Girl in a jacket

முதற்தீ எரிந்த காடு

காலை நான்கு மணிக்கே அங்கு சென்று விட முடியும். காப்பி கிடைக்கலாம். குளிப்பதற்கு வெந்நீர் வேண்டும். மூன்று பேரில் ஒருவருக்கு கணக்கிலடங்காத நோய்கள். அறையொன்று தேடிப் பிடித்து, குளித்து விட்டு கோவில் - ஊர் எல்லாவற்றையும் பார்த்து அங்கிருந்து திரும்பும் வழியில் பக்கத்து ஊர் வந்து பகலுணவு சாப்பிட்டு விட்டு மாலையில் அம்பலவாணரைக் கும்பிட்டு இரவு சென்னை திரும்ப வேண்டும்.

இதுதான் முறைப்படி போட்ட அட்டவணை. அதன்படியே எல்லாம் நடந்தேறி விட்டது. காலை நாலரை மணியிருக்கும். சென்னை விரைவு வண்டி அங்கே நிற்காது. மாயவரம் சென்று விடும். நடத்துநரிடம் கேட்டுக் கொண்டபடியால், வண்டி நின்றது. நன்றி சொல்லி விட்டு  இறங்கினால் எதிரிலேயே ஒரு காப்பிக்கடை. அதோடு சேர்ந்து வீடு. பின்கட்டில் குடியிருப்புகள் இருக்கலாம். கடைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள், ஒரு முதிய பெண்மணி. "சுடு தண்ணி வேணுங்களா-இங்கேயே குளிச்சுடலாம்" என்று சொல்லவும், மூவரில் மூத்தவரான நடராசன் அந்த அம்மாளுக்கு ஒரு கும்பிடே போட்டு விட்டார். ஒரு தடவை திருத்தணி போய் பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு, தலையைக் கூட துவட்ட முடியாத நிலையில் உடல் நடுங்கி, கொண்டு வந்திருந்த மருந்தை அந்தக் குளியலறையில் இருந்து கொண்டே சாப்பிட்டவர்.

குளியல் பிரச்னை தீர்ந்தது. மூவரில் தட்சிணாமூர்த்தி இளையவன். மார்கழி, தை, சித்திரை, வைகாசி எல்லாம் அவனுக்கு ஒன்றுதான். அப்படியும் ஓர் ஆள் உடனிருக்க வேண்டும். ஊர் விட்டு வந்து வேறிடத்தில் படுத்துக் கொண்டால், பண்டுவம் யார் பார்ப்பது?

தட்சிணாமூர்த்தியை அப்படியெல்லாம் மட்டும் சொன்னால் போதாது. அவன் சுத்த சைவம். எல்லா சிவன் கோவில்களையும் பார்த்தாகிவிட்டது. ஸ்தல புராணங்களை யாராவது சொன்னால், அந்தக் கோவிலுக்குச் செல்லும் வழியைக் கேட்டுத் தெரிவான். ருசிகரமான இன்னொரு விஷயம் அவன் கையோடு கொண்டு வரும் உணவுப் பண்டங்கள். சாதாரணமாக ஹோட்டலில் சாப்பிடுவதையோ தங்குவதையோ விரும்ப மாட்டான். சில கோவில்களுக்குச் செல்லும்போது சென்னையிலுள்ள ஆதீன அலுவலகக் கடித மூலம் அறிமுகம் செய்து கொண்டு மடத்துச்சாப்பாடே கிடைக்கும்படிச் செய்வான்.

நடராசன் மாமிச பட்சிணியானாலும், அதெல்லாம் சில குறிப்பிட்ட நோய்க்கு அந்தச் சாப்பாடு அவசியமிருப்பதால் அப்படி - மற்றபடி தமக்கு அதில் இஷ்டமில்லை என்பார். நோய்களைக் கிரகங்கள் ஆட்சி செய்வதால் அந்தந்த நோய்க்குத் தகுந்தாற்போல கிரகங்களின் இருப்பிடக் கோவில்களுக்குச் சென்று வணங்குவார். ஆனால் அவர் தம் நோய்களைக் கணக்கில் கொண்டால், கிரகங்களின் எண்ணிக்கை அற்பம். எல்லாவற்றிற்கும் மேலாக போன வாரம், அவர் படுத்துக் கொண்டிருக்கும்போது, இசைகேடான இடத்தில் ஒரு பல்லி விழுந்து, பலன் பார்த்ததில் வயிறு கலங்கிற்று. இரத்த காயத்திற்கும் செவ்வாய் கிரகத்திற்கும் சம்பந்தம் உண்டு. எனவேதான் இந்த ஊர் விஜயம்.

இந்த மூவரில் முத்துக்கறுப்பன் வந்திருக்க வேண்டிய அவசியம் மற்றவர்களுக்குத் தெரியாது. அவன் மற்ற இருவரையும் போல சிவ பூசனை செய்பவனல்லன். சொல்லப் போனால் கடவுளை நிந்திக்கவும் மாட்டான். நிந்திக்க வேண்டுமானால் ஒன்று இருந்தாக வேண்டுமல்லவா? ஆனால் இந்தக் கோவிலுக்குப் போகப் போவதாகச் சொன்னதும், தானும் வருவதாகச் சொன்னான். ஒரு வகையில் இந்த முத்துக்கறுப்பன் கோவில்கள் பற்றிய வரலாறுகள் அனைத்தும் அறிந்த பண்டிதன். ஆவுடையார் கோவிலுக்குப் போக மற்ற இருவருக்கும் எண்ணம் வந்ததே இவன் சொன்ன சில விவரங்களால்தான். ஆனால் உடன் வர மறுத்தான். இப்போது இந்தக் கோவிலுக்குப் போவதாகச் சொன்னதும், தானும் வருகிறேன் என்று புறப்பட்டு விட்டான் - அதிசயம்தான்.

கடைப் பக்கத்திலுள்ள ஓர் இருக்கையில் மூவரையும் உட்காரச் சொல்லிவிட்டு, அவர்கள் குளிக்க வெந்நீர் ஏற்பாடு செய்து விட்டாள். அம் முதிய பெண்மணி. அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. குறித்தவுடன் கிடைத்த காப்பியும் நன்றாகவேயிருந்தது. வேட்டி மாற்றிக் கொண்டு மூவரும் வெளி வருகையில் பலபலவென விடியத் தொடங்கியிருந்தது. கொண்டு வந்த பைகளை அவ்வீட்டிலேயே விட்டிருந்தனர். பணந்தர முயற்சித்தபோது, 'போகும்போது தந்தால் போதும்' என்று அந்த அம்மாள் சொல்லி விட்டாள்.

எனவே அறை தேடி அலையும் பிரச்னை இல்லை. மெதுவாக நடந்து சென்றனர். சிகரெட் வாங்க முத்துக்கறுப்பன் முயன்றபோது, நடராசன் தடுத்து விட்டார். மடத்திற்கு சென்று கொண்டு வந்த கடிதத்தைக் காட்டிவிட்டு அப்புறம் கோவில் செல்லலாமே என்று தட்சிணாமூர்த்தி சொன்னதையும் 'வேண்டாம்' என்று மறுத்தார்.

"நேரா கோவில் - மற்றது எல்லாம் அப்புறம்."

முத்துக்கறுப்பன் வழி காட்டினான். சென்னையை விட அந்த ஊர் பழக்கப்பட்டது போல் நடந்தான். கோவில் தூரமில்லை. சொல்லப் போனால் அது ஒன்றுதான் அடையாளந் தெரிகிற இடம். "இங்கே சோதிட சாத்திரம் பாக்கலாம்" என்று ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினான். நடராசன் யோசித்து விட்டு, சிறிது நேரம் அந்த இடத்தையே பார்த்தார். 'சாதகம் கொண்டு வரலையே' என்று வருத்தப்பட்டார்.

"தேவையில்லை - ஒரு விரல் ரேகை போதும்."

"அதெப்படி? கிரகபலன் கண்டு பிடிக்க வேண்டாமா என்ன - நாளும் நேரமும் தெரியணும் - இது ரேகை சாத்திரமில்லை."

"இல்லே சார். நீங்க கைரேகை கொடுக்கறீங்க - அவங்க ஏடுதேடிக் கண்டு பிடிச்சு பலன்களைப் படிப்பாங்க - முன்பின் சென்மங்க எல்லாம் தெரியும்."

"அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கேன் - அப்ப சாதகம் வேண்டாங்கறியா."

"எதுமே வேண்டாம் - கொஞ்ச நேரம் உங்ககிட்ட பேசிக் கிட்டிருந்தா நானே சொல்லிடுவேன் எல்லா பலனையும்."

"இதுதானே வேண்டாங்கறது - அப்பா பேரு அம்மா பேரு கூடவா சொல்ல முடியும் - அதுவுமா ஏட்டிலே இருக்கும்."

"ஏட்டிலே தானாக எப்படியிருக்கும் - எழுதி வைச்சாத்தான் இருக்கும் - இல்லே மனசிலேயாவது அழியாம எழுதி வைச்சிருக்கணும்."

கோவில் எதிராக வந்து நின்றபோது, இவர்களை காலை வண்டியிலேயே கவனித்துவிட்ட பூசனைப் பொருள் வியாபாரி அருகே வந்து நின்றான்.

இரண்டு தட்டு வாங்கிக் கொண்டனர். முத்துக்கறுப்பன் வேண்டாம் என்று சொல்லி விட்டான்.

"ரொம்ப பழைய கோவில்" என்றார் நடராசன். அவர் இங்கு வருவது இதுதான் முதல் தடவை. தட்சிணாமூர்த்தி இவ்வாராய்ச்சிகளுக்கு அப்பால் - கும்பிடு போடுவதோடு சரி.

"இன்னும் நேரமாகல்லே. கொஞ்சம் இப்படி நிற்கலாம்" என்று நடராசன் கூறவும், எல்லாருமாக கோவிலின் எதிர்த்தெரு முனையில் சென்று நின்றனர்.

"அப்போ இந்த நாடி சாத்திரம் எல்லாம் வெறும் பம்மாத்து தானா" என்று நேரடிக் கேள்விக்கு வந்தார் நடராசன்.

"சார் - நாம உண்மையா நம்பற சில விஷயங்க கூட வெறும் பம்மாத்துத்தான். நம்பணுங்கற ஆசை - சில சமயம் வெறி - உள்நோக்கம் - ஒரு ஐயாயிரம் வருசமா இருந்துகிட்டிருக்கிற எண்ணம். அது நம்ம ரத்தத்திலேயிருக்கு - நம்பறதுக்கு காரணம் இருந்தா, அதை பம்மாத்துன்னோ மோசடின்னோ எப்படிச்சொல்ல முடியும்."

"ஆசைதான் காரணங்கிறே நம்பறதுக்கு இல்லையா?"

நடராசன் சில விஷயங்களில் பேச்சை விடாது பேசுவார். சலிக்க மாட்டார். ஆனால் முத்துக்கறுப்பன் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன சார் போலாமே" என்று மெதுவாகக் கேட்டான் தட்சிணாமூர்த்தி.

"ஆமாமா - போலாம்" என்று நடராசன் சொல்லவும் மூவரும் அந்தக் கோபுரத்தைப் பார்த்தவாறே கோவிலுக்குள் நுழைந்தனர்.

() () ()

பரந்து கிடந்த அந்தக் கோவில் பிரகாரங்களின் வழி நீண்டு செல்ல, நடராசன் அதிசயித்தார். காலை பூசனை முடிவுறவில்லை. கும்பிட்டுவிட்டு, மூலவறையில் பிரகாரத்தைச் சுற்றும்போது, நடராசன் அங்கிருந்த மூன்று வித்யாசமான அளவு கொண்ட இலிங்கங்களைக் கண்டார். முத்துக்கறுப்பன் அப்பகுதியின் மேலுள்ள சுவரெழுத்துக்களைக் கவனித்துப் பார்த்தான். அவன் ஏற்கனவே இவைகளையெல்லாம் கண்டிருக்க வேண்டும்.

முத்துக்குமரனையும் கும்பிட்டாயிற்று. சுற்றுப் பிரகாரத்திலிருந்த நவக்கிரகங்களையும், செவ்வாய்க்கென இடம் பெற்ற சந்நிதானத்தையும் நடராசன் பயத்துடன் கும்பிட்டுக் கொண்டார்.

அக்கணமே அவருடைய நோய் ஒன்றின் குணம் தென்பட்டது.

கோவிலின் பிரசாதமான உப்பையும் வாங்கிக் கொண்டார்.

வெளியே வந்தபோது, முத்துக்கறுப்பன் அங்கே வரிசை பெற்றிருந்த நபர்களில் ஓர் ஆண் - ஒரு பெண் இருவருக்குமாக சில நாணயங்களை அளித்தான்.

நடராசன் மூன்று கேள்விகளைத் தொடர்ந்து கேட்க நினைத்திருந்தார். பிச்சை போட்டு விட்டு முத்துக்கறுப்பன் விடுவிடுவென நடந்து கோவிலுக்கு எதிராக, முன்னர் எல்லாருமாக நின்று கொண்டிருந்த எதிர்த் தெரு முனையில் போய் நின்றான். அந்த இடத்தின் தரையைச் சுற்று முற்றுமாகப் பார்த்தான்.

நடராசன் இப்போது நான்கு கேள்விகளைக் கேட்க நினைத்தார். தட்சிணாமூர்த்தி மெதுவாக "என்ன சார் - பலகாரம் சாப்பிட்டு விடலாமா" என்று கேட்டான். இருவரும் முத்துக்கறுப்பன் பக்கமாக வந்து நின்றனர்.

முத்துக்கறுப்பன் நகரவில்லை. நின்றவிடத்தையும் அந்தப் பிச்சைக்காரர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆயாசம் தீர நடராசன் கொஞ்ச நேரம் கோபுரத்தையும் வானத்தையும் பார்க்க, தட்சிணாமூர்த்தி வருவோர் போவோரில் மடத்து ஆட்கள் தென்படுவார்களா என்று கவனித்துக் கொண்டான். கூட்டம் அதிகமில்லை.

"அப்ப இந்த சோதிடம் பாக்கணுமா வேண்டாமா - சொல்லு" என்று கேட்டார் நடராசன் திரும்பவும்.

"பாருங்களேன் - ஒரு வேளை அதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சுத் தான் நீங்க அங்க போகணும்னு இருக்குதோ என்னவோ."

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved