Girl in a jacket

கலைவாணர்

மா. அரங்கநாதன்

கலைவாணர் என்.எஸ்.கே பற்றி எழுத என் வயது நபர்களுக்கு விசேட காரணங்கள் இருக்கும். அவரது ஆரம்ப கால படங்களிலிருந்தே தொடங்க முடியும். என்னைப் பொறுத்தவரை அவரது ஊரை சார்ந்தவன் என்ற காரணமும் உண்டு.

பத்துப் பதினைந்து வயதில்தான் அவரது மகன் கோலப்பனை தெரிந்து கொண்டேன். ஒழுகினசேரி என்னும் நாகர்கோயில் பகுதியில் கலைவாணர் ஒரு புதிய வீடொன்று கட்டினார். கட்டும்போதும் முடித்தப்பின்னரும் அந்த வழி செல்வோர் யாவரும் அதை வியந்து பார்ப்பார்கள். அக்காலத்தில் அவ்வளவு பெரிய கட்டிடம் அது. ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நாகரம்மன் கோயில் சிறப்பு வழிபாட்டிற்காக அப்பகுதி முழுவதிலுமிருந்தும் மக்கள் வரும் போது கோயிலுக்குப் போவதைவிட கலைவாணரின் மதுர பவனத்தை பார்ப்பதில்தான் நாட்டம் இருக்கும்.

அவரது தந்தை சுப்பையா அவர்களுக்கு ஒரு மாட்டு வண்டி வாங்கிக் கொடுத்திருந்தார். அதில்தான் அவர் செல்வது வழக்கம் – மோட்டாரில் செல்வதில்லை. ஒரே ஒரு காளை மட்டுமே இழுக்கும் சிறிய வண்டி..

கிட்டத்தட்ட கலைவாணரது எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். சிவகவி, அசோக்குமார், அரிதாஸ் போன்று தியாகராச பாகவதருடன் நடித்தப் படங்களும் கண்ணகி, ஆரியமாலா, ஜகதலப் பிரதாபன் போன்று சின்னப்பாவுடன் நடித்தப் படங்களும் பிரபலம் ஆயின.

வழக்கு ஒன்றில் சேர்க்கப்பட்டு பின்னர் மீண்டு வந்து நடித்தப் படங்கள் சில வெற்றி பெற்றாலும் திருப்தி தரவில்லை. உபதேசம் செய்ய ஆரம்பித்தார் – இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு குறைந்தது . நல்ல தம்பி உட்பட பல படங்கள் அதில் அடங்கும். யார் பையன் என்ற படத்தில் எந்த குணச்சித்திர நடிகரையும் விட ஒரு நகைச்சுவை நடிகர் நடிப்பை சீரிய முறையில் வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.

பழைய படங்களில் மங்கம்மா சபதம் அவரது தனித்துவமான நடிப்பிற்கு எடுத்துக் காட்டு. சார்ளி சாப்ளின் உத்திகளையும் பல படங்களில் கையாண்டிருந்தார்.

ஒரு படத்தை தயரிப்பாளர் எடுத்து முடித்தப் பின்னரும் இதில் கலைவாணரும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்துடன் தனியாக சில நகைச்சுவை காட்சிகளை எடுத்து சேர்த்தப் படங்களும் உண்டு - உத்தமப்புத்திரன் (சின்னப்பா நடித்த) மற்றும் சந்திரலேகா போன்ற படங்கள்.

தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்ட அவருக்கு பள்ளிப் படிப்பு குறைவு. அதுவும் அந்த நாளில் நாஞ்சில் பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபடியால் சில பள்ளிகளில் மலையாளம். ஆரியமாலா படத்தில் கலைவாணர் மலையாளம் பேசி நடித்திருக்கிறார்.

அக்கால கட்டத்தில் நகைச்சுவைக்கென்று சிலவற்றை கட்டாயமாக பின்பற்ற வேண்டிய அவசியம் தயாரிப்பாளர்களுக்கு இருந்திருக்கிறது. (இப்போதும் அப்படித்தான் இருக்கிறது என்றும் சொல்லலாம்) எப்படி இருந்தாலும் கலைவாணர் தனித்துவம் மிக்க நடிகர் என்பதை மறக்க முடியாது.

ஐரோப்பாவிலும் – ஹாலிவுட்டிலும் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் பின்னர் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்தது உண்டு. நம் நாட்டிலும் அப்படித்தான் – கலைவாணர் அதில் ஒருவர்.

பின்னாளில் அவரது நிதி நிலைமையைப் போல உடல் நலனும் குன்றிவிட்டாலும் தாராள குணத்தையும் கொடுத்துப் பெறும் இன்பத்தையும் கைவிட மறுத்தார். அவரிடம் உதவி பெற்று தேறிய பலர் அவருக்கு எந்த உதவியும் செய்ய முன்வந்ததாக தெரியவில்லை.

நாட்டுப்புற கலைகளில் நம்முடைய வில்லுபாட்டு அவரால் பிரபலமடைந்தது. பின்னாளிலேயே அதில் அவர் கவனம் செலுத்தினார். காந்திமகான் கதையை அடிக்கடி நடத்தினார். வில்லுப்பாட்டில் கடைசியில் எப்போதும் வாழ்த்துப் பாடுவது வழக்கம். ஒருதடவை “செய்கு தம்பிப் பாவலரை மறவேனே – நான் மறவேனே” என்றும் பாடினார். அது பாவலர் மறைந்த மாதம்.

காலவெள்ளத்தில் எளிதில் மக்கள் மனதிலிருந்து மறையக்கூடிய நபர்களில் கலைவாணர் ஒருவரல்ல.

 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved