். என்னவென்று கேட்டவாறு வந்தாள் ஆச்சி;.
அவன்தான் - முத்துக்கறுப்பன்தான் - எழுதியிருந்தான். எல்லாரும் சுகமாகவிருப்பதாகவும் மாமாவும் அத்தையும் நலம்தான் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தான்.
குட்டி உடல்நலக் குறைவு எதுவுமில்லாமலிருந்தாலும், சில விஷயங்கள் சொல்லப்பட வேண்டியிருக்கிறது என்கிறான்.
அவர்கள் இருப்பது பட்டணத்தில் நல்ல வசதியான அடுக்கு மாளிகைக் கட்டிடமாகவிருந்தாலும், பிரச்னை அங்குதானிருக்கிறதாம். குட்டிக்கு, விளையாடுவதற்கு கட்டிடத்தின் மொட்டை மாடி இருந்தாலும், அவளுக்கு ‘முற்றம்’ தான் வேண்டுமாம். வேறு எதிலும் பிரச்னையில்லை.
நண்பர் ஒருவர் வெளிப்படையாகவே சொன்னாராம், இவ்வாறு குழந்தையின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமலிருப்பது தவறு என்று.
ஆனால் தனக்குப் புரிகிறது என்று எழுதியிருந்தான். முற்றமும் ஆகாயமும் என்ன பாடுபடுத்தியிருக்கக் கூடும் என்பதை அவன் அறிந்திருப்பதாகவும் கூறியிருந்தான்.
குழந்தையை அழைத்துக் கொண்டு ஊருக்கு இரண்டொரு நாளில் வருவதாகவும் அதில் எழுதியிருந்தான்.
சிறுகதைகள்
{load position article1}