தாய்மொழியும் தந்தைமொழியும்
ஒரு தடவை சிதம்பரம் ராமலிங்க வள்ளலார் ஒரு சங்கராச்சாரியாரிடம் வாதம் நடத்தியபோது “சமஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தாயாக இருக்கலாம், நீங்கள் சொல்வதுபடி, ஆனால் தமிழ் தந்தை” என்று சொல்லியிருக்கிறார்.
வள்ளலார் ஞானத்தால்சித்தர் பரம்பரையினர். தாய்மொழி தமிழ்மீது இயல்பாகவே இருந்த அன்பால் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார். ஒருவேளை சொல்ல வேண்டிய அவசியம் வந்தபோது சில கருத்துக்களைச் சொல்ல வேண்டியிருந்திருக்கும்.
ஆனால், ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் சொல்கிறார்: “நம் தாய்மொழி தமிழ் தந்தைமொழி சம்ஸ்கிருதம்” என்று. இது வள்ளலார் தம் மனோபாவத்தில் சொல்லப்பட்ட ஒன்றல்ல. ஊன்றிக் கவனிக்கும்போது “இது யாருக்காகச் சொல்லப்பட்டது, எதற்காக?” என்ற சில விவரங்கள் தெரிகின்றன. அவரைப் பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் அவை பகிரங்கமாகப் பேச முடியாத அளவுக்கு இசகு பசகானவை என்று தெரியவரும்.
Max Plank இந்நூற்றாண்டின் ஆரம்பகால கட்டத்தில் நமக்கருளிய Quantum theory-ஐத் தெரிந்து கொண்ட உலகில் இன்னமும் நாடு, இனம், மொழி என்று பேசி வருவது குறுகிய மனப்பான்மையென்று சொல்வது எளிது. ஆனாலும் சுதந்திர உணர்வு என்பது எல்லாராலும் போற்றப்படும் நிலையாதலால் எல்லாருக்கும் தேவைதான் – துறவிக்கும்கூட.
மேலும், சங்கராச்சாரியார் சொன்னதால் அதைப் பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாத்தாகி விடுகிறது. வள்ளலார் நிலையிலிருந்து வாதமிட இப்போது யாருமில்லை. உலக வரலாறு, தத்துவம் பற்றிய அறிவைத் துணையாகக் கொண்டு சிலவற்றை எண்ணிப் பார்க்க முடிகிறது.
இலத்தீனையோ கிரேக்கத்தையோ தந்தை மொழி என்று ஐரோப்பிய இன மக்கள் கூறி வருவது போன்று இதைக் கருத முடியாது. ‘‘ஆங்கிலம் எனது தாய்மொழி. இலத்தீன் தந்தைமொழி’’ என ஆங்கிலேயன் கூறினால் அது சரியாகவே இருக்கும் வரலாற்று ரீதியான தவறும் இல்லை. அதைப் போன்று ‘‘குஜராத்தி தாய்மொழி. தந்தைமொழி சம்ஸ்கிருதம்’’ என்று கூறுவதும் வடநாட்டவர்க்கு சரியாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டவருக்கு அது எவ்வாறு பாதிப்பை உண்டு பண்ணும் என்பது வேறு விஷயம்.
தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனரைக் குறித்துத்தான் இவ்வாறு சொல்லப்பட்டது என்றால் அதுவும் வேறு விஷயம்தான். அப்படி இருந்தாலும் வரலாற்று ரீதியாகவும் இலக்கிய ரீதியாகவும் இன்னும் தெளிவாக்கப்பட வேண்டும்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் வடமொழியை தந்தை மொழி என்று ஒரு நாளும் கூற மாட்டார். இது அதைப் பற்றியதல்ல. இன்று வடமொழியைப் பரிபாலித்து, நேசித்து, அது எங்கள் தந்தை மொழி என்று தமிழ்நாட்டில் ஒருசாரார் கூறினால், அது அவர்கள் விருப்பம். இப்பொழுது வரலாற்று ரீதியாக அது சரிதானா என்று மட்டும் பார்ப்போம்.
நாட்டுப்பற்று என்றால்தான் என்ன? இனங்கள் ஒன்றிற்கு மேலுள்ள நாட்டில் எது நாட்டுப்பற்று? என்னுடைய கிராமத்தில் வசிக்கும் கிழவருக்கு ‘‘இந்தியா’’ என்கிற பெயரே தெரியாது. தூரத்தில் தென்படும் மலையும் ஓடுகிற அந்த இடத்தின் ஒவ்வோர் அசைவையும் ரசித்துக் கொண்டிருப்பவர் அவருக்குத் தெரிந்த ராமரும், கிருஷ்ணரும், காந்தியும், நேருவும் தமிழ்தான் பேசுவார்கள். புளிக்குழம்பு சாப்பிடும் ஆட்களாகத்தான் அவர்களைக் கருதிக் கொண்டிருகிறார். அந்தக் கிராமத்தை மட்டும் உயிராகக் கொண்டிருக்கும் கிழவர் நாட்டுப் பற்றுடையவராக மாட்டாரா?
நல்லது. வரலாறும் நில நூலும் படித்து, இந்த நாடு பல இனங்கள் கொண்டு நாடு; இந்தியா என்ற பெயரே மேல்நாட்டவர் கொடுத்தது; அது சிந்துநதி பாயும் பகுதியை மட்டுமே குறிக்கும்; இந்தியா என்ற சொல்லோ இந்து என்ற சொல்லோ பூங்குன்றன் முதல் சமீபகாலம் வரை யாரும் பயன்படுத்தவில்லை; அது 1902ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய ரெகுலேட்டரி சட்டமூலம் வந்தவொன்று; பாரதம் என்ற சொல்லைக்கூட பாரதிக்கு முன் யாரும் கையாளவில்லை; பாரத நாட்டின் தலைநகரம் எதுவென்றால் தெரியாது; பாரத மன்னன் யார் என்பதே சந்தேகம்; ஆரிய வர்த்தத்தின் எல்லை நர்மதா நதியோடு முடிகிறது என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம்.
தெரிந்து கொண்டு, பின்னர் திடீரென, ஆரிய புத்திரன் - ஆரியன் என்றால்தான் அது மேம்பாடு தமிழ் என்று சொல்லி விட்டால் அது ஒருமைப்பாடு அல்ல என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழ் என்று சொல்வதெல்லாம் பிரிவினைவாத அடிப்படை என்று கூற முன்வந்தால், ஆரிய - இந்தோ ஆரிய - இந்து என்று சொல்வதும் பிரிவினைவாத அடிப்படைதாம். இந்த நாட்டினரின் முன்னோர்கள் வேதகால ரிஷிகள்தாம் என்று கூறுவதும் பிரிவினை வாதம்தான்.
உண்மையைச் சொல்வதென்றால் ‘‘ஆரிய’’ என்றாலே ‘‘மிலேச்சர்’’ என்றல்லவா தமிழிலே பொருள்? வடமொழியில் ‘‘உயர்ந்த’’ என்ற பொருளை வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் வடமொழியாளரல்லவே. திண்டிவனம் பகுதியிலுள்ளவரை ஆரியர் என்றால் எப்படிப் பொருந்தும்? எனவே ஆரியர் என்று சொல்லுவோம்; தமிழர் என்று சொல்வது ஒருமைப்பாடாகாதென்றால் அது ஒருவகை பிரிவினைவாதம்.
இந்தப் பகுதி மக்களின் உணவு ‘‘அரிசி’’. உலகில் அரிசி பயிரிடுவதில் அதிக ஊக்கம் காட்டுவது இங்குதான். இந்த ‘‘அரிசி’’ என்ற சொல்தான் கிரேக்கத்தில் ‘‘ஓர்சி’’ என்றும் ஆங்கிலத்தில் ‘‘ரைஸ்’’ என்றும் மருவியுள்ளது என்பர்.
ஒருமைப்பாடு பேசும் இந்த நாட்டில் இதை இனி எப்படி வழங்குவார்கள்? அரிசி சாப்பிடாத மக்கள் அதை எப்படிச் சொல்கிறார்களோ அந்தச் சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும். அதுதான் ஒருமைப்பாடு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் பழம்பெருங் குடிமக்களாகிய நமது கலாச்சாரத்தைப் பாதிப்பதாகாதா?
பின்னர் நமது சமயம். இந்து மதம் என்ற சொல்லை இப்பகுதியிலுள்ளோர் ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னரே அறிந்துள்ளனர். இங்குள்ள ஆகமங்கள் வேறு. வடக்கேயுள்ளவை வேறு. ஒருசில பிற்கால அரசர் ஆணைக்கு ஏற்ப வடமொழி மந்திரங்கள் ஏற்பட்டவனவே யொழிய (அந்த அரசர்களும் வடபுலத்துத் தொந்தம் கொண்டாடியவர்கள்தாம்) தமிழ் மொழியைத் தவிர சமயத்திற்கும் தெய்வத்திற்கும் வேறு எம்மொழியையும் நாடவில்லை. இந்திரனையும் மித்திரனையும் இந்த நாடு கடவுளாகக் கொண்டதில்லை. கடவுளரே தமிழில் பாடியிருக்கிறார்கள். வடமொழியைத் தலைக்கு மீது தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர்கள், ஒரு பிழைக்கும் வழிக்காகவே இதற்குப் பெருமையை அளிக்கிறார்கள்.
இன்று இதுதான் சமயம் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டு சமயத்திற்கும் வடமொழிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வடமொழி வளர்ந்தது இங்குதான் என்றாலும் அதன் அடிப்படை ஐரோப்பாதான். ‘‘இனம்’’ ஒன்றின் மூலமாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்வது அது. ஜெர்மானியன் ஒருவன் ‘‘சம்ஸ்கிருதம்’’ தெரிந்திருந்தால் அவனைக் கொண்டு ‘‘யக்ஞம்’’ செய்விக்கலாம். ஆனால் அதே மொழி தெரிந்த தமிழன் ஒருவன் செய்யக்கூடாது என்கிற நியதியைக் கடைப்பிடிப்பது வைதிகம்.
நல்லது. சம்பிரதாயங்கள் தமிழிலும் உண்டு. வடமொழியில் சில குறிப்பிட்ட வேத சுலோகங்களைச் சொல்ல மாட்டேன் என்று தீயைக்கையில் வைத்து சத்தியம் செய்த பின்னரே தமிழ்நாட்டுக் கோயில்களில் சிலரைப் பூசை செய்ய அனுமதித்தார்கள். இம்மாதிரி பூசை செய்யும் பிராமணர்களை வடநாட்டினர். ‘‘திராவிட பிராமணர்’’ என்றே அழைத்தனர். (என்ன அது திராவிடர்? வேறொன்றுமில்லை - தமிழ் என்பது வடமொழியில் ‘‘த்ரவிட்’’ என்று உச்சரிக்கப்பட்டது அவ்வளவுதான். ‘‘ஒற்றைக் கல் மன்று’’ என்பது ‘‘ஒட்டகமண்ட்’’ என்று ஆங்கிலத்தில் மருவி, பின்னர் ‘‘உதகமண்டலம்’’ என்று தமிழுக்கே வந்தது போலத்தான்) வேத காலத்திலும் இந்த நிலை இருந்தது. விசுவாமித்திரரை ‘‘பிரம்ம ரிஷி’’ என்று கூறியதுண்டு. வசிட்டரை மறுத்துள்ளனர். வசிட்டர் பக்கம் சேர்ந்தவர்கள் அவரை பிரம்ம ரிஷி என்று பாட ஆரம்பித்தனர் என்பதெல்லாம் இந்தோ - ஆரியர்கள் வரலாற்றின் ஓர் அம்சமே தவிர, தென்னாடு சார்ந்தது அல்ல. ‘‘இந்திய வரலாறு’’ என்று இந்தோ - ஆரியர் சம்பந்தமுள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டுவிடுவதும் இங்கிருக்கும் எல்லாரும் இந்தோ - ஆரியர் என்று பாவிப்பதும்தான் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் முதல்படி. ஏன், இந்நாடு இருவேறு கலாச்சாரமுடையது, இந்தோ - ஆரியரும் தமிழரும் ஓர் இனமல்ல என்று வெளிப்படையாக ஓர் உண்மையாக எடுத்துக்கொள்ளக் கூடாது? இராமாயணத்தையும் பாரதத்தையும் படிப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அந்தக் காலம் இருக்கட்டும் - இப்போதும் வட இந்தியா பெரும்பாலும் பெர்சிய, அரேபியக் கலாச்சாரத்தைத்தான் பின்பற்றியிருக்கிறது. முக்காடு போட்ட பெண் தமிழகத்தில் அபசகுனமாகக் கருதப்படுகிறாள். வெள்ளைப் புடவை இங்கே விதவைக் குரியது. வடநாட்டில் இதற்கு நேர்மாறு.
கோவில் என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டால், வடநாட்டில் அப்படி எதுவுமே கிடையாது என்ற சொல்லிவிட முடியும். வேதங்களிலோ, இதிகாசங்களிலோ கோவில் சென்று வணங்கியோர் இல்லை. வேதங்களின் வணக்கம் இந்திரனுக்கும் மற்றுமுள்ள மித்ர, வருணனுக்கும் செல்கிறது. விஷ்ணு என்னும் தேவன் இந்திரனின் வேலைக்காரன் என்று கூறப்படுவர்தான். சிவனைப் பற்றி இழிவாகப் பேசப்படுகிறது. இலிங்கத்தை வணங்கும் மக்கள் நீசர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். வேதத்தில் குறிப்பிடப்படும் ருத்ரன் சிவன் அல்ல என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். (பார்க்க: ரிக் வேத சுலோகம் 7-12-5 மற்றும் 10-99-3)
கோவில் என்று ஏற்பட்டதே தென்னகத்தில் தான். சங்க காலத்தில் கோவில் பற்றிய குறிப்புகள் இல்லை. சிலப்பதிகாரத்தில் பிறவா யாக்கை பெருமான் என்று சிவன் கோவில் சொல்லப்படுகிறது. ஆனால் தமிழின் எல்லா இலக்கியங்களிலும் பூசனை குறிப்பிடப்படுகிறது-திருக்குறள் உட்பட.
கரிகாலன் கட்டிய கல்லணை இன்றைக்கு இருக்கும்போது, அந்த மன்னன் வாழ்ந்த அரண்மனை எங்கே? என்னவாயிற்று? என்ற கேள்வி நியாயமாகவே எழும். அவை எங்கேயும் பேய்விடவில்லை. இந்தப் பழங்காலக் கோயில்கள் யாவும்தாம் அரண்மனை என்ற முடிவைத் தரும். அது உண்மைதான். ஓர் அரண்மனையில் மன்னன் வணங்கி வந்த இடம்தான் கருவறை. மீதியுள்ள இடங்களாக நாம் இன்று காண்பவை ஓர் அரண்மனைக்குரிய சாயலில் அமைக்கப்பட்டதுதான். கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், சுரங்க அறை, நகைகள் பாதுகாக்கப்படுமிடம், பிரகாரத்தில் இருக்கும் வாகன அறைகள், மடப்பள்ளி, பெரிய மதில் யாவும் அரண்மனைக்குரியவை.
இவையெல்லாம் ஆய்வாளர் மேற்கொண்டு பல சங்கதிகளை அளித்துள்ளனர். என்றாலும் கோவில் இல்லாத சமயத்தில் அதாவது சங்க காலம் என்று வைத்துக்கொள்வோம், அப்போது கருவறையில் இருந்து மன்னனால் வணங்கப்பட்ட தெய்வம் எது?
தெய்வம் என்ற சொல்தான் எதைக் குறிக்கிறது? எம்மொழிச் சொல் அது? வடமொழியில் கூறப்படும் பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதப் பெயர்களிலே தேயு என்றால் நெருப்பு. அதற்குரிய சமஸ்கிருதச் சொல் ‘‘அக்னி’’ எதற்காக அதைத் ‘‘தேயு’’ என்று சொல்ல வேண்டும்? அது இனக்கலப்பால் நேர்ந்த ஒரு விஷயம் - ஒரு தந்திரமான போக்கு. பூர்வகுடிமக்களின் மொழியை ஆரியரால் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது போயிற்று. ‘‘தீ’’ என்பதே தேயு ஆனது. அக்னி ஐரோப்பிய மொழி சார்ந்தது.
இருக்கட்டும்-இவ்வாறு கோவிலில், அதாவது அரண்மனையில் நெருப்பையோ, நெருப்பின் சாயலில் லிங்கத்தையோ, நடுகல்லையோ வணங்க, பின்னர் அவர்களுக்காகக் கட்டப்பட்டதுதான் கோவில். ஆரம்பத்தில் வணங்கிய இடம் அரண்மனைதான். கோவில் என்ற தமிழ்ச்சொல்லின் பொருளும் அதுவே.
கோவில் ஏற்பட்ட பின்னரும் இந்திரனுக்கும் அவனைப் போன்ற மற்றவர்க்கும் இந்த நாட்டு மக்களின் வணக்கம் கிடைக்கவில்லை. எனவேதான் இக்கடவுளரை ஆரியர் ஸ்வீகாரம் செய்தனர். பூர்வகுடி மக்களின் தெய்வங்கட்குத் தங்கள் தங்கள் வழக்கங்களை ஏற்படுத்திக் காட்டி, பலரும் நூல்கள் செய்தனர் - சங்கரர் உட்பட. இல்லையென்றால் பிறவா யாக்கைப் பெருமானும் முருக வேளும் முப்புரி நூல் அணிவிக்கப்படுவார்களா? விஷ்ணு காசியப கோத்திரக்காரரானார். ஆனால் விஷ்ணு என்ற சொல்லே ‘‘விண்’’ என்ற சொல்லிலிருந்து பெற்றதாக சேஷ ஐயங்கார் முதல் இன்றைய இந்திரா பார்த்தசாரதி வரை சொல்லியாகிவிட்டது.
இவ்வாறான கோவில் எப்போது தோன்றியிருக்க முடியும்? ஊர் என்ற இடம் ஏற்பட்ட பின்னர். விவசாயத்தை உரிய தொழிலாக முதன் முதல் கொண்ட மக்களும் இடமும் எவையென விஞ்ஞானிகள் சொல்ல வேண்டுமேயொழிய, வேதம் சொல்கிறது, புராணம் சொல்லிற்று என்று கூறும் கதா காலட்சேப பம்மாத்துக்காரர்கள். அல்லர்.
நீரைத் தேக்கி விவசாயம் ஆரம்பிக்கப்பட்ட முதலிடங்களாக எகிப்து, தென்னிந்தியா, இலங்கை என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவில் படிக்கலாம்.
வடமொழி இலக்கியங்களில் நர்மதை ஆற்றின் தெற்கேயுள்ள இடம் மனிதர்களே இல்லாத பிரதேசம் போல் ஒரு படம் காட்டப்படுகிறது. தெற்கே வேடர்தாம் இருந்தனர் - அதாவது மலைவாழ் மனிதரேயன்றி வேறு நாகரிகம் கிடையாது என்று சொல்லப்படுகிறது. இதைப் போன்ற பைத்தியக்காரத் தனமான வாசகங்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. இலக்கியம் வரலாறல்ல. உலகைச் சுற்றி வந்தான் என்று அந்தக் காலத்தில் எழுதப்பட்டிருந்தால், எந்த இடங்களுக்கெல்லாம் என்ற கேள்விக்கு வரும் பதில் சைப்ரஸ், ஏதென்ஸ் என்பதுதான். கோசல நாட்டைச் சுற்றி வருவதுதான், உலகம் சுற்றி வருவது. அமெரிக்காவையும் சேர்த்து அல்ல என்று நமக்குத் தெரியும். தசரதனும் உலகை ஆண்டான். ஜனகனும் உலகை ஆண்டான். இருவரும் பக்கத்து நாட்டுக்காரர்கள். ஒரே காலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுபவர்கள்.
ஒரு நாட்டைச் சுற்றிக் காடு இருக்கலாம்.
அந்தக் காலத்தில் இங்கே தெலுங்கு நாட்டிற்கு பக்கத்தில் இருந்த தமிழ்ப் பகுதி அருவா நாடு. எனவே தெலுங்கர், தமிழ்நாட்டுப் பகுதிகள் எல்லாவற்றையும் அரவாடு என்றழைத்தது தெரியும். நர்மதை ஆற்றின் தெற்கிலும் காடுகளும் மலைகளும் குரங்கும் புலியும் இருந்தால் ஒரு வடமொழி இலக்கியக் கர்த்தாவுக்கு விநோதமான நாடாகத் தோன்றும். தென்திசை எல்லாமே அவ்வாறுதான் தெரியும். இது ஒருவனது நாட்டுப் பற்றோடு கலந்த சங்கதியும்கூட.