Girl in a jacket

மா. அரங்கநாதன் கதைகள் பற்றி – சா. கந்தசாமி

புதிய சோதனை, முயற்சி என்பது இலக்கியத்தின் ஒரு கூறான கவிதையில் அங்கீகாரம் பெற்றது போல் இன்னும் சிறுகதையில் பெறவில்லை. கவிதையின் நீண்ட மரபு சிறுகதைக்கு இல்லாதது அதற்கு ஒரு காரணம் என்பதும் ஓரளவுக்குச் சரிதான்.

ஓர் ஐம்பது அறுபது ஆண்டுகள் சரித்திரம் கொண்ட தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் புதிய முயற்சிக்கும் சோதனைக்கும் குறைவே இல்லை என்பதுதான் சிறப்பு. அந்த சோதனையை மிகவும் வெற்றிகரமாகவும் இலக்கியத் தரமாகவும் செய்தவர்கள் எனப் புதுமைப்பித்தன்- மௌனியைச் சொல்ல வேண்டும். சிறுகதை என்ற புதிய இலக்கியம் தமிழில் தோன்றிய சொற்ப ஆண்டுகளுக்குள்ளாகவே அதற்கு பூரணமான இலக்கிய அந்தஸ்த்தை அவர்கள் தேடித் தந்தார்கள். தங்கள் காலத்தில் கசடுகளையெல்லாம் அவர்களின் கதைகள் அடித்து விட்டு புத்திளமையோடு அன்று போலவே இன்றும் உள்ளது என்பது முக்கியமாகச் சொல்ல வேண்டிய அம்சமாகிறது.

பின்பற்ற இயலாத அம்மரபின் தொடர்ச்சியாக தமிழில் பலரும் சிறுகதைகள் எழுதிக் கொண்டு வருகின்றனர். அவர்களின் சிறுகதைகள் காலம் – இடம் – என்பதையெல்லாம் கடந்து என்றும் உள்ள வாழ்க்கையோடு இணைந்து போய் விடுகிறது. அவர்களின் கதைகளைப் படித்தவர்களை பாக்கியசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் புதிய சோதனை, முயற்சி என்றதை அறிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் ஒரு மேலான அறிவு தேவைப்படுகிறது. இந்த அறிவு தமிழ் சமுதாயத்தில் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் ஆரம்பம் முதலே அது புதிய சோதனைகளை அங்கீகரித்துக் கொண்டே வருகிறது. ஐம்பது அறுபது ஆண்டுகளில் தமிழில் பத்துப் பன்னிரெண்டு தரமான எழுத்தாளர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் தரமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள் என்பதையும் அது கண்டு கொண்டு உள்ளது என்பதோடு புதிய சோதனை முயற்சியில் ஈடுபாடு கொள்ள பலரையும் தூண்டிக் கொண்டே இருக்கிறது.

புதிய சோதனை முயற்சி என்பது சிறுகதையில் ஒரு உச்சமாக உள்ளது என்பதோடு இலக்கியமாகவும் வந்துள்ளது. வெளிநடப்பு, உரையாடல், தகவல்-என்பதையெல்லாம் சுலபமாகவே கடந்து வாழ்க்கைக்கு அர்த்தம் காணும் அம்சமாகவும் அமைந்து விட்டது. சிறுகதையை இப்படி சாத்தியமாக்கியவர்களில் இடம்பெறும் பெயர் மா. அரங்கநாதன்.

இவரது தொகுதியில் உள்ள கதைகள் அனைத்தும் அளவில் சின்ன கதைகளே. ஐந்தாறு பக்கங்கள் என்று செல்கின்றன. ஆனால் நுட்பமான தகவல்களும் விவரங்களும் வெகுவாக அடக்கிச் சொல்லப்படுகிறது. சொல்லப்பட்டதை விட – சொல்லப்படாத விஷயத்தையே அறிந்து கொள்ளவும் துணைசெய்யும் விவரங்கள். அதனால் ஒரு முறைக்கு இன்னொரு முறை படிக்கத் தூண்டுகிறது. படிக்கப் படிக்க அர்த்தமும் அனுபவச் செறிவும் கூடுகிறது. அரங்கநாதனின் எளிமை என்பது என்ன? நேரான ஒரு நோக்கில் அலங்காரமின்றி சொல்கிறார். அதுதான் எளிமை. ஆனால் அந்த நேரான எளிமையை அவர் சொல்லும் முறையில் சொல்லப்படாத ஒரு கருத்தை வெகு ஆழமான முறையில் சொல்கிறார். அதனை அவர் ஒரு விதமான முயற்சி, பழக்கம், உழைப்பு ஆகியவற்றால் சாத்தியமாக்கி இருக்கிறார். இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் சாதனை அது என்றே குறிப்பிட வேண்டும்.

அரங்கநாதன் கதைகளில் முத்துக்கருப்பன் என்றொரு மனிதன் பல்வேறு விதமாக அடிக்கடி வந்து போகிறான். ஒவ்வொரு சிறுகதையிலும் தனியாக குறிப்பிட்டுச் சொல்லும் படியாக முன் கதையில் வந்தது மாதிரியோ பேசியது மாதிரியோ நடந்து கொள்வது இல்லை. எல்லா கதைகளிலும் வந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் புது மனிதனாக – முற்றிலும் அறியப்படாதவன் மாதிரி பேசி செயல்பட்டு வருகிறான். அதையே இன்னொரு வித த்தில் சொல்ல வேண்டுமானால் – முத்துக்கருப்பன் என்ற மனிதனின் வாழ்க்கை வரலாறு பல கட்டங்களில் – பல நிலைகளில் சொல்லப்படுகிறது. ஒரு கதையில் வாலிபனாக வரும் முத்துக்கருப்பன் – இன்னொரு கதையில் கிழவனாக வருகிறார். இந்தக் கதைகள் முத்துக்கருப்பன் வாழ்க்கை சொல்வதைத்தான் பிரதானமாகக் கொண்டுள்ளது அதையே ஒரு மனிதனின் வரலாறு என்று சொல்ல முடியுமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லி விடலாம். பல தடங்களில் – பல மட்டங்களில் அவன் செயல்படுகிறான். மனித பண்பு சார்ந்த அவன் மேலும் கீழும் செல்கிறான். ஆனால் கதை மேலானதாகவே செல்கிறது. இதனை ஆசிரியர் தெரிந்து தான் ஆனால் தனக்குத் தெரிந்தது என்பது வாசிப்பவர்களை உறுத்தாத அளவில் இயல்பாக செயல்பட வைக்கிறார்.. அந்த இயல்புத் தன்மை அவர் சிறுகதைகளுக்கு இலக்கிய ரீதியான அமைதியைக் கொடுக்கிறது. அறிந்து அறியவொண்ணாத வித த்தில் சிறுகதைகள் எழுதுவதை அரங்கநாதன் சிறுகதைகளில் அதிகமாகக் காண முடிகிறது என்பது அவருக்கு சிறப்புத் தருகிற விஷயம்.

ஒரே கதையை மாற்றி மாற்றி பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி சொல்லப்படும் போது மா. அரங்கநாதன் ஒரே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சரித்திரத்தை – ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் எழுதி – அதனைப் படிக்கையில் வாசகர்களும் உணர்ந்து அனுபவிக்கும் படியாக சாத்தியமாக்கியுள்ளார்.

அரங்கநாதன் தமிழில் புலமையும் அந்தப்புலமையை மீறிய எளிமையும் கொண்டிருக்கிறார். அதுவே – அவருக்கு அவர் சிறுகதைகளுக்கு மரபு ரீதியான ஒரு சிந்தனை வளத்தை அளிக்கிறது. இவரது சில சிறுகதைகள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவும் சில சமீப ஆண்டுகளிலும் எழுதப்பட்டவை.

இவருடையவை சமீப ஆண்டுகளில் தமிழில் வந்திருக்கும் சிறுகதை தொகுப்பு என்பதோடு நவீன சிறுகதை தொகுப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது. இப்போது அறிந்து கொள்ளப் பட்டதை விட இன்னும் பல ஆண்டுகள் கழித்து அதிகமாக உணர்ந்து கொள்ளப்படும் என்பது குறைந்த மதிப்பீடாகாது என்றே சொல்ல வேண்டும்.

சா. கந்தசாமி

முன்னுரைகள்

 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved