Girl in a jacket

செய்து வருகின்றனர். முதலில் அவற்றை எல்லாம் படிக்கக் கூடாது என்ற ஆணை - அதாவது அவர்களைத் தவிர. மற்றொன்று கலப்பு எங்கேயும் ஏற்பட்டவிட்டது - ஆரியராவது திராவிடராவது என்ற வேதாந்தம்.

வர்ணாசிரமம் ஏற்படுவதற்கு இந்தோ - ஆரியர் என்ற இனம் ஏற்பட்டதுதான் காரணம். ரிக் வேத கால மக்களிடையே தோன்றியிருக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டிருக்கிறது. நம் நாட்டில் ஆங்கிலேயர் வந்த பின் இங்கே தோன்றிய ஆங்கிலோ - இந்திய மக்களை எண்ணிப் பார்த்தால், இது எளிதில் விளங்கிவிடும். ஆங்லேயரிடையே வர்ணாசிரமம் இல்லை. ஆனால், அவர்கள் இந்த ஆங்கிலோ - இந்திய மக்களை "ஆங்கிலேயன்" என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? ஆங்கிலம் மட்டுமே ஆங்கிலோ இந்திய மக்கள் பேசி வருகிறார்கள் என்று தெரிந்த பின்பும்.

வேத காலத்தின் பின்னர் ஆரியர் என்று யாரையும் சொல்வது சரியில்லைதான். அந்த மக்களை ஆரிய இனம் என்று அடால்ப் ஹிட்லர் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. கலப்பினத்தவரைத்தானே இந்தோ ஆரியர் என அழைத்திருக்க முடியும். இந்தோ - ஆரியர் என்ற பெயர் பிற்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் கொடுத்ததுதான். இந்தியா என்ற பெயர்கூட இராமாயண காலத்தில் தசரதன் தன் தாயார் இந்துமதியின் நினைவாக நதியில் அணை கட்டிய போது ஏற்பட்டு, பின்னர் அப்பக்கம் முழுவதுமே - அதாவது சிந்து வெளிப் பிரதேசம் அப்பெயர் பெற்றதென்று சொல்வதுண்டு.

ரிக் வேத காலத்தில் ஒரு முந்நூற்றைம்பது ரிஷிகள் இருந்திருக்கலாம். ரிஷிகள் என்று பிற்கால வழக்கப்படி சொல்லலாமே யொழி அவர்கள் மிகவும் சாதாரண மனிதர் போன்று போர் செய்து வெற்றி கொள்ளும் ஆசையில் அப்பிரதேசம் பூராவும் அலைந்து திரிந்தவர்தாம். இவர்கள் வாழ்க்கைக்கும் மனித நேயத்திற்கும் சம்பந்தமில்லை. தங்கள் வாழ்வே ஸ்திரப்படாத ஒரு நிலையில் அவர்கள் எங்கே உலகையும் வாழ்வையும் பற்றி எண்ணியிருக்கப் போகிறார்கள்.

மேற்படி ரிஷிகள் தம் மூதாதையரைப் பற்றிய வரலாறு எதுவும் சரியாக இல்லாதபடியால் கோத்திரங்கள் என்று சொல்லப்படுபவை இவர்களுடன் ஆரம்பிக்கின்றன. இக்கோத்திரங்கள் ஐரோப்பிய இன மக்கள் எல்லோருக்கும் இருப்பவைதாம். ஆதாம், ஏப்ரகாம் என்று கோத்திரப் பெயர்களைக் கூறுவதுபோன்றுதாம். இப்பெயர்கள் இன சம்பந்தப்பட்ட ஒன்றாகையால் தகப்பன் வழி சம்பிரதாயத்தை மட்டும் பின் பற்றி வந்தவை. ஆரியர் தந்தை வழி சமுதாயம். தகப்பனார் பெயர் ஐயத்திற்குரிய ஒன்றாக ஆகும்போது அது அக்னி, வருணன் என்ற தேவர் பெயராக ஆகிவிடும். எடுத்துக்காட்டாக ரிக் வேத காலத்து ரிஷிகளான வசிட்டர், மரீச, பிருகு முதலியோரின் தந்தைமார்களை கடவுளராகவே எடுத்துக் கொள்ள வேண்டிவரும்.

கோத்திரங்கள் சத்திரயருக்கு இல்லை. சத்திரியருக்கு இல்லையெனும் போது வைசிய, சூத்திரருக்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு இடமேயில்லை. அப்படியானால் வர்ணாசிரமத்திற்குள் சத்திரிய, வைசிய, சூத்திரர், ஆரிய இன மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்களா? ஒரே இனமாக இருந்த மக்களைத் தொழில் ரீதியாக பிரித்த பின்னர் ஏற்பட்டதா? இக்கேள்விகள் எழவே இடங்கொடுக்காதபடி பார்த்துக் கொள்கிறார்கள் இன்றைய வைதிக அன்பர்களும் எழுத்தாளர்களும்.

இதற்குச் சில உண்மைகளை அப்பட்டமாகச் சொல்ல வேண்டியதவசியம். அரசர்கள் யாவரும் சத்திரியர்களல்லர். இராமாயணத்தில் சொல்லப்படும் குகன் சிருங்கிபேரம் என்ற இடத்திற்கு அரசன். அவன் வேடன் என்றே அறியப்படுகிறான். ஏகலைவன் என்று பாரதத்தில் வரும் வீரனும் அவ்வாறே. கர்ணன் அர்ச்சுனனை நிகர்த்த வீரன் என்றாலும் சத்திரியன் அல்ல - எனவே அர்ச்சுனனோடு போட்டியிட முடியாது என்று முதலில் துரோணர் கூறியதை அறிவோம். எனவே வீரத்திற்கும் அரச பதவிக்கும் உரிய ஒன்றாக சத்திரியப் பிரிவு முதற்கண் பிரித்தறியப்பட்டதல்ல. ரிக் வேத காலத்திற்கு முன்னரே வாணிபம் செய்து வந்த பணியர்களை இந்த வர்ணாசிரமம் "வைசியர்" என்றும் சொல்லவில்லை.     

சத்தியரும் வைசியரும் பிறப்பால் ஏற்பட்டவராவர். வசிட்டரின் மனைவி அருந்ததி ஓர் அநார்ய பெண் என்றாலும் அவர்களுக்குப் பிறந்த சக்தி என்ற மகன் பிராமணனாக ஆகிறான். ஆனால் அவர்களுக்கு ஒரு பெண் பிறந்து, அந்தப் பெண் அருந்ததியின் பூர்வகுடி இனத்தில் ஒருவனை மணந்து ஒரு குழந்தை பெற்றால், தகப்பன் வழி ஆரிய சமுதாயத்தில் அது பிராமணக் குழந்தை ஆகாது. இவ்வாறு பிரச்சனைகள் தோன்றிய பின்னர் ஏற்பட்டது சத்திரியப் பிரிவு. அது வீரர்களைக் குறிப்பது என்பதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குத்தான்.

சத்திரியக் குழந்தையின் தந்தை பூர்வகுடி இனமாதலால் அவர்கள் அதிக எண்ணிக்கையிலிருந்தனர். பக்க பலமும் அதிகமாகவேயிருக்கும். இந்தக் குழந்தைகள் அரச உரிமை பெற்றது அந்த பலத்தால்தான்.

விராட மன்னனின் புதல்வன் உத்தரன் ஒரு கோழை என விவரிக்கப்படுகிறான் என்றாலும் அவன் சத்திரியனே. சனகன் என்னும் அரசன் பெரிய ஞானி. ராஜரிஷி என்று போற்றப்படுபவரே அல்லாது, அவரை பிராமணர் என்று கூறமுடியாது. எல்லா மனித உயிர்களுக்கும் பிறப்பு ஒத்துவராது என்பது வர்ணாசிரமம்.

இவ்வாறு சத்திரியர்கள் இருக்கும்போது, இவர்களுக்கு கோத்திரம் எப்படி வந்தது? இந்த கோத்திரம் பிராமணர் தந்த அனுமதி. தந்தை பிராமணராக இல்லாவிட்டாலும் ஒரு வகையில் பிராமண சம்பந்தம் இருப்பதால், ஒரு பிராமண குருவை ஏற்றுக் கொண்டால், அந்த குருவின் கோத்திரத்தை அந்த சத்திரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிபந்தனையோடு கூடிய அனுமதி. சனகன் கோதம கோத்திரத்தைச் சார்ந்தவனென ராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் கோதமருடைய மகன் சகாநந்தனை குருவாகக் கொண்டவர் சனகர். எனவே சதாநந்தரின் கோத்திரமே சனகரின் கோத்திரமாகிறது. அவரது (சனகரது) தந்தை மிதி சக்கரவர்த்தியின் கோத்திரமும் கோதம கோத்திரம்தான். ஆனால் மிதி சக்கரவர்த்தியின் தந்தை நிமி சக்கரவர்த்தியின் கோத்திரம் வாசிட்டம். அவர் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு கொஞ்ச காலமிருந்த பிற்பாடு கோதரைக் குருவாகக் கொண்டால், அவரது வாசிட்ட கோத்திரம் மறைந்து போயிற்று. இது வெள்ளைக்கார எஜமானின் பெயரை அடிமை நீக்ரோ தனது பெயருடன் சேர்த்துச் சொல்லும் வழக்கம் போன்றதுதான். (எடுத்துக்காட்டு Cassius Clay)

இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிந்துவெளி நாகரீகம் பற்றி தெரியவாரம்பித்த போதுதான், வேத காலத்திற்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்களின் நாகரீகம் என்று பரவலாகத் தெரிய வந்ததெனச் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதற்கு முன்பு தெரியவே தெரியாது என்று சொல்ல முடியாது. ஒரு சான்றாகவே சிந்துவெளி நாகரீகம் நிற்கிறது. அது அழிந்துபட்ட நாகரீக சின்னம். அழியாது நிற்கும் ஒரு நாகரிகத் தொடரை இன்னமும் நாம் கொண்டிருக்கிறோம். தமிழினம் பல பிரிவுகளை கொண்டது. நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பைக் கொண்டிருந்தது; விவசாயமும் கைத்தொழிலும் வாணிகமும் நடந்து வந்தன; முழுமையான ஒரு சமயத்தைப் பின்பற்றினர் - என்ற உண்மையை யாராலும் மறுத்துவிட முடியாது. அந்த நாகரிகத்திலுள்ள சிலவற்றைக் கைக்கொண்டு, "அதுவும் எங்கள் நாகரிகம்தான்" என பாடபேதம் நடத்த முயற்சி நடந்து வந்திருப்பது பலகாலமாகத் தெரிந்துகொண்ட விஷயம். இப்போது அது உச்சகட்டத்தைத் தாண்டியிருக்கிறது. சர்வசாதாரணமாக "சமஸ்கிருதம் உலக மொழிகளின் தாய். ஆரியர்கள் இங்கிருந்துதான் ஐரோப்பாவுக்குச் சென்றனர்", என்று சொல்வது மத ஆதிக்கவாதிகள் வழக்கமாகிவிட்டது. கம்ப்யூட்டர்கூட சமஸ்கிருதத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது என்ற வியப்பிற்கும் குறைவில்லை. "இந்த கம்ப்யூட்டர் ஐரோப்பிய கண்டுபிடிப்பு. ஐரோப்பிய மொழி சார்ந்த சமஸ்கிருதத்திற்கு ஏற்றபடி அது இருப்பதில் என்ன அதிசயம்?" என்று கேட்டால், கேட்டவனது நாட்டுப்பற்று சந்தேகிக்கப்படுகிறது. வரலாற்றிற்கும் நாட்டுப் பற்றிற்கும் சம்பந்தமென்ன?

முன்பே கூறியபடி பணியர்கள் என்ற பூர்வகுடி மக்களின் சமூக - மத சம்பந்தமான விவகாரங்களை நாம் வேதங்களிலிருந்தும் அகழ்வாராய்ச்சி குறிப்புகளிலிருந்தும் தீர்மானிக்க முடியும். அப்பேற்பட்ட பூர்வகுடிகளை வென்றுவிட்ட ஆரியருக்குப் பயந்து சிலர் தென்னாட்டிற்கு ஓடி வந்தனர். அவர்கள்தாம் இப்போதுள்ள திராவிடர் என்று யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை. தென்னாட்டைப் பற்றி எதையும், பின்னர் எழுதப்பட்ட அல்லது தொகுக்கப்பட்ட சமஸ்கிருத நூல்கள் சொல்லவில்லை. ஆரியர் சப்த சிந்துவெளியில் வந்து சேர்ந்த சமயம், தென்னாட்டில் மக்களே கிடையாது, அல்லது இங்கே வடேர்தாம் இருந்தனர் என்று சொல்லும் பைத்தியக்காரர்களை விட்டுவிடலாம். ஆனால் பஞ்ச திரவிடம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. "அப்படியானால் தமிழ்நாட்டைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று எப்படிச் சொல்ல முடியம்?" என்று கேட்டால் அவ்வாறு பஞ்ச திரவிடம் பற்றி கூறப்பட்டிருக்குமானால், எப்போது கூறப்பட்டது, அங்கிருந்த மக்களைப் பற்றி ஏதாவது சொல்லப்ப்டடிருக்கிறதா என்று கேட்க முடியும். நர்மதை நதிதான் ஆர்யவர்த்தத்தின் தென் எல்லை என்பது மனுஸ்மிருதி. ஒருவேளை வேதகால பிராமணர்கள் சென்ற இடங்கள் பற்றிக் கூறும்போது மேற்படி இடங்களைப் பற்றி வெகு காலத்தின் பின்னர் கூறியிருக்கக் கூடும்; தமிழர்களைப் பற்றியல்ல.

"புராணக் கதைகளை நம்புவதானால், அநேக லட்சம் ஆண்டுகளாக பஞ்சாப், கங்கைப் பிரதேசம், இன்னும் இந்தியாவின் பல பிரதேசங்கள் ஆரியர் கைவசமிருந்தன என்று தோன்றும். ஆனால் இக்கதைகள் சரித்திரக் கண்கொண்டு பார்ப்போருக்குப் பயன்படுவன அல்ல. டேரியஸ் வெற்றி கொண்ட கி.மு. 512-க்கு முன்புள்ள சரித்திரமெல்லாம் புராணங்களில் காணுவன போன்ற புனைகதைகளேயாம்"

கி.மு.15ஆம் நூற்றாண்டளவில் எழுத்து வடிவு பெற்ற பிரதிகளைத்தான் நாம் இப்போது நம்ப வேண்டியுள்ளது. பண்டைக் காலத்து வழங்கிய மொழி ஆகியவை பெரிதும் மாறுபட்டு உள்ளன. இரண்டையும் சம்ஸ்கிருதம் (அதாவது நன்றாகச் செய்யப்பட்டது) என வழங்கினார்கள்.

"ஆரிய மக்களுள் உயர் வகுப்பினரும் வித்வான்களும் இம்மொழியைப் போற்றினார்கள். இம்மொழியோடும் பிராகிருத மொழியோடும் தென்னிந்திய மக்களின் சொற்களும் கலந்தன."

"தற்கால ஐரோப்பாவின் துருக்கர், செமிட்டிக் மக்கள், யூதர்கள் ஆகியோர் இந்த ஆரிய இனத்தைச் சார்ந்தவர்களே".

மேற்கண்டவற்றைக் கூறிய வையாபுரிப் பிள்ளையவர்கள் வடமொழியை ஆராதனை செய்திருக்கலாம்; தமிழிலக்கியங்களின் காலத்தைப் பின்னோக்கித் தள்ளியிருக்கலாம். அந்தக் காரணங்களுக்காக மட்டும் அவரைப் போற்ற முன்வருகின்ற வைதிக ஃபாசிசம், வடமொழியைப் பற்றி அவர் கூறியதைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை. சௌகர்யமாக இருப்பவற்றை மட்டும் எடுத்துக் கொள்வது வைதிகத்தின் வாடிக்கை.

இப்போது மராத்தி மொழியோ இந்தி மொழியோ பேசப்படுவது போல், ஒருநாளும் சமஸ்கிருதம் பேசப்பட்டதல்ல.

இவ்வாறு கூறிய காஞ்சிப் பெரியவரின் உரையும் இங்கு கவனிக்கத் தக்கது. சமஸ்கிருதம் யாரால் பேசப்பட்டது? யாராவது அதைத் தாய்மொழியாகக் கொண்டு பேசியிருக்கிறார்களா? பேசியிருக்க முடியுமா? இக்கேள்விகள் பதிலளிக்கப்படவில்லை.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் இனக் கலப்பு ஏற்படும்போது, மொழி - மொழிகள் வித்தியாசமடைவது இயல்பு. வசிட்டனோ, மரீசோ பேசிய மொழி பின்னர் ஏற்பட்ட சமஸ்கிருதமாக இருக்க முடியாது. ஐரோப்பிய மொழி சார்ந்த ஒன்றைப் பேசி வந்தவர்கள் இனக்கலப்பு ஏற்பட்ட பின்னர், தங்களது மொழியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அது அழிந்து விடாதிருக்க சில நியதிகளைப் பின்பற்றியிருக்க முடியும். ஆங்கிலேயர் ஆட்சியி ஆங்கிலச் சொற்கள் விரவியதுபோல, தமிழகத்தில் ஆற்காடு நவாப் ஆட்சியின்போது உருதுச் சொற்கள் பயன்பட்டது போல, வடமொழியை வடநாட்டுப் பூர்வ குடிமக்களும் கொண்டிருக்கலாம்.

"பூரணம் பூரணமாகவே இருக்கும். பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தாலும், அது பூரணமாகவே இருக்கம்" என்பன போன்ற கருத்துக்கள் அருமையானவை என்று சொல்லும்போது, இவை போன்றவை தொகுக்கப்பட்டனவே யொழிய இப்போது வடமொழியில் படிப்பதால், அவை அம்மொழியைப் பேசி வந்த மக்களின் கருத்துக்கள் மட்டுமே என்று கருத எந்த ஆய்வும் இடந்தரவில்லை.

மதத் தவைர்களின் கருத்துப்படி பார்த்தாலும்கூட வியாசர் என்ற ஒருவரால் தொகுக்கப்பட்ட சில பாடல்களே தவிர யார் பேசிய மொழியிலிருந்து இது எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தெரியாது. ஆப்பிரிக்க நாட்டின், எழுத்தில்லாது வழங்கும் பல மொழிகளிலும் இருக்கும் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அந்த ஒரு காரணத்திற்காக, ஆப்பிரிக்க நாட்டு பூர்வகுடி மக்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று சொல்வது மடமையல்லவா?

திருக்குறளைப் பற்றி ஆங்கிலத்தில் இருக்கின்ற நூல்களின் எண்ணிக்கை தமிழைவிட அதிகம் ஒருசமயம் திருக்குறளைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் வாங்க வேண்டுமென்றால், ஆங்கிலம் அதிகார பூர்வமாகத் தெரிந்திருந்தால் அல்லாமல் முடியாது. மறைமலை அடிகளுக்கே அம்மாதிரி நிலை ஏற்பட்டிருந்தது.

இதெல்லாம் நம்மை ஆள்பவர் யார் என்பதில் அடங்கிய விஷயம். அது மொழியை மட்டுமல்லாது, கலாச்சாரத்தையும் சமயத்தையும்கூடப் பாதிக்கும். ஆங்கிலேயர் நம்மை ஆண்டிருக்காவிட்டால், நமது கோவில்களில் ஜனவரி முதல் நாள் அர்ச்சனை நடைபெறாது; நமது திருமண வரவேற்புகளில் மணமகன் கையைப் பற்றி, யாரும் குலுக்க மாட்டார்கள். நம்மை சீனாவோ ஆப்பிரிக்காவோ ஆண்டிருந்தால் என்ன மாற்றம் நம்மிடை ஏற்பட்டிருக்கும்?

இவ்வகையான நிர்பந்தங்களின் இடையிலேயும் தன்னைத் தக்க வைத்துக் கொண்ட இனம் உலகில் இந்தத் தமிழினம் ஒன்றுதான் என்று தெரிகிறது.

 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved