Girl in a jacket

தில்லை அம்பலத்தானும் பிஸிக்ஸ்தியரியும் குரளைப்பேய்களும் மற்றும் முத்துக்கருப்பனும்....

-   ருத்ரய்யா

 

தமிழில் வந்துள்ள பெரும்பாலான படைப்புகள் தமிழ் சினிமாக்களைப் போன்றே மொக்கையானவை. அப்படிப்பட்ட சூழலில், சினிமாக்காரனான என்னை போய், “அரங்கநாதன் படைப்புகளைப் பற்றி என்னிடம் சொன்னதை ஒரு கட்டுரையாக எழுதுங்களேன்” – என்று நண்பர் ரவிசுப்ரமணியன் சொன்னபோது, எனக்கு கூச்சமே ஏற்பட்டது.

இதே மாதிரியான ஒரு கூச்சத்தை நான் அரங்கநாதனிடமும் கண்டேன்.

அதுதான் அவரை ஒதுங்கியிருக்கும் படி செய்திருக்க வேண்டும். ஒதுக்கியதே இன்னோரு கோணத்தில் அவரை ஆக்கியதும் என்றெனக்கு புரிந்தது. நாணயத்துக்கு இருபக்கங்கள் இயல்புதானே. ஆனாலும் சில நாணயங்கள் மதிப்பிருந்தும் லௌகீக அர்த்தத்தில் செல்லுபடியாவதில்லை. அதற்காக அது காலாவதி ஆனதென்று அர்த்தமில்லை. காலத்தை முந்திக்கொண்டு புழக்கத்துக்கு வந்த நாணயம் அது. காலத்துக்கு முந்தும்போது அருகில் யாருமின்றி காணாமல் போவது சகஜமாக நடக்க்கூடியதுதான்-இல்லையா. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது எழுத்துலகத்திற்கும் பொருந்தும். இந்நாளில், பாவப்பட்ட ஊமைபிள்ளைகள் என்ன செய்ய முடியும். நல்ல படைப்பாளிகளும் இருட்டடிப்பும் ஒட்டிப்பிறந்தரெட்டை போல வாழும் தமிழுலகில் மா.அரங்கநாதன் போதிய கவனம் கொள்ளப்படாததில் எனக்கொன்றும் வியப்பில்லைதான்.

மா. அரங்கநாதன் என்ற பெயரே எனக்கு அறிமுகமானது மிக சமீபத்தில்தான்.

 

நண்பர் ரவிசுப்ரமணியன் அவரைப்பற்றி ஆர்பாட்டமில்லாமல் எளிமையாக எடுத்திருந்த ஒரு ஆவணப்படத்தின் வழியாகவே அவரைப்பற்றி அறிந்தேன். தமிழ்வாசிப்பு என்பது எனக்கு நண்பர் வண்ணநிலவன் கொடுக்க கொடை. அப்படித்தான் என்னால் சொல்ல முடிகிறது. அப்படி நடக்காதிருந்தால் வெறும் கச்சடாக்களிலேயே என் காலம் முழுவதும் கழிந்திருக்கும்.

 

நண்பர் ரவிசுப்ரமணியனிடம் அடிக்கடி இலக்கிய படைப்புகள் குறித்து பேசுவதுண்டு.

குழாயடி சண்டையைவிட, கேவலமான இலக்கிய நடப்புகள் குறித்தும் நீளும் எங்கள் விசன உரையாடல்களை மெரீனா காற்று அறியும் அப்படி நேர்ந்த சம்பாஷனையில் ஒரு நாள் “நீங்களும் அன்பு என்ற ஒரு கான்செப்ட், இந்து மதத்தில் சொல்லப்படவில்லை என்கிறீர்கள், மா.அரங்கநாதனும் அதையே எழுதியுள்ளார்” – என்று சொன்னதும் ஆச்சர்யப்பட்டுப்போனேன். இத்தனை வருஷங்கள் பலதையும் படித்து தோன்றிய, ஒரு கருத்தை, இன்னொரு மனுஷன் தன் படைப்பின் வழியாக உறுதி செய்துள்ளாரே. அப்போது நம்ம கருத்து சரிதான் என்ற உறுதிப்பாட்டால் ஏற்பட்டது அது.

தோற்றத்தால் குரலால் அமைதியால் ஈர்த்தவர், இப்போது கருத்தால் ஈர்க்கத் துவங்கினார். ஒரு சில மாதங்களில் அவரது படைப்புகள் முழுவதையும் – சரியான அர்த்தத்தில் – ஒரு ஆய்வு மாணவன் போல படித்து முடித்தேன்.

முதலில் என்னை அசர அடித்தவை அவரது பாத்திரங்கள். அவரின் கதை உலகில் எவருமே கெட்டவர்கள் இல்லை. அப்படி முடியுமா என்ன. உங்கள் பார்வையை மாற்றினால் சாத்தியம் என்கிறார் அரங்கநாதன். கள்ள ஓட்டு போடுபவனிடமும் பெருகும் இவர் கரிசனத்தை, நான் என்னவென்று சொல்வது.

முப்பது வருஷங்களுக்கு முன் மஹாபாரத்தை படித்து முடித்ததும் எண்ணற்ற அதன் பாத்திரங்களும் அவற்றின் சிக்கல்களும் அவைகளின் மனஓட்டங்களும் ஏதோ ஒரு மாயவலை நெய்தாற்போல் அடிக்கடி அகக்கண்ணில் விரிந்தபடி இருந்தது. அந்த மரபின் நீட்சியில் வந்த நெசவுக்காரனாகவே ஆகிப் போயிருக்கிறார் இப் படைப்பாளி.

அவரது கதைகளை எல்லாம் மொத்தமாய் வாசித்தபோது, எனக்கு ஒரு விசித்திர உணர்வு ஏற்பட்டது. ஒரே பெயருடைய கதாபாத்திரத்தை தன் படைப்புவெளியெங்கும் உலவ விடுவது என்பது ஒரு அசாத்திய சவால்.

அதை அனாயசமாக செய்திருக்கிறார் அரங்கநாதன். அதோடு மட்டுமில்லாமல் பிரச்சாரமோ, பிரகடனமோ, அதிர்ந்த குரலோ இல்லாத அவனை, ஒவ்வொரு கதை படிக்க துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே எங்க இந்த முத்துக்கருப்பனை இன்னும் காணோம் என்று தேடவைத்துவிட்டாரே. அந்த விசித்திரத்தை இவர் எப்படி நிகழ்த்தினார் என்பதுதான் எனக்கு புரியவில்லை. கதைகளில் மாயநெசவு செய்யும் மாயக்காரனின் மாயங்களில் இதுவும் ஒன்றோ.

அப்புறம் பொறுமையாக யோசித்துப் பார்த்தால், இந்த முத்துக்கருப்பன் வேறு யாருமில்லை அரங்கநாதன்தான் என்று எனக்கு புரிந்த்து. தன் மனவலி, சந்தோஷம், கோபம், ஆசை, நிராசை, ஏமாற்றம், இழப்பு, கேள்விகள், பதில்கள், தேடல்கள் என்று தனக்கு ஏற்பட்ட எல்லா உணர்வுகளையும் அனுபவங்களோடு சேர்த்து அழகழகான களிமண்பொம்மைகளாக்கி பொருத்தமான வர்ணங்கள் பூசி, நம் பார்வைக்கு வைக்கிறார். என்ன ஆச்சர்யம் அவை உடனே உயிர் பெற்று இயங்கத் தொடங்கி விடுகின்றன.

இப்படி சொல்லலாம் என்று படுகிறது.

முத்துக்கருப்பன் தான் அரங்கநாதனின் ஆல்டர் ஈகோ.

சந்தோஷமும், ஆச்சர்யமும், கிளர்ச்சியும், பரவசமும், தத்துவவிசாரமும் தந்த அவனை, ஆழமான, கவித்துவம்கூடிய, எளிமையான, இயல்பில் எல்லோருரிடம் ஈஷிக்கொள்கிற அந்த முத்துக்கருப்பனை, இதை எழுதும் இந்நேரம் கூட, மறுபடி மனம் தேடி அவாவுகிறது. ஒரு எளிய வாசகனின் மனதில் இதை தோற்றுவித்து விடும் பங்களிப்பும் அசாதரணமானது தானே.

ஸ்வீடிஷ் இயக்குனர் இங்மர்பெர்க்மென் ஒரு தேவாலய போதகரின் மகன். வீட்டிலும் தேவாலயத்திலும் பைபிளின் வாசங்களைவிட, அவரது தந்தையின் போதனை வாசகங்களும் கண்டிப்பும் கனக்குரலும் ஏச்சும் பேச்சுமே நிறைந்திருப்பதாக உணர்கிறார் பெர்க்மென். இதனால் கடும் பாதிப்படைந்த பெர்க்மென் நாத்திகராகிறார்.

ஆனால் அவர் எடுத்த படங்கள் எல்லாம் கிருத்துவத்தைப் பற்றியது. எல்லோரும் மதத்தின் மேன்மையை அதன் அற்புதத்தை அவர் படங்கள் விளக்குகிறது என்று பிறர் விளங்கிக்கொண்டு, அவரைக் கொண்டாட, அவரோ மிக மிக நுட்பமாக, கிருத்துவமத்த்தில் சொல்லப்பட்டிருக்கும், காதல், மரணம், சாத்தான், சொர்க்கம், நரகம் பற்றி தன் படைப்புகளின் வழியாக நேர்மையான கரிசனம் நிறைந்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தார். மதம் குறித்த அவரது தீராத சந்தேகங்கள் காதுள்ளவர்களுக்கு இன்றும் கேட்கத்தான் செய்கிறது.

தீர்மானிக்க இயலாத பிறப்பால், சைவபிள்ளையாக பிறந்த அரங்கநாதனுக்கு பெர்க்மென் போன்ற வாழ்வே இளமையில் லபித்திருக்கும் போல. சைவம் என்கிற அப்சஷன், மறைநூல்கள், தேவார திருவாசக திருமந்திரங்கள் அவரை பாடாய் படுத்தியிருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆச்சார அனுஷ்டானம் மிளிர, பய பக்தியோடு வாழ்ந்த அரைபிராமண வாழ்வோடு, அவரால் ஒட்ட முடியவில்லை என்பதைதான் அவர் படைப்புகள் சொல்கின்றன. அதைத்தான் அவர் மெல்லிய அங்கத்துடன் கேலி செய்கிறார். கேள்வி கேட்கிறார். சொல்லியும் சொல்லாது விடுகிறார். மௌனம் காக்கிறார். மறைந்து நின்று விரக்தியில் சிரிக்கிறார். கடுமையான கிண்டலும் செய்கிறார். கூடவே விட முடியாமல் தவித்து, கொண்டாடவும் செய்கிறார்.

பாரில் பணிவாய் இதமாய் இருந்து, கடைசிவரை சேவை செய்யும் பையன், வேட்கையாய் நாம் கடைசி ரவுண்டுக்கு ஆசையாய் காத்திருக்கும்போது, அதையும் பவ்யமாய் எடுத்து வந்து தருவது போல் கைக்கருகில் கொண்டுவந்து, படீரென கீழே போட்டு உடைத்து விடுவது போல், போட்டு உடைக்கிறார். உடைத்த பிறகும் திட்டத் தோன்றாத அதே பணிவும் நெகிழ்வும் த்தும்புகிறது அம் முகத்தில். இதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள். அப்படித்தான் செய்கிறார் இவரும். அவனோ ஏழைச் சிறுவன். இவரோ எழுத்தில் கனிந்த படைப்பாளி. இருவரையும் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இருவர் செய்கையும் சூட்சும்மாக ஒன்றை செய்கிறது. அதாவது நம்மை நாமே கேள்விகள் கேட்டுக் கொள்வதை துவக்கி வைக்கிறது. பதில்கள் பற்றி இருவருக்கும் கவலையில்லை. அவர்கள் வேலை முடிந்துவிட்டது. அவ்வளவுதான். எத்தனை ஸ்தூலமான விஷயங்கள் பாருங்கள்.

கர்ணன் படத்தில் கிருஷ்ணராக வரும் என்.டி.ராமாராவ் அற்புதமாக நடித்திருப்பார்.

சதா ஒரு எள்ளல் நிறைந்த பார்வையோடும், கடைவாயில் அரும்பும் புன்னகையோடும் குழலை சுழற்றியபடியே உலா வருவார். கிருஷ்ணன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நினைக்க வைக்கும் நடிப்பு.

எல்லா நிகழ்வுகளையும் அதே மந்தகாசப்புன்னகையோடு கவனித்துக் கொண்டே லீலைகள் நிகழ்த்துவான் கிருஷ்ணன். மாயக்கண்ணன் அறியா நிகழ்வா. ஆனால் அவனும் விளையாட்டின் ஒரு அங்கம். முடிவுகள் தெரிந்து விளையாடுபவனுக்கு வெற்றி என்ன தோல்வி என்ன. எல்லாம் ஒன்றுதான். ஆனாலும் அவன் விளையாடுவான். எல்லாமே ஒரு வகையில் கிருஷ்ணன் தான். எல்லாமே ஒரு வகையில் கிருஷ்ணன் இல்லைதான். அப்படித்தான் தன் கதைகளில் தோன்றியும் தோன்றாமலும் ஈருருவத் தோற்றம் காட்டி கண்ணாமூச்சு விளையாடுகிறார் அரங்கநாதன்.

பொதுவாக மாந்தீரக புனைவுகளில் ஈடுபாடில்லாத எனக்கு, இவரது கதைகளில் காணப்படும் மிஸ்டிஸிசம் பிடித்திருக்கிறது. பெரும்பாலானோர்க்கு அதில் கவர்ச்சியும் மயக்கமும் இருப்பது இயல்பானதே. அது எங்கிருந்து துவங்குகிறது என்பதை நான் பிராய்டின் வழியாக பார்க்கிறேன். பிறந்த இரண்டு மூன்றுமாதக் குழந்தை அழுகிறது. உடனே தாயாலோ, பாட்டியாலோ, வேறுயாராலோ அதன் தேவை என்ன என்று பார்த்து நிறைவேற்றப்படுகிறது. மறுபடி மறுபடி அப்படி நடக்கும்போது, நமக்கு ஏதும் பிரச்சனை வந்தால், ஏதோ ஒரு மேஜிக் நடந்து அது உடனே தீர்க்கப்படுகிறது என்ற எண்ணம் அதன் ஆழ்மனதில் பதிந்து, அது கம்பர்டபிளாகவும் உணர ஆரம்பிக்கிறது. வளர்ந்து அறிவு சேகரமானபின்னும் அந்த மேஜிக்கை விட மறுக்கும் மனம்தான் கடவுளை விடாது கெட்டியாகப்பிடித்துக் கொள்கிறது.

இது தமிழ் நாட்டுக்கோ, இந்தியாவுக்கோ மட்டுமேயான பிரத்தியோகமான விஷயம் இல்லை. இதில் மேலை கீழை என்ற எந்த பகுப்பும் இல்லை. மனிதகுலத்துக்கே பொதுவான உணர்வு இது. மனித வரலாற்றில் தமிழன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்தான் என்றால், வெள்ளைத்தோல் ஆங்கிலேயனும் வாழ்ந்திருப்பான். ஆப்ரிக்கனும் வாழ்ந்திருப்பான். நரமாமிசம் ஒருவன் சாப்பிட்டால், எல்லோரும் சாப்பிட்டுருப்பார்கள். விவசாயம் ஒருவன் பண்ண துவங்கியிருந்தால், எல்லோரும் செய்திருப்பார்கள் இல்லையா. வேண்டுமானால் கால வேறுபாடு இருந்திருக்கும். அதைத்தானே மனிதகுலவரலாறும், ஆந்த்ரபாலஜியும், ஆர்க்கியாலஜியும், எத்தனாலஜியும் இன்னும் பல ஜீக்களும் சொல்கின்றன. வளர்ச்சியின் ஒவ்வொரு படிநிலையையும் தாண்டியே ஒவ்வொரு இனமும் வந்திருக்க முடியும். சில சில சிறு வேறுபாடுகள் இருந்திருக்கலாம். அதனால் இதில் மேலை கீழை என்று எதுவும் இல்லை.

எல்லா மனிதர்களும் ஒன்றுதான். எல்லோரும் ஒருவகையில் ஒரு தொப்புள் கொடிவழியே ஜனித்தவர்கள் தான். இதைத்தானே வேறு கோணத்தில் இரண்டாயிர வருஷத்துக்கு முன்னாள் நம் சங்கத்தமிழ் பாட்டன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்னான். இதனை இந்தியர்கள் – குறிப்பாக தமிழர்கள் உணர வேண்டும். மலட்டு ஆய்வாளர்கள், சுயநலத்தால், அறிவுகுறுகிய அறிவு ஜீவிகளின் அருள்வாக்குகளை சிந்திக்காமல் கேட்டு, சாமியாடிக் கொண்டிருக்கிறவரையில் நாம் நம் சிந்தனையின் எல்லைகளை விரிவுபடுத்த முடியாது. சகிக்கமுடியாத வெற்று செண்டிமெண்ட்ஸெல்லாம் அந்த ஈரோட்டுக்கிழவன் போக்க போராடிய முடத்தனத்தில்தான் நம்மை மறுபடி கொண்டுபோய் நிறுத்தும். இறந்தகாலத்திலேயே இருந்து, அதிலேயே கனவுகண்டு களிப்பதில் நம் தமிழர்கள் சமர்த்தர்கள். அப்படியே இருக்க விரும்பினால் அவர்கள் உலக பொருளாதரம் பற்றி பேசக்கூடாது. கார் வேண்டும், கம்யூட்டர் வேண்டும், ரோபோ வேண்டும் மங்காணி வேண்டும் ஆனால் அவன் கலாச்சாரம் மட்டும் வேண்டாமென்றால் உங்களை விடுமா கருப்பு. இதுபோன்ற மாயைகளை கேள்விகேட்டு உடைப்பவனே மனித குலத்தின் மேல் அக்கறை கொண்ட படைப்பாளி. தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு. எல்லாம் சரி. எல்லாருக்கும் அது உண்டு இல்லையா. அதை வரலாறு சொல்லும் போது ஏற்க தவறினால், நாமல்லவா காணாமல் போவோம். அதற்காக நான் பழயதை மறுக்க வில்லை. மறுதலிக்கவும் இல்லை. எல்லோருக்கும் அது உண்டு என்கிறேன். ஒரு வகையில் நாம் எல்லோரும் ஒன்று என்கிறேன்.

இன்னொரு பிரிவினர் முன்னோர்கள் செய்த முட்டாள்தனங்களை இன்றும் ஏன் கட்டி அழ வேண்டும் என்று சாதுர்யம் பேசுகிறார்கள். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் காலத்தில் செய்த்து குழந்தைத்தனமும் முட்டாள் தனமுமாய் இன்று தோன்றலாம். ஒன்றை மறந்து விடாதீர்கள். அது வளர்ச்சியின் ஒரு அங்கம். அதும் சேர்ந்த்துதான் வளர்ச்சி. வரப்போகும் தலைமுறை நீங்கள் பேசுவது போலவே உங்களைப் பற்றி பேச காத்திருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். என்னை அரங்கநாதனின் படைப்புகள் இப்படி எல்லாம் பேச வைக்கிறது. சிந்திக்க வைக்கிறது. இதை விட ஒரு படைப்பு என்ன செய்துவிட முடியும்.

அவர் எழுத்தில் ஒரு வரியில் ஒரு காலகட்டத்தை கடக்கும் அதிசயத்தை பார்த்து நான் வியந்து போனேன். ஒரு வயலுக்கு காவல் காக்க போகிறவன் வழியாக ஒரு கதை விரிகிறது. அதில் காலத்தையும் வெளியையையும் சீட்டுக்கட்டு குலுக்குவது போல் குலுக்கி விளையாடுகிறார். ஒரு வரி சொல்கிறேன் பாருங்கள்.

“பலவேசம் பிள்ளை வயல், இப்போ கீழுர்காரன் கையில்”

இந்த கதையிலும் மாந்தீரிகம் வருகிறது. ஒரு படைப்பாளி எதை வேண்டுமானாலும் ஆயுதமாகப் பயன் படுத்தலாம். ஆனால் அந்த ஆயுத்த்தை வைத்து கொண்டு அவன் எதை செய்கிறான் என்பதுதான். நமக்கு முக்கியமாக படுகிறது. அவன் பாத்திரங்கள் கோபப்பட்ட்டும், பொய் சொல்லட்டும், அடுத்துக் கெடுக்கட்டும், அடுத்தவன் மனைவியை கவர்ந்து வரட்டும், குத்தட்டும், கொலை செய்யட்டும். ஆனால் அதன் மூலம் அவன் சொல்லவந்த்து என்ன. அதுதானே அவனை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. நமக்கு உவப்பில்லா ஆயுதத்தின் வழியாக கூட, அரங்கநாதன் சொல்லும் விஷயங்கள் அவரைப் பார்த்து நம்மை கேள்வி கேட்க விடாது செய்து விடுகின்றன.

மனித உறவுகள் பற்றி அவர் கையாளும் விஷயங்களை நாம் உணர முடியும், காண முடியாது, குடும்ப உறவுகள், நட்பு சார்ந்த உறவுகள், சமூக உறவுகள், பாலியல் உறவுகள் எல்லாவற்றையும் பற்றி தன் படைப்பின் வழியே பேசுகிறார் அரங்கநாதன்.

தன் கண்முன்னே புனித ஆடை பூண்ட உறவுகளின் மேன்மைகள் சிதிலமடைவதை மௌனசாட்சியாய் கண்டு செய்வதறியாது தவிக்கிறார். அநத் கதைகளை படிக்கும்போது (Human Relation, Even Before Becoming Skeletal will turn in to Fossis) மனித உறவுகள் எலும்புக்கூடாக ஆகும் முன்பே, படிவத்துகளாக மாறிவிடுகின்றன என்ற மார்க்ஸின் கூற்று தவிர்க்க முடியாமல் எனக்கு ஞாபகம் வந்து கொண்டே இருந்த்து. ஆனால் அக்கருத்து எப்படியோ இவர் கதைகளில் சார ரஸமாய் இறங்கியிருக்கிறது என்பதை மட்டும் என்னால் உணர முடிந்த்து. உறவுகளின் விஷயத்தில் இந்த தெளிவைமட்டும் நாம் எட்டிவிட்டால், இனி துன்பமில்லை, இனி இன்பமும் இல்லை என்ற நிலைதானே, அந்த நிலையை அடையும் மனம்தான் எத்தனை பாக்கியம் வாய்ந்தது.

ஆண்பெண் உறவுகளை இவர் அணுகும் விதம் அற்புதமானது. மேஜிக்கல் ரியாலிசம் ஒரு வகை என்றால் இவர் மிஸ்ட்டிகல் ரியலிசத்தையே பாலுறவு கதைகளிலும் கையாளுகிறார். அணுவை உடைத்து, வெளிவரும் மாலிக்கூல்களை பிரிப்பதும்.

பலவகையாய் சேர்ப்பதும் சேர்ப்பதால் பலபல சக்தியை உருவாக்குவதும் நமக்கு இயற்கை தந்த அறிவால் விளைந்த பாடம். பாலுறவும் அப்படித்தானே. கற்பு என்பது உறுப்புமில்லை. பொருளுமில்லை. நம் கற்பனை. மனித வரலாறு மட்டுமல்ல தமிழன் வரலாறும் அப்படித்தான் சொல்கிறது. சந்தேகமிருந்தால் மறுபடியும் ஒரு முறை சங்கத்தமிழை எடுத்துப் படித்துப் பாருங்கள். இவரது கச்சிப்பேட்டுகார்களும் அப்படித்தான். காதலை மிஸ்டிக்கல் ரியாலிசத்தோடு அணுகுகிறார்கள். மறுபடியும் எனக்கு (Sex - it is a Matter between Two Individuals) பாலுறவு இரு தனிமனிதர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் என்று சொன்ன மார்க்ஸே ஞாபகத்துக்கு வருகிறார்.

எந்த நியதியும், எந்த மதிப்பீடும் இன்றி, குறுகிய காலத்தில் பணம் மட்டுமே சம்பாதிக்க ஆலாய் பறக்கும் தற்காலமனிதர்கள் அவரையும் உறுத்தியிருக்கிறார்கள் போலும். அதை எல்லாம் பார்க்க பார்க்க அவருக்கு வேதனை மீதூறி வருகிறது. உறவுகளைக் கூட, அதிலும் தாய்தந்தை உறவுகளைக்கூட, பணத்தாலும் வெற்றியாலும் தீர்மானிக்கும் ஒரு தலைமுறை. அவரை மட்டுமல்ல நம்மையும் சங்கடப்படுத்துகிறது. தான் செய்யும் காரியங்களால் விளையும் சந்தோஷத்தை கூட மறந்து, சதா யாரோ ஒருவனோடு போட்டிக்கு அலையும் இந்த தலை முறை என்ன ஆகுமோ என்று விசனம் கொள்கிறார். இதன் நீட்சியாகவே செய்திதாளில் சமீபத்தில் ஒரு செய்தியை நான் வாசிக்க நேர்ந்தது.

தொலைக்காட்சியில் மக்கள் தொடர்பு அதிகாரியாய் வாழ்வை துவங்கிய ஒரு மனிதர்

தனது 42 வயதில் பிரிட்டன் பிரதமராகி உள்ளார் இப்போது May God save Great Britian.

இப்படித்தான் கதைகள் நெடுகிலும் எதைஎதையோ சொல்லி, எதை எதையோ உசுப்பி விட்டு விடுகிறார் அரங்கநாதன்.

மார்க்ஸின் மாணவனாகிய எனக்கு மட்டும் எப்படி தந்திர சாஸ்திர அனுஷ்டான கதைகள் பிடிக்கிறது. அவர் சொல்ல வரும் விஷயத்தால்.

அதை சொல்லும் வித்த்தால், அதில் தொனிக்கும் சக மனுஷ கரிசனத்தால்.

ஆனால் நம் தோழர்கள் எழுதும் மை, பேனா, பேப்பர் முதற்கொண்டு சிவப்பாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே தவிர, உள்ளடக்கத்தையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையும் பார்க்க தவறி விட்டனர். பார்வை அகலமாகாத மத வாதிகளைப்போல் அவர்களும் குறுகி இறுகிப் போனதுதான் சோகம். அதனால்தான் அவர்கள் கண்ணுக்கும் அரங்கநாதன் தெரியாமல் போனார்.

தந்தைபெரியார் தமிழனத்துக்கு தந்து சென்ற, ஆண்மைமிகு வீர்யத்தை தங்கள் கீழ்மைமிகு காரியங்களால் மலடாக்கி களிக்கும் திராவிட கசண்டுகளுக்கும் மார்க்ஸிஸ்ட்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போன சோகக்காட்சிகளை நம் காலத்திலேயே நாம காண நேர்ந்தது தான் பெரும் வேதனை.

போதுமென்று தோன்றும் வேளையில் சில வார்த்தைகள். நான் அவரைக் காணவந்தேன். பெரியவனாய். கொஞ்ச நேரத்தில் சிறுவனாய் அவர் கரம்படித்து இருட்குகைக்குள் நடந்தேன். திடீரென பாய்ந்த ஒளியில் தெரிந்தது திரைச்சீலை ஓடத்துவங்கின. காட்சிகள், உணர்ச்சிகள், உணர்வுகள், உறவுகள், பிரச்சனைகள், எதிர்துருவச் செயல்பாடுகள், முரண்படும் பாத்திரங்கள், கூக்குரல்கள், அமைதி, சாந்தம்.

மனித குலவரலாற்றின் சில காட்சிகளை பிரத்தியேகமாகப் பார்த்த பிரமிப்பில் திகைத்திருக்க மறுபடியும் வாஞ்சையுடன் கைபிடித்து வெளியே அழைத்து வந்து விட்டுவிட்டார். வெளியில் இருந்த செயற்கை வெளிச்சத்தால் கண்கள் கூசிற்று. மனசும் தான். பிறகு பேசலாம்.

தேர்ந்தெடுத்த கதைகள்

  1. மயிலாப்பூர்
  2. சித்தி
  3. காலக்கோடு
  4. தேட்டை
  5. கச்சிப்பேடு
  6. பொய்
  7. தோற்றம்
  8. ஜேம்ஸ்டீனும் சென்பகராமன் புதூர்க்கார்கார்ரும்
  9. அஞ்சலி
  10. துக்கிரி
 
புகைப்படங்கள்
ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved