Girl in a jacket

தீதும் நன்றும் பிறர் தர வாரா

மா. அரங்கநாதன்

உலகத்து சிந்தனையாளன் ஒருவனின் வரிகளை தலைப்பாக இட்டு ஒரு சிறுகதையை குறும்படமாக தந்திருக்கிறார் புதுவை யுகபாரதி. இதன் முன்னர்   வெளிவந்த குருவி தலையிலே பனங்காய் என்ற தலைப்பில்  வந்த குறும்படம் போலவே இந்தப் படமும் நல்ல கதையம்சத்தைக் கொண்டுள்ளது. கணவனை மதிக்காத மனைவியால் வாழ்வை வெறுத்து சாகத்துணியும் ஒருவனின் மனப்போராட்டம். இதன் விசேட அம்சமாக இதில் நடித்தவர் ஒருவரே என்பதை சொல்ல வேண்டும்.

THIEF என்ற ரே மில்லண்ட் நடித்த ஆங்கிலப் படம் ஒரே ஒரு நடிகரைக் கொண்டிருந்தது. மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்த அந்தப்  படம் உரையாடல் எதுவும் இல்லாதது. கதைவிசயத்தில்அதற்கும்  யுகபாரதியின் இந்த குறும்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு யுகபாரதியின் குறும்படங்களும் மனித மனப்போராட்டம் பற்றியவைதான்.

இம்மாதிரி கதையம்சம்  கொண்ட கதைகளும் குறைவுதாம். மனப்போராட்டம் பலவகை காட்சிகளின் மூலம் காட்டப் பெறலாம். அப்படிப்பட்டப் போராட்ட உணர்வை இம்மாதிரிப் பட்ட சீவன்கள் கொண்டிருக்க முடியுமா என்பது எல்லாருக்கும் எழும் கேள்வி. ஆனால் படைப்பு என்பது இப்படி  இருக்கிறது என்பதை காட்டுவதற்கு மட்டுமல்ல இப்படியும் இருக்கலாம்  என்ற ஒரு நம்பக தன்மையை எழுப்பவும் செய்வதுதான்.

மனைவியால்  உதாசீனப் படுத்தப்பட்ட ஒருவன் தன்னுடைய மனப்போராட்டத்தில்  ஒரு முடிவுக்கு வருகிறான் என்று கதையம்சத்தை கொடுப்பதும்  பின்னர் வேறொரு தெளிவிற்கு வருவதும் வரவேற்கதக்கதே. ஆனாலும் காட்சியகப்படுத்தும் போது இம்மாதிரி கதையம்சம் கொண்டவைகளுக்குத் தெளிவு மிகவும் அவசியம். அதை கூடியவரை  சிறந்த முறையில் தர இயக்குனர் முயற்சித்திருப்பது தெரிகிறது. யுகபாரதியின் இரண்டு குறும்படங்களிலும் மேற்படி மனநிலை தான் n கதையை நகர்த்தி செல்கிறது. அந்த எண்ணத்தை வார்த்தைகள் மூலமாக  காட்டத்தான் வேண்டுமா என்பது தவிர்க்க முடியாத கேள்வி. யாரிடமும்  சொல்லி தனது போராட்டத்திற்கு ஆதரவு இருக்கிறதா என்று அறிய  முடியாத நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் தாமே பேசிக்கொள்வது  போன்ற காட்சிகளை வேறு விதத்தில் மனதில் தோன்றும் எண்ணங்களை  முக பாவங்கள் மூலமாக காட்டுவது மிகச்சிறந்த உத்தியாக இருக்கும். நியாயமான காரணங்களைக் காட்டி அம்மாதிரி காட்சிகள் மூலமாக கதையை நடத்திச் செல்ல முடியாது என்ற நிலை இருக்கும் என்றால் அதற்கு வேறு வழிமுறைகளை – இலக்கிய பாதை என்று இல்லாமல்  வேறு வழிகளை கண்டறிய வேண்டியது அவசியமாகிறது. எடுத்துக்  காட்டாக குழந்தையின் மனநிலையை பொம்மைகளிடமிருந்தாவது  ஆதரவு பெறலாம் என்ற ஏக்கம் சிறந்த முறையில் குருவிதலையில்  பனங்காய் படத்தில் காட்டப்பட்டது போல வேறு வழியில்லாது சாகத்  துணிந்தவனின் மனநிலையை அவனே பதில் சொல்வது போல் அல்லாது  வேறு வழியில் – ஒரு புதிய உத்தி மூலம் காட்டப் பெற்றிருக்கலாம்  என்பது இந்த நல்ல குறும்பட்ததின் குறைபாடாக ஆகாது. அந்த உரையாடல் கூட கண்ணாடியில் பிரதிபலிப்பாக தெரியும் உருவம் வெளிப்படுத்துவது நியாயமானதே.

சங்க இலக்கியத்தின் முன்னரேயே இந்த மண்ணில் நிலை பெற்றிருந்த ஒரு தத்துவ விசாரம் முன்றிலார் மூலமும் செம்புலப்பெயல்நீரார்  மூலமும் கபிலன் மூலமும் பரவுவதற்கு முன்பே கணியன்பூங்குன்றன்  மூலம் தோற்றம் கண்டிருக்க வேண்டும். தீதும் நன்றும் யார் மூலமும்  நம்மை வந்தடைய முடியாது என்பதால்தான் நம்மை விட பெரியவனும் இல்லை நம்மைவிட சின்னவனும் இல்லை.இது போன்று  உலகத்திற்குப் பொதுமையான விசயத்தை  உணர்ந்து கொள்ளும் போது, நமக்கு யாதும் ஊர்தான் யாவரும் கேளீர்தாம். பூங்குன்றனின் சொற்றொடர் இந்த குறும்படத்திற்கு நூறு சதவீதம் பொருந்தி வராவிட்டாலும் அதைத் தலைப்பிட்டு நினைவுபடுத்தியமைக்கு யுகபாரதிக்கு நன்றி சொல்ல வேண்டும் 
வாழ்த்துகளுடன்.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved