Girl in a jacket

நங்கநல்லூர் புராணம்

60 வருட சென்னை வாழ்க்கையில் கிட்டத்தட்ட 40 வருடங்கள் நங்கநல்லூர் என்ற கிராமம் சார்ந்த புறநகர் பகுதியில்தான் கழிந்தது. முன்பு மீனம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து நடக்க வேண்டும். நாஞ்சில் நாட்டு வயல் வரப்புகளில் நடப்பது போன்று இருக்கும். பழைய சிவன்கோயில் ஒன்றே அங்கிருந்தது. பின்னர் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு சுற்றி உள்ள இடங்கள் மகத்துவம் பெற்று விலையேறின. குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அதிகமாக அங்கு குடியேறினர். ராஜேஸ்வரி அம்மன் அருள்மிகக் கொண்டு அங்குள்ள வேதியர் ஒருவர் கனவில் வந்து அந்த குறிப்பிட்ட இடத்தில் கோயில் கட்டும்படி ஆணையிட்டார் என்று ஒரு வதந்தி பரப்பப்பட்டது. புதிதாக இரயில் நிலையம் ஒன்று மீனம்பாக்கம் – பரங்கிமலை இடையே கட்டப்பெற்றபோது, அதற்கு இராஜராஜேஸ்வரி என்ற பெயர்தான் சூட்டப்பட வேண்டுமென்று பலத்த குரல் எழுந்தாலும், அது அடக்கப்பட்டு அந்த இடத்தின் பழைய பழவந்தாங்கல் பெயரே இரயில் நிலையத்திற்குச் சூட்டப்பெற்றது.

உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் போன்ற வைதிக கடவுளர் எல்லாம் திடீரென பூமியை துளைத்துக் கொண்டு எழுந்தாலும் குறிப்பிட்ட ஒருவர் கனவில் மாத்திரமே வந்து இந்த சர்வே எண்ணில் கோயில் கட்டு என்று ஆணையிடுவது நடக்கும்போது, ஏன் நம்முடைய பூர்வக்குடியினரின் சுடலைமாட சாமியும், ஐயனாரப்பனும், மாரியம்மனும் கனவில் வந்து கோவில் கட்டச் சொல்வதில்லை என்பது வியப்பாக இருக்கும். ராமன் பாலம் சாட்டிலைட் போட்டோவில் தெரியும். ராமேஸ்வரத்தில் ராமன் தங்கயிருந்த சத்திரம் அடையாளம் காணப்படும். வேண்டியதுதானே. இந்த லெமூரியாக் கண்டம் ஒன்றுதான் பாவம் செய்துள்ள்ளது. கட்டுக்கதை என்று தள்ளிவிடலாம்.

கலைஞன் பதிப்பக மாசிலாமணி அவர்கள் நங்கநல்லூர் வரும்போதெல்லாம் கோயில் போக விரும்புவார். அவரும் நானும் ஏறக்குறைய எல்லா சிவன் கோயில்களுக்கும் போயிருக்கிறோம்.  எனது இல்லத்து திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலெல்லாம் தமது குடும்பத்தினருடன் வந்து முன்னின்று உதவுவார்.

சிவராத்திரியன்று நாங்கள் திரிசூலம் செல்வது வழக்கம். நங்கநல்லூர் வந்த புதிதில் இருந்தது போன்ற சிறப்பு அக்கோயிலுக்கு பிற்காலத்தில் குறிப்பாக எண்பது,  தொண்ணூறுகளில் இல்லை. சிவராத்திரியன்று திரிசூலம் கோயிலுக்கு பல லாரிகளில் ஆட்கள் வந்து சேருவர். இந்தியா – இந்து நாடு, அன்பே சிவம் என்பது வேதமல்லவா என்ற கோஷங்கள் கிளம்பும்.

மாசிலாமணி அவர்கள் என்னை அர்த்தபுஷ்டியோடு பார்ப்பார். சிவலிங்கம் / ஆவுடை வேதங்களில் இழிவுப்படுத்தப்பட்டுள்ளது – அதை வணங்குபவன் அடுத்த பிறவியில் சூத்திரனாகப் பிறப்பான் என்றெல்லாம் வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டது பற்றி பேச்சு எழும்.  ராகுல் சங்கிருத்யாயன் நூல்கள் பற்றி பேசிக் கொண்டே செல்வோம்.

திருமூலர் தந்தது சைவ சித்தாந்தம் என்ற பெயர் மட்டுமே அந்தச் சித்தாந்தம் காலங்காலமாக இங்கு இருந்திருக்க வேண்டும். அதன் பெயர் தெரியவில்லை. தெய்வம் தானாகவே தோன்றும் – அவதாரம் எடுத்ததாகச் சொல்வது அர்த்தமற்றது.  “திறந்து வை -  அது வரும்” என்று புத்தர் சொன்னதாகத் தெரிந்திருக்கிறது. அவருக்கு முன்பு எழுதப்பட்ட எதுவுமே நமக்குக் கிடைக்க வில்லை. சங்க இலக்கியங்களிலும்,  இயேசுவின் போதனையிலும் இது பற்றிய குறிப்புகள் உள” என்பது பற்றி எல்லாம் பேசி நடப்போம்.  வேதகாலத்தில் சிவலிங்கம் வேத மதத்தினரால் இகழப்பட்டது.  வேதகால ருத்ரன்  சிவன் அல்ல. இன்று கார்த்திகேயன், ருத்ரன், உபேந்திரன் போன்ற வேதகாலத்தவரெல்லாம் முருகன் – சிவன் – நாராயணன் ஆவர் என்று கூறியது பூர்வகுடி மக்களுடன் உறவு காண வேண்டிய அவசியத்தால்தான். அது ஒருவகை உஞ்சவிருத்தி தந்திரம் என்றெல்லாம் பேசிக் கொள்வோம்.

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் மூலஸ்தானத்தில் நிற்பதைவிட பிரகாரங்களைச் சுற்றி அங்குள்ள சிற்பங்களை பார்க்கவே விருப்பம். கோபுரம் பற்றி பல விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார். “ நீங்கள் இவை பற்றி எழுத வேண்டும்” என்று எத்தனையோ தடவை கூறியிருக்கிறேன்.
திரிசூலத்தில் கேட்ட கோஷங்கள் பின்னாளில் நங்கநல்லூர் கோயிலுக்குச் செல்லும் தெருக்களிலும் கேட்டன. சில இடங்களில் எழுதப்பட்டும் காணப்பட்டன.  கோஷங்கள் பரிணாமவாதம் பெற்றன. இந்து மதத்தின் உட்பிரிவுகள் இருப்பதால்தான் மற்ற மதத்தினர் லாபம் பெறுகிறார்கள் என்றும் இந்த உட்பிரிவுகளுக்குள் திருமணம் செய்து கொண்டால், பிற மத்தினர் எண்ணம் நிறைவேறாது. இதுவே வேதகாலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. வசிஷ்டர் – அருந்ததி, பராசரர் – மச்சகந்தி போன்ற வரலாறுகளை முன்வைத்து, இதன்மூலம் தான் பிறமத ஆதிக்கத்தைத் தடுக்கமுடியும் என்றெல்லாம் கோஷங்கள் .

இது இனபேதத்தை ஒழிக்க வேண்டிய நியாயத்தை கற்பிக்க எழுந்தது அல்ல என்பது நமக்குத் தெரியும். வேளாளரிலும், பார்ப்பனர், கம்மாளர், மறவர், மீனவர் போன்ற எண்ணற்ற பல சாதிகளிலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவிலும் கன்னடத்திலும் மற்றும் பல இடங்களிலும் இப்பேதம் இருக்கும்.  கம்மா, பலிஜா, உப்பரவா போன்ற பிரிவுகள் சென்னைப் பட்டணத்தில் வசிக்கும் நாயுடு இனத்தவரால் கடைப்பிடிக்கப் படுகின்றன. இவர்கள் எல்லாரும் தங்கள் உபசாதிகளுக்கு உள்ளே மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே ஒரு புதிய மதவெறி ஆகும். திருமணம் என்பது அன்பு சம்பந்தப்பட்ட ஒன்று என்பது கட்டாயமாக ஒப்புக் கொள்ள வேண்டிய நியாயம். அப்படிபட்ட ஒரு திருமணம் ஒரு மதத்தைக் காப்பாற்றுவதற்காக செய்து கொள்ள வேண்டும் என்பது எத்தகைய மதவெறி என்பதை எண்ணிப் பார்க்கலாம். ஒரு காரணத்திற்காக அன்பு தடை செய்யப்படுகிறது. ஒரு முஸ்ஸீமை ஒரு வேளாளப் பெண்ணோ, பார்ப்பனப் பெண்ணோ விரும்பியிருந்தாலும் திருமணம் அனுமதிக்கப்படகூடாது. ஆனால், வேளாளர் இனத்தில் கார்கார்த்தார் துளுவரையும், சைவ வேளாளர், செங்குந்த வேளாளரையும் திருமணம் பண்ணிக் கொள்ளுவது நல்லது என்றும், பார்ப்பனப் பெண் அய்யங்காராக இருந்தாலும் ஒரு அய்யர், ஒரு ராவ் போன்றோரை திருமணம்  பண்ணிக்கொள்ளலாமே தவிர காதலித்த முஸ்ஸீமை நாடக்கூடாது என்பதே உட்கிடக்கை. இது எப்படிப்பட்ட மத துவேஷம் என்று எண்ணிப்பாருங்கள்.  இதைப் பின்புலமாகக் கொண்டே ‘ஒற்றுமை’ என்ற கதை அமைந்தது.

திரு. மாசிலாமணி அவர்கள் சைவ, வைணவப் பேதங்கூட இல்லாதவர். தமிழிசையில் சந்தேகம் ஏற்பட்டால் ஆப்ரகாம் பண்டிதரிடம் தான் செல்ல வேண்டும் என்பார். சைவசித்தாந்தத்தில் சந்தேகம் ஏற்பட்டால் ஷேக்தம்பி பாவலர்தான் எங்களுக்குத் தீர்த்து வைப்பார் என்று நான் கூறினால் சந்தோஷப் படுவார்.  

ஒருதடவை திருச்செந்தூருக்கு வைகாசி விசாகம் அன்று போகலாமா என்று கேட்டேன். தொண்ணூறுகளில் நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற சமயம். ஆனால் போக முடியாது போயிற்று. அப்போது நாங்கள் பேசிக் கொண்டது நன்கு ஞாபகமிருக்கிறது.

“சார் – நான் சிறு பையனாக இருந்தபோது பலபேர் சேர்ந்து திருச்செந்தூருக்கு வைகாசி விசாகத்தன்று நடந்தே போவோம்.  என் தாத்தா சிவசங்கரனும் நடந்தே போயிருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் (அப்போது, அதாவது 180 வருடங்களுக்கு முன்பு தாத்தா காலத்தில் பஸ்ஸே கிடையாது என்பது ஒரு விஷயம்). நான் பள்ளிக்கூடத்தில் ஏதோ படித்து ஒரு சான்றிதழ் பெற்றிருக்கிறேன். அதில் என்னுடைய மதம் இந்து என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு வேளை தாத்தா காலத்திலும் பள்ளிக்கூடம் இருந்து அவர் படித்து ஒரு சான்றிதழ் பெற்றிருந்தால் அதில் அவர்தம் மதம் எதுவென குறிப்பிடப்பட்டிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக இந்து மதம் என்று குறிப்பிடப்பட்டிருக்க முடியாது. காரணம் தெரியும். வேதகால இந்திரனின் வேலைக்காரனான தேவசேனாபதிதான் இந்த முருகன் என்று யாராவது கூறினால், அவர் வேல் கொண்டு தாக்கவும் துணிவார் என்று  நான் பழைய கதையைச் சொன்னபோது ரசித்து கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரி வந்தபோது பலமுறை அவருடன் பேசினாலும், அவர்தம் உடல்நலம் குன்றி வருவதை அறிந்துகொள்ள முடிந்தது. எட்டாம் இடத்து அதிபதி  தசை செய்யும் வினோதங்களை சோதிட ரீதியாக நகைச்சுவையுடன் கூறுவார்.  

அவர் காலமான செய்தி கிடைத்தபோது நான் புதுச்சேரியில்தான் இருந்தேன். பின்னர் சென்று நந்தனிடம் விசாரித்துக் கொண்டேன். அவர் எழுதி வைத்தவை இருந்தால், அவற்றைப் பிரசுரிப்பது அவசியம் என்றும் சொன்னேன்.

அவர் நட்பு எனக்கு சென்னையில் கிடைத்தது நற்பேறு. ஒரு மூத்த சகோதரராக எனக்கு பலவழிகளில் உதவியிருக்கிறார். எனது கதைகளின் தொகுதியை நான் கேட்காமலேயே பதிப்பித்தார். என்னால் மறக்க முடியாத மனிதர் திரு மாசிலாமணி அவர்கள்.

மா. அரங்கநாதன்
23.02.2012

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved