Girl in a jacket

பையனிடம் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டு வந்தார். அவர் அடிக்கடி சொல்வதுதான். கோவில் வந்து விடவே, கைகளை உயர்த்திக் கும்பிட்டார்.

அந்தக் கைகள் கீழே இறங்கவில்லை. அப்படியே, எங்கோ பார்த்துக் கொண்டிருந்த பையன் மீது பட்டும் படாதவராய், துவண்டு தரையில் வீழ்ந்தார்.

() () ()

இன்றே துக்கம் கேட்கும் நாள் என்பதுபோல நடராசனும் தட்சிணாமூர்த்தியும் வாயடைத்து நின்றனர். மேற்கொண்டு விவரம் கேட்கும் துணிவு இல்லை. பலகாரம் சாப்பிட வேண்டும் என்று சொன்னவன் கைகள் கட்டி நின்றான். நடராசன் வெகுநேரம் கழித்துப் பேசினார்.

"போகலாம் வா முத்துக்கறுப்பன்."

மூவரும் நடந்தனர். அந்தத் தெருவிலிருந்த கடையிலேயே ஏதாவது சாப்பிட்டு விடலாம் என்றான். எதிரே ஒரு சோதிட சாத்திரக் கூடம்.

இட்டலி-காப்பி பசிக்கு இதம். பேசாது சாப்பிட்டனர். முத்துக் கறுப்பன் நிறையவே சாப்பிட்டான்.

ஒரு விள்ளல் இட்டலியைப் பிட்டவர் சாப்பிடாது கைகளை உயர்த்தியவாறு, "எப்படி சமாளிச்சே" என்று மெதுவான குரலில் கேட்டார் நடராசன்.

"அப்பாகீழே விழுந்துட்டாரே என்றுதான் தோணிச்சு. அவரைத் தூகக்ப பார்த்தேன். ஆனா தெருக் கோடியில் இரண்டு பேர் ஓடி வருவதும் பின்னால் ஒருவர் விரைந்து வரதும் தெரிஞ்சுது. பின்னால் வந்தவர் தாடிக்கார்."

சாப்பிட்டு முடிந்து வெளியே வந்ததும், ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான் முத்துக்கறுப்பன்.

() () ()

இரண்டு பேர்களை முதலில் ஓடிப் போகச் சொல்லி விரைந்து வந்தார்தாடிக்காரர். தகப்பனும் பிள்ளையும் கோவில் பக்கம் செல்வதை அவர் பார்த்திருக்க வேண்டும்.

வந்தவர்கள், கீழே விழுந்தவரத் தூக்க, அவர் நாடி பார்த்தார். பிறகு அந்த நிலையிலேயே தகப்பனாரைப் பார்த்து இரு கைகளையும் கூப்பினார். மடத்தைச் சேர்ந்த அடியார் சாதாரணமாக கைகூப்புவதில்லை.

"முதற் தீ எரிந்த காடு" என்று அவர் வாய் விட்டுச் சொன்னார்.

உடன் வந்த இருவரும் வேலைகளைக் கவனித்தனர். ஊர்ப் பெரியவர்களாக இருவர் வரவழைக்கப்பட்டனர். ஒரு வீட்டுத் திண்ணையில் 'அது' கிடத்தப்பட்டது.

"எங்கிட்ட ஐம்பது ரூபா இருக்குது" என்று தழதழத்த குரலில் சொன்னான் முத்துக்கறுப்பன்.

"என்னிடமும் ஐம்பது ரூபா தந்திருக்காரப்பா - அவர் மடியிலும் ஐம்பது இருக்குதாம். எல்லாம் சொல்லிட்டுத்தான் போயிருக்காரு உங்க அப்பா" என்று சொல்லிப் பையனைத் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

அத்தனை போதுமானதாகவிருந்தது. எடுத்துச் செல்ல மாயவரத்திலிருந்து கார் கொண்டு வரச்சொல்லி, அவனோடு ஓர் ஆளும் வர ஏற்பாடாயிற்று.

காரின் முன்பக்கம் உட்கார்ந்திருந்த அவன், ஊர் வரும் வரை பின்னிருக்கைப் பக்கம் திரும்பவேயில்லை.

() () ()

அம்மையப்ப பிள்ளை தாடிக்காரரை முன்பின் பார்த்ததில்லை. ஆனால் வள்ளியூர் அண்ணாச்சியின் பெயர் வேலை செய்தது. தாடிக்காரர் பழைய ஊர் நினைவில் மூழ்கியிருக்கக்கூடும். ஆனால் உடனடியாக வந்த நேரடிக் கேள்வியொன்றால் தாக்குண்டார். "அடியார் ஒருவரை அகப்பையால் அடித்ததுண்டா?"

அம்மையப்ப பிள்ளை கேட்ட இந்தக் கேள்வியும் அவரறியாது தானாக வந்தது போன்றிருந்தது. அவர் யாரிடமும் வரம்பு மீறிப் பேசாதவர். பேசுவதும் குறைவு.

தாடிக்காரர் சிறிது நேரம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு தலையசைத்தார். பிறகு தன்னிலைக்கு வந்தவராக கேட்டார்.

"இந்த முருகன் யார்?"

"என் மகன்-முத்துக்கறுப்பன்."

"முருகன் தம்பியே-வா."

அவர்கள் இருவரும் பிறகு பேசிக் கொண்டிருந்தவை யாவும் வேறு மொழிபோலவிருந்ததால், முத்துக்கறுப்பன் அப்பாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"இங்கேயே உட்காரலாம்" என்று கூறி உள்ளே சென்றவர் இரண்டு மலைவாழைப் பழங்களுடன் தண்ணீரும் கொண்டு வந்தார்.

"இரவு சாப்பாடு இங்கே-சொல்லி விட்டேன்."

அன்றிரவு அம்மையப்ப பிள்ளை அவரிடம் சொன்ன விஷயம் இதுதான்.

சுர வேகத்தில் தவித்து முனகிக் கொண்டிருந்த காலை - ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு - நினைவை இழந்து, தன் பெயரே மறந்து விட்டாலும், மறக்கவொண்ணாத காட்சி. காட்சியும் அல்ல அது - ஒரு வெளி - வெளிச்சமான நிலை. அப்போது சுரமும் இல்லை, எதுவும் இல்லை. துன்பமும், வெறுப்பும், அழுக்காறும், அச்சமுமில்லாத ஓர் இருத்தலில் எத்தனை நேரமோ - அதுவும் மறந்தாயிற்று. விழிப்பு ஏற்பட்ட கண முதல் நினைவுள்ளதெல்லாம் கேட்ட ஒலி மட்டும்தான். அல்லது கண்ட ஓர் ஒலி என்று கூறுதல் சரிதாமோ - போ - முதற் தீ எரிந்த ஒரு வேளூரில் நிறைவு பெறு - அழல் குட்டம் - திங்கள் - முன் பனியில் நிற்க - எரித்த பன்னூறு விலங்குகள் அடையும் சாந்தி. விண்ணின் ஒலி-ஓசை-ஓதம்-ஓம்ம்ம்ம்-எல்லாம் ஆக.

ஒப்புவித்த பாடல் தவிர வேறு தமிழறியா அவரது நினைவில் நின்ற சொற்றொடரின் பொருள் அவருக்குப் புரிந்ததுதான் விந்தை. எந்த வேளூர் என்று கேட்டான் ஒரு பண்டிதன். அன்றே அவர் தீர்மானித்து விட்டார், இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாமென்று. சுர வேகம் வந்தது போல் நீங்கி நலம் பெற்றதும், மனைவியிடமும் கூறவில்லை. புறப்படும் போதும் சொல்லத் தகுந்த விஷயமல்லவே என்றிருந்தார். விவரம் அடிகள் அறிய வேண்டும். நாளை கிருத்திகை-திங்கள்-இது முன்பனி.

அம்மையப்ப பிள்ளை சொல்லாத - சொல்லத் தெரியாத விவரங்களும் உண்டு.

இறைவன்வாளை உருவிக் கொண்டான். வாள் செய்து தந்தவனை மட்டும் பக்கத்திலிருத்திக் கொண்டான். கருவறையில் பூசனை செய்ய வந்த அறிவர் - ஆதி சைவர் நடுங்கினர். நீங்கள் எல்லாருமே போய் விடுங்கள். நீங்கள் எல்லாருமே கொலை செய்தவர்தாம். உங்கள் உறவு ஆட்கள்-வயல்வெளி மாந்தரையும் அழைத்துக் கொண்டு நீங்குங்கள். கொங்கணத்திலிருந்து வந்த பட்டர்கள் இனி கருவறையில் பூசனை செய்வர். அவர்கள் மடப்பள்ளியில் இனி இருக்க வேண்டாம். அவர் தம் மந்திர மொழி நன்றாகவே உள்ளது. இன்னொரு ஊருக்கு உங்கள் மறை மொழியொடு செல்க. வாள் வலி பெரிது - மழைக்கு இனி கோவிலில் ஒதுங்க முடியாது. கேட்ட குடி மக்கள் சொல்கிறார்கள். எங்களுக்கு எதுவும் தெரியாதே எங்கு செல்வோம் என்று-போங்களேன்-பழையபடி மலைக்கு-காட்டிற்கு-கடலுக்கு-இங்கே வேண்டாம். இவ்வயல்களை நான் பார்த்துக் கொள்வேன்-நீங்கள் வேண்டியதில்லை-வாள் பேசியிருக்கிறது-தீக்கடவுள் இனி உங்கள் பக்கமில்லை என்றுரைக்க அம்மக்கள் ஒவ்வொரு மூலையாகச் சென்றனர். தேனெடுக்க- எருமையின் பின்னால்-மீன் பிடிக்க, கடலுக்கென்று-சிலர் இரவலராக - ஒரு கூட்டம் தந்திரமாக வேறு திசை செல்கிறது - போகட்டும் - கொஞ்ச காலந்தான் - ஒரு நீலி வரும் வரை. அவர்கள் பொறுத்திருக்கட்டும் - தீ விடாது - ஒரு நாய் அஞ்ஞானமாய் குரைக்க, வெகு தூரத்துப் புதரில் நரியொன்று கை கொட்டிச் சிரிக்கும்.

பின்னாளில் மருதநில மாந்தர் நீதி தவறி தீயில் மாண்டதாக பழையனூர் ஏடு கூறிற்று.

() () ()

பேருந்து நிலையம் நோக்கி நடந்தனர்.

"அந்தத் தாடிக்காரரை நீ திரும்பவும் பார்க்கலியா?"

"ரொம்ப வருசம் கழிச்சு ஒரு தடவை பார்த்தேன். விசேடமா ஒண்ணும் சொல்லல்லே. ஞாபகம் மட்டும் இருந்தது. அப்புறம் சென்னை வந்த பிறகு வருசந்தோறும் வாரேன்-அவ்வளவுதான்."

காப்பிக் கடைப் பக்கம் சென்று பைகளை எடுத்துக் கொண்டு அம்முதிய பெண்மணிக்கு பணமும் தந்துவிட்டு, கேட்டார் நடராசன்.

"உங்கப்பாவுக்கு சோதிடத்திலே நம்பிக்கையிருந்ததா?"

"இல்லவேயில்லை" என்றான் முத்துக்கறுப்பன்.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved