Girl in a jacket

­ எனது ஊர்

மா. அரங்கநாதன்

சென்னைப் பட்டிணத்தில் ஏறக்குறைய 60 ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட போதிலும்,18 வயது வரை வாழ்ந்த ஊரால்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சொல்லலாம்.

அது நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படுகிற பிரதேசத்தில் உள்ளது. இந்தியா எவ்வாறு ஆங்கிலேயரால் ஆளப்பட்டதோ, அதுபோல இந்த இடமும் திருவிதாங்கூர் சமஸ்தான ராஜாக்களால் ஆளப்பட்டது என்று சொல்லலாம்.

வந்து சேர்ந்த இடம் சென்னைப் பட்டிணம். அதுவும் அப்போது மதறாஸ் மாகாணமாகத்தான் இருந்தது. அரசு அலுவலகங்களில் தெலுங்கு, கன்னடம் பேசுவோர் நிறைய இருந்தனர்.

எனது ஊர் திருவண்பரிசாரம். திருப்பதிசாரம் என்று அழைக்கப்பட்டது. அங்கிருந்து ஒரு பத்து மைல் கிழக்காக சென்றுவிட்டால் நெல்லை ஜில்லா வந்துவிடும். இருந்தாலும் அக்காலக்கட்டத்தில் திருநெல்வேலி ஓர் அந்நியப் பிரதேசமாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. அங்கே கிடைக்கும் மலை வாழைப்பழம் கூட எங்கள் ஊருக்கு வருவது கிடையாது.

சங்கம் மருவிய காலத்திற்கு முன்பேயே இந்த நாஞ்சில் நாடு, தமிழ் அறிஞர்களால் போற்றுவிக்கப் பட்டது மட்டுமல்ல, பலர் தொன்றியதும், இங்கேதான். தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட இடம் என்று நாம் அறியும் அதங்கோடு பக்கத்து ஊர்தான். நாஞ்சில் வள்ளுவன் யார் என்ற ஐயப்பாடு இருக்கிறது எனினும் திருக்குறளில் கையாளப் பெற்றிருக்கிற பிரயோகங்கள் பல இன்றும் வழக்கத்தில் இங்கே உள்ளது. இது தவிர ஆழ்வார்களில் நம்மாழ்வார் பிறந்த இடம் இந்த ஊர்தான். திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி அல்லவா என்று கேட்கலாம். அது அவர் தகப்பனார் ஊர். அவர் தாயார் உடையநங்கையம்மாள் திருவண்பரிசாரத்தைச் சார்ந்தவர். குல வழக்கப்படி முதல் குழந்தை தாய் ஊரில்தான் பிறக்க வேண்டும்.

‘வருவார் செல்வார் வண்பரிசாரத்தில்’ என்று நம்மாழ்வாரும் பாடியுள்ளார். ஊர் கோயிலிலும் நம்மாழ்வார்க்கென தனி சன்னதி உண்டு. திருவிழாக் காலங்களில் உற்சவ மூர்த்தியாகவும் நம்மாழ்வார் வலம் வருவார்.

108 திருப்பதிகளில் ஒன்றான இந்த ஊர் கோயிலின் மூர்த்தி திருவாழ்மார்பார். கிட்டத்தட்ட அந்த ஊர் அளவிற்குப் பெரியது. எதிரே ஊர் தெப்பக்குளமும் அதன் துறைகளும் விஷேடம். அவற்றிற்குப் பெயர்களும் உண்டு. ஆண்கள் துறை, பெண்கள் துறை, குருக்களய்யாத் துறை, அரசு மூட்டுத் துறை, மாமூட்டுத் துறை என்பதோடு பிராமணாள் துறை, என்றும் ஒரு துறையைச் சொல்வார்கள். தண்ணீர் மற்ற ஊர் குளங்களைப் போல் அல்லாது ஓரளவு சத்தமாகவே இருப்பதற்கு அதிலுள்ள மீன்களைச் சொல்ல வேண்டும்.

நல்லவர்களும் படித்தவர்கள் என்று பெயரெடுத்தவர்களும் கூட ஜாதி நெறியைப் பின்பற்றவே செய்தார்கள். அதில் பிராமணர்களைவிட மற்றவர்கள் அதிக கண்டிப்புடன் இருந்தார்கள்.

கோயிலின் பூஜை புனஸ்காரங்கள் ‘போற்றி’ என்று அழைக்கப்படும் ‘துளு’ மொழி பேசும் நபர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கும். ‘இன்னிக்குப் பையன் “எக்ஸாம் பீஸ் கட்டறநாள் – பகவானாப் பார்த்து ஒங்கள அனுப்பிச்சிருக்கார்” என்று பிரசாதத் தட்டை நீட்டும் அர்ச்சகர்களை நாற்பதுகளில் பார்த்திருக்கிறேன் – அவர்கள் சிறிது ஆங்கிலமும் பேசுவார்கள். கோயிலின் பக்கமாக அமைந்த பிராமணக்குடி என்று அறியப்படும் தெருவில் ஏழெட்டு பேரே இருந்தார்கள். கோயில் மதில்களும் பிரகாரங்களும் மிகவும் நேர்த்தியாக இருக்கும். கோபுரம் இல்லாவிட்டாலும் முன்பக்கம் இருக்கும் சிலை மிகவும் அழகு.

ஊரின் வடக்கே பழையாறு என்னும் பறளியாறு என்னும் பஃறுளியாறு ஓடிக்கொண்டிருக்கிறது. அனேகமாக ஊரில் எல்லாருமே விவசாயிகள்தாம். பயிரை பற்றி அதாவது உழவு, மரடித்தல், விதைப்பு, தண்ணீர்ப் பாய்ச்சுதல், நாற்றுநடுதல், களையெடுத்தல், கதிர் அறுப்பு, சூடு அடித்தல், நெல் அளவு என்பன் பற்றியெல்லாம் குழந்தைகளும் அறியும். வைகாசி 15ஆம் நாள் என்றாலே அங்கு மழை தொடங்கிவிடும்.

ஊரைச் சுற்றி வயல்கள் இருந்தன என்று சொல்வது நாஞ்சில் நாட்டைப் பொருத்தவரை அவ்வளவு சரியல்ல. வயல்களின் நடுவேதான் ஊர்கள் இருந்தன. பெரும்பாலான இடங்களை வயல் வரப்புகள் வழியேதான் சென்றடைய வேண்டும். எங்கள் ஊரிலிருந்து மேற்குப் புறமாக ஆற்றைக் கடந்து, வரப்புகள் வழியாக சென்று புத்தேரியை அடையலாம். அது கவிமணி தேசிய விநாயகம் அவர்கள் ஊர். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் வரப்புகளையும், ஆற்றையும் கடந்துதான் செல்வார்கள். அடை மழைக் காலங்களில் மட்டுமே வெகுதூரம் நடந்து திருநெல்வேலி செல்லும் சாலை வழியாக நகரத்தை அடையலாம். கலைவாணர் என். எஸ்.கே., டி.கே. சண்முகம் இல்லங்கள் வழியாகவும் கடந்து செல்ல வேண்டும்.

கவிமணியைத் தவிர மனோன்மணியம் சுந்தரனார், வையாபுரிப் பிள்ளை போன்றவர்களின் பேரப்பிள்ளைகளும், உறவினர்களும் இங்கே உண்டு. பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தம் பிறந்ததும் பக்கத்து பூதப்பாண்டியில்தான்.

“தென்னம் பிள்ளையிலே ஏறி ஒரு காய் பறிக்க முடியுமா, முன் ஏர் கட்டி உழத் தெரியுமாலே உனக்கு’ என்று கேட்கும் அளவிற்கு தென்னையும் நெற்பயிரும்தான் அங்கே செல்வம். தேங்காய் கேரளாவில் இருப்பது போலல்லாமல், ஒரு தனிச்சுவையுடன் இருக்கும். வாழையும் அப்படித்தான். விதவிதமாக உண்டு. மலையாளத்திலும் மற்ரத் தமிழகப் பகுதிகளிலும் நேந்திரங்காய் என்று சொல்லப்படும் அந்த ரகத்தை ஏற்றங்காய் என்றுதான் ஊரிலே குறிப்பிடுவார்கள். அறுவடையில் கிடைக்கும் நெல்லைக் கொண்டுதான் அனேகமாக எல்லாப் பலசரக்குச் சாமான்களும் வாங்கப்படும். நெல்லைப் பணமாக ஏற்றுக் கொள்கிற வியாபாரிகள் கடைக்காரர்கள் உண்டு.

அறுவடை நடக்கும்போதும், கதிர் முற்றி தயாராக இருக்கும்போதும் யராவது சென்று வரப்பில் உட்கார்ந்து இரவு முழுவதும் காவல் காப்பது அவசியம்.

சில காலக்கட்டங்களில் நெல்வயல்களிலேயே காய்கறிகள் பயிர் செய்வதுண்டு. அப்போது அதை கத்திரி வயல் என்று சொல்வார்கள். கத்தரி மட்டுந்தான் பயிர் என்றில்லை அதுதான் அதிகமாக இருக்கும். அதிகமாக அதுதான் செலவுமாகும். எனவே, கத்திரி என்ற பெயருக்கு ஒரு முக்கியத்துவம். வீட்டில் கிழங்கள் காலமாகிவிட்டால்,

‘கத்திரிக்காய்

எங்களுக்கு

கைலாயம் உங்களுக்கு’

என்று ஒப்பாரி வைத்து அழுவதுண்டு. அப்படிப்பட்ட வரிகளில் கவிதையம்சம் உண்டு. அதனுடைய விஷேடம் அவர்களுக்குத் தெரியாது.

துக்கம் கேட்பது என்பது மிகவும் முக்கியமானது. திருமணத்தின்போது போகாமல் இருந்துவிடலாம். ஆனால், துட்டி கேட்காவிட்டால் அது பெரும் தவறு.

ஆனாலும், இம்மாதிரிப்பட்ட பெருந்தன்மையான போக்கு ஊருக்கு வெளியே இருக்கும் ஆதிதிராவிடர், வண்ணார் போன்ற சமூகத்தினர்பால் கிராமத்துவாசிகளுக்குக் கிடையாது.

ஊர் மேலூர் – கீழூர் என்று அறியப்பட்டது. இரண்டிற்கும் நடுவே பழையாற்றின் ஒரு வெட்டாறு. கீழூரில் இடையர், தச்சர், முடிதிருத்துவோர் போன்றோரின் இருப்பிடங்கள். இவர்களெல்லாம் கோயிலிலும் குளத்திலும் அனுமதிக்கப்பட்டாலும் ஆதிதிராவிடர் வேண்டிய மட்டும் ஒதுக்கப்பட்டனர். ஊர் சிறுவர்கள் மனதில் இம்மாதிரிப்பட்ட நச்சு எண்னம் நியாயமாக தொற்றுவிக்கப்பட்டது. அப்படி நீங்காமலே இருந்த எண்ணம் கொண்ட பல பிரபலங்களை நான் பிற்காலத்தில் அறிந்திருக்கிறேன்.

மலை – அது மாபெரும் அனுபவம். திருவண்பரிசாரத்தில் இருந்து பார்த்தால் மூன்று பக்கமும் மலை தெரியும். கிழக்கே மருந்துவாழ் மலை அநுமான் லட்சுமணனைக் காப்பாற்ற சஞ்சீவி பருவதத்தைக் கொண்டு வந்த கதையோடு இந்த மலையின் இருப்புச் சொல்லப்படுகிறது. வடக்கே தாடகை மலை – ஊரோடு செர்ந்து ஜடாயுபுரம். குமரி செல்லும் வழியிலே அகத்தீஸ்வரம் எல்லாமே கம்பனது காவியம் பரவிய பின்னரே நம் முன்னோர்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். சங்கக காலத்தில் இராமன் என்று ஒரு பெயர் வருகிறது அவ்வளவுதான்.

ஊர்த் திருவிழாக் காலங்களில் தேரோட்டம் முடிந்த பின்னரும் கம்ப ராமாயண உரை நடத்தப் பெறும். படிப்பற்ற முதியவர்கள்கூட கம்பன் கவிதையை ரசிக்க முடியும். ஒரு காவியம் ரசிக்க பெற்றால் எப்படி அந்த ரசனையை கிராம மக்கள் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு கம்ப ராமாயணம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம், ஜடாயுபுரம் போன்ற பெயர்களைப் பெற்றதே நல்ல எடுத்துக்காட்டு. நம் சிவனும் நாராயணனுமே நம்முடைய கவிஞர்களின் ரசனையில் உருவானவர்கள் தானே. முருகன், வேலன் என்பன வேறு எடுத்துக்காட்டுகள்.

திருவண்பரிசாரம் 108 திருப்பதிகளில் ஒன்ராக இருந்த போதிலும் நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதலானவர் என்று இருந்தபோதிலும், ஊர் மக்கள் எல்லாருமே சைவ சமய சார்புடையவர்கள்தாம். மாமிச உணவை உண்பவராக இருந்த போதிலும், சிவ சம்பந்தமே அதிகம். திருவாழ்மார்பர் சன்னதியில் பெறும் சந்தனத்தைக் கூட நெற்றியில் திருநீறு போலவே பூசிக்கொள்வார்கள். ஐந்து, ஏழு திருவிழாக் காலங்களில் முக்கியத்துவம் சிவனுக்குத்தான். எட்டாவது நாளில் நடராஜர் பவனி வருகையில் அது ஊர் மக்களின் நாளாக இருக்கும். தில்லையம்பலோம் சிவசிதம்பரோம் போன்ற கோஷங்கள் தலைத்தூக்கும். பத்துநாள் திருவிழாக் காலங்களில் அந்த நடராஜர் பவனிவரும் எட்டவது நாள் மக்த்தானது. சாதாரண மக்களும் சிறுவர்களும் கலந்துகொள்ளும்படியான திருவிழா நளாக இருக்கும். ஊரின் சிவசம்பந்தத்திற்கு அதுவும் ஓர் எடுத்துக்காட்டு. மகாதேவன், சிதம்பரம், பேச்சி, பகவதி, இயக்கி (இசக்கி – ஏக்கி) போன்ற பெயர்கள் சாதாரணமாக சூட்டப் பெறுபவை என்றாலும், சைவ வைணவ பேதம் கிடையாது.

திருமணங்கள் மணமகளின் இல்லத்திலேயே நடைபெறும். சத்திரங்களில் நடந்து நான் பார்த்தது கிடையாது. மணமகனுக்குத் தரப்படுகிற சீர்வரிசை அதிகம்தான். நிறை நாழி நெல் வைத்து, அரசாணி கிளை நட்டு பெரும்பாலும் சைவப் பெரியார் ஒருவர் தாம் நடத்திவைப்பார்.

திருமணத்தில் திருநீறு பூசுதல் ஒரு முக்கியமான அம்சம். தாலி கட்டல் முடிந்ததும் மணமக்களுக்கு பெற்றோர்கள் திருநீறு பூசுவார்கள். தொடர்ந்து பெற்றோர்களுக்குச் சமமான பெரியவர்கள். திருநீறு பூச பெரியவர்களை அந்த சமயத்தில் அழைக்க வேண்டும். ‘என்ன எவன் கூப்பிட்டான் கொஞ்சங்கூட மதிக்கல’ என்று சில கிழங்கள் கோபத்தை வெளிப்படுத்தும். மாலையில் மணமக்கள் கோயிலுக்குச் சென்று வருவார்கள். பின்னர் மேடைக்கு வந்து ‘சுருள்’ பெற்றுக் கொள்ள ஆரம்பிப்பார்கள். உறவினர்கள் தங்களுக்கான தொகையை வெற்றிலையில் சுருட்டிக் கொடுப்பார்கள். அந்தச் சடங்கு ‘நாலாம்நீர்’ என்று அழைக்கப்பட்டது. மறுநாள் காலையில் மணமக்கள் குளித்து மேடைக்கு வந்ததும் (மணமேடையானது இரண்டு நாள் அந்த வீட்டிலேயே இருக்கும்) ‘பிள்ளை மாற்றுச் சுருள்’ என்று பெண்கள் தர, மணமகன் ஒரு பொம்மையை – குழந்தை பொம்மையை – மணமகள் கையில் கொடுக்க, குழந்தைகள் சிரிக்கும். மஞ்சள் பொடிக் கலந்த நீரை சிறுவர்கள் ஒருவருக்கொருவர் மேலே ஊற்றி ஒரு விளையாட்டுப் போல அதி நடத்துவார்கள். இளைஞர்களு, பெரியவர்களும்கூட கலந்து கொண்டாலும், அது ஒரு குழந்தைகள் தினம் போலத் தோன்றும்.

பின்னர் மறுவீட்டிற்காக மணமக்கள் வழியனுப்பப் படும் போது, அங்கே பெற்றோறும் – உறவினரும் – குழந்தைகளும் நின்று அனுப்புவார்கள்.

நம்முடைய பாட்டன் இல்வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘இயல்புடைய மூவர்’ என்று மூவரைக் குறிப்பிடுகிறார். அந்த மூவர் யார் என்ற விவரம் தர்கத்துக்குள்ளாகி இருக்கிறது. ஏனோ தர்க்கத்துக்குள்ளாகியிருக்கிறது.

முதல் பிரசவம் பெண்ணின் வீட்டில்தான் நடைபெறும். ஒரே ஊரில் திருமணம் புரிந்துகொண்டவர்கள் கூட மேலத்தெரு பெண் வீட்டிற்குக் கீழத்தெருவிலிருந்து அனுப்ப வேண்டும். குழந்தை உண்டான உடனேயே பெண் வீட்டிலிருந்து பலகாரங்கள் வந்த ஊராருக்கு வழங்கப்படும்.

பிறக்கும் குழந்தை ஆண் என்றால் பாட்டனார் பெயரையும், பெண்ணானால் பாட்டி பெயரையும் சூட்டுவார்கள். ‘பேரை உடையவன் பேரன்’ என்ற சொலவடை அங்கே உண்டு.

அழகிய பாண்டிபுரம் சோழபுரம் என்றெல்லாம் பக்கத்தில் ஊர்களைக் கொண்ட இந்தப் பகுதி பலகாலம் கேரளா என்னும் சேர மண்ணில் இருந்தது அதிசயந்தான்.

முதன் முதலாக எங்கள் ஊரில் மின்சார விள்க்கு எரிந்தது – ரேடியோ ஒலித்தது – கல்யாண வீட்டில் ஒலிபெருக்கி முழங்கியது எல்லாம் ஞாபகத்தில் உள்ளன.

பூதப்பாண்டியனும், நாஞ்சில் வள்ளுவனும் பெருமை பேசப்பட்டு, தலை நிமிர்வதில் குறையில்லை. வேறு என்ன குறை – முதலில் கேள்விகளை எழுப்புவோம் – பதில் கிடைக்கும்.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved