Girl in a jacket

 

அமெரிக்காவில் இருந்து நாற்பது ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு ஒருவன் வருகிறான். அமெரிக்கப் பெண் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு அவன் வாழ்ந்த வீடு திருவல்லிக்கேணியில் இருக்கிறது. அவனுடைய தாயார் வீட்டின் மேல்மாடி அறையில் இறந்து விடுகிறார். அதனால் அவன் அந்த வீட்டின் மேலறையைப் பார்க்க வருகிறான். அந்த வீட்டுக்காரரிடம் இந்தியாவைப் பற்றியும் வெளிநாட்டைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகள் கழித்து வந்திருப்பதால் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொள்கின்றனர். பிறகு அவன் போயிட்டு வருகிறேன் என்று வீட்டுக்காரரிடம் கூறுகிறான். வீட்டின் மேலறையைப் பார்க்காமலேயே போகிறீர்களே என்று கேட்கிறார்.

இல்ல பார்க்கல. நாம இன்னும் பத்து இருபது வருஷம் இருப்போமோ? போன வருஷம் கேன்ச்சாஸ் சிட்டிக்குப் பஸ்ஸில போயிருந்தேன். அங்க ஒரு வயதான அம்மா பஸ்ஸில ஏற முடியாம தவிச்சாங்க. அப்ப என் மனைவி எடிட் எழுந்து அவளுக்குக் கை கொடுத்து மேலே ஏற உதவி செய்தார். நேற்று திண்டிவனம் போயிருந்தோம். அப்ப ஒரு வயதான ஒரு அம்மா பஸ்ஸில ஏற முடியாம தவிக்க அதைப் பார்த்த எடிட் அவளுக்கு கை கொடுக்க எந்திருச்சா. அவளால் முடியவில்லை. ஏன்னா அவளுடைய கால்களை ஒரு விபத்தில் இழந்து விட்டால் அப்பொழுது நான் கேன்ச்சாஸ் சிட்டியில் நடந்ததைப் பற்றிக் கூறினேன். அவளுக்கு அது நினைவில்லை என்று கூறிவிட்டாள். இப்படிக் கதை முடிகிறது.

அவன் ஏன் பார்க்காமல் போனான் என்பதற்கு இதில ஒரு பதில் இருக்கிறதா நான் நினைக்கிறேன். ஆனால் நேரடி பதில் கிடையாது. அதற்கான நேரடி பதில்னு பார்த்தா மௌனம்தான்.

கேள்வி: மௌனம் பற்றிய உங்கள் கருத்து ?

பதில்: மௌனம் பற்றி இலக்கியத் துறை கவனித்திருக்கிறதா? இதற்கு முன்னாடி யாராவது இதைப் பற்றி சொல்லிருக்காங்களா? இப்ப தமிழவன் போன்றவர்கள் பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து அதன் நிலைமைப் பற்றி கூறியிருக்கின்றனர்.

வேறு ஏதாவது பல்கலைக் கழகமோ, இல்ல வேறு யாராவது இதைப்பற்றிக் கூறி இருக்கிறார்களா? யாராவது பழைய ஆட்களாவது இதைப் பற்றிக் கூறியிருக்கிறார்களா? A good question involves the answer in itself. என்று ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்வார். ஒரு நல்ல கேள்வி, பதிலையும் உள்ளடக்கியிருக்கிறது. இது ஒரு பெரிய கேள்விதான்? இதைப்பற்றி தெரியாம யாரும் பேசி எழுதி விட முடியாது.

நீங்கள் எல்லாம் நல்லா படிக்கனும். திருக்குறள், இலக்கியம், பேப்பர் எல்லாத்தையும் படிக்கனும்னு சொன்னாலும் இதைப் பற்றித் தெரியாமல் படைப்பிலக்கியம் பற்றி பேச முடியாது. இது தோன்ற செய்வதற்கு நம் கல்வித் துறை என்ன செய்கிறது. இதற்கு பதில் எனக்குத் தெரியாது.

கேள்வி: தமிழ் துறை சார்ந்த விஷயங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: தமிழ் துறை சார்ந்த விஷயங்கள் படைப்பிலக்கியம் பொருத்தவரையில்  அது எவ்வாறு அமல் படுத்தப் படுகின்றன, நடைமுறையில் எவ்வாறு கொண்டு வரப்படுகின்றன என்பதை இந்தக் காலத்தில் கவனமாகப் பார்க்க வேண்டியது அவசியம்.

படைப்பு இலக்கியத்திற்கென்று அவர்கள் செய்தது என்ன என்பதை முக்கிய காரியங்களாகவும், உசிதமான விஷயங்களாகவும் கையாளவேண்டியது அவசியம். அவசியமான காரியம் என்பதால் இதைக் கொண்டு வர வேண்டும். தமிழ் மொழிக்கு இணையான கவிதை சமஸ்கிருதத்தில் கூட இல்லையென்னு காஞ்சிப் பெரியவரே சொல்லியிருக்கிறார்.

குறிப்பிட்ட மொழிக் கவிதையில் இன்று எப்பாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைத்தால் வயிறு எரியும்.

சிறுகதை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்றாலும் அதையும் மெச்சிவிட முடியாது. மற்ற மொழிகளிலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. புதிதான முறையில் அது போய்க்கொண்டிருக்கிறது. என் தகப்பனார் பார்க்கின்ற ரீதியிலேயே நான் பார்க்க முடியாது. ஏனென்றால் அதை அவர் செய்து கொண்டு போய்விட்டார். நான் நானாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இலக்கிய உத்திகள் கையாளப் படவேண்டும்.

கேள்வி: புதிய முறைகள் என்று சொல்வது கோட்பாடா?

பதில்: கோட்பாட்டை Base பண்ணி பார்த்தா அது புதிய முறை ஆகாது இல்லையா? Literary பார்வை என்பது ஒருவனின் தனிப்பட்ட விஷயம். அதிலிருந்து இன்னொரு அறிவாளி தோன்றியிருக்கலாம். வள்ளுவன் கூட ஒருவன் பிச்சையெடுத்தான்னு சொன்னாரே தவிர, எப்படி அந்த வறுமையத் தீர்க்கனும்னு சொல்லல. ஆனால் காரல்மார்க்ஸ் இதை சொல்லியிருக்கிறான். வள்ளுவனுக்கு இருக்கிற பெருமை காரல்மார்க்ஸ்க்கு இல்லை. வள்ளுவன்தான் இலக்கியவாதி. காரல் மார்க்ஸ் இல்லை.

வள்ளுவனுக்கு எப்படி இந்த உணர்வு வந்ததுன்னா அவன் மனமசுல தோன்றிய உணர்வு. அந்த உணர்வில் இருந்து தான் இன்னொருவன் வருகிறான். காரல் மார்க்ஸ் வள்ளுவனைப் படிக்கல, ஆனா தாந்தேயைப் படித்திருப்பான். ஒரு மனிதனுக்குள்ள உணர்வுதான் இன்னொருவனுக்கு வழி வகுக்கிறது. மனித சிந்தனை என்பது ஒரு கூட்டு முயற்சி.

அறிவாளி அவசியமா? கவிஞன் அவசியமா என்ற கேள்வி வேண்டாம். இதனால் தான் அவன் பிறக்கிறான் என்கிறோம். கவிதை என்பது மிக மிக முக்கியமானது. அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் தேங்கி விட்டது. பக்தி இலக்கிய காலத்திலும், இளங்கோவடிகள் காலத்திலும் அதிகம் இருந்தன. அது ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தேங்கி அதன் பின்னர் சித்தர் இலக்கியத்தில் ஒரு நிலையைப் பெற்றது. வள்ளலார் போன்றவர்களால் ஓரளவிற்குப் பிழைத்தது எனலாம். மங்கியதற்கு காரணம் இருக்கும் என்றால் அரசியல் ரீதியாகவும் இருக்கலாம். பல்லவர், பிற்கால சோழர் இது போன்று காரணம் இருக்கலாம். இதையும் மீறி ஒரு உண்மையான கவிஞன் தோன்றுகிறான்.

கேள்வி: வைதீகம், வைணவம் இதற்கு இடையே உள்ள வேறுபாடு பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: உபநிசத்தை எப்படி வைதீகம்னு சொல்ல முடியும். ஒன்றும் இல்லாத ஒன்றிலிருந்து ஒன்றுமில்லாத ஒன்றாகிறது என்று ஒரு சுலோகம் உண்டு. அது எனக்கு சரியா தெரியல. இது எப்படி வைதீகமாகும். இது வைதீகத்திற்கு எகைன்ஸ்ட் ஆச்சே. வைதீகம் வேதத்தை எதிர்த்தது என்று கூறலாம். ஒரு குறிப்பிட்ட கம்யூனிட்டியை எதிர்க்கிறதுனோ, புத்தகங்களை எதிர்க்கிறதுனோ, எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எதிர்த்தாலும் அது பூர்ணமாகவே இருக்கும். அது எப்படி உபநிஷதமா இருக்கும்? அது எப்படி வைதீகமாகும். உபநிஷதம் எப்படி தோன்றியது எனத் தெரியாது. அந்த காலத்தில் கலெக்ட் பண்ணி வச்சிருந்தாங்க. அதை வட மொழியில் எழுதி தொகுத்து வைத்தவர்தான் வியாசர். இவ்வாறு தொகுத்தது தான் இந்த உபநிஷதம். வேதத்திற்கு எதிரான கருத்து வேதத்திலேயே இருக்கு.

ஒரு விதவை மறு கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா இருந்தான்னு கதை இருக்கு. ஒரு விதவை அப்படியே தன் விதிமுறைகளோடு நல்லா இருந்தான்னு கதை இருக்கு. கதைப்படித்தான் நடப்பேன் என்பது வைதீகம். பதி பக்தின்னு சொல்லிட்டா ஒரு குஷ்டரோகி புருஷனுக்கு அடி பணியனும். அதுதான் வைதீகம். நளாயினி கதையைப் படித்தால் தெரியும். அந்த காலத்தில் இதற்கு எதிர்மறையாகவும் நடந்திருக்கிறது. இப்பவும் அப்படித்தான் நடக்கிறது. அதுதான் மௌனம். மௌனமான முறையில் ஒரு எதிர்ப்புக் குரல் நடக்கிறது.

கேள்வி: பெரியாரைப் பற்றியும் அவர் காலம் பற்றியும் உங்கள் கருத்து?

பதில்: பெரியார் அடியோடு எல்லாவற்றையும் எதிர்த்தார். அவருடைய காலத்தில அது எல்லாம் தேவையா இருந்திருக்கலாம். பெரியார் ஒரு சமூக சீர்திருத்தக்காரர் அவர் குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றினார் அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு வார்த்தையும் வைதீகத்திலிருந்து கிளம்பியதுன்னு சொன்னா பெரியார் இலக்கியமும் ஒரு வைதீகம்தான். பெரியார் போல சமூகக் கருத்துக்ளை அழுத்தமாக வேறு யாருமே சொல்லல. புதுமைப் பித்தனும் ஒரு நாத்திகன்தான். ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் பற்றி எழுதினான். ராமர் எந்த ஊர்ல பிறந்தார்னு தெரியல. அயோத்தின்னு ஒரு ஊரைக் கட்டி வச்சு சொல்றோம். நல்ல கதைகள் எப்போதும் பரவும். ராமாயணம்தான் அதற்கு சாட்சி. நல்ல கதைகள் பிரயாணம் செய்யும். பேகன் மனைவி கண்ணகி கதை. இளங்கோவடிகள் காலத்தில் மாறிப்போச்சு. மாறக்கூடாதுன்னு சொல்ல நாம யாரு. பெரியார் சமூக நலவதி. அதனால அவர் சொன்னதெல்லாம் நாம் செய்யனும்னா அதை செய்ய முடியாது. காந்தியடிகள் தினமும் ராம நாமம் சொல்லனும். ராட்டையில் நூற்கனும்னா என்னால் முடியாது. அதனால் நான் காந்தியை மதிக்கலைன்னு அர்த்தம் இல்லை. இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றியதுன்னு சொல்லலாம்.

கேள்வி: தமிழ் இலக்கிய மரபைப் பொருத்தமட்டில் கடவுள் கொள்கை, மனித வளர்ச்சி, கடவுள் மறுப்பு இதுபோன்று வளர்ந்து வந்தாலும் ஏதோ ஒரு இடைவெளி இருக்குறா மாதிரி இருக்கே இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அது என்ன?

பதில்: எதிர்காலத்தைப் பற்றி இப்பவே நினைக்க முடியும்னா அது எதிர்காலமாகாது, நிகழ்காலமாகிவிடும். எதிர்காலம் எதிர்காலமாகத்தான் இருக்கனும். இப்ப இருக்கிற நிகழ்காலத்துக்கு மாற்றாக எதிர்காலம் வரனும். அது நல்லதா தான் இருக்கணும். அது எப்படினு தெரிஞ்சா அதை இப்பவே நடைமுறைபடுத்தலாமே எதிர்காலம்னு ஒன்னு இருக்காதே.

தமிழ் மரபு கடவுளை வணங்கியிருக்காங்க குறிஞ்சி, மருதம், நெய்தல் போன்ற நிலங்களில் வாழும் மக்கள் கடவுளை வணங்கியிருக்கின்றனர்.

இது விவசாய காலக்கட்டமாக மாறி அங்குள்ள நாகரீகமும் இங்குள்ள நாகரீகமும் கலந்து மாற்றமடைந்திருக்கிறது. இருந்தாலும் அடிப்படை தமிழ் மரபு மாறாமலும் இருந்திருக்கிறது.

அரசியல் காரணங்களால ஒரு சூழ்நிலையை நாம் செயற்கையா ஏற்படுத்தினால் தமிழ் மரபுக்கு நல்லதாய் அமையாது. இது அரசியல் ரீதியாகயிருப்பதால் நாம் நேரடி பதிலைச் சொல்ல முடியாது. இதை சமூக நலவாதி சொல்லனும். இல்லைனா அரசியல்வாதி சொல்லனும்.

ஆனால் உலக இலக்கியம் எப்படி அமையும்? கதை, கவிதை தேவையில்லை இப்ப எல்லாமே Computer-ல வந்தாச்சு. இது தேவையா தேவையில்லையானு அது சொல்லும். ‘இது தேவையில்லை’ என்பதையே அழுத்திச் சொன்னால் அது கவிதையாகிவிடும். கதை, கவிதை, என்பதை நாம்ப சிருஷ்டிக்கல. அது மனசுல வந்தது. கவிதையா ஜீரணிக்க முடியாது கதையாக மாறுகிறது. கவிதையும் கடவுளும் ஆதி மனுஷனுக்கு மனசுல வந்த்து. அதை நாம்ப நீக்க முடியாது. அது நீக்கினால் மனுஷன் மனுஷனாயிருக்க முடியாதுனு நினைக்கிறேன். மனிதனுடைய ஜீவனோடு கலந்திருக்கு. மனுஷனுடைய எண்ணம் ஜீவனோடு கலந்திருப்பது கதை. இவன் நம்பளவிட உயர்ந்தவனாயிருந்தா அவன் கிட்ட நாம்ப அடிமையாயிருக்கலாம்னு நினைச்சா அந்த உயர்ந்தவன் கடவுள். அப்படி தான் எல்லா கடவுளும் வந்தாங்க கடவுள் என்ற Question-க்கு பதில் எல்லாம் பெற முடியாது.

கேள்வி: சிற்றிதழ்களில் வருகின்ற கவிதைகள் மாணர்களுக்குப் புரிவதில்லை. இதை எப்படி நான் கவிதைனு ஏத்துக்கிறதுனு ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது? அதற்கு நீங்க என்ன சொல்கீறீர்கள்?

பதில்: இது வாஸ் தவம் தான். எனக்குப் புரியக் கூடிய ஒன்று என் பேரனுக்குப் புரியாமல் இருக்கும். மகனுக்குப் புரியாமலிருக்கும், அப்பாவுக்குப் புரிந்தது எனக்குப் புரியாமல் இருக்கும். இப்படி எல்லோருக்கும் புரியும்படி எழுதனும்னு அவனுக்கு என்ன தலையெழுத்தா? எழுத்தாளன் உங்களுக்குப் புரியும்படி எழுதனும்னா அவன் உங்களுடைய வாத்தியார் மாதிரி ஆயிடுறான். அது நல்லதா? கவிஞனோ எழுத்தாளனோ அறிவாளினு சொல்ல முடியாது. அவன் ஒரு உண்மையை சொல்கிறான். அதுல அவன் பெரியவன். உண்மைனு சொல்றது Fact, False–னு இல்லை அது Truth, A eternal truth, எப்படி பார்த்தாலும் அந்த உணர்வு தான் அவனை பேச வைக்கிறது. இதை எப்படி புரியவைக்க முடியும்? ஒரு குழந்தை பேசறது அம்மாவுக்குப் புரியும். நமக்கு புரியலனா அது சரியான மொழியில்லனு சொல்ல முடியுமா?

பல காலக்கட்டங்களில் புரியக்கூடிய தன்மை வேறு வேறு விதமாக மாறியுள்ளது. அப்ப ஒரு ஊரில் ஒரு ராஜானு கதையை ஆரம்பிப்பான். ஆனா இப்ப ஏய் எங்க போறனு ஆரம்பிப்பான். அது மட்டும் எப்படி நியாயம்? அது எப்படி புரியுது? புரியக்கூடிய நிலை மட்டும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறுபடுகிறது. மாறுகிற காலக்கட்டத்திலும் மாறுபடுகிறது. மாறுகிற காலக்கட்டம் நல்லதா கெட்டதானு சொல்ல்லாமே தவிர புரியும்படியா தான் சொல்லனும்னு சொல்றது எப்படி?

இதை பற்றி ஏற்கனவே Disscuss பண்ணியிருக்காங்க காங்க பெரிய Conference–ல கூட புரிதல்னா என்ன? அப்படின்னு பேசியிருக்காங்க.

நகுலன் சொன்னா மாதிரி நான் எழுதனுது எனக்கே புரியாமல் போகலாம். ஆனால் அது அர்த்தமற்றதுனு சொல்ல முடியாது. ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட பிராணியைப் பார்த்து சத்தம் போடுதுனு வைச்சிப்போம். ஆனா நாம்ப பார்க்கும்போது அந்த பிராணி இல்லை. அப்ப அந்த சத்தத்திற்கு அர்த்தம் இல்லைனு சொல்ல முடியுமா? குழந்தை எதற்கு சத்தம் போட்டதுனு தெரிஞ்சிக்கிறது நம் கடமை, மாதிரி கவிஞனை நாம் தெரிந்து கொள்வது நம்ப கடமை. நமக்கு புரியும்படி சொல்லவேண்டியது யாரு? அது வாத்தியார்களின் கடமை. இது அவருடைய தொழில். கவிஞன் இது வரைக்கும் சொல்லாத விஷயத்தை அல்லவா கூறுகிறான். அது அவனுக்கே புரியாமல் போகலாமே.

நீங்க கேட்டதற்கு சரியான விடை கிடையாது. ஆனா இந்த மாதிரி பதில் கேள்வியா வரும்.

கேள்வி: ஒரு சிறுகதையையோ, நாவலையோ படித்ததும் புரிந்துக் கொள்கிறோம். ஆனா, கவிதையைப் படித்தா அப்படி புரிவதில்லை. புரியும் வரை இதையே படித்துக் கொண்டிருந்தால் எப்ப மத்த விஷயங்களை நாங்கள் தெரிந்து கொள்வது என்று மாணவர்களிடையே ஒரு பிரச்சினையுண்டு இதை பற்றி?

பதில்: ஒரு கவிஞன் பால் போல் நிலவு என்று சொன்னால் அவன் பாலைப் பற்றி ஏன் சொல்கிறான் என்பது தெரிந்து விடுகிறது. பால் ஒரு உவமானம் ஆனால் நிலாவைப் பற்றி சொல்ல அவசியம் என்ன வந்த்து. கவிஞன் என்ன வானசாஸ்திரம் படித்தவனா?

ஆனால் உரைநடை ஆசிரியரிடம் அப்படிஇல்லை. நிலவை ஏன் சொன்னான் கவிஞன் என்பது தெரிவதற்கு அந்த கவிஞன் யார் என்ற கேள்வியும் அதன் மூலம் அதில் உள்ள கவிதை அம்சமும் நமக்குத் தெரிய வருகிறது.

கவிதை அப்படி இல்ல, கவிதை ஒரு 'eternal truth' எல்லா காலத்துக்கும் உரிய ஒன்று. ராஜேந்திரன் கதையைப் படித்தால் ராஜேந்திரனும், கல்கியும் உங்களோடு இருப்பான். கவிதையைப் படித்தால் உங்களோடு யாரும் இல்லை That is called emptines' இந்த emptiness தான் Truth. இந்த உணர்வு சிறுகதையில் ஏற்பட்டால் அந்த சிறுகதையைக் கூட கவிதைனு சொல்லலாம். அளவு வைச்சி இது சிறுகதை, இது கவிதைனு சொல்லகூடாது. உள்ளடக்கத்தை வைச்சி சொல்லனும். இது Fundamental question. இதுக்கு direct answer சொல்ல முடியாது. வெட்டு ஒன்னு துண்டு இரண்டுனு சொல்ல முடியாது. தெரியாத காரணத்தால தான் அப்படி.

கேள்வி: ஒரு படைப்பு சிறந்தது? சிறந்தது இல்லைனு சொல்லறது நல்லதா?

பதில்: 'What is Literature' என்பதற்குள்ள இது வரல. நீங்க அதிலிருந்து தள்ளி வந்து கேக்கிறீங்க. கவிதையிலோ சிறுகதையிலோ எந்த ஒரு பகுதி நமக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அது நல்லதுன்னு எடுத்துக்க வேண்டியது தான். ஒன்னுமே இல்லாத பகுதியை எப்படி சிறந்ததுனு சொல்வீங்க. உபநிஷத்துலயிருந்து, சித்தர்கள் கூட சொல்ல முடியாத கேள்வியைக் கேட்டா எப்படி பதில் கிடைக்கும்.

கேள்வி: ஒரு படைப்பை மதிப்பீடு பண்ணலாமா?

பதில்: மதிப்பீடு பன்றது என்பது ஒரு executive work  இவனை விட அவன் நல்லா சொல்லலாம். அவனை விட இவன் நல்லா சொல்லலாம். மதிப்பீடு செய்யலாம். லிபியா நாட்டுல கூட ஒரு எழுத்தாளன் உண்மையை சொல்லிகிட்டு இருக்கான். உண்மையே தெரியாத ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு நடுவுல தானே ஒரு புதுமைப்பித்தன் தோன்றியிருக்கிறான். புதுமைப்பித்தன் தோன்றியதற்கு வடுவூர், வை. மு. கோதைநாயகியம்மாள் மட்டும் காரணம் இல்லை. அதுபோல தாகூர் போன்றவர்களும் இந்த இலக்கியக் கூட்டத்திற்கு நடுவுல இருந்து தானே தோன்றினார்கள்.

கேள்வி: தற்கால தமிழ்வளர்ச்சிக்கு வெகுசன ஊடகங்களின் பங்களிப்பு பற்றி?

பதில்: நாம்ப வளர்ந்தா தமிழ் வளரும். இது படைப்பிலக்கிய அறிவு. தமிழை வளர்க்க 'Tuition' வைக்க முடியாது. உண்மையான படைப்பாளி வரனும். டால்ஸ்டாய்,.. போன்றவர்கள் போல, ஆங்கிலம், பிரெஞ்சு மொழி திரைப்படங்கள் மோசமாக இல்லை. ஆங்கிலேயர்கள் வந்த போது German, French தான் மேலோங்கி இருந்த்து. ஆனாலும் ஆங்கிலம் தான் படித்தோம். ஏன் படிச்சோம்? ஆங்கிலேயன் நம்மை அடிமைபடுத்தினான் அதனால் ஆங்கிலம் படிச்சோம். கவிதைக்கும் உலகமாற்றத்துக்கும் இடையே நேரடியாக பேச முடியும். வள்ளுவனைப் படித்தா உலகத்தை மாற்ற போகிறோம், அப்படி இல்லை.

கேள்வி: சோதிடம் பற்றி உங்கள் கருத்து?

பதில்: பஞ்சாங்கம் என்பது அந்தக் காலத்துக் காலண்டர். வான சாஸ்திரப்படி அவற்றின் நிலையையும் சூரியன் சுற்றுவதையும் விபரமாகக் குறிப்பிடுவது. தோராயமாக ஒரு காலக்கட்டத்தில் சொன்னதை 1916-ஆம் ஆண்டு க்ரீன் வீச் நகரில் தொலைநோக்கு கண்ணாடிய நிறுவப்பட்ட பின்னர் சரியான அளவுகள் தெரிந்தன. அதையே தற்போது திருக்கணிதம் என்று பஞ்சாங்கமாக வெளியிடுகின்றனர். ஒவ்வொரு கிரகத்திற்கும் அவை சூரியனிடமிருந்து தள்ளியிருக்கும் தூரத்தையும் பூமியிலிருந்து மற்ற கிரகங்கள் எவ்வளவு எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதையும் சொல்ல நட்சத்திரம் என்று சூரிய மண்டலத்தையும் தாண்டி இருக்கிற கோள்களையும் அவற்றின் இருப்பிடத்தையும் பயன்படுத்துகிறார்கள். டிகிரி என்ற தூர அளவு தெரிந்துவிட்ட பின்னர் நட்சத்திரங்கள் தேவையில்லை. ஆடி மாதம் என்பது கடகம், தை மாதம் என்பது மகரம். இவற்றில் சூரியன் வரும்போது காலநிலை மாறுபடுகிறது. இந்த விஞ்ஞான உண்மை தமிழில் திருநாவுக்கரசர் காலத்திற்கு முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. கிழமை, மாதம், தேதி இவை எல்லாம் நாமாக ஏற்படுத்தி கொண்டவைதாம். ரூபாய், அணா (ரூபாய் நயா பைசாவாக மாறியது போல)

கேள்வி: உங்கள் படைப்பில் வாழ்க்கைச் சூழல் பற்றி கூறுங்கள்?

பதில்: சூழலை யாரும் உண்டுபண்ண முடியாது. ஒரு குழந்தை என்னைப் பார்த்து சிரித்த்தையும் எழுதலாம், சிரிக்காத்தையும் எழுதலாம். என்னை ஒன்று பாதித்தால் அதை நான் எழுதலாம். இல்லை என்ற ஒன்றால் பாதிக்கலாம். தென்னாட்டுல பெரிய சித்தாந்தம் இது தான். ‘இல்லை இல்லை என்பதால் அது உண்டு உண்டு என்பதாகும்.’

உலகத்தில் முக்கியமான சங்கதி அது. நீங்களும். அந்த பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதால் அந்த பாதிப்பு என்னான்னு உங்களுக்குத் தெரியுது.

கேள்வி: உங்கள் கதைகளில் வரும் முத்துக்கறுப்பன் பற்றி?

பதில்: தென்பகுதியில் முத்துக்கறுப்பன் என்ற பெயர் அதிகமாக இருக்கும். எல்லாரும் அப்பெயரை வைத்திருப்பார்கள். முத்துக்கறுப்பன்னு நான் பெயர் வைத்திருப்பதற்கு பிரத்தேக காரணம் இல்லை.

முத்துக்கறுப்பன் = முத்து என்பது வெள்ளையையும் கறுப்பு என்பது கோபத்தையும் குறிக்கும். தென்னாட்டு சித்தாந்தத்தின்படி இருட்டு ஒன்று இருக்கிறது அதை ஒளி அல்லது சிவம் சூழுகிறது என்று பொருள்படும். தென்படுதல் என்பதை தென்நாடு என்று பெரியவர்கள் கூறுவர்.

தென்நாடு என்பது பாண்டிய நாடுனு சொல்வாங்க. தென்நாட்டு சித்தாந்தம்னு ஒன்னு சங்க காலத்திலேயே நம்ப கிட்டயிருந்தது. அது பக்தியியக்கக் காலத்துல சைவ சமயமாயிடிச்சு. சமயத்தை சைவ சித்தாந்தம்னு சொல்லக்கூடாது.

கேள்வி: நீங்கள் கவிதை எழுதவில்லையா? கவிதை என்றால் என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்? கவிதையைப் பற்றி உங்கள் கருத்து?

பதில்: ‘கத்திரிக்காய் எங்களுக்கு கைலாயம் உங்களுக்கு – போய் சேர்ந்தீங்களா?’

இது ஒப்பாரி. அழுதுகிட்டே பாடுவாள்.

நெல்லு, கோதுமை, வெண்டைக்காய்னு சொல்லாம ஏன் கத்திரிக்காய்னு சொன்னா? கத்திரி, வயல் உண்டு. கத்திரி Vegetable–க்கு  எடுத்துக்காட்டு. இந்த கத்திரிக்காயை எங்களுக்குக் கொடுத்துட்டு நீங்க கைலாயம் போயிட்டியேனு சொல்றா. அவள் எந்த இலக்கணமும் படிக்கல. அவ என்ன சொன்னான்னு அவளுக்கே தெரியாது. அதுபோல நகுலனும் நான் எழுதி முடித்த பின்பு தான் அது என்ன்னு எனக்கே தெரியும்னு சொல்லியிருக்கார்.

இந்த கருத்தை பலரும் சொல்லியிருக்காங்க. கவிஞன் ஒன்றும் அறிவாளி இல்லை. கம்பனின் கவிதைகளைப் படிக்கிறோம். அவனை அறிவாளினா சொல்கிறோம். மெய்க்கண்டார், சிவஞானமுனிவர், இவர்களுக்கெல்லாம் தெரியாத்தையா சொல்லிட்டான்? ஆனா மெய்க்கண்டார் கவிஞர் அல்ல. தத்துவ்வாதி, ராமனும் சீதையும் காட்டுக்குப் போறாங்க அந்த வரிகள் கம்பனில் இப்படி வரும்.

‘வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய

பொய்யோவெனும் இடையாளோடும் இளையானோடும் போனான்

மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ

ஐயோ இவன் அழகு என்பதோர் அழியா அழகுடையான்’

இதில் ஏராளமான உவமானங்கள் இருக்கின்றன. இராமனும் சீதையும் இளையவனும் காட்டுக்குப் போறாங்க. இது வாசகனுக்கு முன்பே தெரியும். அதுவும் கம்பனுக்கு முன்னாடியே தெரியும். ஏன் வால்மீகிக்கு முன்னாடியே தெரியும். அவனுடைய கறுப்பு நிறத்தைப் பார்த்து சூரிய ஒளியே மங்கி போனது.

இந்த வரிகள் கிராமத்துல ஒரு கிழவி ஐயோ இந்த பிள்ளை பாவம்னு சொல்றா மாதிரி இல்லையா?

பாரதியார், அரசியல்வாதி, காரல்மார்க்ஸ் போன்ற சமூகவாதிகள் இவங்க எல்லாம் சொல்ல முடியாத அந்த வார்த்தை ஐயோ இந்த பிள்ளை வாசலில் வந்து படுத்துகிடக்குதுனு சொல்றா மாதிரி தானே கம்பனும் சொல்றான். ஐயோ இவன் அழகு இங்கு ஐயோ அர்த்தமில்லை. ஆனால் அது தான் அர்த்தம் கொடுக்கிறது.

மை, மரகதம் இது எல்லாத்தையும் கூறுகிறான். இருக்கிறது என்பதை எப்படி காட்டுவது? இந்தத் தத்துவத்திற்குக் காலம் கிடையாது. ஒரு குறிஞ்சி நிலத்தில் பூக்கற பூவை பார்த்து அவன் என்ன சந்தோஷத்தை அடைகிறானோ அந்த சந்தோஷத்தைத் தானே நாம்பளும் இப்ப அடைகிறோம். இது இரண்டிற்கும் என்ன வேறுபாடு? ஒன்றுமில்லை. ஷேக்ஸ்பியரின் ஆனந்தத்திற்கும் நம் ஆனந்தத்திற்கும் என்ன வேறுபாடு? ஒன்றுமில்லை.

‘மை’-னு சொல்றதால கவிதைனு சொல்றீங்களா? இல்ல ஐயோ-னு சொல்றதால கவிதைனு சொல்றீங்களா?

கேள்வி: இலக்கியம் என்றால் என்ன?

பதில்: இலக்கியத்தில் அந்த காலம் முதல் இன்று வரை ஏதோ ஒரு உண்மை இருக்கிறது. நம் மூப்பு வரும் நாமும் இறப்போம். பின்பு நம் பேரபிள்ளைகள், இது போன்ற நீண்ட ஒரு சங்கிலி தொடர்ந்து வரும். இதற்கு ஆரம்பமும் தெரியாது முடிவு இல்லை. இதை தான் தத்துவவாதிகளும் கூறிகொண்டிருக்கின்றனர். வாழ்க்கைனா என்ன? சாக்ரடீஸ் முதல் புதுமைப்பித்தன் வரை. அணிலாடு முன்றிலார் என்கிற கவிஞர் தலைவனைப் பிரிந்த தலைவி கூறுவதாக வந்துள்ள கவிதை காலங்காலமாக கேட்கப்பட்டு வரும் தத்துவம் பற்றியது. என்னுடைய முன்னோர்கள் இருந்தார்கள் போய்விட்டனர் நாம் இருக்கிறோம், போகப் போகிறோம், நமது பேர பிள்ளைகள் இப்படி சென்று கொண்டே இருக்கும் இந்த சங்கிலியின் முடிவு என்ன? என்ற கேள்விக்கு நேற்று இந்த ஊர் கூட்டத்தோடு இருந்தது. திருவிழா கூட்டம் வீட்டிலே கூட்டம். வீட்டின் முற்றத்திலே கூட்டம் இன்று தெருவே காலி, வீட்டில் யாரும் இல்லை முற்றமும் காலி, முற்றத்திலே ஓர் அணில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்வதிலிருந்து அந்த கவிஞனின் பாதிப்பு நமக்கு புரிகிறது. இப்போது இதை பார் என்று அவனுடைய காலத்தில் எந்த விஷயத்தைச் சொன்னால் இம்மாதிரிப்பட்ட நிரந்தர புதிருக்கு விளக்கமாக இருக்குமோ அதற்காகத் தலைவனைப் பிரிந்த தலைவி சொல்வதாக.

தனக்குத் தெரிந்ததை Expose பண்ண உங்களுக்குத் தெரிந்த ஒன்றினால் அவன் காரணம் சொல்கிறான். அதுதானே விதி, இப்பவும் அது தானே நம்ம கதி, அப்பவும் அது தான் நம்ம கதி, இதற்கு முடிவே கிடையாது. காரணமும் தெரியாது.

கேள்வி: உங்களுடைய உள்ளக் கருத்துக்களைக் கதையா விளக்க முடிந்ததே தவிர கவிதையா விளக்க முடியலை அப்படியா?

பதில்: அப்படி இல்ல அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டதால் என்னால் கவிதையா விளக்க முடியல. நகுலன் வழி இரண்டு வழியா இருக்கு. அணிலாடு முன்றிலார் வழி கவிதையா இருக்கு. வசனமா எழுத வேண்டிய விஷயங்களை கூட அந்தக் காலத்துல நாம் செய்யுளா எழுதி வைச்சிருக்கிறோம். கீழ்க்கண்ட ஒன்றையே காளமேகத்தின் கவிதையாக மதிக்கமுடியும். மற்ற அறிவுக்களஞ்சியம் தான். கவிதை அல்ல.

‘கண்ணபுரம் மாலே கடவுளினும் நீ அதிகம்

நின்னிலும் யான் அதிகம் – முன்னம்

உன் பிறப்பு பத்தாம் உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை

என் பிறப்பு எண்ணித் தொலையாதே’

ஆதங்கம் இதில் வெளிபடுகிறது. புத்தர் தான் அன்பு பற்றி முதன் முதலில் கூறியவர். புத்தர் சொன்னது கவிதை இல்லை.

‘திறந்து வை காற்று வரும்’

‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ என்று வள்ளுவன் அழகா அன்பைப் பற்றி கூறியுள்ளான்.

புத்தர் கூறியவை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் சீடர் சொல்லி தான் நமக்குத் தெரியும். அசுவபோஷர், சாக்ரடீஸ் போன்றவர்களும் கூறியுள்ளனர்.

‘மனதுக்கண் மாசிலான்’ என்று சொல்லக்கூடிய விஷயங்களைத் தங்களின் சூழலுக்கேற்ப சொல்லிக்கொண்டே இருந்தனர். புத்தர் சொன்னதுக்கு முன்னாடி அன்பு இல்லைனு சொல்ல முடியாது. காட்டுமிராண்டிக்கும் அன்பு உண்டு, மிருகங்களுக்கும் அன்பு உண்டு. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று அன்பை பற்றி விளக்கிய பிறகு தான் தெரியும்.

சங்க காலத்திலும் மலேரியா இருந்தது. கொசுவால் தான் அது ஏற்படுகிறது என்று ஒரு விஞ்ஞானி சொல்லிதானே நமக்குத் தெரியும். அது வருது கதவை சாத்தாதேனு புத்தர் சொன்னார். தட்டுங்கள் திறக்கப்படும்னு ஏசு சொன்னார். வள்ளுவன் அதற்கு தாழ்பாள் கிடையாது அதை ஏன் முடறே அப்படின்னு கேப்பாரு.

ஜெ. கிருஷ்ணமூர்த்தி அது வரலாம் வராமலிருக்கலாம் ஆனால் நம்மால் முடிந்தது கதவை மூடாமல் வைத்திருப்பது தான். வரக்கூடிய ஒன்றை தான் அந்த காலத்திலே அதுவாக வரும்னு சொன்னது. சங்கக்காலத்திலேயிருந்து ஒரு தத்துவம் நம்பகிட்ட இருந்திருக்கிறது. அந்த தத்துவத்தைத் பட்டும் படாமலும் சொன்னவன் தான் பூங்குன்றன்.

எல்லாம் எனது ஊர் நீங்க எல்லாம் என் சொந்தகாரங்க எல்லாம் எனது ஊர் நான் உங்க கிட்ட வரேன்னு சொல்றான். அது தான் அக்காலத்து சித்தாந்தம். திருமூலர் காலத்தில், கடவுள் யார் வயிற்றிலும் பிறந்து வரமாட்டார், தானே தோன்றுவார்னு சொல்லுவாங்க. சைவம், வைணவம் சமயத்தினால வந்த்து இல்லை. இது முன்னாடியே இருந்திருக்கிறது. இது கொஞ்சம் Debate-க்கு உரிய விஷயம். எல்லாரும் உடனே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை தான் தென்னாட்டு சித்தாந்தம்னு பிற்பாடு அறியப்பட்டது.

கேள்வி: சைவ சித்தாந்தத் தாக்கம் உங்கள் படைப்புகளில் உள்ளதா?

பதில்: ஒரு கிராமத்து கிழவி சாதாரணமா ஒரு பாடலை பாடுவதை போல, இந்த மண்ணிலே தோன்றியது இந்த தத்துவம். அவதாரம் பற்றி விஷ்ணுபுராணம், பாகவதம் போன்ற புராணங்களில் எழுதி வைச்சி சொல்ற மாதிரி கிடையாது. ஏற்கனவே தோன்றியது இந்த தத்துவம். உள்ளத்தைக் கடந்தவன் கடவுள் என்று நம் தமிழ் மொழியில் இருக்கிறது. ஆனால் மற்ற மொழிகளில் இது மாதிரி இல்லை. பகவான் God-னு இருக்கு God-னா அப்ப Goddess–னு ஒன்னு வேணும்ல. நாம்பளே அறிந்து கொள்ள முடியாது. திருமூலர் இதற்குச் சைவ சித்தாந்தம்னு சொன்னாரே தவிர அவரே உண்டு பண்ணியதில்லை.

‘அன்பே சிவம்னு’ சொன்னாரே தவிர ஏற்கனவே இது இருந்திருக்கிறது. எதுவும் திடீர்னு வர முடியாது.

அதற்கு உதாரணம் தான் பூங்குன்றன். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இந்த சைவ சித்தாந்தம் காணப்படுகிறது. சமயத்தை வைத்து பார்க்கும் போது தான் இவன் வைணவன், சைவன் என்று சொல்லலாம். சங்கர்ர் கொண்டு வந்த அத்வைதம் கூட இதிலிருந்து தோன்றியது எனலாம். இது ஒரு Development தான்.

கேள்வி: கவிதை உள்ளத்தின் வெளிப்பாடு, தாக்கம்னு சொன்னீங்க? அதை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்தினீங்க?

பதில்: ‘கடவுளுக்கு இடம் கேட்ட கவிஞன்’ இதை உதாரணமாகச் சொல்லலாம். சிலரை பற்றி எழுதியிருக்கிறேன், பலரைப் பற்றி சொல்லவில்லை.

எல்லோருக்கும் கவிதை மனப்பான்மையுண்டு. இரக்கத்தின் மூலம் காட்டுவதும் கவிதை தான். ஓவியமும் கவிதை தான். பாஷை தெரியாத்தால் அதற்கு இன்னொரு உருவத்தின் மூலம் வெளிப்படுத்துவதும் கவிதை தான். கற்கால மனிதன் எப்படி வெளிப்படுத்தினான். அவன் வெளிப்படுத்திய முறைகள் வேறு. கிரேக்க நாட்டறிஞர்கள் வெளிப்படுத்திய முறைகள் வேறு. ஹோமர், சொபாக்களிஸ் எல்லாம் சொல்லலாம்.

ஒரு கிராமத்து கிழவி, அவள் வீட்டு திண்ணையில் ஒருவன் படுத்திருக்கிறான். அதை பார்த்த கிழவி ‘ஐயோ அந்த பிள்ளைனு’ சொல்றா அதிலிருந்தே அவள் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள். இது தான் வெளிப்பாடு. இதை தான் ஒரு கவிஞன் வெளிப்படுத்துகிறான். ஒரு குழந்தை, பூ, மிருகம் போன்றவற்றைப் பார்த்தும் வெளிப்படுத்தலாம். இல்லைனா தனக்கு எதுவும் தெரியலைனு வெளிப்படுத்தலாம்.

உலகத்துல சொல்லக்கூடாதுனு எதுவும் இல்லை. மனிதன் அறிந்ததை எல்லாம் சொல்லலாம். படைப்பு தன்மையிருந்தா post modernism–மோ Magical Realism–மோ, Modernism-மோ எதையும் ஏற்று கொள்ள தான் வேண்டும். படைப்பு இருக்குதானு தான் விமர்சனம் பண்ணனுமே தவிர இது post modernism இது வேணும், இது வேணாம்னு சொல்லக்கூடாது.

தமிழ்நாட்ல ஒரு விதவைப்பெண் இறுதி வரைக்கும் அந்த கோலத்தேடே வாழ்ந்து நல்லபடியாக இறந்தாள் என்றும், ஒரு விதவைப் பெண் தன்னை ஆதரித்த ஒருவனை திருமணம் செய்து நல்லா வாழ்ந்தாள் என்றும் படைப்பில் இருந்தால் அந்த தத்துவத்தை விமர்சனம் செய்யலாமே தவிர இது வேணும் அது வேணாம்னு சொல்லக்கூடாது. அவள் அப்படியும் சந்தோஷமாகயிருந்தாள் இப்படியும் சந்தோஷமாகயிருந்தாள். அதை தான் படைப்பாளி சொல்ல்லாமே தவிர வேற எதையும் சொல்ல முடியாது. அவன் அறிவாளி கிடையாதே. அதை ஒரு அரசியல்வாதியோ இல்லை இவனைப் போன்றவர்களோ தான் சொல்ல வேண்டும்.

இந்த வியாபாரம் செய், அந்த வியாபாரம் செய்யினு படைப்பாளன் சொல்ல, அவன் நிலக்கடலை விற்று பொருள் சேர்த்தான் அப்படி சொல்கிறானே தவிர அவன் அதை தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் அது தப்பு. இல்லை அந்த பொருளில் அவனை நாம் எடுத்துக் கொண்டால் அது தப்பு.

பொருளாதாரம் பற்றி அந்தந்த வல்லுநர்கள் தான் சொல்ல வேண்டும். இவன் சொல்ல முடியாது. படைப்பாளி என்ன பார்க்கிறானோ அதை தான் எழுதுகிறான், அவ்வளவு தான் பிரச்சார உத்தினு சொல்ல முடியாது. பிரச்சாரம்னு சொல்லும்போது ஜெயகாந்தன் நினைவிற்கு வருகிறார். பிரச்சாரம் நமக்கு ஒரு ஞானத்தைத் தோற்றுவித்தால் அதையும் நாம் படைப்பாக ஏற்றுக் கொள்ளலாம். பிரச்சாரம் பிரச்சாரத்திற்கு இருக்க்க்கூடாது. அரசாங்கம் தமிழ்நாட்ல ஒரு பிரச்சாரம் செய்கிறது. அதே பிரச்சாரம் ரஷ்யாவிற்குப் பொருந்துமா? அங்க அதிகம் குழந்தைகள் பெற்றுக் கொள்ள சொல்கிறார்கள். பிரச்சாரத்தின் வழியாக ஒரு ஞானத்தை அடைந்தால் அது பிரச்சாரம் இல்லை. ஞானம் என்பது ஒன்றுமில்லை. இருளை அகற்றுவது.

அதுவும் படைப்பு தான் வை. மு. கோதைநாயகியம்மாளிடம் பிரச்சாரக் கதையைப் பார்க்க முடியாது. ஜெய்காந்தனிடம் பார்க்கலாம். கதைக்காக எழுதப்பட்டது. வடுவூர் துரைசாமி போன்றவர்கள் எழுதுவது. துப்பறிவும் நாவலை எதுக்கு எழுதனும்? துப்பறியும் நிபுணர்களிடம் நல்ல கதைகள் இருக்கிறதே. அதுவும் action–னோட விஷயத்தைச் சொல்வது படைப்பாகாது.

அணு விஞ்ஞானி ஒரு பெரிய மேதை. அதை எப்படி செய்வதுனு சொன்னா அதை ஒரு படைப்பா நீங்க எடுத்துப்பீங்களா? படைப்பு அவனுக்குத் தோன்றிய ஒன்று. அவனுக்கே தெரியாது. நகுலன் அதனால் தான் சொன்னார். நான் எழுதி முடித்த பின்பே எனக்கு என்ன எழுதினேன்னு தெரியும்.

வள்ளுவன் மனத்துக்கண் மாசிலனாதல்னு சொல்றான். சாக்ரடீஸ் எனக்கு எதுவுமே தெரியாது என்பது தான் எனக்குத் தெரியும் என்கிறார். எதுவுமே தெரியாத ஒரு விஷயம் இருப்பது தான் இயல்பு. அப்ப ஒரு வெறுமை இருக்கும். அது தானாக வரும் அப்படி வரக்கூடிய ஒன்று எல்லோருக்குமுண்டு. படைப்பு தன்மை எல்லோருக்குமிருக்கும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு நாயைப் பார்த்த ஒரு படைப்பாளனுக்கு ஒன்று தோன்றும். ஒரு Zoologist–க்கு ஒன்று தோன்றும். அவர் சொல்லும் விதம் வேறு. ஒரு குழந்தை சொல்லும் வதிம் வேறு. ஆரம்பம்னு ஒன்னு கிடையாது. சிந்தனை என்கிற ஒரு தொடர் சங்கிலி இருக்கிறதே அது எல்லோருடைய சிந்தனையிலும் போய் சேரும். எல்லாருடைய சிந்தனையும் சேர்ந்து ஒரு புதிய சிந்தனை தோன்றும்.

மனதுக்கண் மாசிலனாதல்னு ஒரு கிழவன் சொன்னாம்னா அதற்கு 1000 காரணமிருக்கும். அதுபோல் சாக்ரடீஸ் சொன்னதற்கும் 1000 காரணமிருக்கும்.

இது எல்லாம் ஒரு கூட்டு முயற்சி. ‘பெரியாரை வியத்தலும் இலமே சிறியாரை இகழ்தல் அதனினும் இலமே’. முட்டாளும் கிடையாது. அறிவாளியும் கிடையாது. இதை கவிதை சிறுகதைனு அதுல பொருத்திப் பார்த்தா ஒரு விடை கிடைக்கும்.

கவிதையைப் பற்றி தெரிந்துக்கொண்டால் சிறுகதை, நாடகம், நாவல் இது எல்லாம் என்னான்னு சொல்லலாம். எல்லாத்துக்கும் அடிப்படை கவிதை. எல்லா படைப்பாளனும் இந்த கவிதையை பற்றி அறிந்துக்கொண்டால் மற்றவை எல்லாம் தெரியும். நான் கவிதையை எழுதாவிட்டாலும் இது என் கருத்து.

கேள்வி: நுட்பகதைகள் பற்றி?

பதில்: புனித ஜெனே என்று அழைக்கப்பட்டவன் சிறை தண்டனைப் பெற்று வெளி வருவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லாத போதும் கூட கவிதை எழுதினான். எழுதியதை சிறைக்குள்ளேயே மறைத்து வைத்தான் யாரும் பார்க்க வேண்டாம் என்று. அப்படியானால் அவன் யாருக்காக எழுதினான்.

கேள்வி: உங்க படைப்புக்குக் காரணமாக ஆங்கில எழுத்தாளர்களின் தாக்கம் இருக்கிறதா?

பதில்: சுற்று வட்டார Library–ல படித்தேன். பாரதி, பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் இவங்களைப் பற்றி படித்தேன், கவிமணி தேசிக விநாயகம் எழுதிய குழந்தையை பற்றிய கவிதை எனக்குப் பிடித்த்து. நாமக்கல் எழுதிய மலைக்கள்ளன் எனது வாழ்க்கை போன்ற உரைநடை பிடிக்கும். அவர் தமிழைப் பற்றி உயர்த்தி கூறியிருந்தாலும் எனக்குப் பிடிக்கல. ஆனால் பாரதிதாசன் கவிதை

‘அன்பிலா நெஞ்சில்

தமிழைப் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா’

-   இந்த வரி என்ன வாட்டியது

ஓர் இரவு என்ற படத்தில் தண்டபாணி இதை இசையமைத்து தந்த பாடல். தமிழ் அபிமானத்தில் பாடியது என்று நினைத்தேன். பிறகு வேறு ஒன்று இதற்கு உண்டு என்று நினைத்தேன் மேலைநாட்டு கவிதை பற்றி அதிகமாகப் படித்தேன்.

அப்பொழுதும் எனக்குப் புலப்படவில்லை. வ.ரா. கட்டுரைகள் போன்றவற்றை படித்தேன். அப்பொழுதும் எனக்குப் புலப்படவில்லை. ஏன்னா அவங்க அளவுக்கு வெளிப்படுத்தியிருந்தாங்க. டிக்கன்ஸ் போன்றவர்களின் புத்தகங்களைப் படித்தேன்.

சென்னை வந்த பிறகு கன்னிமரா நூலகங்களைப் பயன்படுத்தினேன். தமிழைப் படி என்று சொன்னது தான் பெற்ற குழந்தையைப் பார்த்து ‘என்னை பெத்தவரே’ என்று ஒரு தாய் கூறுகிறாள். ஒரு தாய்க்கு குழந்தை என்ன கொடுத்ததோ அது தான் அவர் கூற காரணம். அதுபோல் தமிழ் அவனுக்கு என்ன கொடுத்ததோ அது தான் அவனுக்கு இன்பம். இது எனக்குப் புரிந்த போது ஏதோ 10 கோடி ரூபாய் கிடைத்தது போல் இருந்தது. இதை கட்டுரையாக எழுதினேன்.

நண்பர் விமர்சகர் எஸ். சண்முகம் தமிழவனுடைய நண்பர் – சார் தமிழவன் இந்த கட்டுரையை எழுதிட்டார். சொல்லிட்டு அவர் எழுதன கட்டுரையை எனக்கு அனுப்பினார். அன்பிலா நெஞ்சத்தைப் பாரதிதாசன் வெறுக்கிறான். அந்த அன்பு வேண்டும்னா தமிழைப் பாடுனு சொல்றான். தமிழுக்காக எவ்வளவுவோ எழுதியிருக்கிறான்.

இந்த வரியினால ஒரு புது உண்மை புரிஞ்சது. கவிதைனா என்னான்னு புரிஞ்சிக்க உதவி புரிந்தது. இப்படி பல சங்கதிகள் நிகழ்ந்தது.

ஆங்கில படங்கள் நிறைய பார்த்தேன். அதன் மூலம் ஆங்கில புத்தகங்களைப் படித்தேன். ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்,’ ‘அன்றிரவு’ போன்ற தமிழ் கதைகள் படிக்கும்போது ஆங்கில புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும் அதிக சந்தோஷத்தை கொடுத்தது. சிறுகதைக்கும் கவிதைக்கும் தொடர்பு என்ன?

‘அன்றிரவு’ கதையைப் படித்தால் அது சிறுகதையா கவிதையா என்ற கேள்வி வரும்.

ஆங்கிலத்தில் காப்கா போன்றவர்களின் சிறுகதையைச் சொல்லலாம்.

கேள்வி: தமிழ் இலக்கியச் சூழல் பற்றிய கருத்து என்ன?

பதில்: மற்ற மொழிகளில் Magical realism, post modernism போன்றவை காணப்படுகின்றன.

பூர்வகுடி மக்களிடையே இருக்கக்கூடிய Magical realism–னு சொன்ன அது தமிழ் தான். இவை கிரேக்கம், லத்தீன், ஈப்ரூ, வடமொழி போன்றவற்றில் இல்லை. சாரு நிவேதிகா, எம்.ஜி. சுரேஷ் போன்றவர்கள் Post Modernism  பற்றி தமிழில் தானே எழுதுகிறார்கள். பூர்வகுடி மக்களிடையே உள்ள மொழியை அலசிப் பார்த்தோம்னா அது அவங்கக்கிட்ட தானே இருக்கிறது. Magical realism மலையாளம் கன்னடம், பெங்காளி போன்ற மொழிகளில் அதிகமாக இருக்கிறது.

கேள்வி: கவிதையாளர்கள், விமர்சகர்கள் பற்றி?

பதில்: கவிதை அம்சம் உள்ள எல்லாமே கவிதை தான். புதுக்கவிதை, வெண்பா மட்டும் கவிதை இல்லை. ஜென் கதையைக் கவிதை மாதிரி Translation பன்னி போட்ட அது எப்படி கவிதைனு சொல்ல முடியும். அறிவு சார்ந்த விஷயம் கவிதைனு சொல்லலாமா? கவிஞன் ஒன்னும் புத்திசாலி இல்லை.

விமர்சகர்கள்னு சொன்னா புதுமைப்பித்தன் ரா.ஸ்ரீ. தேசிகன் போன்றவர்கள் விமர்சனம் பன்னாங்க. க.நா.சு, செல்லப்பா போன்றவர்கள் கோட்பாடுகள் வைத்து எழுதுகின்றனர். ஆனா தமிழவனுடையது புதிதாக இருக்கிறது.

கேள்வி: ஆங்கில படைப்புகளில் பாதித்தது?

பதில்: அந்த காலத்துல பர்ல்பர்க் என்னைப் பாதித்தது. டென்னிசி வில்லியம்ஸ் நாடகங்கள் என்னை பாதித்தது. இப்படி நிறைய சொல்லலாம்.

கேள்வி: தமிழ் ஆங்கில எழுத்தாளர்களின் தாக்கம் உங்கள் படைப்புகளில் எவ்விதம் உள்ளது?

பதில்: எல்லோருக்கும் ஒன்று வேணும், வேணாம்னு இருக்கும் ஷேக்ஸ்பியர் கதைகளில் வருகின்ற பெண்கள் ஏதாவது ஒரு குறைபாடு உள்ளவர்களாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர்.

லேடி மேக்பத், ஜுலியட் அதை எல்லாம் சொல்ல்லாம். ஆனா அதனால அவங்களைக் குத்தம் சொல்ல முடியாது. ஷேக்ஸ்பியரால் டால்ஸ்டாயும் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆன்டன் செகாவ் கதையில் ஒரு நாய் இருக்கிறது. அதை 2 கான்ஸ்டேபிள்கள் பார்க்கின்றனர். இது யாருடையதோ இப்படி அலைய விட்டு இருக்காங்கன்னு சொல்றாங்க. அது ஒரு பணக்கார வீட்டு நாய்னு தெரிஞ்சதும் இது இப்படி எல்லாம் அலையாதுனு சொல்றாங்க. இப்படி நான்கு பக்கத்துக்கு எழுதுறாரு செக்காவ்.

கேள்வி: மேலைநாட்டு நாவல் இலக்கியங்கள் பற்றி அதேபோல் தமிழ்நாட்டு நாவல் இலக்கியங்கள் பற்றி கூறுங்கள்?

பதில்: தாவ்ஸ்தாஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அன்னாகரீனா, க்ரைம் அன்ட் பனி மென்ட், இடியட், போரும் அமைதியும் போன்ற நாவல்களைக் கூறலாம். டிக்கன்ஸ் போன்றவர்கள் தொடர்கதையை எழுதினார்கள். எனினும் இலக்கிய அந்தஸ்து கெடவில்லை.

கல்கி, சாண்டில்யன் இவர்கள் எழுதியது இலக்கிய அந்தஸ்துனு சொல்ல முடியாது. அவங்க நாம்ப எதிர்பார்க்கறத தர்ராங்க. அதை இலக்கிய அந்தஸ்துனு சொல்ல முடியாது. கல்கி, தேவன் இவங்க எல்லாம் படிக்க்க் கூடிய ஆவலைத் தூண்டினார்கள். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ போன்றவை எல்லாம் படித்திருக்கிறேன். தேவனின் துப்பறியும் சாம்பு, சுதர்சனம் இது எல்லாமே ‘காப்பி’ தான். Jeevas என்ற கேரக்டர்தான் துப்பறியும் சாம்புன்னு சொல்லலாம்.

கேள்வி: சமகால நாவலாசிரியர்கள் பற்றிய கருத்துக்கள்?

பதில்: சண்முகசுந்தரம், க.நா.சு.சி.சு. செல்லப்பா இவர்களது படைப்புகளும் தற்போது சிறுபத்திரிகை எழுத்தாளர்களான கந்தசாமி, தமிழவன் ஆகியோரையும் சொல்லலாம். ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோர் நல்ல நாவல்கள் எழுதியிருந்தாலும் அவர்களை சிறுகதை ஆசிரியர்களாகவே கருதுகிறேன்.

கேள்வி: உங்க பத்திரிகை ‘முன்றிலில்’ க.நா.சுவை சிறப்பாசிரியராகப் போட்டதுக்குக் காரணம்?

பதில்: சி.சு. செல்லப்பா, க.நா.சு. அளவிற்கு உலக இலக்கியங்களை கற்றுக் கொள்ளவில்லை. க.நா.சு அளவிற்கு விமர்சகரும் அல்ல. செல்லப்பா நல்லா எழுதுவார். அதனால் கநா.சுவை சிறப்பாசிரியராக ஏற்றுக் கொண்டோம்.

கேள்வி: முன்றில் பத்திரிகை நடத்த காரணம்?

பதில்: வீட்டில தான் வைத்து நடத்தினோம். சிறுபத்திரிகை நடத்த ஞானகூத்தன், கந்தசாமி encourage பண்ணுனாங்க. புத்தகங்களைப் படித்துவிட்டு என்னைப் பற்றி எழுதுனாங்க. அது விமர்சன பத்திரிகையாக இருக்கனும்னு என் ஆசை. அதனால் தான் க.நா.சுவை போட்டேன்.

ஒரு அரேபியன் இலக்கியத்துல பாலைவனம், ஒட்டகம், பேரிச்சம்பழம் இதைப் பற்றி தான் எழுதுவான். அவனுக் குஅதுதான் சந்தோஷம். நமக்கு எப்படி நீர் வீழ்ச்சியைப் பார்த்தா சந்தோஷம் வருதோ அப்படித்தான். அரசியல் வாதியின் இலக்கியத்தில் அரசியல் வரத்தான் செய்யும். இது தவறில்லை. ஆனால் அதை உள்ளடக்கமாக வைச்சாதான் தவறு. நோக்கத்தை வைத்து எழுதினால் அதை கட்டுரையா எழுதலாமே.

புத்திசாலித்தனத்தால் கவிஞர் தோன்றல. நமக்கு தெரிந்தது கூட அவனுக் தெரியாது. ஒரு அருவ நிலையில் தோன்றுவது தான் கவிஞனின் படைப்புகள். அருவம்னா ஒன்றுமில்லைன்னு அர்த்தம். ஆனா ஏதோ ஒன்று இருக்கு. இப்படி என்னான்னு தெரியாத காரணத்தால் தான் இலக்கியம் இருக்கிறது. அதை தெரிஞ்சிகிட்ட அது போயிடும்.

கவிதை, கதை, கடவுள் மூன்றும் என்னான்னு தெரியாத காரணத்தால்தான் இருக்குது. இது என்னான்னு தெரிஞ்சா மூன்றும் Close  ஆகிடும்.

கேள்வி: தற்காலத் தலித், பெண்ணிலக்கியம் பற்றி?

பதில்: முன்னாடி ஒரு பெண்தான் குடும்ப தலைவியா இருந்தாள். Agricultural Civilization–ல தான் ஆணுக்கு மதிப்பு கிடைத்தது. பெண்ணுக்கு தாலி எப்படி வந்த்து? பெண்ணைக் கவர்ந்து செல்கிறான். அதுதான் அவளுக்குத் தாலியாக மாறுகிறது. அப்ப அவன் சத்தியம் வாங்குகிறான். ‘என்னை கொல்லாமல் இருப்பாயாக’ என்று. ஏன்னா அவளைக் கவர்ந்து வந்ததால் அவனை அவள் கொல்லலாம். அதனால் இவ்வாறு சத்தியம் வாங்குகிறான்.

வடமொழியில் ‘வைவஸ்துவே’-னு ஒரு மந்திரம் இருக்கு. அதற்கு அர்த்தம் இவள் என்னைக் கொல்லாமல் இருப்பாளாக என்பது. இதைப் புரோகிதன் கூறுகிறான்.

கேள்வி: அந்தக்கால அரசியல் நிலை பற்றியும் பத்திரிகை நிலை பற்றியும் சொல்லுங்க. அதோடு இன்றைய நிலை பற்றியும் சொல்லுங்க?

பதில்: இலக்கியவாதி எப்படி பார்க்கிறானோ அதன்படி அவன் எழுத்துக்கள் வருகிறது. உலகத்தில் இதுதான் எழுதனும்னு இல்ல. எல்லாத்தையும் பற்றி எழுதலாம். அது எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மொழியில் வெளிப்படும். இலக்கியம் மூலம் அவன் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறானோ அதுதான் இலக்கியம் அப்படி இல்லைனா அது இலக்கியம் இல்லை.

கேள்வி: இலக்கியச் சூழல் பற்றி?

பதில்: செழிப்பா வளரல. கன்னடம், மலையாளம் அளவிற்கு இல்லை. தமிழ் இலக்கியத்துல வைதீகம் குறுக்கிடுகிறது. ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக ஒரு குறிப்பிட்ட சாதியை அடிமைப்படுத்துவது. வடஇந்தியா, தென்இந்தியா, வைணவம், சைவம் எல்லாரிடமும் வைதீகம் இருக்கிறது. வள்ளலார் வைதீகத்தை எதிர்த்தார். ஜெ.கிருஷ்ணமூர்த்தி வைதீகத்தை எதிர்த்தார். அது தமிழ்ல குறைவு. இந்த குறையை உண்மையான தமிழ் இலக்கியம் வளராததற்குக் காரணமாகச் சொல்லலாம்.

க.நா.சு. பிராமணர், வைதுகத்தை எதிர்த்தார் பலர் இதை Accept பண்ணல. அதனால தமிழ்ல மந்தநிலை காணப்படுகிறது.

கேள்வி: ‘முன்றில்’ பதிப்புகள் பற்றி?

பதில்: பல நண்பர்களால் பதிப்பகம் வந்தது. நஷ்டம் எதுவும் ஏற்படல. க.நா.சு., நகுலன், ப.வெங்கடேசன் போன்றோரின் நூல்கள் வெளிவந்தன.

M.S. ராமசாமி, லதா ராமகிருஷ்ணன், கோபி கிருஷ்ணன் இவங்களாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எனது கதைகள் Indian Literature, நமஸ்தே பத்திரிகையிலும் வந்தன. ராம்ஜி சுவாமிநாதன் 'Run'னு சிந்திக்கதையை Translation செய்து இருக்காரு.

கேள்வி: ஐம்பதுகளில் இருந்த இலக்கியச் சூழல் பற்றியும் இன்றைய இலக்கிய சூழல் பற்றியும் கூறுங்கள்?

பதில்: சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் பெயர்கள் போயிடும். ‘திரீ மஸ்கட்டீர்’ அலெக்சாண்டர் டுமாஸ் எழுதியது. ஆனால் இதுவும் பொன்னியின் செல்வன் கதையும் ஒன்னா இருக்கும். கல்கியாவது பரவாயில்லை. தேவன் துப்பறியும் சாம்புவாவே மாத்திட்டார்.

ஷெர்லாக், ஹோம்ஸ் லண்டனில் துப்பறியும் பாத்திரம்; ஆரணி குப்புசாமி கதையில் திருவல்லிக்கேணியில் துப்பறியும் நபராக மாறி போறார்.

Sir what would you like to take for breakfast?-னு ஒருத்தன் கேட்கறத அப்படியே ‘தாங்கள் காலை சிற்றுண்டியாக என்ன எடுத்துக்கொள்ள போகிறீர்கள்’ என்று தமிழ்ல மாத்திட்டாங்க.

ஆற்காடு மாவட்டத்தில் இப்படியா கேட்டான்? துளசிங்க பிரபு காலையில் ஆற்காட்டிலும் கல்லறையைப் பார்க்க வைப்பான். அப்ப ஒரு கேள்வி எழும். இப்படிப்பட்ட காலத்துல தானே புதுமைப்பித்தன் தோன்றினான். காப்காவைப்பற்றி புதுமைப்பித்தன் சொல்லித்தான் க.நா.சு.படித்தார். ஆனா அவர் காப்காவைக் கொண்டு வரவில்லையே.

நாய், தாமரை, பூ-னு இப்படி எவ்வளவோ எழுதலாம். ஆனா பிரெஞ்சு எழுத்தாளன் என்ன சொன்னானோ அதையே அப்படியே அவன் தமிழ்ல சொல்றான். இதிலிருந்துதான் புதுமைப்பித்தன் மாறுபட்டு நிற்கிறான்.

கேள்வி: உங்கள் படைப்புகளில் சிறந்தது?

பதில்: இதைவிட இன்னொன்னு நல்லாயிருக்குனு இல்லை. இலக்கியத்தைப் பற்றி தெரியாத காரணத்தால் இலக்கியம் எழுதுகிறோம்.

கேள்வி: பெண்ணிய உடல்மொழி பற்றிய கருத்து.

பதில்: லதா ராமகிருஷ்ணன் ‘ரிஷி’ என்ற பெயரில் கவிதை, அனாமிகா என்ற பெயரில் கதை எழுதியவர் வலியர், சிறியர்னு இரண்டு பிரிவாகப் பிரிக்கிறார். Agricultural Civilization –ல பெண்ணைவிட ஆண் பெரியவன் என்று மாறி, பெண்ணை அடிமைப்படுத்திட்டாங்க.

நளாயினி கதைகூட Liberation–ல வந்த்து தான். பெண்ணியம் குறிப்பிட்ட காலத்தில வேற விதமாய் இருந்திருக்கிறது.

பெண் பெண்ணாக இருக்கனும்னு நினைக்கறதுல என்ன தப்பு இருக்கு? நளாயினி கதையில கூட மறைமுக தொனியில சொல்லப்பட்டிருக்கிறது. இருநூறு வருஷத்துக்கு முன்னாடி பெண்ணியம் பற்றி சொல்லவில்லை. ஆனா Agricultural Civilization –ல உடல்கூறு நிலை பற்றி அறிந்த பின்பு தான் ஆண் பெரியவன்னு நினைக்கிறான். புராண கதையில மறைமுக தொனியில் சொல்லியிருக்காங்க.

வை.மு.கோதைநாயகிம்மாள் எழுபது நாவல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். ‘ஜெகன் மோகினி’ என்ற இதழ் நடத்தியுள்ளார். அவருடைய கணவன் துணை புரிந்தார்.

படித்தவர்கள் குறைவு. எல்லாருக்கும் தெரிந்த விஷயத்தை எழுதுறாங்க எழுதுறது எல்லாம் இலக்கியமாகாது.

கேள்வி: தலித் இலக்கியத்தைப் பற்றி?

பதில்: தலித்துக்கள் தான் எழுதுனும்னு சொல்றது அவ்வளவு நல்லதா எனக்கு படல.

கேள்வி: நீங்கள் கதை எழுத ஆரம்பித்த சூழல் பற்றி?

பதில்: கிராமத்துல பிறந்தேன். மலை, ஆறு போன்றவற்றோடு பழகினேன். நல்ல அனுபவம் கொடுத்தது. அதுக்கு அப்புறம் பட்டணத்துக்கு வந்தேன். அப்போதும் அந்த சூழல் எனக்கு மாறல. கோபம், அன்பு, சந்தோஷம் இதை வெளிப்படுத்த என் எழுத்துக்கள் எனக்கிருந்தது.

என்னுடைய 18-வது வயதில பிரசண்ட விகடம் இதழில் எழுதினேன். சென்னைக்கு வந்து ஏழு எட்டுக்கதைகள் அப்பத்திரிகையில் வந்தன.

நகுலனிடம் நான் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்னதும் அதற்கு பெயர் ‘முன்றில்’ என்று வைக்க சொன்னார். அதற்கு முன்னாடி எத்தனையோ பெயர்கள் யோசித்துப் பார்த்தோம். இது நல்லா இருந்தது. இதுவரை கவிதை எழுதினது இல்லை. கவிதை எழுத உத்தேசமும் இல்லை. ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற புத்தகம், சிறுகதை வாசகர்களிடையே பெரிய மதிப்பைப் பெற்றது.

கணையாழி பத்திரிகையில அசோகமித்ரன், கந்தசாமி, ஆத்மாநாம், ஞானக்கூத்தன் போன்றவர்கள் எழுதினார்கள். இவர்களுக்கு என்னைத் தெரியாது. அப்புறம் இந்த ‘பொருளின் பொருள் கவிதை’ புத்தகத்திற்காக பேசினார்கள். பிற்காலத்துல கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ‘வீடுபேறு’ பாடமாக வைச்சாங்க. அதேபோல் கர்நாடக பல்கலைக்கழகத்திலும் ‘பறளியாற்று மாந்தர்’ பாடமாயிற்று.

பல சிறுகதையாளர்கள், நாவலாசிரியர்கள், விமர்சகர்கள் முன்றில் பத்திரிகையில் எழுதியுள்ளனர். Seminar ஒன்று நடத்தினோம். அது மூன்று நாட்கள் நடந்தது. ‘மாநாட்டு மலர்னு’ ஒரு புத்தகமாகப் போட்டோம். ‘அமுதசுரபி’, ‘சுபமங்களா’, ‘புதிய பார்வை’ போன்ற பத்திரிகையில கதைகள் வந்துள்ளன.

கேள்வி: படைப்பில் உங்கள் சூழல் பற்றி?

பதில்: சூழலை உண்டு பண்ண முடியாது. ஒரு குழந்தை என்னைப் பார்த்து சிரிக்குது அதுதான் சூழல். அது என்னைப் பாதிச்சாலும் ஏன்று கேட்க முடியாது. பாதிக்காட்டியும் ஏன்னு கேட்கமுடியாது.

கேள்வி: உங்கள் குடும்ப பின்னணி பற்றி கூறுங்கள்?

பதில்: நாகர்கோவில் பக்கத்துல ஒரு கிராம்ம் திருப்பதி சாரம்னு. அந்த ஊர்லதான் பிறந்தேன். நம்மாழ்வாரும் பிறந்த இடம் அதுதான்னு சொல்வாங்க. நான்கு ஐந்து மைல்கள் நடந்துதான் பள்ளிக்கூடம் போவோம். படிப்பு ஒன்னும் வரல. எனக்கு கணக்கு வராது. வாத்தியார் என்னைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். நீ இந்த பள்ளிக்கூடத்துக்கே வராதேனு.

Optional Tamil-ல சங்க இலக்கியம் படித்தேன். மீதியை Library–ல் படித்தேன். ஏதாவது பாஸ் பண்ணனும்னு நிறைய படித்தேன். நிறைய நூலகங்களையும் பயன்படுத்தினேன்.

சென்னை மாநகராட்சியில் Rippon Building வேலை கிடைத்தது. அங்கே தமிழ்ல வரக் கடிதங்களை English–ல Translation பண்ணேன். அப்புறம் 90-இல் ஓய்வு பெற்றேன்.

சிறுகதைகள் நாவல்கள், கட்டுரைகள், எழுதியுள்ளேன். மா. அரங்கநாதன் கதைகள், காடன்மலை போன்ற தொகுப்புகளும் பறளியாற்று மாந்தர், காளியூட்டு போன்ற நாவல்களும், ‘கடவுளுக்கு இடங்கேட்ட கவிஞன், மா. அரங்கநாதன் கட்டுரைகள், பொருளின் பொருள் கவிதை போன்று கட்டுரை நூல்களும் எழுதியுள்ளேன்.

நிறைய படிப்பேன். கவிதை பற்றி யோசிப்பேன். கேள்வி, எழும். ஜே. கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எழுத்துக்கள் சந்தேகத்தைத் தீர்த்தன. கவிதை அம்சம் தான் முக்கியம். அதுக்கப்புறம் தான் ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற புத்தகத்தை எழுதினேன். இரண்டு நாவல்களில் ஒரு நாவலுக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது. (பறளியாற்று மாந்தர்), ‘காடன் மலை’ என்ற சிறுகதைக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது கிடைத்தது.

தெய்வசிகாமணி நினைவுப்பரிசு ஞானக்கூத்து நூலுக்கு கிடைத்தது. சாரு நிவேதிதா, எஸ். கிருஷ்ணன், A.S. பன்னீர் செல்வம், M.G. சுரேஷ் இவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் கருத்து வேறுபட்டாலும் இவர்கள் புதிய பாணியைக் கொண்டு வந்தார்கள்.

A.S.S. சாமி, வேலைக்காரி என்ற படத்தை இயக்கியவர். சிலோன் பத்திரிகையில் கதை எழுதியிருந்தார். ‘இரவல் விசிறி மடிப்பு’ இது பாகவதர்கள் போடுற பட்டு துண்டு மாதிரி ஒன்னு. அதை மடிச்சி போடுவாங்க. ஏன் மடிக்கிறாங்கனா அது கிழிஞ்சியிருக்கும். அந்த கிழிஞ்சதை மறைக்கறதுக்காக; ஆனா அதுவே இரவல் வாங்கனதா இருக்கும். அதுபோலத் தான் இலக்கியங்கள் இருக்கிறது என்ற தலையில அடிக்கிற மாதரி சொல்லுவான். ஆனால் க.நா.சு. அப்படி சொல்லமாட்டார்.

கேள்வி: இலக்கியம் குறிப்பாக சிறுகதை பற்றிய பொதுவான கருத்து என்ன?

பதில்: ஒத்தையடி பாதையில, தனியாக நடந்து வந்து கொண்டிருக்கும் போது, சேர்ந்து கொண்டவரிடம் ‘ஐயா எனக்குப் பேய் என்றால் பயம் இல்லை’ என்று சொல்ல அதுவும் எனக்கும் பயமில்லை என்று கூறி மறைந்துவிட்டது. இது ஒரு வாக்கியத்தில் அமைந்த சிறுகதை. வந்தது பேய் இது உண்மையா? பொய்யான்னு கேட்கக்கூடாது. ஒரே Room இல் நடந்த கதை கூட இருக்கிறது. இப்ப சினிமாக்கூட அப்படி இருக்கும். டானிகேயி நடித்த English படம் ஒன்றை Hindi–ல காப்பி அடிச்சான். அதைத் தமிழ்லயும் காப்பி அடிச்சாங்க. இந்திப் படம் எடுத்தவன் என் படத்தைப் தமிழ்ல காப்பி அடிச்சிட்டாங்கனு ‘கேஸ்’ போட்டான். அப்பதான் இந்த உண்மை தெரிஞ்சுது English படத்தை பார்த்து இந்தியிலே காப்பி அடிச்சாங்கனு.

பொதுவா படைப்பாளி ஏன் எழுதுகிறான் என்பது முக்கியமான கேள்வி என்ன எழுதுகிறான் என்பது வேறு இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறலாம்.

அந்த ஊரில் படகு மூலமே ஆற்றைக் கடந்து வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். சாமியார் ஒருவர் படகிலே ஏறி அந்த படகோட்டியுடன் பேசிக் கொண்டே ஆற்றைக் கடக்கிறான். ஆற்றைக் கடக்கும்போது சாமியார் அந்த படகோட்டியிடம் உனக்கு வேதம் சாத்திரம் தெரியுமா? என்று கேட்கிறார். எனக்கு தெரியாது சாமி என்று சொல்ல உன் வாழ்க்கையில் பாதி வாழ்நாளை தொலைச்சிட்டியேனு சொல்ராரு. இராமாயணம், பாரதம் இதுவாவது தெரியுமானு கேட்கிறார். எனக்கு தெரியாது என்று கூற உன் முக்கால் வாழ்நாளை தொலைச்சிட்டியேனு சொல்றாரு.

நடு ஆற்றில் படகோட்டி சாமியாரிடம் உங்களுக்கு நீச்சல் தெரியுமா சாமி என்று கேட்கிறான். தெரியாதுன்னு சாமியார் சொல்றாரு. உங்க முழுவாழ்நாளையே இழக்க போறீங்களேனு சொல்றான். படகுல ஓட்டை விழுந்த்தால படகு மூழ்கிட்டுயிருக்கு. நான் நீந்தி அக்கரைக்குப் போய் விடுவேன்னு என்று நீரில் குதித்து கரையை அடைகிறான்.

ஒரு படைப்பாளி ஏன் அப்படி எழுதுகிறான். படித்தவர்களிடம் இருக்கும் மண்டைகனத்தைப் பார்த்து அவனுக்கு எரிச்சல், அதை அவன் தன் படைப்பின் மூலம் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளான்.

இதே கதையை சாந்தமாகவும் சொல்லலாம். அதேபோல சாமியார் பல கேள்விகள் கேட்க படகோட்டி தெரியாதுனு சொல்கிறான். அப்ப படகில் ஓட்டை விழுந்து மூழ்கிக் கொண்டிருப்பதைப்பற்றி கூறிவிட்டு நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் நான் உங்களை கரையில் விடுகிறேன் என்று கரையில் சாமியாரைக் கொண்டு வந்து விடுகிறான்.

அப்போது படகோட்டி சாமியாரிடம் எனக்கு சாத்திரம் தெரியாது. இராமாயணம், பாரதம் தெரியாது. ஆனா நீச்சல் தெரியும்னு சொல்லிவிட்டு போவதாக்க் கதை இருந்தால் வேறுவகை வெளிப்பாடு.

 
புகைப்படங்கள்
ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved