Girl in a jacket

"அதென்னது."

"ஆமா - சாத்திரத்திலே உங்க சென்மங்க எல்லாம் சொல்லி இந்த நாளைக்கு இந்த நேரத்திலே வந்து சோதிடம் பாப்பீங்க அப்படிங்கற செய்தியும் அந்த ஓலையிலேயிருக்கும்."

நடராசன் மகிழ்ச்சியுடன் அதிர்ந்து போய் விட்டார். இது ஒரு செய்திதான் அவருக்கு. உடனேயே பார்க்க முடிவும் எடுத்தார்.

"அறுபது ரூபா வரைக்கும் ஆகலாம் - அதுவும் ஒரு காண்டம் தான்" என்றான் முத்துக்கறுப்பன். யோசனை செய்ய வேண்டிய விஷயம்.

"நீ என்ன சொல்றே - பாக்கலாமா வேண்டாமா அதைச்சொல்லு. இத்தனைப் பேசறியே, இந்த சாத்திரத்திலே நம்பிக்கை இருக்கு இல்லை அப்படின்னு சொல்ல மாட்டேங்கறியே - 'டக்'குன்னு ஒளிவு மறைவில்லாமப் பேசேன் - இப்போ நான் சொல்றேன் - உனக்கு இதிலே நம்பிக்கையிருக்கு - கோவில் இந்த சாத்ரம் எல்லாத்திலேயும் நம்பிக்கையிருக்கு - என்னங்கறே."

"அப்படியும் இருக்கும் சார் - ஆனா அது அவசியமில்லே. இப்போ ஏதோ ஒண்ணி நம்பிக்கை வைச்சா மருந்து சாப்பிடறாப்பிலே நல்லது அப்படின்னு தெரிஞ்சா நல்லதா எடுத்துக்கங்களேன். இப்படிச் சொல்றதுதான் ஒளிவு மறைவில்லாத பேச்சு. இந்த சோதிட சாத்திரம் நான் பாத்திருக்கேன். எனக்கும் ஏதோ ஒரு வித நம்பிக்கை ஆசை எல்லாம்தான். செவ்வாயும் சனியும் இருக்கிற இந்த வெளியிலேதான் நாமும் இருக்கோம்."

நடராசன் நம்பிக்கையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.

"அதுக்காக நீங்க பிறந்த இடம் அப்பா அம்மா பேரு எல்லாமே இந்த ஓலையிலே எழுதி வைச்சிருக்காங்கன்னு ஏன் நம்பணும் - சோசியம் உண்மையா பொய்யா அப்படின்னு கேட்கிற கேள்வியே இங்க வரலையே. அஞ்சாயிரம் வருசமா எத்தனையோ நம்பிக்கை - ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்ணு. உலகத்திலே இந்தப் பக்கம் கோவில் அப்படி இப்படின்னு. வேறே இடத்துக்குப் போனா, இடத்தையே கும்பிடலாம். சாப்பாடு போட்டவனை-நம்மை காப்பாத்தின ஒரு பலசாலியை - நல்லதுன்னு நாம நினைக்கிற குணத்தைக் கொண்ட ஆளை - இப்படி எல்லாரையும் கும்பிட்டாச்சு. பெருஞ்சோறு போட்டவன், வீடு கட்டித்தந்தவன் எல்லாம் கூட இந்த ரகம்தாம். அந்தக் கடவுளைக் கும்பிடாதே என்னைக் கும்பிடு அப்படின்னு ஒரு கடவுள் சொல்லும். கடவுளுக்கிருக்கிற கவலை அப்படி - இப்படி ஒவ்வொருச் சங்கிலியா வந்து கிட்டு இருக்கு. முதல் சங்கிலித் துண்டு கடைசித் துண்டுன்னு கிடையாது. ஆனா எந்தச் சங்கிலித் துண்டும் எங்கேயும் போயிடல்லே. எல்லாம் புள்ளிகளா இங்கேதானிருக்கு. நாமும் புள்ளிங்கதான் - சார் இங்கேயிருந்து செவ்வாய்க் கிரகத்தைப் பார்க்கிறோமில்லியா - அங்கேயிருந்தும் பார்க்கலாம். ரெண்டு புள்ளிங்க ஏதோ சந்தர்ப்பத்திலே ரகசியம் பரிமாறிக் கொள்ளலாம். அந்த விசேடம் கொஞ்ச காலத்துக்கு. அந்தக் காலமே அஞ்சாயிரம் வருசம் ஆகிப் போச்சு. எல்லா விசேடமும் நம்பிக்கையைத் தான் கொண்டு வரும். எனக்கு உங்க மாதிரி நம்பிக்கையில்லை - கோவில் எதிலேயும். அதுக்காக நான் இங்க வரல்லே."

"ஓ சரிதான் - கோவிலிலேயே நம்பிக்கையேயில்லைன்னா இந்த சோதிட சாத்திரத்திலே என்ன வாழுது."

"அப்படி நீங்க ஏன் எடுத்துக்கணும். தெரியாத ஒண்ணை கடவுள்னு சொல்லிக்கிட்டுத்தான் கடைசி வரைக்கும் இருக்கப் போறோம். இனி மேலும் தெரிஞ்ச கடவுளை தள்ளிப் போட்டுட்டு இருக்கப் போறோம் - நாகரீகப் புடவை சமாச்சாரம்தான்."

புரியவில்லை என்பது போல நின்று கைவிரல்களைத் தாளம் போட பயன்படுத்தினார் நடராசன்.

"சார் - ஒரு கருத்தரங்கத்திலே நண்பரொருவர் கேட்டார் - ரொம்ப நல்லாயிருந்தது. ஆபாசம் - ஆபாசம்னு சொல்லிக்கிட்டிருக்கீங்களே, கடவுளை விட எது ஆபாசம்? அப்படின்னு."

"ஐயையோ."

"அது கேள்வியில்லை சார் - பதிலுக்குப் பதில் - நினைச்சுப்பாருங்க - இந்த இடத்தையே பாருங்க. இதெல்லாம் இத்தனை குடியிருப்புக் கொண்டதாகவா இருந்திருக்கும். எல்லாம் வயல்களுக்கு மத்தியிலேயிருக்கும் பத்து பதினைஞ்சு குடியிருப்பாத்தானே இருந்திருக்கும். அதுக்கு முன்னாலே இங்கே எத்தனை எத்தனை மிருகங்களை விரட்டியிருக்கணும் - எத்தனை தடவை அதுக எல்லாம் இடத்தை மறக்காம வந்து திரும்ப திரும்ப சுத்தியிருக்கணும். அதுகளின் பொந்தும் புதரும் எத்தனை தீயில் பொசுங்கிப் போயிருக்கும். அதுக திரும்பவும் இங்க வந்தா விரட்டலாம். அல்லது வரக்கூடிய நேரத்தைத் தெரிஞ்சுக்கிட்டு தீயைக் கொளுத்தி மேளத்தைக் கொட்டி பயமுறுத்தலாம். அதெல்லாம் செய்து மறந்தும் போச்சு - மேளம் கொட்டற நேரத்தை மட்டும் மறக்காம கொட்டறோம். மிருகங்கள் இல்லே இப்போ - எல்லாம் மாறிப் போச்சு - மறந்து போச்சு - இன்னொண்ணு - மறக்காமலிருந்தா அடிபடுவே அப்படின்னு சொன்னான் ஒருத்தன் - அவன் பலசாலி. மத்தவங்க பணிஞ்சாகணும் - இனிமே தீயை வயல் வெளிலே மூட்ட வேண்டாம் நிரந்தரமா என்னுடைய இடத்திலேயே வைச்சுடலாம் - நீங்க வந்து கும்பிடலாம் அப்படிண்ணும் சொன்னான் - நல்லதுதானே - கும்பிடு போட்டுக் கிட்டேயிருந்தா நெல் விளையாது - வேலை நடக்கணும் - பயிர் உண்டாகணும் - வேலையைப் பாருங்க அப்படின்னான். இந்த இடம் அப்படி உண்டாச்சுது மிருகங்களும் இந்த இடத்தில் குறைஞ்சு போச்சு. சிலது வேறே இடத்துக்கு ஓடிப் போச்சு. அங்கேயும் தீ இருக்கும் - நேரத்திற்கு மேளம் கேட்கும் - இந்த மாதிரி இடமும் உண்டாகும்."

நடராசன் மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். எதிர் கேள்வி ஏதுமில்லை.

திடீரென பின்வரும் வெண்பாவொன்றை சொல்லி நிறுத்தினான் முத்துக்கறுப்பன்.

செந்தில் முருகா திருமால் மருகாவென்
சிந்தை குடிகொண்ட தேசிகா - வந்தினிய
நந்தமிழ்ச் சோலையில் நண்பர் நடராசன்
சந்ததம் வாழவரம் தா.

"இதென்னது - கவிமணி பாடினது மாதிரியிருக்கு."

முத்துக்கறுப்பன் சிறிது சிரிப்புடன் "அவருடையதுதான் - நான் கொஞ்சம் மாத்தி உங்க பேரை போட்டேன. இப்ப நினைச்சுப் பாத்துச் சொன்னதுதான்" என்றான்.

'மா' முன் நிரையும் 'விள' முன் நேரும் சரியாக இருக்கிறதாவென்று கணக்கிட்டுக் கொண்டிருந்தார் நடராசன்.

"நல்லாத்தானிருக்கு" என்று முகமலர்ச்சியுடன் சொல்லிவிட்டு "என்ன இப்ப திடீர்னு கவிலே இறங்கிட்ட" என்று கேட்டார்.

"நான் ஒரு நிமிஷத்திலே இதைச் சொல்ல முடிஞ்சா, ஒரு மணி நேரத்திலே எத்தனை எழுதலாம் - சொல்லுங்க - ஏட்டிலே பாட்டிருக்கு அப்படீன்னு சொன்னேளே - தேசிக விநாயகம் பிள்ளை கிட்டேயிருந்து கொஞ்சம் நான் எடுக்க முடிஞ்சா, எத்தனை தமிழ்ப்பிள்ளைங்க இங்க இருந்திருக்கா - ஒவ்வொருத்தர்கிட்ட இருந்தும் வரி எடுத்து பத்து, இருபது, அறுபது பாட்டுன்னு எழுதி சந்திரன் எழிலே - பெண்ணால் துன்பம் - செவ்வாய் மூணிலே - தைரியம் அப்படின்னு போட எவ்வளவு நேரமாகும் - அல்லது ஏற்கனவே நாளும் நேரமும் கணக்குப்படி எழுதி வைக்க எவ்வளவு நேரமாகும்."

"அது சரி-எங்க அப்பா அம்மா பேரு வருதாமே."

"அதுவும் அப்படித்தான். முதல் எழுத்து இதுதானே இதுதானே என்று கேட்டு ஏட்டைப் படிச்சுக் காட்டினா, நீங்க தலையாட்டுற பேருதான் அப்பா அம்மா பேரு."

நடராசன் மௌனமாக இருந்தார். அவன் மீது கோபங்கூட ஏற்பட்டது.

"பின்னே எதுக்குத்தான் கோவிலுக்கு வந்தே - சொல்லு - இப்படி இந்த இடத்தில் நிண்ணுக்கிட்டிருக்கவா."

முத்துக்கறுப்பனின் மௌனத்தில் 'ஆமாம்' இருந்தது.

"ஆமா" என்றான்.

"முப்பத்தஞ்சு வருசம்" என்றான்.

"எங்க அப்பா இந்த இடத்திலேதான் செத்து விழுந்தாரு - வயது எனக்கு அப்போ..." என்று சொன்னவன் குரலில் தளர்ச்சியில்லை.

() () ()

பத்து வயதிருக்கும். அந்த வயதிலே அவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு போக வேண்டாமென்றுதான் அவன் தகப்பனார் கூறினார். ஆனால் தாயாரின் வேண்டுதல் ஒன்று உண்டு. அவனால் போய் வர முடியாதாகையால் மகன் போய் வந்தால் நல்லது என்று நினைத்தான். வேண்டுதல் நடக்க வேண்டும்.

வெகுதூரம் என்றுதான் சொன்னார்கள். முதலில் இராமேசுவரம் - பிறகு இந்தக் கோவில். கடைசியாக காளத்தி. அங்கிருந்து சென்னைவந்து வீடு திரும்ப வேண்டும். ஒரு வாரம் ஆகி விடும். தகப்பனாரின் ஆரோக்கியத்திற்கு ஒன்றுமில்லை. பையன்தான் பூஞ்சை உடம்பு. வருடந்தவறாமல் ஏதாவது ஒரு நோய் பற்றிக் கொள்கிறது. வேண்டுதலே அவனைப் பற்றியதுதான் - போய் வரட்டும்.

இராமேசுவரத்தில் கஷ்டமில்லை. தகப்பனார் பல தடவை போய் வந்த இடம். அடுத்தநாள்தான் இந்த கோயில். மடத்தில் தங்கிவிட்டு கோவில் சென்று திரும்பி, பிச்சைக்காரர்களுக்கு இரண்டு நாணயங்களைத் தந்துவிட்டு நடந்தபோது தென்பட்டது. இந்த சோதிடம். எழுத்துக் கூட்டி அதைப்படித்தான். 'அது என்ன அப்பா' என்று கேட்டான். தகப்பனார் பதில் சொல்லவில்லை. அவன் கையைப் பற்றி விருவிருவென்று நடந்து மடத்திற்கு வந்து சேர்ந்தார்.

மடத்தில்தான் சாப்பிட்டார்கள். அங்குள்ள தாடிப் பெரியவரோடு அப்பா பேசிக் கொண்டிருந்தார். இரவு தங்கிப் போகலாம் என்று அவர்தான் வற்புறுத்தினார்.

இத்தனை தூரமுள்ள இடத்தில் இந்தப் பெரியவரை அப்பாவுக்கு எப்படித் தெரியும் என்று அவன் யோசித்துப் பார்த்தான்.

மாலையும் கோவிலுக்குச் சென்றார்கள். இரவு வெகு நேரம் வரை பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். திருக்காளத்திக்குப் போவது பற்றியிருக்கும் என்று அவன் நினைத்துக் கொண்டே தூங்கி விட்டான். அவர்களின் சிலவகை பேச்சுகளின் மொழியே அவனுக்குப் புரியவில்லை.

காலை மடத்தில் விடை பெற்று பக்கத்தில் வண்டியேறும் இடத்திற்கு வந்ததும், நேரம் இருந்தால் ஒரு நடை நடந்து கோவில் வெளிப்பக்கமிருந்தே ஒரு கும்பிடு போட்டு வந்து விடலாமென, அப்பா அவன் கைகளை பிடித்துக் கொண்டு நடந்தார். கிருத்திகையானபடியால் முருகவேளின் சந்நிதியில் கூட்டமிருக்கும்.

"லேய்-நீ தைரியமா இருக்கணும். எல்லாத்துக்கும் வழி உண்டு. எது வந்தாலும் கலங்கக் கூடாது. ஏத்துக்கணும் - அது முக்கியம்."

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved