கவிதையம்சமும் மரபும்
அண்மைக் காலத்தில் புதுக்கவிதை பற்றிய பல கருத்துக்களும் வந்து குவிந்துள்ளன. சீறுவோரும் அனுதாபத்துடன் நோக்குவோரும் உள்ளனர்.
இவைகள் எல்லாமே ‘‘சோனிக் கவிதைகள்’’ என்று அனுபவ பூர்வமாக விமர்சிப்பவர்களும் எஜமான ஸ்தானத்தில் இருந்துகொண்டு ‘‘வந்துவிட்டு போகட்டுமே’’ என்று சம்மதம் அளிப்பவர்களும் அதிகம்.
இந்த வகைக் கருத்தரங்களிலே ‘‘மரபு’’ மிகவும் அடிபடுகிறது. எத்தனையோ படைப்புகளுக்கு அனுசரணையான விளக்கம் தரும் வகையில் இருக்கும் இந்த ‘‘மரபு’’ என்ற சொல் ‘‘கவிதை’’ என்ற ஒன்றில் மட்டுமே மதிப்பிழந்து விடுவதைக் காணலாம்.
எடுத்துக் காட்டாக ‘‘மரபு காத்து மரபு மீறி மரபு காண வேண்டும்’’ என்று புத்திமதி அளிப்பவர்களை கேட்டுக் கொள்வதெல்லாம் இந்த ‘‘மரபு’’ என்பது கவிதை சம்பந்த மட்டில் என்னவென்று சொல்ல முடியுமா என்பதுதான்.
இவர்கள் குறிப்பிடும் ‘‘மரபு’’ இலக்கணமா என்பது முதலில் எழும் கேள்வி. அது இலக்கணத்தைத்தான் குறிக்கும் என்றால் அது மிகவும் சாதாரண விஷயம். படைப்பிலக்கிய ஆர்வத்துடன் சோதனையில் இறங்கிப் பங்கேற்கும் எவரும் அந்த வகை விளக்கத்தைப் பெரிதாக நினைக்கமாட்டார்கள்.
இல்லை - இலக்கணத்தைக் குறிப்பிடவில்லை - கவிதை அம்சத்தைத்ததான் குறிப்பிடுகிறோம் என்றால் அங்கே அவர்கள் துணிபு தவறாகி விடுகிறது. ஏனெனில் கவிதை அம்சத்தை மீறிய ஒன்று எந்த நாளிலும் கவிதையாகிவிட முடியாது. ஒருவேளை ‘‘புது தமிழ்க் கவிதை’’ என்ற ஒன்றைப் பற்றி பேசுகிறார்களோ? அப்படிப்பட்ட கவிதையாக எதுவும் கிடையாது.
எது கவிதை எது தமிழ்க் கவிதை என்று கேட்டு ஞானனேயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்று கருதலாம். தமிழ்க்கவிதையும் சரி, வேறு மொழியானதாயினும் சரி; அது கவிதையாக இருந்தாலொழியக் கவிதை என்று பேர் பெற்றுவிட முடியாது. வள்ளுவனும், பூங்குன்றனும், கம்பனும் எந்த நெறிமுறைகளைக் கொண்டு கவிதை பொழிந்திருந்திருந்தாலும் நமக்குக் கவலை இல்லை. அவர்கள் படைப்பில் பல கவிதைகள் உண்டு.
நேராக விஷயத்தைச் சொல்வதானால், யாப்பிலக்கணத்தைச் சற்று மீறி அதாவது தனக்குத் தெரிந்த, யாப்பிலக்கணம் பயன்படாது போய்விடக் கூடாது என்ற ரீதியில் கவிதை என்ற ஒன்றை எழுதி, வெண்பா என்றோ, அகவல் என்றோ போடாமல் அதே சமயம் தனக்கு தெரிந்த இலக்கணத்தை மறக்காமல் அந்த சிருஷ்டியில் சேர்த்து வடித்த ஒன்றுதான் ‘‘புதுக்கவிதை’’யாக இருக்கவேண்டும் என்று சொல்லலாமா? அப்படியென்றால் யார் யாருக்காக எடுத்துக்கொண்ட உரிமை அது.
மரபு காத்து மரபு மீறல் என்றால் என்னதான் பொருள்? உண்மையில் ‘வாசாலகம்’ மிக்க வெற்று வார்த்தைகள் அவை.
கவிதையின் மரபு கவிதை அம்சம்தான். அதை மீறிவிட்டால் கம்பனும் கவிஞன் ஆகிவிடமாட்டான். கவிதை அம்சத்தை மீறி என்ன மரபைக் காணமுடியும்?
கவிதைக்கு இந்த கவிதை அம்சம் ஒன்றைத்தான் இலக்கணமாக கூறவேண்டும். தமிழ்க்கவிதையின் மரபைக் காத்துப் பின்னர் அதன் மரபை மீற வேண்டுமென்று கூறினால் அதன் பொருள் எதனுடன் சேரும்?
மரபு காத்து மரபு மீற வேண்டும் என்பது கவிதையைப் பொறுத்தவரைப் பொருளற்ற ஒரு வாசகம். அது வேறு பலவற்றிற்குப் பொருந்தும். மொழி, நடை, இலக்கணம் இவைகளுக்குப் பொருந்தும். கவிதைக்கு ஆகாது. இன்னும் புதுக்கவிதை என்னும் கவிதைக்குப் பொருந்தவே செய்யாது.
கவிதை அம்சம் பற்றிய விஷயத்தில் கருத்து வேறுபாடு இருந்தாலும்கூட, கவிதை என்பதன் மரபு மீறல் என்பது நடக்காத, நடக்கக் கூடாத ஒன்று. இலக்கணத்தை இன்னும் மொழியை மிஞ்சிய விஷயம் அது.
நினைவுகளுக்கோ அல்லது சிந்தனைகளுக்கோ அப்பாற்பட்ட ஒரு நிலையை மரபு என்று குறிப்பிடுவது வளர்ச்சியைக் காட்டாது. எல்லா நாடுகளிலும் பழைமையைப் புதுப்பிக்கும் மறுமலர்ச்சி இயக்கங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.
பழைய கொள்கைகளைப் புதுமையான முறையில் சொல்லிவிடுவதால் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு விடாது. அந்தச் செயல் நமது ஞாபக சக்தியைக் காட்டுமே யொழியப் படைப்புத் திறனைப் பறை சாற்றாது. தத்துவங்களோ, அரசியல் கொள்கைகளோ பொருளாதார நெறிமுறைகளோ இந்த வகையில் அடங்காதவை. ஒன்றில் மேல் வைத்துக் கட்டப் பட்டவை. அப்படிச் சொல்ல முடியாதென்றால் கட்டிய ஒன்றை அழித்து அதன் மூலம் கட்டப்பெற்றவை.
இந்த மரபு வேறு வகைகளுக்கு - இலக்கியத்திற்குப் புறப் புலன்களாக அமையும் எத்தனையோ வகைகளுக்கு - இந்த மரபு மறுமலர்ச்சி தேவை, அவைகள் எழுந்த வண்ணமாகவேயுள்ளன.
மற்ற நாடுகளையும் மொழிகளையும் போலத் தமிழும் இவைகளை ஏற்றுக் கொண்டுதான் உள்ளது. இன்றைய உலக இலக்கியங்களில் இப்போதெல்லாம் கண்ணால் கண்டதை பச்சையாக சொல்லுதல் போன்றவற்றை நாம் நமது சித்தர் பாடல்களிலேயே காணலாம்.
ஆனால் தத்துவ விசாரணைக்கும் சிந்தனை வளர்ச்சிக்கும் இடையே கவிதை அனுபவத்தை ஓர் இலக்காக வைத்தல் சரியல்ல.
நேற்றைய கவிதையுடன் மரபு எதனுடன் சேர்ந்தது? இப்போதுள்ள கவிதை மரபு எதைச் சார்ந்தது?
எதிர்காலக் கவிதை குறித்துப் பேச வேண்டாம். நாளை எந்த விதத்தில் கவிதை உருப்பெறும் என்று தெரிந்திருந்தால் இன்றே அதை எழுதி முடித்திருப்பார்கள். அங்கே எதிர்காலம் நிகழ்காலமாகிவிடுகிறது. பேசவோ நினைக்கவோ முடிந்த ஒன்று எதிர்காலம் அல்ல.
எனவே காலவெளிக்குள் அடங்கிய விஷயங்களே - அந்த முறைகளே - மரபிற்குள் அடக்கமாகிறது. அந்த முறைகளைப் பற்றி ஆராய்வதிலோ புது முறைகளை விமர்சிப்பதிலோ நாம் கையாளும் உத்திகள் அறிவு பூர்வமானவை. கவிதை அம்சத்துடன் சம்பந்தமில்லாதவை.
கவிதையம்சம் ‘‘மரபு’’ என்று பரவலாக கூறப்படுவதுடன் சம்பந்தமுடையது என்று கூறுவது மிகவும் தவறான கருத்து. இதன் முக்கிய காரணம் படைப்பாளி சிந்தனை வயத்திலிருக்கும்போது கவிஞனாக இருக்க முடியாது.
கவிஞனாக அவன் இருக்கும்போது தன்னைப் பற்றிய உணர்வு இல்லை.
மனோதர்மப்படி எப்படி வேண்டுமானாலும் ராகங்கள் பாடலாம். ஆதார சுருதி மட்டும் அப்படியே தானிருக்கும்.
உலகம் முழுவதற்கான பொதுத் தன்மையும் முக்கியத்துவமே மரபின் அடையாளமாக இருக்கும். கவிதை அப்பேர்ப்பட்ட மரபின் தொடர்ச்சியாக இருக்கும்.
ஏனெனில் மரபு என்பது முற்றுப் பெற்றதல்ல.