வாசிப்பு சுகம் குறையாத படைப்பு நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இந்த இரண்டும் கலந்தவர்களாகவும் வாழும் மனிதர்கள் பற்றிய படைப்பு.
- பிரபஞ்சன்
காளியூட்டு; மா. அரங்கநாதன்; காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம். சென்னை-24. பக்கங்கள் : 96 ; விலை : 50.
தமிழ்ப் புனைவு உலகில் மிகுந்த தனித்துவம் பொருந்திய எழுத்தாளர் மா. அரங்கநாதன். சுமார் 55 ஆண்டுகளாக எழுதிவரும் அரங்கநாதனின் கொடைகள், 300 பக்கங்களில் அங்கிவிடும் சிறுகதைகள், இரண்டு (அதிகப் பக்கங்கள் அற்ற) நாவல்கள், கவிதை குறித்த தன் தரிசனப் பார்வையோடு கூடிய புத்தகம் ஒன்று. எனக்குத் தெரிந்து இவைகளே. அதாவது அரங்கநாதனின் படைப்புகள் குறுகத் தரித்தவை. தனது அனுபவங்களோடும் தனித்த தத்துவ விசாரங்களோடும் கூடிய புனைவு வெளி, ஆழங்களை நோக்கிச் செல்லும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் ஆன, எழுதச் செல்லும் வித்தை தேர்ந்த விகாசம் ஆகியவற்றின் கட்டுமான சேர்க்கையே மா. அரங்கநாதனின் எழுத்துலகம்.
காளியூட்டு அவரது அண்மை நாவல். கதைக் களம், தமிழகத்தின் தென்கோடி. காலம், ஆங்கிலேயர் ஆதிக்கமும் அதை விட மோசமான சமஸ்தான அதிபர்களின் அட்டூழியமும் அதைவிட கோரமான வைதீக சாதிப் பழமுறைச் சமூகச் சீரழிவும் மிக்கோங்கிக் கிடந்த வேளை. நாடு சுதந்திரம் அடைகிறது. ஆதிக்கங்கள் மட்டும் வேறு உருப்பெற்று, மேலும் இறுகுகின்ற சூழல். அதிகாரங்களைப் பிரயோகித்த மனிதர்கள் மாறுகிறார்கள். அதிகாரங்கள் நீடு வாழ்ந்து தழைக்கின்றன. கதை நடக்கும் இடம் மேலூர் எனும் கிராமம்.
மா. அரங்கநாதனின் வழக்கமான முத்துக்கருப்பனே முக்கியப் பாத்திரம். நாவலில் அண்ணனும் தம்பியுமாக இரண்டு முத்துக்கருப்பன்கள். தம்பி முத்துக்கருப்பனுக்கு குளிக்கப் போகும் இடத்தில் அட்டிகை ஒன்று ஆற்றில் இருந்து கிடைக்கிறது. அது ‘பேய்ச்சியின்’ அட்டிகை. பேயின் பெண் பால் பேய்ச்சி.
தனக்குரியதைக் காளி, தன் காளியூட்டன்றைக்கு நரபலியோடு பெற்றுக் கொள்கிறாள். ஊடே, வாழ்க்கை விதியை நகர்த்தி, தனக்குரிய ரொட்டித் துண்டை அடையப் போராடுகிற – தர்மயுத்தமும் அதர்ம யுத்தமும் செய்து போரை வெல்லத் துடிக்கிற மனிதர்கள். எல்லோருக்கும் ஏதோ ஒன்று கிடைக்கத்தான் செய்கிறது. அவரவர் பங்கு அவரவர்க்கு. அடர்ந்துவரும் பாத்திரங்கள். மருத்துவ மலை சித்தர் முதல், பேத்து மாத்திலேயே வாழும் எத்தர் வரை. ஆண்கள் பாத்திரங்களைவிடவும் அருமையான, திடம்கொண்ட பெண் பாத்திரங்கள் என விரியும், பல பாகங்கள் வரை விரியத்தக்க இந்தக் கதைப் புலத்தை, வாசிப்புச் சுகமும் அடர்த்தியும் கொஞ்சமும் குறையாமல் வெறும் 82 பக்கங்களில் மட்டுமே எழுதிச் சாதிக்கிறார் ஆசிரியர். உலகப் பேரிலக்கியங்கள் பலவும் நூறு பக்கங்களுக்கு மிகாதவை என்பதை நினைவூட்டுகிறார் அரங்கநாதன். நாவலில் இடம் பெறும் சில வரிகள், நாவலின் தன்மையைப் புரிந்துகொள்ள நமக்குதவும்:
பேச்சி கழுத்துக்குச் சொந்தமானது, வேறு யாரிட்டையும் இருக்கப்படாது – விளங்காம போயிருவா – நாச்சியார் வீடு பால் பொங்கணும் – அழியக்கூடாது.
எல்லாரும் ஒண்ணுதாம்னா அது என்னடே ஞாயம் – வார்த்தைகள் அளவிற்கு மீறி வந்து விளக்கப்படுகையில் மேலும் புரியாத ஒன்றாகிவிடுகிறது. சத்தங்கள் ஏதுக்கடி என்று ஒரு சித்தன் கேட்டுப் போனான்.
நீ (மாட்டை) எடுக்கல்லேன்னா வேறு யார்லே எடுப்பா – நாங்க எல்லாம் இதுக்காகத்தான் ஒன்னை வைச்சிருக்கோம்.
ஓடிக் கொண்டிருக்கிற ஆற்றைப் பப்புக் குட்டியா பிள்ளை கவனித்துக் கொண்டிருப்பதில் ஏதோ ஓர் அர்த்தம் இருப்பது தெரிகிறது.
சில வார்த்தைகளில் பாத்திரங்களை முழுமையாக உணரவைப்பதில், அவர்களை அவர்களின் வாசனையோடு தோன்ற வைப்பதில் புதுமைப்பித்தன், ஜானகிராமனுக்கு நிகரான எழுத்து அரங்கநாதனுடையது. திருமூலர், தாயுமானவர், வள்ளலார், சித்தர்கள், ஹெர்மன் நீட்ஷே, மார்கெரித் யூர்ஸ்னார் என்று பலரையும் உட்செரித்துக் கொண்டு, சிந்தனைகளைக் கலையாகவும் படைப்பாகவும் மாற்றவல்ல படைப்பாளி மா. அரங்கநாதன் என்ற உண்மை, இந்த நாவல் மூலமும் நிறுவப்பட்டிருக்கிறது. ஒரு முக்கிய அனுபவத்தைச் சொல்ல வேண்டும். வைதீகம் இந்த மண்ணுக்குச் செய்த கேட்டை, நான் அண்மையில் படித்த எந்தப் படைப்பும் காளியூட்டு அளவுக்குக் காத்திரமாக வெளிப்படுத்தவில்லை.