Girl in a jacket

26 01 – 2013 – ஆம் நாளில் புதுவை பல்கலைக் கழக பேராசிரியர்கள் –  ‘சிற்றேடு’ இதழ் மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் படிக்கப்பட்ட கட்டுரை.

“யாயும் ஞாயும் யாராகியரோ”

என்ற கவிஞன்,

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள்”

என்ற கிழவன்,

“நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்”

என்ற படைப்பாளி,

“கண்டறியாதன கண்டேன்”

மற்றும்,

“நான் கண்டுகொண்டேன்”

மற்றும்,

“ஓராதர் உள்ளத்தும் ஒளிக்கும் ஒளி”

என்ற பக்தி இயக்க காலத்து பெரியோர்,

“ஐயோ – இவன் அழகு”

என்று சாதாரண வார்த்தைகள் மூலம் கவிதையைத் தந்த மானிடன்,

“அன்பெனும் பிடியினுள் அகப்படும் மலையே”

என்று உள்ளத்தைக் கடந்த விஷயம் பற்றி பேசிய ஞானி,

“காக்கைச் சிறகினிலே – உந்தன்

கரிய நிறம் கண்டேன்” என்ற புதுயுகக் கவிஞன்,

“அன்பிலா நெஞ்சில்தமிழைப் பாடி”

என்று தமிழுக்கு அன்பு எனும் பொருளை உலகிற்குச் சொன்ன ஒருவன்,

“வண்டித் தடத்தின் முடிவில் இரண்டு குட்டிச்சுவர்களிடையே அற்புதமாக ஆரம்பிக்கிறது”

என்று புதுமையான விதத்தில் ஊரை அறிமுகப்படுத்திய உலகச் சிறுகதையாளன்,

இவர்கள் எல்லாரும் ஒன்றையே வெளிப்படுத்தினாலும்கூட இவர்கள் யாரும் யாரைப் போலவும் இல்லை – “களிப்பரும் களிப்பே” என்று விளித்தது எதைப் போலவும் இல்லை.

இந்த 21 – ஆம் நூற்றாண்டுத் தமிழும் இவர்களைப் போல இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் எந்த உண்மையான எழுத்தும் இவர்களைப் போல ஆகிவிடும். அப்படிப்பட்ட தனித்தன்மை எங்ஙனம் கிட்டும் என்று யாரும் வழி சொல்லித் தந்துவிட முடியாது.

கவிதை என்றால் என்ன – கதை என்றால் என்ன – கடவுள் என்றால் என்ன என்ற தவறான கேள்விகளை தவிர்த்து படைப்பாளி என்றால் யார் – கவிஞன் என்றால் யார் என்று கேட்கையில் விஷயம் லேசாகி விடுகிறது – பார்வை ஒருவனைப் பொருத்த விஷயமே தவிர ஒன்றை பொருத்தது அல்ல. சுதந்திர உணர்வுதான் ஒருவனை நிகழ்க் காலத்தில் வாழவைக்கிறது. அது கட்டுப்பாடற்ற சிந்தனை. அதை அடையாளம் கண்டுகொள்ள அவன் மேற்கொள்ளும் முயற்சியில் வெளிவரும் உத்திகளை வெறுக்க நாம் யார் – அவதூறு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

ஆனாலும் இத்தனை அளவு மேற்கொள்ளும் முயற்சி யாவும் கொண்டு சேர்க்கும் இடம் மௌனம் என்பதாகும். அது பற்றி தெரியாமலே அதை வந்தடைந்து விட்ட அமைதியில் இருந்து விட்டு, பின்னர் அது பற்றி ஒரு படைப்பு வெளிப்படும் போது அந்த மௌனத்தின் பெருமை சொல்லப்படுவது கிடையாது. இலக்கியவாதிகள் – விமர்சகர்கள் உட்பட – பல்கலைக் கழக பொறுப்பாளர்கள் இது பற்றிய முயற்சிகளுக்கு துணையாக இருந்திருக்க வேண்டும்.

21 –வது நூற்றாண்டு நமது மொழிக்கு நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் உண்டு. அது பொய்த்து விடாது இருக்கச் செய்ய வேண்டியது எல்லாரது பொறுப்பும் ஆகும்.

ஜன்.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved