Girl in a jacket

கவிஞர் சமயவேலின் கதைகள்

சமயவேலுவை கவிஞர் என அறிமுகம் செய்யத் தேவையில்லை. ஆனாலும் சிறுகதை ஆசிரியர் என்று சொல்வது வேறு. கவிஞரான அவர் பிதற்றவோ போதிக்கவோ (பிரமிள் கூறுவதைப் போல) செய்யாமல் சிறுகதைகளிலும் தன் போக்கில் செல்கிறார். பாராட்டுவதைத் தவிர வேறு வழி பிரமிளுக்கு இருக்கவில்லை என்று சொல்லலாம். எனக்குத் தெரிந்து பிரமிள் பாராட்டிய இரண்டொரு கவிஞரில் சமயவேல் ஒருவர்.

அவருடைய 'டெரர்ரிசம்' கதையை முன்றிலில் பிரசுரித்த போது அதைப் பற்றிய பேச்சும் வெளிவந்தது. 'ஆகா' என்ற ஒரு வரி

"உலக சமூகம்
ஆகா
உலக சமூகம்
மண்டை யோடுகளின்
உலக சமூகம்"

அவரது சிறுகதையில் வருகிற கவிதை இது. அந்த 'ஆகா' என்ற சொல்லில் ஆழ்ந்து கிடந்த போது, வேறு ஒரு கவிதை........

"ஆகா
அதோவரான் கருப்பசாமி"

நம்ம மனசை ஏதோ செய்கிறதே - என்னதான் இந்த வார்த்தையில் இருக்கிறது என்று பிய்த்துக் கொண்டேன். பிறகு ஒருவாறு தெளிவடைந்தேன். நீங்களும் தெளிவடையுங்கள்.

வாழ்க்கைக்கே அர்த்தம் தெரியவில்லை. அர்த்தமும் கிடையாது - ஒன்றுமே இல்லாதது என்றெல்லாம் சொல்லும் போது "அப்படியென்றால் என்னதான் அதைப் பற்றி  எழுதிக் கிழிக்கறீங்க - பேசிப் பார்க்கறீங்க" என்ற நியாயமான கேள்வி எழும். "அதையும் சொல்லியாக வேண்டுமே - சொன்னால் தானே தெரியும்" என்றெல்லாம் பதில் இருக்கும். இல்லை என்பதைக் கூட உள்ள ஒன்றின் மூலம் தானே சொல்ல முடியும். (அணிலாடு முன்றிலாரே, சரணம்)

கவிஞர் சமயவேலின் கதைகள் இந்த இன்மை சமாச்சாரத்தை நுணுக்கமான முறையில் அடித்தளமாகக் கொண்டிருக்கிறது.

ஒரு கதையை - முதற்கதையை எடுத்துக் கொள்வோம். இடம் காலம் என்பனவற்றையெல்லாம் பேசி விட முடியாது. இதை ஏன் எடுத்துக் கொண்டேன் என்பதை இக்கட்டுரையின் கடைசியில் சொல்கிறேன்.

வீடு பற்றிய குறிப்பு அடுப்பங்கரை - திண்ணை என்றெல்லாம். அங்கே பூனை படுத்துக் கொண்டிருப்பது விசேஷமில்லை. நகமும் வெட்டிக் கொண்டிருப்பதால் ரொம்ப காலமாக இப்படித்தான் என்று தெரிந்து கொள்ளலாம். கழிப்பறை, ஆடிட்டோடிரியம், திண்ணை படுக்கையறை எல்லாம் அந்த அங்கணம் என்ற வார்த்தையே மறந்தாகி விட்டது. வள்ளுவன் பயன்படுத்தியது. இப்படி வீடு சம்பந்தமட்டில் எத்தனை விரிவான விளக்கமான வார்த்தைகள் நம்மிடையே - இழந்து கொண்டு வருவதற்கும் ஓர் அளவு வேண்டும். ஆப்பிள் என்பது மேநாட்டு உழவன் கொடுத்த வார்த்தை. அதை 'செவ்வரிப்பழம்' என்று சொல்வதா என்று யோசிப்பவர்களின் மொழி பெயர்ப்பை அங்கணத்திலேயே தள்ளலாம்.

அங்கணத்தை விட்டுவிட்டால் திண்ணை அல்ல. திண்ணைகள். உள்த்திண்ணை, வெளித் திண்ணை. வெளித் திண்ணை தெருப்பக்கம். அங்கே உட்கார்ந்து பேசுவது புறத்திணை. கொஞ்சம் பகிரங்கமாகவே பேசலாம். உள்த்திண்ணையில் பேசுவது அகத்திணை. அது வேறு.

வெளியே அழு குரல் கேட்கிறது. அழுகை என்பது காலாதீதமானது போலும்.

"அம்மா கிட்ட போணும்"

ஒரு சிறுவன் அழுது கொண்டே சொல்கிறான். வீடு சென்னையின் புற நகர்ப்பகுதியான மடிப்பாக்கம் தான். அவனைத் தேற்றி வீட்டில் கொண்டு சேர்த்தால், அந்த கதை சொல்லி தான் எப்படி திருச்சியிலிருந்து மடிப்பாக்கம் வந்தேன் என்று அலறுகிறார் - அவ்வளவுதான்.

சரி - நான் இப்போது எங்கேயிருக்கிறேன் - நங்கநல்லூரிலா - மைலாப்பூரிலா - அல்லது நாகரம்மன் கோவிலிலா.

- மா. அரங்கநாதன்


பி.கு.: 'இனி நான் டைகர் இல்லை' என்ற சிறுகதைத் தொகுதியிலுள்ள முதற்கதையைப் படித்தவுடன் தோன்றியவை.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved