Girl in a jacket

சிறுகதைகள்

கேணி

பேருந்து கொண்டு வந்து சேர்த்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று மைல் நடக்க வேண்டும். தூரத்தே கண்ணுக்கெட்டியவரை வெட்டவெளிதான். புல் பூண்டு கூட இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் அதுமட்டும் கண்ணில் பட்டது. அது மட்டும்தான் நன்றாகத் தெரிந்தது.

இரண்டொருவர் என் கூடவே பேருந்தில் வந்து இறங்கியிருந்தனர். அவர்களுடன் நடக்கத் தொடங்கினேன். ஆனால் அவர்கள் வேகமாக நடந்தனர். அந்த வேகம் நம்மால் முடியாது.

பரந்து பட்ட வெளியில் தூரத்தின் அளவு தெரியவில்லை. அந்த இடம் கண்ணிற்குத் தெரிந்தாலும், நடக்க, நடக்க, அதுவும் பின் சென்று கொண்டிருப்பது போல் தெரிந்தது.

முன்னால் நடக்கத் தொடங்கியவர்கள் சீக்கிரமாகவே அதை அடைந்து வரிசையில் இடம் பிடித்துக் கொண்டார்கள்.

வரிசை-அது ஒன்றும் பெரியதாக இருக்கவில்லை. ஒரு பத்து பேர்தான் இருந்தனர். ஆனாலும் எல்லாம் முடிந்து பழையபடி பேருந்து, ரயில் எல்லாம் ஏறி ஊர் வந்து சேர இரவு ஆகிவிடும்.

வெயில் தகித்தது. பரவாயில்லை. தண்ணீர் தான் தலையில் விழப்போகிறதே-சுகமாகத் தான் இருக்கும். ஆனாலும் இங்குள்ள தண்ணீர் நம் தலைக்கு ஒத்துக் கொள்ளுமோ என்னமோ-எப்படி சொல்ல முடியும்-எல்லாம் இந்த ஏழரை நாட்டுச் சனி செய்கிற வேலை. சிவபாலன் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.

அதை முதலில் சொல்ல வேண்டும்-எங்கிருந்தோ ஆரம்பித்து விட்டேன்.

சிவபாலன் என் பக்கத்து வீட்டுக்காரர். அரசுப்பணி சொந்தத்தில் கார் எல்லாம் உண்டு. ஏறக்குறைய எல்லா கோவில்களுக்கும் சென்று வந்தவர். வடநாட்டுக் கோவில்களையும் விடவில்லை.

"முத்துக்கறுப்பன், நீ மகாலட்சுமி கோவில் பார்க்கணும். அடுத்த தடவை வடக்கே போகும் போது நீயும் வா."

"சார்-கோவில் எல்லாம் தென்னாட்டில் தான். அங்கே தலம் தான் முக்கியம். பக்தி இயக்கம் இங்கே தானே தோன்றியது" என்றெல்லாம் சொன்னால் காது கொடுத்து கேட்கமாட்டார். அவரென்ன-பொதுவாக எல்லாருமே அப்படித்தான். தென்னாட்டில் முதலில் தோன்றியது என்று சொல்லி விட்டாலே ஏதோ தேச பக்திக்கு முரண் என்பது போல நினைக்கிறார்கள். அதென்ன-தேசபக்திக்கும் இந்த வரலாற்று உண்மைகளுக்கும் என்ன சம்பந்தம்-அப்படி எல்லாம் கேட்க முடியாது. சகித்துக் கொள்ளத் தான் வேண்டும்-வேறு வழியில்லை.

சிவபாலனைப் பொறுத்த வரை வேறு ஒரு விஷயம். அவருக்கு சோதிடம் நன்கு தெரியும்-முறையாகப் படித்தவர்.

"முத்துக் கறுப்பன் உனக்கு ஏழரைச் சனி நடக்கிறது. இரண்டரை வருஷம் என்று மூன்று தடவை. மூன்றிலே கடைசி போர்ஷன்-உனக்கு முடிக்கிற சமயம் எனக்கு ஆரம்பிக்கும்."

"திருநள்ளாறு போகலாமே-வடநாடு எல்லாம் அப்புறம் பாத்துக்கலாமே".

"அதைச் சொல்லலை. திருநள்ளாறு போகலாம். நீ ஒரு முறை இங்கே போய் வா. போனால் தலையிலே தண்ணி ஊத்திக்கலாம். பிறகுதான் கோவில் எல்லாம்."

வழியும் சொல்லித்தந்தார். போக வேண்டிய இடம் பக்கத்தில்தான். ஒரு நாற்பது மைல்தான் இருக்கும். அதுதான் முதலில் போன கிணறு. வேறொன்றும் சொன்னார்.

"மூணு போர்ஷன் உண்டுன்னு சொன்னேனே-அது ஒன்பது-பதினெட்டு இருபத்தேழு அப்படின்னு ஊத்திக்கணும் அதாவது நீ இப்ப பதினெட்டு வாளி தண்ணி ஊத்திக்கோ. சனி முடிகிற சமயம் இருபத்தேழு. கடைசியா ஊத்திக்கிற கிணறு இங்கே இல்லை. அதைப் பிறகு பாத்துக்கலாம்."

வழியும் சொன்னார். இடம் பக்கத்து மாவட்டம்தான். ஒரு மணி நேரப் பயணம்.

அந்த இடம் கடற்கரை பிரதேசமாகயிருந்தது. மனிதவாடையற்று காணப்பட்டது. கிட்டத்தட்ட கைப்பிடிச்சுவரே இல்லாத கிணறு. மணற்கேணியாக இருந்திருக்க வேண்டும். காத்துக் கொண்டிருப்போர் ஒரு நாலைந்து பேர்தாம்.

லுங்கிக் கட்டிக் கொண்டிருந்த ஒருவன் கிணற்றிலே தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். கைகளால் மிகவும் லாவகமாக வாளியில் தண்ணீர் எடுத்து தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தவரின் தலையில் ஊற்றிக் கொண்டிருந்தான். அவன் ஒரு கையாலேயே தண்ணீரை இறைத்து விடுபவன் போல இருந்தான். அந்தக் கையைக் கூர்மையாக பார்த்தால் அதில் ஆறு விரல்கள் இருந்தன.

கிணற்றின் பக்கத்திலே கூரை போட்டு நீண்ட தாடியுடன், துண்டால் மார்பைப் போர்த்தியவாறு ஒருவர்-அப்படி போர்த்தியிருந்தாலும் முப்புரி நூல் வெளியே தெரியும்படியாக.

எனது வரிசை வந்ததும் நீர் இறைப்பவன் "எத்தினி" என்று கேட்க, பதினெட்டு என்றதும் அவன் மடமடவென வேலையைக் கவனித்தான் இடையிலே பேசவும் செய்தான்.

"நீங்க சாமிகிட்டே பதினெட்டு ரூபாயா அல்லது உங்க இஷ்டப்படியோ கொடுத்துடுங்க. அவரு கைநீட்டி வாங்க மாட்டாரு. கால் பக்கத்திலே வைச்சிடுங்க. குறையைச் சொல்லுங்க-பதில் சொல்ல மாட்டாரு. ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்துடுங்க" என்று கூறி வரிசையில் நின்ற அடுத்தவரை கவனிக்க ஆரம்பித்தான்.

சாமி பக்கம் சென்றேன். உட்கார் என்று சைகை காட்டினார். உட்கார்ந்து பணத்தை அவரது காலடியில் தரையில் வைத்தேன். என்னை உற்றுப்பார்க்கவே, கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்தேன். அலுவலகத்தில் இடமாற்றம், பொருளாதார நெருக்கடி, பிள்ளைகளுக்குக் கல்லூரியில் இடங்கிடைத்தல் போன்றவைதாம்.

அவர் தலையசைத்துக் கொண்டார். எங்கேயோ பார்த்தவாறு சிறிது நேரம் இருந்துவிட்டு திரும்பவும் என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையில் சாந்தம் தெரிந்தது. எனக்கு சிறிது நிம்மதி ஏற்பட்டது.

திரும்பவும் தலையசைத்தார். அது எனக்கான உத்தரவு என்று தெரிந்தது. நான் எழு முன்னர் தனது கைகளை அகலமாக விரித்து எனது தலை மீது வைத்து ஆசீர்வதித்தார். கண்களை மூடிக்கொண்டிருந்தார்.

நான் எழுந்து கிணற்று பக்கம் வந்து தண்ணீர் இறைப்பவனிடம் ஓர் ஐந்து ரூபாய் நோட்டைத் தர அவன் ஆறு விரல் கையால் வாங்கிக் கொண்டான்.

அவ்வளவுதான் அங்கு நடந்தது.

கிட்டத்தட்ட இதெல்லாம் மறந்து வருகிற காலத்தில், ஒரு நாள் சிவபாலன் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்.

"முத்துக்கறுப்பன், இப்ப உங்களுக்கு சனி முடிகிற சமயம். எனக்கு ஆரம்பிக்கப் போகிறது. இந்த வாட்டி நீ இருபத்தேழு வாளி தண்ணீர் ஊற்றிக்கணும். ஆனா ஒரு கஷ்டம். இந்தக் கிணறு கர்னாடகாவிலே இருக்கு. ரயில்லே போய் பஸ் ஏறி அந்த இடம் போகணும். நான் அட்ரஸ் தறேன். கேட்டுக் கேட்டு போயிடலாம். கர்னாடகா ஆனாலும் இது இருக்குமிடம் பக்கத்திலேதான். ஒண்ணு மட்டும் கட்டாயம். சனிக்கிழமை மட்டும்தான் அங்கே சாமியார் இருப்பாராம். தண்ணியும் அன்னைக்கு மட்டும்தான் ஊத்துவாங்களாம். அப்படியிப்படி யோசிக்காம போயிட்டு வா-நானும் இனி அலைய வேண்டியதுதான்".

அவர் தந்த விவரம் இவ்வளவுதான். நான் அதன்படி ரயில் ஏறி கர்னாடகா வந்து, பஸ் ஏறி இந்த இடத்து கிணற்றுப்பக்கம் வரிசையில் நிற்கிறேன்.

••••

கிட்டத்தட்ட வரிசையில் நின்ற அனைவருமே இருபத்தேழு தடவை ஊற்ற வேண்டியவர்களானபடியால் நேரம் சென்றது நிற்பது கஷ்டமாக இருந்தது.

எனது முறை வந்த போதுதான் நீர் இறைப்பவனை நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. லுங்கி கட்டி அரைக்கை பார்த்த ஆள் அல்ல என்று தெரிந்தது. ஆறு விரல் அடையாளம். அந்தக் கிணற்றில் பார்த்தவனின் தனி அடையாளம். ஏற்கனவே வரிசையில் நின்றவர்களிடம் கன்னடத்தில் சரளமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அந்த விவரங்கள் தெரியுமாதலால் அவன் பேசும் மொழியும் புரிந்தது.

எனது முறை வந்ததும் நான் ஆங்கிலத்தில் இருபத்தேழு என்று கூறினேன். சொல்வதற்கு முன்பே அறிந்து கொண்டவன் போல் அவன் இறைக்க ஆரம்பித்து விட்டான். சிறிது சீக்கிரமாகவே முடிந்து விட்டது. கையைச் சாமியார் பக்கம் காட்டினான் பேசவில்லை.

சாமியார் பக்கம் நான் உட்கார்ந்து இருபத்தேழு ரூபாயை காலடியில் வைத்தேன். அவர் உடனேயே 'என்ன நச்சத்ரம்' என்று கேட்கவே எனக்கு வியப்பு. சொன்னேன். கஷ்டங்களையும் சொன்னேன். நீண்ட தாடியை உருவிய வண்ணம் அண்ணாந்து பார்த்து கண்களைச் சிறிது நேரம் மூடிக் கொண்டிருந்தார். பின்னர் சாந்தத்துடன் என்னைப் பார்த்து தலையசைத்தார். தனது கைகளை அகல விரித்து எனது உச்சந்தலையில் வைத்து ஆசீர்வதித்தார். எழுந்து கை கூப்பினேன்.

அவர் கைகளை விரித்து தலையில் அழுத்தி என்னை ஆசீர்வதித்த போது அதில் ஏதோ ஒரு வித்யாசம் இருந்ததாக எனக்குத் தோன்றியதால், திரும்பவும் அவரைப் பார்த்தேன். அவரது கையில் ஆறு விரல்கள் இருந்தன.

திரும்புகையில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தவனிடம் ஐந்து ரூபாய் என்று எதுவும் தரவில்லை. ஊர் திரும்பியதும் சிவபாலனிடமும் எதுவும் சொல்லவில்லை.

 

பையனிடம் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டு வந்தார். அவர் அடிக்கடி சொல்வதுதான். கோவில் வந்து விடவே, கைகளை உயர்த்திக் கும்பிட்டார்.

அந்தக் கைகள் கீழே இறங்கவில்லை. அப்படியே, எங்கோ பார்த்துக் கொண்டிருந்த பையன் மீது பட்டும் படாதவராய், துவண்டு தரையில் வீழ்ந்தார்.

() () ()

இன்றே துக்கம் கேட்கும் நாள் என்பதுபோல நடராசனும் தட்சிணாமூர்த்தியும் வாயடைத்து நின்றனர். மேற்கொண்டு விவரம் கேட்கும் துணிவு இல்லை. பலகாரம் சாப்பிட வேண்டும் என்று சொன்னவன் கைகள் கட்டி நின்றான். நடராசன் வெகுநேரம் கழித்துப் பேசினார்.

"போகலாம் வா முத்துக்கறுப்பன்."

மூவரும் நடந்தனர். அந்தத் தெருவிலிருந்த கடையிலேயே ஏதாவது சாப்பிட்டு விடலாம் என்றான். எதிரே ஒரு சோதிட சாத்திரக் கூடம்.

இட்டலி-காப்பி பசிக்கு இதம். பேசாது சாப்பிட்டனர். முத்துக் கறுப்பன் நிறையவே சாப்பிட்டான்.

ஒரு விள்ளல் இட்டலியைப் பிட்டவர் சாப்பிடாது கைகளை உயர்த்தியவாறு, "எப்படி சமாளிச்சே" என்று மெதுவான குரலில் கேட்டார் நடராசன்.

"அப்பாகீழே விழுந்துட்டாரே என்றுதான் தோணிச்சு. அவரைத் தூகக்ப பார்த்தேன். ஆனா தெருக் கோடியில் இரண்டு பேர் ஓடி வருவதும் பின்னால் ஒருவர் விரைந்து வரதும் தெரிஞ்சுது. பின்னால் வந்தவர் தாடிக்கார்."

சாப்பிட்டு முடிந்து வெளியே வந்ததும், ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான் முத்துக்கறுப்பன்.

() () ()

இரண்டு பேர்களை முதலில் ஓடிப் போகச் சொல்லி விரைந்து வந்தார்தாடிக்காரர். தகப்பனும் பிள்ளையும் கோவில் பக்கம் செல்வதை அவர் பார்த்திருக்க வேண்டும்.

வந்தவர்கள், கீழே விழுந்தவரத் தூக்க, அவர் நாடி பார்த்தார். பிறகு அந்த நிலையிலேயே தகப்பனாரைப் பார்த்து இரு கைகளையும் கூப்பினார். மடத்தைச் சேர்ந்த அடியார் சாதாரணமாக கைகூப்புவதில்லை.

"முதற் தீ எரிந்த காடு" என்று அவர் வாய் விட்டுச் சொன்னார்.

உடன் வந்த இருவரும் வேலைகளைக் கவனித்தனர். ஊர்ப் பெரியவர்களாக இருவர் வரவழைக்கப்பட்டனர். ஒரு வீட்டுத் திண்ணையில் 'அது' கிடத்தப்பட்டது.

"எங்கிட்ட ஐம்பது ரூபா இருக்குது" என்று தழதழத்த குரலில் சொன்னான் முத்துக்கறுப்பன்.

"என்னிடமும் ஐம்பது ரூபா தந்திருக்காரப்பா - அவர் மடியிலும் ஐம்பது இருக்குதாம். எல்லாம் சொல்லிட்டுத்தான் போயிருக்காரு உங்க அப்பா" என்று சொல்லிப் பையனைத் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

அத்தனை போதுமானதாகவிருந்தது. எடுத்துச் செல்ல மாயவரத்திலிருந்து கார் கொண்டு வரச்சொல்லி, அவனோடு ஓர் ஆளும் வர ஏற்பாடாயிற்று.

காரின் முன்பக்கம் உட்கார்ந்திருந்த அவன், ஊர் வரும் வரை பின்னிருக்கைப் பக்கம் திரும்பவேயில்லை.

() () ()

அம்மையப்ப பிள்ளை தாடிக்காரரை முன்பின் பார்த்ததில்லை. ஆனால் வள்ளியூர் அண்ணாச்சியின் பெயர் வேலை செய்தது. தாடிக்காரர் பழைய ஊர் நினைவில் மூழ்கியிருக்கக்கூடும். ஆனால் உடனடியாக வந்த நேரடிக் கேள்வியொன்றால் தாக்குண்டார். "அடியார் ஒருவரை அகப்பையால் அடித்ததுண்டா?"

அம்மையப்ப பிள்ளை கேட்ட இந்தக் கேள்வியும் அவரறியாது தானாக வந்தது போன்றிருந்தது. அவர் யாரிடமும் வரம்பு மீறிப் பேசாதவர். பேசுவதும் குறைவு.

தாடிக்காரர் சிறிது நேரம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு தலையசைத்தார். பிறகு தன்னிலைக்கு வந்தவராக கேட்டார்.

"இந்த முருகன் யார்?"

"என் மகன்-முத்துக்கறுப்பன்."

"முருகன் தம்பியே-வா."

அவர்கள் இருவரும் பிறகு பேசிக் கொண்டிருந்தவை யாவும் வேறு மொழிபோலவிருந்ததால், முத்துக்கறுப்பன் அப்பாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"இங்கேயே உட்காரலாம்" என்று கூறி உள்ளே சென்றவர் இரண்டு மலைவாழைப் பழங்களுடன் தண்ணீரும் கொண்டு வந்தார்.

"இரவு சாப்பாடு இங்கே-சொல்லி விட்டேன்."

அன்றிரவு அம்மையப்ப பிள்ளை அவரிடம் சொன்ன விஷயம் இதுதான்.

சுர வேகத்தில் தவித்து முனகிக் கொண்டிருந்த காலை - ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு - நினைவை இழந்து, தன் பெயரே மறந்து விட்டாலும், மறக்கவொண்ணாத காட்சி. காட்சியும் அல்ல அது - ஒரு வெளி - வெளிச்சமான நிலை. அப்போது சுரமும் இல்லை, எதுவும் இல்லை. துன்பமும், வெறுப்பும், அழுக்காறும், அச்சமுமில்லாத ஓர் இருத்தலில் எத்தனை நேரமோ - அதுவும் மறந்தாயிற்று. விழிப்பு ஏற்பட்ட கண முதல் நினைவுள்ளதெல்லாம் கேட்ட ஒலி மட்டும்தான். அல்லது கண்ட ஓர் ஒலி என்று கூறுதல் சரிதாமோ - போ - முதற் தீ எரிந்த ஒரு வேளூரில் நிறைவு பெறு - அழல் குட்டம் - திங்கள் - முன் பனியில் நிற்க - எரித்த பன்னூறு விலங்குகள் அடையும் சாந்தி. விண்ணின் ஒலி-ஓசை-ஓதம்-ஓம்ம்ம்ம்-எல்லாம் ஆக.

ஒப்புவித்த பாடல் தவிர வேறு தமிழறியா அவரது நினைவில் நின்ற சொற்றொடரின் பொருள் அவருக்குப் புரிந்ததுதான் விந்தை. எந்த வேளூர் என்று கேட்டான் ஒரு பண்டிதன். அன்றே அவர் தீர்மானித்து விட்டார், இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாமென்று. சுர வேகம் வந்தது போல் நீங்கி நலம் பெற்றதும், மனைவியிடமும் கூறவில்லை. புறப்படும் போதும் சொல்லத் தகுந்த விஷயமல்லவே என்றிருந்தார். விவரம் அடிகள் அறிய வேண்டும். நாளை கிருத்திகை-திங்கள்-இது முன்பனி.

அம்மையப்ப பிள்ளை சொல்லாத - சொல்லத் தெரியாத விவரங்களும் உண்டு.

இறைவன்வாளை உருவிக் கொண்டான். வாள் செய்து தந்தவனை மட்டும் பக்கத்திலிருத்திக் கொண்டான். கருவறையில் பூசனை செய்ய வந்த அறிவர் - ஆதி சைவர் நடுங்கினர். நீங்கள் எல்லாருமே போய் விடுங்கள். நீங்கள் எல்லாருமே கொலை செய்தவர்தாம். உங்கள் உறவு ஆட்கள்-வயல்வெளி மாந்தரையும் அழைத்துக் கொண்டு நீங்குங்கள். கொங்கணத்திலிருந்து வந்த பட்டர்கள் இனி கருவறையில் பூசனை செய்வர். அவர்கள் மடப்பள்ளியில் இனி இருக்க வேண்டாம். அவர் தம் மந்திர மொழி நன்றாகவே உள்ளது. இன்னொரு ஊருக்கு உங்கள் மறை மொழியொடு செல்க. வாள் வலி பெரிது - மழைக்கு இனி கோவிலில் ஒதுங்க முடியாது. கேட்ட குடி மக்கள் சொல்கிறார்கள். எங்களுக்கு எதுவும் தெரியாதே எங்கு செல்வோம் என்று-போங்களேன்-பழையபடி மலைக்கு-காட்டிற்கு-கடலுக்கு-இங்கே வேண்டாம். இவ்வயல்களை நான் பார்த்துக் கொள்வேன்-நீங்கள் வேண்டியதில்லை-வாள் பேசியிருக்கிறது-தீக்கடவுள் இனி உங்கள் பக்கமில்லை என்றுரைக்க அம்மக்கள் ஒவ்வொரு மூலையாகச் சென்றனர். தேனெடுக்க- எருமையின் பின்னால்-மீன் பிடிக்க, கடலுக்கென்று-சிலர் இரவலராக - ஒரு கூட்டம் தந்திரமாக வேறு திசை செல்கிறது - போகட்டும் - கொஞ்ச காலந்தான் - ஒரு நீலி வரும் வரை. அவர்கள் பொறுத்திருக்கட்டும் - தீ விடாது - ஒரு நாய் அஞ்ஞானமாய் குரைக்க, வெகு தூரத்துப் புதரில் நரியொன்று கை கொட்டிச் சிரிக்கும்.

பின்னாளில் மருதநில மாந்தர் நீதி தவறி தீயில் மாண்டதாக பழையனூர் ஏடு கூறிற்று.

() () ()

பேருந்து நிலையம் நோக்கி நடந்தனர்.

"அந்தத் தாடிக்காரரை நீ திரும்பவும் பார்க்கலியா?"

"ரொம்ப வருசம் கழிச்சு ஒரு தடவை பார்த்தேன். விசேடமா ஒண்ணும் சொல்லல்லே. ஞாபகம் மட்டும் இருந்தது. அப்புறம் சென்னை வந்த பிறகு வருசந்தோறும் வாரேன்-அவ்வளவுதான்."

காப்பிக் கடைப் பக்கம் சென்று பைகளை எடுத்துக் கொண்டு அம்முதிய பெண்மணிக்கு பணமும் தந்துவிட்டு, கேட்டார் நடராசன்.

"உங்கப்பாவுக்கு சோதிடத்திலே நம்பிக்கையிருந்ததா?"

"இல்லவேயில்லை" என்றான் முத்துக்கறுப்பன்.

 

"அதென்னது."

"ஆமா - சாத்திரத்திலே உங்க சென்மங்க எல்லாம் சொல்லி இந்த நாளைக்கு இந்த நேரத்திலே வந்து சோதிடம் பாப்பீங்க அப்படிங்கற செய்தியும் அந்த ஓலையிலேயிருக்கும்."

நடராசன் மகிழ்ச்சியுடன் அதிர்ந்து போய் விட்டார். இது ஒரு செய்திதான் அவருக்கு. உடனேயே பார்க்க முடிவும் எடுத்தார்.

"அறுபது ரூபா வரைக்கும் ஆகலாம் - அதுவும் ஒரு காண்டம் தான்" என்றான் முத்துக்கறுப்பன். யோசனை செய்ய வேண்டிய விஷயம்.

"நீ என்ன சொல்றே - பாக்கலாமா வேண்டாமா அதைச்சொல்லு. இத்தனைப் பேசறியே, இந்த சாத்திரத்திலே நம்பிக்கை இருக்கு இல்லை அப்படின்னு சொல்ல மாட்டேங்கறியே - 'டக்'குன்னு ஒளிவு மறைவில்லாமப் பேசேன் - இப்போ நான் சொல்றேன் - உனக்கு இதிலே நம்பிக்கையிருக்கு - கோவில் இந்த சாத்ரம் எல்லாத்திலேயும் நம்பிக்கையிருக்கு - என்னங்கறே."

"அப்படியும் இருக்கும் சார் - ஆனா அது அவசியமில்லே. இப்போ ஏதோ ஒண்ணி நம்பிக்கை வைச்சா மருந்து சாப்பிடறாப்பிலே நல்லது அப்படின்னு தெரிஞ்சா நல்லதா எடுத்துக்கங்களேன். இப்படிச் சொல்றதுதான் ஒளிவு மறைவில்லாத பேச்சு. இந்த சோதிட சாத்திரம் நான் பாத்திருக்கேன். எனக்கும் ஏதோ ஒரு வித நம்பிக்கை ஆசை எல்லாம்தான். செவ்வாயும் சனியும் இருக்கிற இந்த வெளியிலேதான் நாமும் இருக்கோம்."

நடராசன் நம்பிக்கையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.

"அதுக்காக நீங்க பிறந்த இடம் அப்பா அம்மா பேரு எல்லாமே இந்த ஓலையிலே எழுதி வைச்சிருக்காங்கன்னு ஏன் நம்பணும் - சோசியம் உண்மையா பொய்யா அப்படின்னு கேட்கிற கேள்வியே இங்க வரலையே. அஞ்சாயிரம் வருசமா எத்தனையோ நம்பிக்கை - ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்ணு. உலகத்திலே இந்தப் பக்கம் கோவில் அப்படி இப்படின்னு. வேறே இடத்துக்குப் போனா, இடத்தையே கும்பிடலாம். சாப்பாடு போட்டவனை-நம்மை காப்பாத்தின ஒரு பலசாலியை - நல்லதுன்னு நாம நினைக்கிற குணத்தைக் கொண்ட ஆளை - இப்படி எல்லாரையும் கும்பிட்டாச்சு. பெருஞ்சோறு போட்டவன், வீடு கட்டித்தந்தவன் எல்லாம் கூட இந்த ரகம்தாம். அந்தக் கடவுளைக் கும்பிடாதே என்னைக் கும்பிடு அப்படின்னு ஒரு கடவுள் சொல்லும். கடவுளுக்கிருக்கிற கவலை அப்படி - இப்படி ஒவ்வொருச் சங்கிலியா வந்து கிட்டு இருக்கு. முதல் சங்கிலித் துண்டு கடைசித் துண்டுன்னு கிடையாது. ஆனா எந்தச் சங்கிலித் துண்டும் எங்கேயும் போயிடல்லே. எல்லாம் புள்ளிகளா இங்கேதானிருக்கு. நாமும் புள்ளிங்கதான் - சார் இங்கேயிருந்து செவ்வாய்க் கிரகத்தைப் பார்க்கிறோமில்லியா - அங்கேயிருந்தும் பார்க்கலாம். ரெண்டு புள்ளிங்க ஏதோ சந்தர்ப்பத்திலே ரகசியம் பரிமாறிக் கொள்ளலாம். அந்த விசேடம் கொஞ்ச காலத்துக்கு. அந்தக் காலமே அஞ்சாயிரம் வருசம் ஆகிப் போச்சு. எல்லா விசேடமும் நம்பிக்கையைத் தான் கொண்டு வரும். எனக்கு உங்க மாதிரி நம்பிக்கையில்லை - கோவில் எதிலேயும். அதுக்காக நான் இங்க வரல்லே."

"ஓ சரிதான் - கோவிலிலேயே நம்பிக்கையேயில்லைன்னா இந்த சோதிட சாத்திரத்திலே என்ன வாழுது."

"அப்படி நீங்க ஏன் எடுத்துக்கணும். தெரியாத ஒண்ணை கடவுள்னு சொல்லிக்கிட்டுத்தான் கடைசி வரைக்கும் இருக்கப் போறோம். இனி மேலும் தெரிஞ்ச கடவுளை தள்ளிப் போட்டுட்டு இருக்கப் போறோம் - நாகரீகப் புடவை சமாச்சாரம்தான்."

புரியவில்லை என்பது போல நின்று கைவிரல்களைத் தாளம் போட பயன்படுத்தினார் நடராசன்.

"சார் - ஒரு கருத்தரங்கத்திலே நண்பரொருவர் கேட்டார் - ரொம்ப நல்லாயிருந்தது. ஆபாசம் - ஆபாசம்னு சொல்லிக்கிட்டிருக்கீங்களே, கடவுளை விட எது ஆபாசம்? அப்படின்னு."

"ஐயையோ."

"அது கேள்வியில்லை சார் - பதிலுக்குப் பதில் - நினைச்சுப்பாருங்க - இந்த இடத்தையே பாருங்க. இதெல்லாம் இத்தனை குடியிருப்புக் கொண்டதாகவா இருந்திருக்கும். எல்லாம் வயல்களுக்கு மத்தியிலேயிருக்கும் பத்து பதினைஞ்சு குடியிருப்பாத்தானே இருந்திருக்கும். அதுக்கு முன்னாலே இங்கே எத்தனை எத்தனை மிருகங்களை விரட்டியிருக்கணும் - எத்தனை தடவை அதுக எல்லாம் இடத்தை மறக்காம வந்து திரும்ப திரும்ப சுத்தியிருக்கணும். அதுகளின் பொந்தும் புதரும் எத்தனை தீயில் பொசுங்கிப் போயிருக்கும். அதுக திரும்பவும் இங்க வந்தா விரட்டலாம். அல்லது வரக்கூடிய நேரத்தைத் தெரிஞ்சுக்கிட்டு தீயைக் கொளுத்தி மேளத்தைக் கொட்டி பயமுறுத்தலாம். அதெல்லாம் செய்து மறந்தும் போச்சு - மேளம் கொட்டற நேரத்தை மட்டும் மறக்காம கொட்டறோம். மிருகங்கள் இல்லே இப்போ - எல்லாம் மாறிப் போச்சு - மறந்து போச்சு - இன்னொண்ணு - மறக்காமலிருந்தா அடிபடுவே அப்படின்னு சொன்னான் ஒருத்தன் - அவன் பலசாலி. மத்தவங்க பணிஞ்சாகணும் - இனிமே தீயை வயல் வெளிலே மூட்ட வேண்டாம் நிரந்தரமா என்னுடைய இடத்திலேயே வைச்சுடலாம் - நீங்க வந்து கும்பிடலாம் அப்படிண்ணும் சொன்னான் - நல்லதுதானே - கும்பிடு போட்டுக் கிட்டேயிருந்தா நெல் விளையாது - வேலை நடக்கணும் - பயிர் உண்டாகணும் - வேலையைப் பாருங்க அப்படின்னான். இந்த இடம் அப்படி உண்டாச்சுது மிருகங்களும் இந்த இடத்தில் குறைஞ்சு போச்சு. சிலது வேறே இடத்துக்கு ஓடிப் போச்சு. அங்கேயும் தீ இருக்கும் - நேரத்திற்கு மேளம் கேட்கும் - இந்த மாதிரி இடமும் உண்டாகும்."

நடராசன் மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். எதிர் கேள்வி ஏதுமில்லை.

திடீரென பின்வரும் வெண்பாவொன்றை சொல்லி நிறுத்தினான் முத்துக்கறுப்பன்.

செந்தில் முருகா திருமால் மருகாவென்
சிந்தை குடிகொண்ட தேசிகா - வந்தினிய
நந்தமிழ்ச் சோலையில் நண்பர் நடராசன்
சந்ததம் வாழவரம் தா.

"இதென்னது - கவிமணி பாடினது மாதிரியிருக்கு."

முத்துக்கறுப்பன் சிறிது சிரிப்புடன் "அவருடையதுதான் - நான் கொஞ்சம் மாத்தி உங்க பேரை போட்டேன. இப்ப நினைச்சுப் பாத்துச் சொன்னதுதான்" என்றான்.

'மா' முன் நிரையும் 'விள' முன் நேரும் சரியாக இருக்கிறதாவென்று கணக்கிட்டுக் கொண்டிருந்தார் நடராசன்.

"நல்லாத்தானிருக்கு" என்று முகமலர்ச்சியுடன் சொல்லிவிட்டு "என்ன இப்ப திடீர்னு கவிலே இறங்கிட்ட" என்று கேட்டார்.

"நான் ஒரு நிமிஷத்திலே இதைச் சொல்ல முடிஞ்சா, ஒரு மணி நேரத்திலே எத்தனை எழுதலாம் - சொல்லுங்க - ஏட்டிலே பாட்டிருக்கு அப்படீன்னு சொன்னேளே - தேசிக விநாயகம் பிள்ளை கிட்டேயிருந்து கொஞ்சம் நான் எடுக்க முடிஞ்சா, எத்தனை தமிழ்ப்பிள்ளைங்க இங்க இருந்திருக்கா - ஒவ்வொருத்தர்கிட்ட இருந்தும் வரி எடுத்து பத்து, இருபது, அறுபது பாட்டுன்னு எழுதி சந்திரன் எழிலே - பெண்ணால் துன்பம் - செவ்வாய் மூணிலே - தைரியம் அப்படின்னு போட எவ்வளவு நேரமாகும் - அல்லது ஏற்கனவே நாளும் நேரமும் கணக்குப்படி எழுதி வைக்க எவ்வளவு நேரமாகும்."

"அது சரி-எங்க அப்பா அம்மா பேரு வருதாமே."

"அதுவும் அப்படித்தான். முதல் எழுத்து இதுதானே இதுதானே என்று கேட்டு ஏட்டைப் படிச்சுக் காட்டினா, நீங்க தலையாட்டுற பேருதான் அப்பா அம்மா பேரு."

நடராசன் மௌனமாக இருந்தார். அவன் மீது கோபங்கூட ஏற்பட்டது.

"பின்னே எதுக்குத்தான் கோவிலுக்கு வந்தே - சொல்லு - இப்படி இந்த இடத்தில் நிண்ணுக்கிட்டிருக்கவா."

முத்துக்கறுப்பனின் மௌனத்தில் 'ஆமாம்' இருந்தது.

"ஆமா" என்றான்.

"முப்பத்தஞ்சு வருசம்" என்றான்.

"எங்க அப்பா இந்த இடத்திலேதான் செத்து விழுந்தாரு - வயது எனக்கு அப்போ..." என்று சொன்னவன் குரலில் தளர்ச்சியில்லை.

() () ()

பத்து வயதிருக்கும். அந்த வயதிலே அவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு போக வேண்டாமென்றுதான் அவன் தகப்பனார் கூறினார். ஆனால் தாயாரின் வேண்டுதல் ஒன்று உண்டு. அவனால் போய் வர முடியாதாகையால் மகன் போய் வந்தால் நல்லது என்று நினைத்தான். வேண்டுதல் நடக்க வேண்டும்.

வெகுதூரம் என்றுதான் சொன்னார்கள். முதலில் இராமேசுவரம் - பிறகு இந்தக் கோவில். கடைசியாக காளத்தி. அங்கிருந்து சென்னைவந்து வீடு திரும்ப வேண்டும். ஒரு வாரம் ஆகி விடும். தகப்பனாரின் ஆரோக்கியத்திற்கு ஒன்றுமில்லை. பையன்தான் பூஞ்சை உடம்பு. வருடந்தவறாமல் ஏதாவது ஒரு நோய் பற்றிக் கொள்கிறது. வேண்டுதலே அவனைப் பற்றியதுதான் - போய் வரட்டும்.

இராமேசுவரத்தில் கஷ்டமில்லை. தகப்பனார் பல தடவை போய் வந்த இடம். அடுத்தநாள்தான் இந்த கோயில். மடத்தில் தங்கிவிட்டு கோவில் சென்று திரும்பி, பிச்சைக்காரர்களுக்கு இரண்டு நாணயங்களைத் தந்துவிட்டு நடந்தபோது தென்பட்டது. இந்த சோதிடம். எழுத்துக் கூட்டி அதைப்படித்தான். 'அது என்ன அப்பா' என்று கேட்டான். தகப்பனார் பதில் சொல்லவில்லை. அவன் கையைப் பற்றி விருவிருவென்று நடந்து மடத்திற்கு வந்து சேர்ந்தார்.

மடத்தில்தான் சாப்பிட்டார்கள். அங்குள்ள தாடிப் பெரியவரோடு அப்பா பேசிக் கொண்டிருந்தார். இரவு தங்கிப் போகலாம் என்று அவர்தான் வற்புறுத்தினார்.

இத்தனை தூரமுள்ள இடத்தில் இந்தப் பெரியவரை அப்பாவுக்கு எப்படித் தெரியும் என்று அவன் யோசித்துப் பார்த்தான்.

மாலையும் கோவிலுக்குச் சென்றார்கள். இரவு வெகு நேரம் வரை பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். திருக்காளத்திக்குப் போவது பற்றியிருக்கும் என்று அவன் நினைத்துக் கொண்டே தூங்கி விட்டான். அவர்களின் சிலவகை பேச்சுகளின் மொழியே அவனுக்குப் புரியவில்லை.

காலை மடத்தில் விடை பெற்று பக்கத்தில் வண்டியேறும் இடத்திற்கு வந்ததும், நேரம் இருந்தால் ஒரு நடை நடந்து கோவில் வெளிப்பக்கமிருந்தே ஒரு கும்பிடு போட்டு வந்து விடலாமென, அப்பா அவன் கைகளை பிடித்துக் கொண்டு நடந்தார். கிருத்திகையானபடியால் முருகவேளின் சந்நிதியில் கூட்டமிருக்கும்.

"லேய்-நீ தைரியமா இருக்கணும். எல்லாத்துக்கும் வழி உண்டு. எது வந்தாலும் கலங்கக் கூடாது. ஏத்துக்கணும் - அது முக்கியம்."

 

முதற்தீ எரிந்த காடு

காலை நான்கு மணிக்கே அங்கு சென்று விட முடியும். காப்பி கிடைக்கலாம். குளிப்பதற்கு வெந்நீர் வேண்டும். மூன்று பேரில் ஒருவருக்கு கணக்கிலடங்காத நோய்கள். அறையொன்று தேடிப் பிடித்து, குளித்து விட்டு கோவில் - ஊர் எல்லாவற்றையும் பார்த்து அங்கிருந்து திரும்பும் வழியில் பக்கத்து ஊர் வந்து பகலுணவு சாப்பிட்டு விட்டு மாலையில் அம்பலவாணரைக் கும்பிட்டு இரவு சென்னை திரும்ப வேண்டும்.

இதுதான் முறைப்படி போட்ட அட்டவணை. அதன்படியே எல்லாம் நடந்தேறி விட்டது. காலை நாலரை மணியிருக்கும். சென்னை விரைவு வண்டி அங்கே நிற்காது. மாயவரம் சென்று விடும். நடத்துநரிடம் கேட்டுக் கொண்டபடியால், வண்டி நின்றது. நன்றி சொல்லி விட்டு  இறங்கினால் எதிரிலேயே ஒரு காப்பிக்கடை. அதோடு சேர்ந்து வீடு. பின்கட்டில் குடியிருப்புகள் இருக்கலாம். கடைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள், ஒரு முதிய பெண்மணி. "சுடு தண்ணி வேணுங்களா-இங்கேயே குளிச்சுடலாம்" என்று சொல்லவும், மூவரில் மூத்தவரான நடராசன் அந்த அம்மாளுக்கு ஒரு கும்பிடே போட்டு விட்டார். ஒரு தடவை திருத்தணி போய் பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு, தலையைக் கூட துவட்ட முடியாத நிலையில் உடல் நடுங்கி, கொண்டு வந்திருந்த மருந்தை அந்தக் குளியலறையில் இருந்து கொண்டே சாப்பிட்டவர்.

குளியல் பிரச்னை தீர்ந்தது. மூவரில் தட்சிணாமூர்த்தி இளையவன். மார்கழி, தை, சித்திரை, வைகாசி எல்லாம் அவனுக்கு ஒன்றுதான். அப்படியும் ஓர் ஆள் உடனிருக்க வேண்டும். ஊர் விட்டு வந்து வேறிடத்தில் படுத்துக் கொண்டால், பண்டுவம் யார் பார்ப்பது?

தட்சிணாமூர்த்தியை அப்படியெல்லாம் மட்டும் சொன்னால் போதாது. அவன் சுத்த சைவம். எல்லா சிவன் கோவில்களையும் பார்த்தாகிவிட்டது. ஸ்தல புராணங்களை யாராவது சொன்னால், அந்தக் கோவிலுக்குச் செல்லும் வழியைக் கேட்டுத் தெரிவான். ருசிகரமான இன்னொரு விஷயம் அவன் கையோடு கொண்டு வரும் உணவுப் பண்டங்கள். சாதாரணமாக ஹோட்டலில் சாப்பிடுவதையோ தங்குவதையோ விரும்ப மாட்டான். சில கோவில்களுக்குச் செல்லும்போது சென்னையிலுள்ள ஆதீன அலுவலகக் கடித மூலம் அறிமுகம் செய்து கொண்டு மடத்துச்சாப்பாடே கிடைக்கும்படிச் செய்வான்.

நடராசன் மாமிச பட்சிணியானாலும், அதெல்லாம் சில குறிப்பிட்ட நோய்க்கு அந்தச் சாப்பாடு அவசியமிருப்பதால் அப்படி - மற்றபடி தமக்கு அதில் இஷ்டமில்லை என்பார். நோய்களைக் கிரகங்கள் ஆட்சி செய்வதால் அந்தந்த நோய்க்குத் தகுந்தாற்போல கிரகங்களின் இருப்பிடக் கோவில்களுக்குச் சென்று வணங்குவார். ஆனால் அவர் தம் நோய்களைக் கணக்கில் கொண்டால், கிரகங்களின் எண்ணிக்கை அற்பம். எல்லாவற்றிற்கும் மேலாக போன வாரம், அவர் படுத்துக் கொண்டிருக்கும்போது, இசைகேடான இடத்தில் ஒரு பல்லி விழுந்து, பலன் பார்த்ததில் வயிறு கலங்கிற்று. இரத்த காயத்திற்கும் செவ்வாய் கிரகத்திற்கும் சம்பந்தம் உண்டு. எனவேதான் இந்த ஊர் விஜயம்.

இந்த மூவரில் முத்துக்கறுப்பன் வந்திருக்க வேண்டிய அவசியம் மற்றவர்களுக்குத் தெரியாது. அவன் மற்ற இருவரையும் போல சிவ பூசனை செய்பவனல்லன். சொல்லப் போனால் கடவுளை நிந்திக்கவும் மாட்டான். நிந்திக்க வேண்டுமானால் ஒன்று இருந்தாக வேண்டுமல்லவா? ஆனால் இந்தக் கோவிலுக்குப் போகப் போவதாகச் சொன்னதும், தானும் வருவதாகச் சொன்னான். ஒரு வகையில் இந்த முத்துக்கறுப்பன் கோவில்கள் பற்றிய வரலாறுகள் அனைத்தும் அறிந்த பண்டிதன். ஆவுடையார் கோவிலுக்குப் போக மற்ற இருவருக்கும் எண்ணம் வந்ததே இவன் சொன்ன சில விவரங்களால்தான். ஆனால் உடன் வர மறுத்தான். இப்போது இந்தக் கோவிலுக்குப் போவதாகச் சொன்னதும், தானும் வருகிறேன் என்று புறப்பட்டு விட்டான் - அதிசயம்தான்.

கடைப் பக்கத்திலுள்ள ஓர் இருக்கையில் மூவரையும் உட்காரச் சொல்லிவிட்டு, அவர்கள் குளிக்க வெந்நீர் ஏற்பாடு செய்து விட்டாள். அம் முதிய பெண்மணி. அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. குறித்தவுடன் கிடைத்த காப்பியும் நன்றாகவேயிருந்தது. வேட்டி மாற்றிக் கொண்டு மூவரும் வெளி வருகையில் பலபலவென விடியத் தொடங்கியிருந்தது. கொண்டு வந்த பைகளை அவ்வீட்டிலேயே விட்டிருந்தனர். பணந்தர முயற்சித்தபோது, 'போகும்போது தந்தால் போதும்' என்று அந்த அம்மாள் சொல்லி விட்டாள்.

எனவே அறை தேடி அலையும் பிரச்னை இல்லை. மெதுவாக நடந்து சென்றனர். சிகரெட் வாங்க முத்துக்கறுப்பன் முயன்றபோது, நடராசன் தடுத்து விட்டார். மடத்திற்கு சென்று கொண்டு வந்த கடிதத்தைக் காட்டிவிட்டு அப்புறம் கோவில் செல்லலாமே என்று தட்சிணாமூர்த்தி சொன்னதையும் 'வேண்டாம்' என்று மறுத்தார்.

"நேரா கோவில் - மற்றது எல்லாம் அப்புறம்."

முத்துக்கறுப்பன் வழி காட்டினான். சென்னையை விட அந்த ஊர் பழக்கப்பட்டது போல் நடந்தான். கோவில் தூரமில்லை. சொல்லப் போனால் அது ஒன்றுதான் அடையாளந் தெரிகிற இடம். "இங்கே சோதிட சாத்திரம் பாக்கலாம்" என்று ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினான். நடராசன் யோசித்து விட்டு, சிறிது நேரம் அந்த இடத்தையே பார்த்தார். 'சாதகம் கொண்டு வரலையே' என்று வருத்தப்பட்டார்.

"தேவையில்லை - ஒரு விரல் ரேகை போதும்."

"அதெப்படி? கிரகபலன் கண்டு பிடிக்க வேண்டாமா என்ன - நாளும் நேரமும் தெரியணும் - இது ரேகை சாத்திரமில்லை."

"இல்லே சார். நீங்க கைரேகை கொடுக்கறீங்க - அவங்க ஏடுதேடிக் கண்டு பிடிச்சு பலன்களைப் படிப்பாங்க - முன்பின் சென்மங்க எல்லாம் தெரியும்."

"அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கேன் - அப்ப சாதகம் வேண்டாங்கறியா."

"எதுமே வேண்டாம் - கொஞ்ச நேரம் உங்ககிட்ட பேசிக் கிட்டிருந்தா நானே சொல்லிடுவேன் எல்லா பலனையும்."

"இதுதானே வேண்டாங்கறது - அப்பா பேரு அம்மா பேரு கூடவா சொல்ல முடியும் - அதுவுமா ஏட்டிலே இருக்கும்."

"ஏட்டிலே தானாக எப்படியிருக்கும் - எழுதி வைச்சாத்தான் இருக்கும் - இல்லே மனசிலேயாவது அழியாம எழுதி வைச்சிருக்கணும்."

கோவில் எதிராக வந்து நின்றபோது, இவர்களை காலை வண்டியிலேயே கவனித்துவிட்ட பூசனைப் பொருள் வியாபாரி அருகே வந்து நின்றான்.

இரண்டு தட்டு வாங்கிக் கொண்டனர். முத்துக்கறுப்பன் வேண்டாம் என்று சொல்லி விட்டான்.

"ரொம்ப பழைய கோவில்" என்றார் நடராசன். அவர் இங்கு வருவது இதுதான் முதல் தடவை. தட்சிணாமூர்த்தி இவ்வாராய்ச்சிகளுக்கு அப்பால் - கும்பிடு போடுவதோடு சரி.

"இன்னும் நேரமாகல்லே. கொஞ்சம் இப்படி நிற்கலாம்" என்று நடராசன் கூறவும், எல்லாருமாக கோவிலின் எதிர்த்தெரு முனையில் சென்று நின்றனர்.

"அப்போ இந்த நாடி சாத்திரம் எல்லாம் வெறும் பம்மாத்து தானா" என்று நேரடிக் கேள்விக்கு வந்தார் நடராசன்.

"சார் - நாம உண்மையா நம்பற சில விஷயங்க கூட வெறும் பம்மாத்துத்தான். நம்பணுங்கற ஆசை - சில சமயம் வெறி - உள்நோக்கம் - ஒரு ஐயாயிரம் வருசமா இருந்துகிட்டிருக்கிற எண்ணம். அது நம்ம ரத்தத்திலேயிருக்கு - நம்பறதுக்கு காரணம் இருந்தா, அதை பம்மாத்துன்னோ மோசடின்னோ எப்படிச்சொல்ல முடியும்."

"ஆசைதான் காரணங்கிறே நம்பறதுக்கு இல்லையா?"

நடராசன் சில விஷயங்களில் பேச்சை விடாது பேசுவார். சலிக்க மாட்டார். ஆனால் முத்துக்கறுப்பன் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன சார் போலாமே" என்று மெதுவாகக் கேட்டான் தட்சிணாமூர்த்தி.

"ஆமாமா - போலாம்" என்று நடராசன் சொல்லவும் மூவரும் அந்தக் கோபுரத்தைப் பார்த்தவாறே கோவிலுக்குள் நுழைந்தனர்.

() () ()

பரந்து கிடந்த அந்தக் கோவில் பிரகாரங்களின் வழி நீண்டு செல்ல, நடராசன் அதிசயித்தார். காலை பூசனை முடிவுறவில்லை. கும்பிட்டுவிட்டு, மூலவறையில் பிரகாரத்தைச் சுற்றும்போது, நடராசன் அங்கிருந்த மூன்று வித்யாசமான அளவு கொண்ட இலிங்கங்களைக் கண்டார். முத்துக்கறுப்பன் அப்பகுதியின் மேலுள்ள சுவரெழுத்துக்களைக் கவனித்துப் பார்த்தான். அவன் ஏற்கனவே இவைகளையெல்லாம் கண்டிருக்க வேண்டும்.

முத்துக்குமரனையும் கும்பிட்டாயிற்று. சுற்றுப் பிரகாரத்திலிருந்த நவக்கிரகங்களையும், செவ்வாய்க்கென இடம் பெற்ற சந்நிதானத்தையும் நடராசன் பயத்துடன் கும்பிட்டுக் கொண்டார்.

அக்கணமே அவருடைய நோய் ஒன்றின் குணம் தென்பட்டது.

கோவிலின் பிரசாதமான உப்பையும் வாங்கிக் கொண்டார்.

வெளியே வந்தபோது, முத்துக்கறுப்பன் அங்கே வரிசை பெற்றிருந்த நபர்களில் ஓர் ஆண் - ஒரு பெண் இருவருக்குமாக சில நாணயங்களை அளித்தான்.

நடராசன் மூன்று கேள்விகளைத் தொடர்ந்து கேட்க நினைத்திருந்தார். பிச்சை போட்டு விட்டு முத்துக்கறுப்பன் விடுவிடுவென நடந்து கோவிலுக்கு எதிராக, முன்னர் எல்லாருமாக நின்று கொண்டிருந்த எதிர்த் தெரு முனையில் போய் நின்றான். அந்த இடத்தின் தரையைச் சுற்று முற்றுமாகப் பார்த்தான்.

நடராசன் இப்போது நான்கு கேள்விகளைக் கேட்க நினைத்தார். தட்சிணாமூர்த்தி மெதுவாக "என்ன சார் - பலகாரம் சாப்பிட்டு விடலாமா" என்று கேட்டான். இருவரும் முத்துக்கறுப்பன் பக்கமாக வந்து நின்றனர்.

முத்துக்கறுப்பன் நகரவில்லை. நின்றவிடத்தையும் அந்தப் பிச்சைக்காரர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆயாசம் தீர நடராசன் கொஞ்ச நேரம் கோபுரத்தையும் வானத்தையும் பார்க்க, தட்சிணாமூர்த்தி வருவோர் போவோரில் மடத்து ஆட்கள் தென்படுவார்களா என்று கவனித்துக் கொண்டான். கூட்டம் அதிகமில்லை.

"அப்ப இந்த சோதிடம் பாக்கணுமா வேண்டாமா - சொல்லு" என்று கேட்டார் நடராசன் திரும்பவும்.

"பாருங்களேன் - ஒரு வேளை அதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சுத் தான் நீங்க அங்க போகணும்னு இருக்குதோ என்னவோ."

 

முன்றில்

‘முத்திப் போச்சு’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஆவடையப்பப் பிள்ளை. பேத்தியின் சாமர்த்தியத்தைச் சொல்லிக் காட்டுவதில் சலிப்பில்லை. கேட்பவர்களுக்கும் அது தெரியும். குட்பதன் மூலம் பலவகையான கடன்களை அவர்கள் அடைத்து விடுகின்றனர்.

பேத்திக்கு தன்னைப் பற்றிய விமர்சனம் மீது அக்கறையில்லை. முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். வீட்டு வாசலில் ஏறும் போதே, அவள் முற்றத்தில் காட்சி தருவாள். ஏப்போதாவது பக்கத்து வீட்டுக் குழந்தை விளையாட வருவதுண்டு. யாரும் வரவில்லை யென்றாலும், ‘‘கீச்சு கீச்சு தம்பலம்’’ முதல் பாண்டி விளையாடுவது வரை தானே இரண்டு பேராக விளையாடி முடிக்க முடியும்.

‘‘அப்பா ஞாபகம் ஏதாம் வரதுண்டா’’ என்று வந்தவர் ஒரு தடவை கேட்டதற்கு, ஆவடையப்பர் ‘ம்’ என்று சொல்லி தலையசைத்து விட்டார். பிறகு வந்தவர் போவது வரை எதுவும் பேசவில்லை.

தொழுவத்தில் மாடு கூப்பிட்ட சப்தம் கேட்டது. கூறிது நேரம் அந்தப் பக்கம் பார்த்திருந்து விட்டு குழந்தை படபடவென வீட்டினுள் ஓடியது. ஊறங்கிக் கொண்டிருந்த ஆச்சியை தாறுமாறாக எழுப்பி விவரம் சொன்னது. ஆச்சி பால் கநற்து கொள்ள தொழுவம் செல்கையில், தூக்க முடியாது ஒரு செம்பைத் தூக்கிக் கொண்டது.

மழை பெய்யும்போது சன்னல் வழியாக மழையைப் பார்ப்பதில் குழந்தைக்கு ரசனை இல்லை. நடு முற்றத்தில் மழை பெய்வதைத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பார்க்க வேண்டும். முதற்தடவை மழையைப் பார்த்து பயந்தது பற்றி தாத்தா நீண்ட நாள் பேசிக் கொண்டிருந்தார். மழையை வரவழைக்க ஒரு மந்திரம் தனக்குத் தெரியும் என்று குழந்தையிடம் சொல்ல - பன்னிரண்டு தடவை ‘‘முருகன்’’ பெயர் சொன்னபோது - உண்மையிலே மழைத் தூற்றல் போட்டது. ஆனால் காலமில்லாத காலத்தில், மழையை வரவழைக்க மந்திரம் சொல்லச் சொல்லி அழ ஆரம்பித்தபோது, ஆச்சி திட்ட ஆரம்பித்தாள் கிழவரை. அவருக்கு வேண்டும்.

இது பரவாயில்லை. சாப்பிடும்போது ‘‘எனக்கு முத்தத்தில் வைச்சு சோறு போடு’’ என்று கேட்டால், எந்தக் கிழவிக்கும் கோபம் வரத்தான் செய்யும். முற்றத்தில் உட்காருவது தெருவில் இருப்பதைப் போல. நடந்து போவார் எல்லாருக்கும் சாப்பாட்டுக் கடை தெரியும். ஆச்சி கோபித்தால், கிழவர், ‘‘சரிதான்-அங்கேயே எனக்கும் சோத்தைக் கொண்டா’’ என்பார்.

‘‘ஏண்டி-மணியாச்சு-தாத்தாவை எழுப்பி சாப்பிடச் சொல்லு.’’

அடுக்களையிலிருந்து ஆச்சி குழந்தையை அனுப்பி வைத்தாள். ஆடி ஆடி ஆச்சிக்கு ஒரு வலிப்புக் காட்டி விட்டு தாத்தாவின் கட்டிலுக்குச் சென்றால், அவர் முகத்தின் மீது பஞ்சாங்கம் கிடந்தது. அதை எடுத்து, அவர் வீசுவது போல் தனக்கு வீசிக் கொண்டு, ‘என்ன உஸ்ணம்’ என்று அவர் மாதிரியே சொல்லிக் கொண்டது.

நேரமாகிக் கொண்டிருக்க ஆச்சி வந்து பார்த்தால், குழந்தை தாத்தாவிடம் ஒட்டிக் கொண்டு நல்ல உறக்கத்தில் இருந்தது. ஆச்சிக்கு சிரிப்பு. நல்ல கூத்து. கிழவரை எழுப்பினாள், ‘‘பாருங்க - உங்களை கூப்பிடச் சொன்னால், அதுவும் உறங்கியாச்சு’’ என்று குழந்தையை எழுப்பினாள். ‘‘இரேன்-கொஞ்சம் உறங்கட்டும், கன வெயில்’’ என்று தடுத்தார்.

முற்றத்தில் நல்ல வெயில். அதன் ஓரத்தில் ஒரு அவரையை படர விட்டிருக்கலாம். அப்படிச் செய்தால் ஆகாயத்தைப் பார்க்க முடியாது.

ஆகாயத்தைப் பார்த்தல் என்பது கிழவருக்கு முக்கியமான சங்கதியல்ல. தவிரவும் கழுத்துச் சுளுக்கு. ஆனால் எப்போதும் காகங்கள் பறந்து போகும்போது குழந்தை அவசரமாக வந்து தாத்தாவைக் கூப்பிடும். வீட்டு ஓடுகளில் துள்ளித் துள்ளி வரும் காகத்தை ‘‘எங்காக்கா’’ என்றும் தள்ளாடி வரும் ஒன்றை ‘‘தாத்தாகாக்கை’’ என்றும் சொல்லும். காகமும் ஆகாயமும் மிகவும் முக்கியம்.

பிற்பகலில்தான் அந்தக் கடிதம் வந்தது. ஓலைச் சுவடியைப் பிரித்து குழந்தையின் சாதகக் குறிப்பைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அது வந்தது. முற்றத்தின் நான்கு மூலைகளுக்குமாக குழந்தை ஓடிக்கொண்டிருந்தது.

‘‘நாக்குட்டித்
தங்கம் -
நான் செத்துப்
போனா-
நீ என்ன
செய்வே -
தெருவிலே
நிப்பேன்
வாணிச்சி
வருவா -
புண்ணாக்குத்
தருவா -
புட்டுப் புட்டுத்
திம்பேன்.’’

கடிதத்தை மறந்து தொட்டு விளையாடுகிற பாட்டைக் கேட்டு நின்ற இருவரையும் கள்ளத்தனமாகப் பார்த்து சிரித்தது குழந்தை.

‘‘எழுதி இருக்காராக்கும்’’ என்று இபுத்த குரலில் கேட்டாள் கிழவி.

பதில் சொல்லும் சுரத்தில் கிழவர் இல்லை. உடம்பில் நடுக்கம் இருந்தது. அவர் யோசித்துக் கொண்டிருந்தார்.

‘சடக்’கென மடியில் வந்து விழுந்தது குழந்தை.

இருவரின் முகங்களை ஒரு தடவை பார்த்து விட்டு வாயைக் கோணிக் கொண்டது.

‘‘ஏட்டி - தேரோட்டம் பாக்க போகாண்டமா.’’

‘‘வேண்டாம் போ.’’

‘‘பஞ்சி முட்டாசி வேண்டாமா?’’

‘‘வேண்டாம் போ.’’

‘‘அப்பா வேண்டாமா அப்பா.’’

ஆச்சி கேட்க, சிணுங்கியது. கிழவர் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தார்.

அந்த ஊரின் பெயரைக் கொண்ட ரயில் நிலையத்திற்கும் அந்த ஊருக்கும் அவ்வளவு தொடர்பு கிடையாது. நடக்க வேண்டும். ஒற்றையடிப் பாதையாகவும் வழி மாறும். பாதைத் திருப்பத்தில் வேப்பமரம் ஒன்றிருந்ததால் மாலை நேரம் வந்து விட்டதால் ஆள் நடமாட்டம் அங்கு குறைவு. இந்த லட்சணத்தில் ஒரு ரயில் வண்டி அங்கே நிற்கும் நேரம் இரவு மூன்று மணி.

சுடலைமாடன் கோவிலையும் வேப்பமரத்தையும் தாண்டி நடந்தால் தூரத்தில் மூன்று ஓட்டு வீடுகள் தென்படும். இருக்கும் வேறு வாசஸ்தலங்கள் கண்ணிற்குப் புலப்படாது. தலையைத் திருப்பி அந்த வழியைப் பார்த்தால் ரயில் நிலையமும் தெரிய வராது.

தயங்கித் தயங்கி நடந்தால் நாய் மட்டும் குரைக்கும். மூன்று வீடுகளுக்குரிய நபர்கள் வெளித் திண்ணையில் படுத்திருந்தால் எழுந்து யாரென்று பார்ப்பார்கள்.

மூன்று வீடுகளையும் ஒரு பெண் தெய்வக் கோவிலையும் தாண்டி விட்டால் முன்பக்கம் விசாலமான திண்ணையுடன் கூடிய வீடு.

அவன் அங்கு வந்து சேருகையில் கிழவர் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு கையில் விளக்குடன் நின்று கொண்டிருக்கிறார்.

‘‘சம்பகம் சௌக்யந்தானே’’ என்று கேட்கிறார் கிழவர்.

தலையை பலமாக ஆட்டி இரண்டு தடவை ‘ஆமாம்’ என்கிறான்.

பூட்சை கழற்றி, தூசியைத் தட்டி உட்காருகிறான். முற்றத்தில் லேசாக ஈரம். சுற்று முற்றும் பார்த்துக் கொள்கிறான். இரண்டொரு விநாடி பாயிலே போர்த்திக் கொண்டு தூங்கும் குழந்தையிடம் செல்கிறது.

‘‘தூங்குதாக்கும்’’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறான்.

அதிகாலையில் மண்வெட்டியை தோளில் சாய்த்துக் கொண்டு நடந்த ஒருவன் சற்று நின்று வீட்டினுள் நுழைகிறான்.

‘‘என்னா - தம்பியாபிள்ளை எப்ப வந்தது’’ என்று உரிமையுடன் கேட்கிறான்.

அவன் எழுந்து நிற்கிறான். பதிலை எதிர் பாராது வந்தவன் பேசிக் கொண்டிருக்கிறான்.

‘‘பட்டணத்திலே நல்ல மழையாமே - நேத்தைக்கு ஆண்டிப் பிள்ளை வந்திருந்தான் மாமா. வந்து பாக்கணும்னு சொல்லிக் கிட்டி ருக்கான்’’ என்று கிழவரிடம் கூறிவிட்டு ‘‘என்னா - பல் தேச்சுருங்களேன்-யத்தே-இன்னும் காப்பி போடலையா’’ என்று குரல் கொடுக்கிறான்.

கதவில் ஆச்சியின் சேலைத் தலைப்பு மறைந்து, கொஞ்ச நேரத்தில் உமிக்கரியும் செம்பும் திண்ணை நடையில் வைக்கப்படுகின்றன.

அவன் பெட்டியைத் திறந்து பரஷை எடுத்த வண்ணம் குழந்தையை ஒரு தடவை பார்த்துக் கொள்கிறான்.

‘‘குட்டி தூங்குதா’’ என்று கேட்டு விட்டு வந்தவன் மண் வெட்டியுடன் புறப்படுகிறான்.

கிழவர் செம்பை எடுத்துக் கொடுக்கிறார். அவன் பழக்கப் பட்டவன் போல் ‘‘இப்படியே ஓடைக்கரை வரை போய் வாரேன்’’ என்கிறான்.

‘‘எதுக்கு இப்பதானே வந்தது - பிறகு போலாமே.’’

‘‘இல்லை, பாத்து ரொம்ப நாளாச்சே?’’

() () ()

வெளியே வெள்ளை சிறிதாகப் பரவி வந்து கொண்டிருக்கிறது. கலகலப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது.

ஓடை அங்கிருந்து வெகு தூரமில்லை. வயல் வரப்பிலேயே நடக்க வேண்டும். வரப்பிலே கஷ்டமில்லாது நடக்கிறான். ஊரின் கீழ் எல்லையில் அது ஓடிக் கொண்டிருக்கிறது. ஆற்றிலிருந்து பிரிந்து அதே ஆற்றில் போய்ச் செருவது வரை ஓடையாக அந்த ஊரைக் கடக்கிறது.

பல்லைத் தேய்த்துக் கொள்கிறான். யாருமில்லை. முதன் முறையாக இந்த ஓடைக்கு வந்தபோதும் யாருமில்லை. ஆனால் அவன் தனியாக வரவில்லை அப்போது.

பல்லைத் தேய்த்துக் கொள்கிறான். யாருமில்லை. முதன் முறையாக இந்த ஓடைக்கு வந்தபோதும் யாருமில்லை. ஆனால் அவன் தனியாக வரவில்லை அப்போது.

அசதியாகவிருந்தது. கல்லில் உட்காருகிறான். நீரோடும் சப்தத்தை தவிர வேறொன்றுமில்லை. ஓடையை மிக அனாயசமாக ஒர் ஆடுதாண்டிச் செல்கிறது.

() () ()

தூரத்தில் காகம் ஒரு தடவை கூப்பிடுகிறது.

கிழவர் முற்றத்தையும் ஆச்சி தொழுவத்தையும் இமைக்காது பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பசு அம்மா என்றலறுகிறது. அந்த ஒலியில்தான் என்ன மாயம் இருக்கிறதோ?

தலையணையையும் பாயையும் தூக்கிக் கொண்டு, தாத்தாவிடம் சிணுங்கிக் கொண்;டே வருகிறது குழந்தை.

இடுப்பிலிருந்த துணியை சரி செய்து விட்டவாறே ‘ஏய்-இதுக்கு முகத்தைக் கழுவி, புதுசு ஏதாவது போட்டு வை’ என்கிறார் கிழவர்.

குரல் கேட்டு ஆச்சி வெளிவருகிறாள்.

‘‘ஏட்டி எழுந்திருச்சிட்டியா-அதோ பாரு’’ என்று பெட்டியையும் தோற்பையையும் காட்டுகிறாள்.

மூஞ்சியைச் சுளித்துக் கொண்டே கண்களில் வியப்பு எழ, ஆச்சியைப் பார்த்து கைகளை விரித்துக் கொள்கிறது.

பல்லை விளக்கி உடுத்தி விடுகிறாள். சற்று நேரத்தில் சமையலறையில் பலகாரத்தின் வாசம் சூழ்கிறது.

புதுக்களையுடன் முற்றத்திற்கு வருகிறது குழந்தை. மணி ஏழடித்து முடிகிறது. சமையலறையில் ஆச்சி கண்களைத் துடைத்துக் கொண்டிருக்கிறாள். கிழவர் உள்ளே வந்தவர், ஒரு நிமிடம் அவளைப் பார்த்துவிட்டு அப்பக்கமாக நடந்து தொழுவத்திற்குக் கெல்கிறார். குழந்தையின் பாட்டுச் சத்தம் முற்றத்திலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறது.

சேற்றுத் தண்ணீரைக் குடித்து விட்டு ஆகாயத்தை நோக்குகிறது சேவல்.

திடீரென்று குழந்தையின் பாட்டு நிற்கிறது. மெதுவாக உள்ளே நுழைகிறான் அவன்.

கண்களை இரண்டு தடவை மூடி மூடி விழிக்கிறது.

‘‘என்னட்டி.’’

மெதுவாகச் சிரிக்கிறான். குழந்தை அவனை வெறிக்க வெறிக்கப் பார்க்கிறது.

கைகளை நீட்டுகிறான் அவன். ‘படக்’கென்று திரும்பி வீட்டினுள்ளே ஓடுகிறது. தொழுவத்திலிருந்து வந்து கொண்டிருந்த கிழவர் தூக்கிக் கொள்கிறார்.

காப்பி - பலகாரம் சாப்பிடும்போது, குழந்தையின் பார்வைக்கு தலைகுனிகிறான். ரொம்ப நேரம் முகத்தைத் தாழ்த்தி வைத்துக் கொண்டிருக்கிறான்.

கிழவரின் காதோடு ‘‘இதுதான் பட்டணத்து அப்பாவா’’ என்று கேட்கிறது குழந்தை - ரகசியமாக.

குழந்தையின் தலையிலே தன் கண்களை அழுத்திக் கொள்கிறார்.

() () ()

ஒரு சின்னப் பையில் துணிகளை அடைத்துக் கொண்டிருக்கிறாள் ஆச்சி. பெட்டியைத் துழாவி வளையலொன்றையும் - கொன் வளையல் - பைக்குள் போடுகிறாள். உள்ளறையின் இருளடைந்த சுவரிலிருந்த போட்டோவையும் நோக்கிக் கொள்கிறாள்.

தெருவிலே வண்டி குலுங்குகிறது. ‘‘இங்கே வாட்டி’’ என்று கைகளை நீட்டுகிறான் அவன்.

தொழுவிலே மாடு ‘அம்மா’ என்கிறது. உள்சுவரைப் பார்த்துக் கொண்டு ‘‘அப்போ போயிட்டு வாரேன்’’ என்று சொல்லிக் கொள்கிறான். குழந்தையிடம் ‘‘நீயும் ஆச்சிகிட்டே சொல்லு’’ என்கிறான்.

எங்கேயோ பார்த்திருந்துவிட்டு, ‘ஓ’ என்று கத்த ஆரம்பிக்கிறது குழந்தை.

குழந்தையைத் தூக்கிக் கொண்டு தானே முதலில் வண்டி யேறுகிறார் கிழவர்.

காற்சட்டையின் இரு பைகளிலும் கைகளை இட்டுக் கொண்டு, வாசற்படியருகே நிற்கிறான்.

முற்றத்தைக் கடந்து செல்லும் இடத்திலே, வாசற்படிக்குச் செல்லும் வழியில் இருந்த அகல்விளக்கு வைக்கும் மாடக்குழி எண்ணை படர்ந்து திருக்கார்த்திகையை நோக்கி நிற்கிறது. ரொம்ப காலத்திற்கு முன்பு கூட அது அப்படித்தானிருந்திருக்கிறது.

அதிலே கையை வைத்துக் கொண்டு, இன்னொரு கையால் அவனது முகவாயைத் தொட்டு, ‘எழுத்து போடாமலிருக்கக் கூடாது’ என்று ஒரு பெண் தெய்வம் பொங்கல் சமயம் கொஞ்சியது.

மாடக்குழிக்கு அழிவே இல்லை. எருமை மாட்டை சாட்டையால் விளாசிக் கொண்டிருக்கிறான் தெருவில் ஒருவன்.

மெதுவாக ‘‘அந்த போட்டோவையும் எடுத்து வையுங்கோ - சரசுவதி போட்டோவை’’ என்கிறான் அவன். விம்மலை எப்படியோ சமாளிக்கிறான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் வண்டியிலிருந்து இறங்கி, தள்ளாடிச்சென்று, போட்டோவை எடுத்து வருகிறார்.

தொடர்பே இல்லாத அந்த ஊர் ரயில் நிலையத்திற்கு வண்டி செல்கிறது.

() () ()

நிலையத்தில் கூட்டமில்லை. கையில் டிக்கட்டுடன் அவனும் குழந்தையுடன் அவரும் பெஞ்சில் உட்காருகின்றனர்.

குழந்தை அவர் கண்களைத் தடவுகிறது. ‘‘தேரோட்டம் பாக்க ஆச்சி வேண்டாமாக்கும்’’ என்று முணுமுணுக்கிறது.

அரைமணி நேரமாகி விடுகிறது ரயில் வர. பெட்டியில் ஏறி உட்காருகிறார்கள். ‘ஐயோ-என் பொஸ்தகமில்லியே’ என்று கேட்கிறது குழந்தை.

நேரமாகிறது. ‘‘கொஞ்சம் ஆரஞ்சுப் பழம் வாங்கிக்கிட்டு வாருங்க’’ என்று குழந்தையின் காதில் விழும்படி உரத்து கூறுகிறான் அவன்.

குழந்தையின் தலையைத் தடவியவாறு நின்று கொண்டிருக்கிறார் கிழவர்.

‘‘சீக்ரமாபோ-நேரமாச்சு-வாங்கிட்டு வா’’ என்று குழந்தையும் அவசரப்படுத்துகிறது.

நகர்கிறார். ஒரு மூலைக்குச் செல்கிறார். ரயில் நகர்கிறது. அதன் கூக்குரலையும் மிஞ்சி வேறு எதுவோ கேட்பது போலிருக்கிறது அந்தக் கிழவருக்கு.

வீடு வந்து படியேறுகையில், முற்றத்தில் அணில் ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது.

() () ()

பிறகு தொழுவத்தில் அந்த மாடு அவ்வளவாகக் கூப்பிடுவதில்லை. காகங்கள் வந்து போகும்.

வாசற்கதவை சாத்திவிடப் போன கிழவரிடம் ஒரு கடிதத்தைத் தந்துவிட்டு போனான் தபால்காரன்.

பட்டணத்திலிருந்துதான் கடிதம். என்னவென்று கேட்டவாறு வந்தாள் ஆச்சி;.

அவன்தான் - முத்துக்கறுப்பன்தான் - எழுதியிருந்தான். எல்லாரும் சுகமாகவிருப்பதாகவும் மாமாவும் அத்தையும் நலம்தான் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தான்.

குட்டி உடல்நலக் குறைவு எதுவுமில்லாமலிருந்தாலும், சில விஷயங்கள் சொல்லப்பட வேண்டியிருக்கிறது என்கிறான்.

அவர்கள் இருப்பது பட்டணத்தில் நல்ல வசதியான அடுக்கு மாளிகைக் கட்டிடமாகவிருந்தாலும், பிரச்னை அங்குதானிருக்கிறதாம். குட்டிக்கு, விளையாடுவதற்கு கட்டிடத்தின் மொட்டை மாடி இருந்தாலும், அவளுக்கு ‘முற்றம்’ தான் வேண்டுமாம். வேறு எதிலும் பிரச்னையில்லை.

நண்பர் ஒருவர் வெளிப்படையாகவே சொன்னாராம், இவ்வாறு குழந்தையின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமலிருப்பது தவறு என்று.

ஆனால் தனக்குப் புரிகிறது என்று எழுதியிருந்தான். முற்றமும் ஆகாயமும் என்ன பாடுபடுத்தியிருக்கக் கூடும் என்பதை அவன் அறிந்திருப்பதாகவும் கூறியிருந்தான்.

குழந்தையை அழைத்துக் கொண்டு ஊருக்கு இரண்டொரு நாளில் வருவதாகவும் அதில் எழுதியிருந்தான்.

சிறுகதைகள்

{load position article1}

 

வீடுபேறு

சாலை நெடுஞ்சாலையானது சமீபத்தில் தானிருக்க வேண்டும். முனிசிப்பாலிடி ஆவணக் கோப்புகளில் எந்தவிதச் சான்றுமில்லை. ஓங்கி நின்ற கட்டிடங்களும் சினிமா அரங்குகளுமே அதை நெடுஞ்சாலையாக ஆக்கியிருக்கும். இரண்டு மைல் அளவிற்கு அது நீண்டு சென்றது. இடையே கணக்கற்ற உணவு விடுதிகள் - கடைகள். அதன் இரு கோடிகளிலும் இரண்டு காவல் நிலையங்கள் அவசியமாகையால் அவைகள் எல்லைக் கற்களாக நின்றன.

நட்ட நடுவில் ஒரு சந்தை - இரண்டு பட்சிணிகளுக்கும் உதவிற்று.

நெடுஞ்சாலை போலவே அந்தப் பட்டிணத்தில் எல்லாமே மாறிவிட்டிருக்கின்றன. மாற்றத்தை அவர் கவனித்தவாறே வந்திருக்க வேண்டும். பேருந்துப் பயணத்தைக் கட்டாயமாக மேற்கொண்டு வந்தவர், சிரமப்பட்டு பிரயாணம் செய்தார். எதிர்பார்த்திருந்ததைவிட அதிகமாகவே சிரமம் இருந்தது. ஆந்ச் சாலையில் டிராம் வண்டியில் செல்ல முடியவில்லையே என்ற நிராசை ஏற்கனவே ஏற்பட்டாகிவிட்டது. எட்டு தடவை அந்த நெடுஞ்சாலையில் வண்டி நின்று பிரயாணிகளை ஏற்றி இறக்கிவிட நிறுத்தம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தொந்திருக்கவுமில்லை. இன்னும் ஒரு நிமிடம் அந்த வண்டியிலிருந்தால் தனக்கு ஏதாவது நேர்ந்து விடும் என்று அஞ்சியவராக அதிலிருந்து இறங்கி சாலையில் காலை வைத்தார். நெடுஞ்சாலை மண் அவர் காலில் பட்டது.

அதென்ன - இந்த நெடுஞ்சாலை பரிசுத்தமான ஏதாவது ஒருபடை வீடா – ஏதோ கோபுர தரிசனத்திற்காக தலையை உயர்த்திப் பார்ப்பது போல நின்றவிடத்திலேயே சுற்றிக் கொண்டார்.

ஒரு பத்து நிமிட அவகாசத்தில் அவர் உத்தேசமாக ஒரு குறிப்பிட்ட பிரதேச பக்கம் நெருங்கினார்;. நடுத்தரமான அந்த வீட்டை ஆழ்ந்த யோசனையுடன் வெகு நேரம் பார்த்து திருப்தியுடன் தலையசைத்துக் கொண்டார்.

நெடுஞ்சாலையின் மெத்தப் பெரிய கட்டிடங்களின் பக்கத்திலும் சிலவிடங்களில் முடி வெட்டும் கடைகளின் பின்புறங்களிலும் இருப்பவைதாம் குடும்பத்தலங்கள். சொல்லப் போனால் இவை அந்தச் சாலையில் இருப்பதில் அர்த்தமில்லை. அவைகள் வேறெங்காவது மைதானங்களில் மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நெடுஞ்சாலையும் பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்ற நப்பாசை அந்தக் குடித்தன வாசிகளுக்கு இருந்தது போலும். அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தலை குனிந்து வந்துபோகும் நபர்களாயிருந்தார்கள்.

502 என்ற எண்ணைப் பெற்றிருந்த அந்த வீடு திறந்திருந்தது. முகப்பில் பெயர்ப் பலகையொன்று  அடித்து மாட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டுவதானால் என்ன சொல்ல வேண்டுமென்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து ‘Sir’ என்பதைத் தமிழாக்கம் செய்துகொண்டு வந்தவருக்கு வேலையில்லாது போயிற்று. ‘யாரு’ என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தவர், வீட்டுக்காரராயிருக்கும். குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார். கட்டியிருந்த வேட்டி சரியான நிலையிலில்லை. நரைத்த அவரது தலைமுடி குழந்தையின் கைப்பிடியில் சிக்குண்டு கிடக்க, ஒரு கையால் மட்டும் உடையை சமன் செய்தவாறு ‘யாரு’ என்று கேட்டார்.

வந்தவர் பதில் சொல்லுமுன்னர் குழந்தை முரண்டு பிடித்தது. அதை உள்ளே கொண்டு விட்டுவிட்டு வந்து “வாங்க – எங்கிருந்து வாறீக” என்று கேட்டார். திரும்பவும் குழந்தை உள்ளிருந்து தன்னை வந்தடைவதற்குள் சம்பாசஷணை முடிந்துவிடும் என்ற நம்பிக்கை.

இரண்டாவது கேள்விக்கு “ஸான்பிரான்ஸிஸ்கோ” என்று வந்தவர் பதில் சொல்லி விடுவது சுலபம். நல்ல ஆரம்பத்திற்கு அது வழி கோலாது என்பதால் இயல்பாகவே பேசினார்.

“நான் பாலகிருஷ்ணன். இரண்டு நாள் முன்புதான் பட்டணம் வந்தேன். இந்த வீட்டைப் பார்த்துப் போகலாம்னு வந்திருக்கேன் - ஒரு நாற்பது வருடம் - அதற்கு முந்தி நாங்க இங்கதான் இருந்தோம்.”

வீட்டுக்காரர் பேசவில்லை. பேசாது உள்ளே சென்று விநோதமான ஒரு நாற்காலியைத் தூக்கி வந்தார். தரையில் ஒரு தட்டுத் தட்டி, அதை விரித்தார். உட்காரும்படிச் சொல்லிவிட்டு பக்கத்து முக்காலியொன்றில் அமர்ந்து கொண்டார்.

பாலகிருஷ்ணன் சிறிது நேரம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தார். பிறகு மெதுவாக “நாம சந்திச்சதில்லே. உங்க அப்பாவை மட்டும் ஒரு தடவை பார்த்திருக்கேன். நாம இரண்டு பேருக்கும் ஒரெ வயசுன்னு அவர் சொல்லியிருக்கார் – உங்க பேரு முத்துக்கறுப்பன் - இல்லையா?”

வீட்டுக்காரர் தலையசைத்தார். சப்தம் கேட்டு உள்ளே திரும்பிப் பார்த்து ‘வந்துட்டியா – வா’ என்று கைகளை விரித்துக் கொண்டு வந்த குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டார். பிறகு ‘பேத்தி’ என்று வந்தவரிடம் சொன்னார்.

பேத்தி இப்போது சாதுவாக உட்கார்ந்திருந்தாள். உள்ளே குடத்தைக் கவிழ்த்துவிட்டு வந்த காரணத்தாலிருக்கலாம் - பல்லியைப் பார்த்து விட்டதாலுமிருக்கும்.

சம்பாஷணை தொடர்ந்தது. பாலகிருஷ்ணன் கம்பளிவுடை அணிந்திருந்தார். டிசம்பர் குளிர் முத்துக்கறுப்பனை ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை.

“உங்க அப்பாவை ”நான் பார்க்கும்போது எனக்கு இருபது வயசிருக்கும். கழுத்தில் மாலை போட்டிருப்பார். பேரு ஞாபகமில்லே.”

“பண்டாரம் பிள்ளை” என்று உதவினார் முத்துக்கறுப்பன்.

“ஆமாம்-நிறையப் படிச்சவர்னு எங்கப்பா சொல்லுவார்.”

முத்துக்கறுப்பன் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அது மெதுவாக அவர் மடியிலிருந்து கீழே இறங்கி தரையில் உட்கார்ந்து கொண்டது. அடிக்கொரு தரம் இருவரையும் பார்த்துக் கொண்டு தூணைப் பிடித்துச் சுற்றி வரவாரம்பித்தது.

“அவங்க இப்போ...”

“போயாச்சு – அது ஆச்சு ஒரு நாப்பது வருசம் - இந்த வீட்டுக்கு வந்து ஒரு தடவை ஊருக்குப் போயிருந்த சமயம். அது கதை – நீங்க இங்க விட்டு போயி எவ்வளவு காலமாச்சு.”

“ஆச்சே-கிட்டத்தட்ட அத்தனை வருசம்-இப்ப ஸ்டேட்ஸ்லேயிருக்கேன. அங்கேயேதான் எல்லாம். இங்க எல்லாவற்றையும் ஒரு தரம் பாத்துட்டு போயிரலாம்னு வந்திருக்கோம்.”

“யாரெல்லாம்.”

“நானும் என் மனைவியும்தான். அங்கேயே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

“அப்படியா-நீங்க அழைச்சுக்கிட்டு வந்திருக்கலாமே.”

“வரேன், சொல்லுங்க உங்க அப்பா...”

“திருச்செந்தூர் போய் வாரேன்னு புறப்பட்டாரு. போய் ஒரு வாரமாயும் திரும்பலே. இங்கிருந்து போய் எல்லாருமா தேடியாச்சு. பேப்பரிலே கூட விளம்பரம் கொடுத்தோம். தகவலில்லே. ஆச்சு நாப்பது வருசம்.”

பாலகிருஷ்ணன் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“நீங்க ஏதாவது சாப்பிடரேளா” என்று ஏதோ திடீர் நினைவுடன் கேட்டார் முத்துக்கறுப்பன்.

“வேண்டாம் - அடையார் ஹோட்டலில்தான் இப்போ தங்கியிருக்கோம். சாப்பிட்டாச்சு. நிறைய இட்லியும், தேங்காய்ச் சட்னியும் - நல்லாவேயிருந்தது.”

“ம் - தேங்காய் எங்க கிடைக்குது – ஏதோ ஒரு சட்னி.”

“ஆமா – ரொம்பவும் மாறிப்போச்சு – உங்க அப்பா விஷயம் சொன்னீங்களே இம்மாதிரி யாருக்கும் ஏற்படறதில்லே... அம்மா.”

“அம்மா வந்து அப்பாவுக்கும் முந்தியே போயிட்டா – நீங்க அங்க இருக்கிற இடம் - ஏதோ ஒரு இடம் பேரு சொன்னேளே.”

“அமெரிக்காவிலே உள்ள பட்டணம் - ஸான்பிரான்ஸிஸ்கோ – நல்ல இடம். தென்னை கூட உண்டு. வெயிலும் குளிரும் நம்ம ஊர் மாதிரிதான் - கிட்டத்தட்ட நாப்பது வருசம். ஊர்ப்ப்பக்கமே வரலே. வரணும்ன்னும் தோணலே.”

குழந்தை இரண்டு பேராகப் பேசிக் கொண்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. பாலகிருஷ்ணன் கழுத்தை உயர்த்தி மேல் விட்டத்தைப் பார்த்துக் கொண்டார்.

ஒரு பெண் தடதடவென வெளியிலிருந்து வந்து அவர்களை கடந்து உள்ளே விரைந்து சென்றாள். குழந்தை அவளைக் கண்டதும் மலர்ச்சியுடன் சிரித்துக் கொண்டே பின் தொடர்ந்தது.

“இவ வீட்டு வேலைகளையெல்லாம் பாத்துக்கறா. என் வீட்டுக்காரி பள்ளிக்கூடம் போயிருக்கறா – அவ ஹெட்மாஸ்டர் – ரிட்டையராகிற வருசம்தான்.”

“நீங்க ரிட்டையராகி நாளிருக்கும்.”

“இல்லே – நான் வேலையே பார்க்கல்லே – படிப்பை நிறுத்திட்டேன். படிப்பு வராதுன்னு அப்பாவே சொல்லிகிட்டிருப்பார். இந்தத் தெரு கடைசியிலிருக்கிற அச்சாபிசிலேதான் இரண்டு வருஷம் வேலை பாத்தேன். அம்மா இரண்டு நாளிலே படுக்கையிலே கிடந்து போயிட்டா. எனக்கு தகவல் கிடைக்கல்லே. நான் அப்போ ஊருக்குப் போயிருந்தேன். வருவதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சு போச்சு. அடுத்த வருஷம் அப்பா போயிட்டாரு – காணாமல் போயிட்டாரு.”

“மக வயத்துப் பேத்திதானே இது.”

“ஆமா – அவளும் இல்லே. இந்தக் குழந்தையை என்கிட்டே கொண்டு வந்து தந்தா – “இரண்டு நாள் இங்கே இருக்கட்டும். பிறகு வரேன்”னு வேலூருக்குப் போனா. மருமகப் பிள்ளைக்கு அங்கே வேலை – பிறகு வரவேயில்லை. போய்ப் பார்த்தேன். மருமகப் பிள்ளையை கைது பண்ணியிருக்கிறா – ஏதொ ஒரு கேஸ் - அது முடியறதுக்குள்ளே இந்தப் பெண் என்னவோ ஏதோன்னு பயந்து எதையோ சாப்பிட்டுட்டா. நான் அவ கடைசிக் கால முகத்தைப் பாக்கல்லே. சொல்லப் போனா பிறகு கேசே இல்லே. போலீசிலே விட்டுட்டா. இப்போ அவன் சௌகர்யமா கல்யாணம் பண்ணிட்டு அங்கேயே இருக்கான். இங்கே கூட அடிக்கடி வந்து குழந்தையைப் பார்த்துப்பான். சொல்லப்போனா மூணு பேருமே காணாமல்த்தான் போயிட்டா. அப்பாவே சொல்லிக்கிட்டுருப்பாரு – “எல்லாம் நல்லாத்தான் இருக்கு. எங்க போனாலும் நல்லாவேயிருக்கும். எங்காவது போய் அப்படியே எங்க போனோம்னு தெரியாமலேயே போயிதிரும்பி வராமலேயிருந்துட்டா இன்னும் நல்லாயிருக்கும்” அப்படின்னு.”

சொல்லிவிட்டு முத்துக்கறுப்பன் உள்ளே போய் ஏதோ சொல்லி விட்டு வந்தார். அந்தப் பெண் இரண்டு தம்ளர்களில் பானம் கொண்டு வந்தாள். அவள் சேலையைப் பிடித்துக் கொண்டு குழந்தையும் பிரசன்னமாகியது.

மணி பதினொன்று ஆகிவிட்டது. நெடுஞ்சாலையில் நெரிசல் குறையத் தொடங்கிருந்தது. வண்டி இரைச்சல் லேசாகியது.

இப்போது குழந்தை பாலகிருஷ்ணனை நேருக்கு நேராகப் பார்த்தது. முத்துக்கறுப்பன் அதன் தலையைத் தடவிக் கொடுக்க வாரம்பித்தார்.

‘டமார்’ என்று எதிர்டீக்கடையில் சப்தம். முத்துக்கறுப்பன் வெகுவேகமாகப் பார்த்தார். தலையை அசைத்து புரிந்து விட்டதற்கான அறிகுறியைக் காட்டினார். சாவதானமாக பாலகிருஷ்ணனைப் பார்த்து ‘சாப்பிடுங்க’ என்றார். வெளியே கேட்ட சப்தம் அலுமினியப் பாத்திரம் ஒன்று தெருவில் வீசப்பட்டதாலும் அதைத் தொடர்ந்து டீக்கடைப் பக்கம் நின்று கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரியாலும்தாம்.

“இவள் எப்பவும் இந்தக் கடையில்தான் வந்து நிப்பா. நீங்க பாக்கறேளே இந்தப் பிச்சைக்காரி - இவள் இந்தக் கடை வாசலில்தான் நிற்பா – பத்தடி தள்ளியுள்ள கடைக்குப் போறதில்லே. அங்கே போக ஒரு மதிப்புக் குறைவு – அந்தக் கடைக்காரன் இவளது ஊர் ஆள் - போகமாட்டா - இங்கே ஏச்சும் பேச்சும்னாலும் பழிக்கிடையா இங்கேதான் - எப்படி இருக்கு – ஒரு பதினைந்து வருசமா நடக்குது.”

பதினைந்து வருட கால எண்ணிக்கையைக் கூறியதும் பால கிருஷ்ணன் சிறிது வியப்புக் குறி காட்டினார்.

ஸான்பிரான்ஸிஸ்கோவில் அவர் குறள் வகுப்புக் கூட நடத்தியிருக்கிறார். வருபவர்கள் அந்த ஊர் நண்பர்கள்தாம். ஐம்பது மைல் தூரத்திலிருந்து வந்து போவார்கள் - ஒரு பத்து வருட காலம்.

“அங்கே நல்ல சாப்பாடெல்லாம் கிடைக்குதா?”

“ஓ. நம்ம சாப்பாடே கிடைக்கும். ஆனா நான் சாப்பிடறது ரொட்டி தான். அதுவே போதும். இடம் ரொம்ப நல்லது – பழங்களெல்லாம் நல்லபடியாக கிடைக்குது – நம்ம அன்னாசி தாராளமா.”

அன்னாசியென்று சொன்னது சரிதானா என்ற கேள்வியில் ஒரு கணம் பேச்சு தடை பட்டது. முத்துக்கறுப்பன் தலையாட்டிக் கொண்டார். இருவரும் காப்பி சாப்பிட்டு முடித்தனர்.

“காப்பியெல்லாம் இங்கே அத்தனை வளமாகயிருக்காது. எல்லாமே மாறிப் போச்சு.”

“இங்கே ரோடு கடைசியிலே ஒரு ஹோட்டல் இருந்ததே – அங்கே கிடைக்கும் காப்பி.”

“நான் ஹோட்டல் பக்கம் போயி வருசமாச்சு” என்றார் முத்துக் கறுப்பன்.

() () ()

நெடுஞ்சாலையிலிருந்து கிழக்காகப் பிரிந்து செல்வது கடற்கரைக்கும் தென்கிழக்காகப் பிரிந்து செல்வது சுடுகாட்டிற்கும் வழி காட்டும். மேற்கே திரும்பிப் போவது பட்டணத்தின் நாகரிகம் புழக்கத்திலுள்ள இடங்களுக்கு.

“பீச் ரோடில் அந்தக் காலத்தில் ஒரே ஒரு புத்தகக் கடைதான் இருந்தது” என்று பாலகிருஷ்ணன் கூறினார். “நான் அங்கேயுள்ள ஒருவரிடம் தமிழ்ப் பாடங்கேட்பேன். தலைப்பாகை போட்டிருப்பார். பேர் மறந்து போய்விட்டது.”

“தெரியலே - இருக்கும். நீங்க இந்த வீட்டிலிருந்த பிறகு திண்டிவனம் போயிட்டதாக அப்பா வொல்வாகளே” என்று விசாரித்தார் முத்துக்கறுப்பன்.

“ஆமா. அங்கு போய் கொஞ்ச காலம் இருந்தோம் - அப்பாவும் நானும்.”

“அம்மா.”

“அம்மா” என்றார் பாலகிருஷ்ணன். “அவ இங்கே இந்த வீட்டில் இருக்கையிலேயே போயிட்டா” என்று சொல்லி மேலே விட்டத்தைப் பார்த்தார்.

“இதுக்கு மேலே ஒரு ரூம் இருக்கல்லவா? அங்கதான்” என்று திரும்பவும் சொன்னார்.

“அப்படியா எனக்குத் தெரியாதே” என்று முத்துக்கறுப்பன் தலையை உயர்த்தினார்.

“ஆமா – நான் காலேஜ் விட்டு வர சமயம் - அப்பதான் போய்ட்டேயிருக்கிறா.”

முத்துக்கறுப்பன் நேராக பாலகிருஷ்ணனை பார்த்தார்.

“அம்மா தொங்கிக் கொண்டிருக்கிறா. நான் கதவை உடைக்கப் பார்க்கிறேன். சன்னலை மட்டுமே திறக்க முடிந்தது.”

இருவரும் சிறிது நேரம் பேசாதிருந்தனர். “எனக்குத் தெரியாதே” என்று முனகிக் கொண்டார் முத்துக்கறுப்பன். காரண காரியங்களைப் பற்றிக் கேட்க துணிவில்லை.

“ஏதாவது சாப்பிடலாம்-பகல்லே கொஞ்சம் பலகாரம்தான் நான் சாப்டறது – உப்புமா ஏதாவது இந்தப் பெண் செய்வாள். பள்ளிக்கூடம் முடிந்து அவள் வர ஆறு ஆயிடும். வந்துதான் பொங்குவா.”

முத்துக்கறுப்பனின் ஆலோசனைக்கு பாலகிருஷ்ணன் கையமாத்தினார்.

“இப்ப வேண்டாம் - நான் ஆறு மணிக்கு சாப்பாடே எடுத்துப்பேன். பகல்லே ஏதாவது சாண்ட்விச் காப்பிதான்.”

குழந்தை உள்ளே தூங்கிக் கொண்டிருந்தது. பாலகிரு‘;ணன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“அம்மா விஷயம் முடிந்த பிறகு திண்டிவனத்தில் நாங்க இருந்தது கொஞ்சகாலம்தான் - இங்க இருந்த மாதிரி என்னால் அங்கே முடியல்லே. வயல் வரப்பிலேயெல்லாம் நடப்பேன் - அது ஒண்ணுதான் எனக்குக் கிடைச்சுது.”

“உங்க சொந்த ஊரு திண்டிவனம்தானே.”

“ஆமா – அப்பா அங்கேதான் காலமானது. அதுவும் வயல்க் கரையில் வைத்து – என் மடியில். காலையிலே வரப்பிலே நடந்து கொண்டே என்னைத் திரும்பிப் பார்த்து ‘டேய் வலிக்குது – தலை சுத்துது’ அப்படின்னார். கொஞ்சம் உட்காரேன்னேன். உட்கார்ந்தவர் என் மடியிலே தன் தலையை வைத்துக் கொள்ளும்படி சைகை செய்தார். இரண்டு நிமிடத்திலே போயிட்டார். அந்த இடத்தைப் பார்த்துட்டுத்தான் இங்கே வரேன்.”

‘சிவா’ என்ற பழகிப்போன வார்த்தை முத்துக்கறுப்பனிடமிருந்து வந்தது.

“திண்டிவனத்திலே எனக்கு ஒரே ஒரு நண்பன். என்னோடு காலேஜ் வரை படிச்சான். நாங்க அங்க போனதும் ரெண்டு பேரும்தான் எங்கேயும் போவதும் வருவதும். ஏரியிலே போய் குளிப்போம். அவன் ஏரியிலே மூழ்கிச் செத்தான். தண்ணீரிலே மூழ்கி கைவிரல் இரண்டும் வெளியே தெரிய நான் பார்த்து நின்றேன். நான் பார்த்த கடைசிச் சாவு! நான் அதன் பிறகு அங்கு இருக்க விரும்பல்லே. விவசாய சம்பந்தமா படிச்சிருந்தேன். எனக்கு ரொம்ப சுலபமா வெளியே பேக வழி கிடைச்சுது. உருளைக் கிழங்கு சம்பந்தமா ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதி எனக்கு பேரு கிடைச்சு – உத்யோகமும் ஆச்சு.”

“அமெரிக்காவிலேயா?”

“இல்லே முதலில் கானடா. எனக்கும் பிடிச்சுப் போச்சு. இரண்டாம் உலகச் சண்டே சமயமெல்லாம் அங்கேதான். பிறகுதான் ஸ்டேட்ஸ். நல்லகம்பெனி. விவசாயப் பண்ணை உள்ளேயே - இடமும் நல்லாவேயிருந்தது. நிறைய சருசம் அங்கேதானிருந்தேன். பதினைஞ்சு தமிழ்க்காரங்க சேர்ந்து சங்கம் கூட வைச்சோம். ஒரு நாள் பூரா தமிழ்லேயே பேசுவோம். கம்பெனி டைரக்டர் குடும்பத்தார்க்கு விடுமுறை நாளில் குறள் சொல்லுவேன். அவருடைய மகள் மட்டும் நல்லா படிச்சா. நாங்க ரெண்டு பேருமே படிச்சுக்கிட்டோம் - ஆமாங்க. ரெண்டு வருசங்கழிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஒரு முப்பத்தஞ்சு வருஷம் சௌகர்யமாயிருக்கோம்.”

“பிள்ளைக.”

“இல்லே – வேண்டாம்னு தீர்மானிச்சுட்டோம். காரணந்தெரியாமலேயே எனக்கு அது சரியாப்பட்டது. பல சமயம் என்னை தமிழ்ப் பேசச் சொல்லிக் கேட்டிருப்பா. ஒரு சமயம் ஒரு சந்தேகம் கேட்டா – நல்ல சந்தேகம் - என் பதிலைக் கேட்டுச் சிரிச்சா – ஆனா சிரிக்க வேண்டிய விஷயம்தான்.”

“திண்டிவனத்தை நினைத்துக் கொண்டு இந்த ‘கப்லெட்’டைச் சொன்னால் வேறு எப்படியிருக்கும் - நன்றாகத்தானிருக்கும்” என்பது தான் அவ சொன்னது. நீங்க என்ன நினைக்கறீங்க.”

முத்துக்கறுப்பன் பதில் சொல்லவில்லை. அது பதில் எதிர்பாராத கேள்வியென்று எண்ணிக் கொண்டது போல் சம்பாஷணையில் ஆழ்ந்திருந்தார்.

“எடித் - அவ பேரு – என்ன சொன்னாலும் மறுபேச்சே இல்லே. தமிழ்நாடு போலாம்னாலும் இங்கேயே இருக்கணும் அப்படின்னாலும் ஓ.கே.தான்.”

இருவர் முகங்களிலும் ஒரு மலர்ச்சி தெரிந்தது. அவர்கள் தங்கள் சம்பா‘ணையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

“மிஸ்டர் முத்துக்கறுப்பன், நான் உங்களுக்கு கடன் பட்டிருக்கேன். நான் இங்க வந்தது அந்த ரூம் - என் அம்மா போய்ச் சேர்ந்த அந்த அறை-அதை ஒரு தடவை பார்க்கலாம்னுதான்.”

“அதுக்கென்ன?”

“எப்படியிருக்குமோன்னு நான் எடித்தை ஹோட்டலிலேயே விட்டு வந்தேன். உங்களுக்கு கஷ்டமில்லையென்றால் ஒன்று செய்யலாம்.”

“சொல்லுங்களேன்.”

“வீட்டிலே குழந்தையைப் பாத்துக்க ஆள் இருக்கில்லா?”

“அவ – அந்தப் பெண் இருக்கா - இருப்பா – சாயந்தரம் வரைக்கும்.”

“அப்போ – வாங்களேன். ஒரு தடவை இந்த சாலையிலே நடந்து வரலாம் - டிசம்பர் வெயில்தானே.”

() () ()

கடற்கரை செல்லும் சாலையில் ஒரு சந்திலிருப்பது சுப்புவையர் உணவு விடுதி – பலகாரங்களும் கிடைக்கும். இலைகள் கழுவி வைக்கப் பட்டிருக்கும். யாரும் தண்ணீர் ஊற்றக் கூடாது. கூட்டு – கறி எதுவும் இரண்டு தடவைக்கு மேலே போடப்பட மாட்டாது. ‘வேண்டாம்னா போயிடுங்கோ” என்பார் சுப்பு. ரொம்பவும் கண்டிப்பு. ஆனால் அத்தனைக்கத்தனை சாப்பாடு ருசி.

அந்த விடுதி என்றில்லை. புழுங்கலரிசிச் சோற்றிற்கு ஏற்கும் நபர் காண வேண்டிய இடமும், ரவா தோசைக்கு போக வேண்டிய பவனமும் அந்த நெடுஞ்சாலையில் வகை வகையாக வரையறுக்கபட்டிருந்தது. உண்ணுங்கலை பொதுவாக வரவேற்கப்பட்டது. புதிய தயாரிப்புகள் உற்சாகப்படுத்தப்பட்டன.

இது தவிர நடைபாதைகளில் தயாரிக்கப்படும் ஆப்பங்கள் சொல்லப்பட வேண்டியவை. முதிய பெண்கள் தயாரிக்கும் ருசியான பண்டங்கள் நெடுஞ்சாலை வாசிகளின் நாகரீகத்தைத் தூளாக்கும். அந்தச் சிறிய தெரு வழி புகுந்து வருகையில் ‘நான் இங்கே சாப்பிட்டிருக்கேன்’ என்று முத்துக்கறுப்பனுக்கு அந்த ‘மெஸ்’ஸைக் காட்டினார் பால கிருஷ்ணன்.

“அப்படியா - இந்த வழியிலேயே இப்பதான் வாரேன் -  ஹோட்டல் போய் வருசக் கணக்காச்சு.”

“ஒரு காப்பி சாப்பிடலாமா – பசியில்லே – ஆனால் சாப்பிடலாமே.”

பாலகிருஷ்ணன் கெஞ்சினார். முத்துக்கறுப்பன் வாய் விட்டுச் சிரித்தார்.

காப்பி சாப்பிடுகையில் அந்த இடத்தையும் சாப்பிடுபவர்களையும் இருவரும் பார்த்துக் கொண்டனர்.

“வீடாகத்தானிருந்தது. நடுவில் முற்றமிருக்கும். இப்போ இல்லை – மற்றபடி மாற்றமில்லை” என்று ரசித்தார் பாலகிருஷ்ணன்.

“இருக்கும் - எனக்குத் தெரியாது. ஆனா காப்பி நல்லாயிருக்கு.”

“அங்கே ஸ்டேட்ஸ்லே நானும் சில சமயம் வெளியே சாப்பிடப் போவோம். முன் கூட்டித் தெரிவிக்கணும். இப்பவெல்லாம் கார் நிறுத்த முடியாது. ஆனா சாப்பாடு ரொம்ப ஆரோக்யமாயிருக்கும். கடைசியா அவள் ‘டெசர்ட்’ எடுத்துக் கொள்வா – நான் காப்பி.”

“வீ டெல்லாம் சௌகர்யமா இருக்குமா?”

“நாங்க இப்ப இருக்கிறது ஸான்பிரான்ஸிஸ்கோ சிட்டியிலேயே – சௌகர்யம்தான். ரோடு ஒரு குன்னிலிருந்து இறங்கிப் போவது மாதிரி ஒரு இடம் உண்டு – நீங்க சினிமாவிலே கூட பார்த்திருக்கலாம் - அடிக்கடி அதே இடத்தைக் காட்டுவாங்க.”

“சிவகவி படம்தான் நான் பார்த்த ஒரே படம்” என்றார் முத்துக் கறுப்பன்.

“இப்பவெல்லாம் அங்க தமிழ் சினிமா நிறைய பார்க்கலாம். போன வருசம்தான் நான் மனோன்மணி பார்த்தேன்.”

“அப்பாவுக்கு சினிமா பிடிக்காது. எனக்கும் அந்த பழக்கம் வரலே. நம்ம சாலையிலே ரெண்டு தியேட்டர். ஒண்ணை நான் பார்த்ததேயில்லை. இன்னொன்ணு வீட்டு வாசல்லே நின்னா கண்ணில்படும்.”

இருவரும் சந்திலிருந்து கடற்கரைச் சாலைக்கு வருகையில் பால கிரு‘;ணன் அந்த ஒரேயோரு புத்தகக் கடையைத் தேடினார். ‘அவ்வளவு தூரம் போக வேண்டாம் - இந்த இடத்தில்தான்’ எனறு காற்றிலே வரைபடம் வரைந்து சுட்டிக் காட்டினார் – ஒரு மிலிட்டரி ஹோட்டல் தான் காட்சியளித்தது.

“கடற்கரை பார்க்கணுமா?” என்று முத்துக்கறுப்பன் கேட்டார்;.

“வேண்டாம்” என்று சுருக்கமாகப் பதில். பாலகிருஷ்ணன் யோசித்துக் கொண்டே நடந்தார்.

சாலையின் மேற்குப் பக்கமாகவிருக்கும் மைதானத்தின் ஒரு மூலையில் பெண்ணொருத்தி உடை மாற்றி நின்றாள். வெட்ட வெளியில் நாலைந்து கள்ளிப் பெட்டிகள், அந்தக் குடும்பத்தின் உறைவிடத்தை எடுது;துக் காட்டின. அவள் தன்னுடைய இடத்தில் பாதுகாப்பான நிலையில் குடும்பத்தைப் பரிபாலித்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் மைதானத்தின் ஒரு பகுதியைக் கடந்து நெடுஞ்சாலையைத் தொடுமிடத்திற்கு வந்து சிறிது நேரம் நின்றனர். சுகமான குளிர். “இந்த இடத்தை குளிர் காலத்தில்தான் பார்க்க வேண்டும் - மழைக்கும் வெயிலுக்கும் பயந்து அடைந்து கிடக்க வேண்டியதில்லை” என்று கூறிய பாலகிருஷ்ணன் ஏதொ நினைப்பில் திடீரென நிறுத்திக் கொண்டார்.

அவர்கள் வீடு திரும்புகையில் குழந்தை வெளி நடையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைத் தூக்கிக் கொண்டார் முத்துக்கறுப்பன். “வா” என் கைகளை நீட்டிய பாலகிரு‘;ணன் அழைப்பை யோசனை செய்து தாத்தாவைப் பார்த்தது. அவர் பார்வை எதிரே சென்றது.

எதிரே டீக்கடைப் பக்கம் பிச்சைக்காரி ஒரு குவளையுடன் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். முத்துக்கறுப்பன் வெகுநேரம் வாசலருகேயே நின்றிருக்கக் கூடும். கூட்டம் தெருவில் அதிர்ந்தது. தூசுப்படலம் புதிதாக எழ ஆரம்பித்தது. அவர்கள் உள்ளே சென்றனர். இருவரும் இருமிக் கொண்டனர்.

முன்பு உட்கார்ந்திருந்த அதே நிலையில் நாற்காலியும் முக்காலியும் கிடந்தன. அவர்கள் உட்கார, வேலைக்காரப் பெண் வந்து குழந்தையை வாங்கிச் சென்றாள். “மூன்று மணிக்கு ஏதாவது தந்தால் போதும். உப்புமா செய்” என்று அவளிடம் கூறிவிட்டார் முத்துக் கறுப்பன்.

டீக்கடையைத் தாண்டி தூரத்தில் நெடுஞ்சாலை முனையில் இருந்தது உடுப்பி ஹோட்டல். அது முன்பு அச்சகமாக இருந்தபோது மட்டுமே முத்துக்கறுப்பனுக்குப் பாரிச்சயமான இடம். நெடுஞ்சாலையின் கடைசியிலிருந்ததால் இப்போது முத்துக்கறுப்பன் அதைப் பார்த்ததேயில்லை. அந்த ஹோட்டலின் மேல் மாடிகளில் அறை வசதிகள் உண்டு. வசதியான அறையொன்றில் தங்கியிருந்த வாலிபன் செய்த காரியமொன்றை சொல்வதற்காக உடுப்பிக் கடைக்காரர் முத்துக் கறுப்பனை முன்பு தேடி வந்தார். சொல்ல வந்த வி‘யத்தை அழுது கொண்டே சொல்வதுதான் நல்லது என்று தீர்மானித்தவர் போன்று ஆரம்பித்தார். கண்களும் உதடுகளும் கூம்பி சொற்கள் தீனமாக வெளிவந்தன. தங்கியிருந்த வாலிபன் முத்துக்கறுப்பனுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பது நம்பிக்கை – ஊர் சம்பந்தப்பட்ட நம்பிக்கை.

“தெரியாது” என்றார் முத்துக்கறுப்பன்.

“ஆனா திருச்செந்தூர் பக்கம்தான் - உங்க ஊர்தான். லெட்ஜரில் எழுதும்போதே சொன்னான் - பாவி.”

“இருக்கட்டும் - இதுலே நான் செய்ய என்ன இருக்கு – சவத்தை விட்டுத் தள்ளுங்க.”

“அப்படி சொல்லப்படாது. நான் மானஸ்தன்.”

பாபியான வாலிபன் தவறேதும் செய்து விட்டதாகத் தகவலில்லை. அவரது பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டது போலீசில் சொல்ல வேண்டிய விஷயமாகாது. பையன் மூன்று மாத அட்வான்ஸ் கொடுத்து ரசீது வாங்கியிருப்பதால் அறையை விட்டும் ‘போ’ என்று சொல்லலாகாது. தங்க ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் திருமணம் முடிந்து தம்பதியினர் அந்த அவரது விடுதி அறையிலேயே தங்கி இருவரும் முறையே தங்களது அலுவலகம் சென்று அங்கேயே குடித்தனம் பண்ணவாரம்பித்ததுதான் பாபமான வி‘யமாகி நின்றது.

“இல்லை – தெரியாது. எங்க ஊரிலேயே எனக்கு ரெண்டு பேரைத்தான் இப்போ தெரியும். நீங்க சொல்ற மாதிரி நான் வந்து அவன் கிட்ட பேசறதைவிட உங்க பெண் கிட்டே சொல்லி வேறே இடம் பாக்கச் சொல்லுங்கோ – சொல்லப் போனா நீங்களே ஒரு இடம் பாத்துக் கொடுத்துடலாம்.”

திருச்செந்தூர் இப்போதெல்லாம் அந்நியமாகத் தெரிகிறது முத்துக்கறுப்பனுக்கு.

“மிஸ்டர் பாலகிருஷ்ணன் - நீங்க உப்புமா சாப்பிட்டு எவ்வளவு காலமிருக்கும்.”

“அப்படியொன்றும் இல்லை - ஸ்டேட்ஸிலும் கிடைக்கும் - எடித்கூட செய்வாள் - எண்ணை அதிகமாகச் சேர்க்கிறதில்லே.”

“நீங்க மேலே போய்ப் பாக்கணும்னு சொன்னேளே.”

பாலகிருஷ்ணன் சாய்ந்து உட்கார்ந்தார்;. முத்துகறுப்பன் சிறிது யோசித்தவாறே சொன்னார்.

“மேலேயுள்ள அறை காலியாகத்தானிருக்கு – நான் அதைப் பாத்து வருசக் கணக்கிருக்கும்.”

“அது என்ன – ஏன்” என்பதாகப் பார்த்தார் பாலகிருஷ்ணன்.

“அப்படித்தான். எங்கேயும் போகக் கூடாது என்பதாக இல்லை. எனக்கு நேரமில்லை என்று சொன்னால் அது பொய்யுமில்லை. பேத்தியைத் தவிர நான் பார்க்க வேண்டிய இடம் இந்த வீட்டில் நிறையிருக்கிறது – எவ்வளவுதான் செய்ய முடியும்? பேசி முடிக்க வேண்டிய சீவன்கள் இப்போதிருக்கிற இடத்திலேயே வேண்டிய மட்டும் இருக்கு. அதுக்கே இந்த ஆயுசு போதாது என்று தோணுது. என்னவோ அப்படித்தான் தோணுது – அதுதான் ஒற்றுமைன்னு தெரியுது. குடும்பத்திலே ஒத்துமை – ஊரிலே – நாட்டிலே உலகத்திலே ஒத்துமை - இதெல்லாம் எவ்வளவு பொய்யாப்போச்சு - இதுக்கெல்லாம் அர்த்தம் ஏதாவதிருக்கா – என்ன மண்ணாங்கட்டியோ தெரியலை.”

பாலகிருஷ்ணன் பேசாதிருந்தார். உருளைக் கிழங்கு பண்ணைக்குச் சொந்தக்காரரின் மகள் எடித் அவருடன் பேசிக் கொண்டதற்கு குறிப்பிடும்படியான காரணமெதுவுமில்லை. பேசித்தானாக வேண்டிய கட்டாயமுமில்லை. இரண்டு அடிகளைக் கொண்ட செய்யுளுக்கு ஆங்கில விளக்கமளித்த அற்புதத்திற்கு அவள் மயங்கிவிட்டிருக்க முடியாது. அந்த நாளில் அந்த இடத்தில் அவர்கள் சம்பாஷணையின் ஒவ்வொரு சொல்லிற்கும் ஏதோ அர்த்தம் இருந்தது. அது ஒன்றுதான் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.

“மிஸ்டர் முத்துக்கறுப்பன் நான் அவளை அழைத்து வராததிற்கு வேறு காரணமும் உண்டு. முதலில் அவள்  இதைப் பார்க்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. நான் பஸ்ஸில் இந்தச் சாலையில் வர விரும்பினேன். அவளால் பஸ்ஸில் வருவது க‘;டம்.”

“மிஸ்டர் முத்துக்கறுப்பன் நான் அவளை அழைத்து வராததிற்கு வேறு காரணமும் உண்டு. முதலில் அவள் இதைப் பார்க்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. நான் பஸ்ஸில் இந்தச் சாலையில் வர விரும்பினேன். அவளால் பஸ்ஸில் வருவது கஷ்டம்.”

“என்ன” என்பது போல கேட்டார் முத்துக்கறுப்பன்.

“எடித் காலில் அடிபட்டு சரியாக நடக்க முடியாதவள். பயணத்தில் விருப்பம் - ஆனால் நடக்க முடியாது.”

“அப்படியா!”

பாலகிருஷ்ணன் ரொம்ப நேரம் பேசாதிருந்தார். ஏதாவது கேள்வி வர வேண்டுமென காத்திருந்தார். முத்துக்கறுப்பன் அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு “மணியாச்சு – எங்களுக்கு ஏதாவது கொண்டு வா” என்று சொல்லிவிட்டு இரண்டு நாற்காலிகளுக்குமிடையே இன்னொரு விநோதமான காலுள்ள பலகையைக் கொண்டு வந்து நிறுத்தினார். அதன்மீது இரு தட்டுகளில் உப்புமா வந்தது.

‘ஆகா’ என்றார் பாலகிருஷ்ணன். சிற்றுண்டியினிடையே கிடந்த முந்திரிப் பருப்பை கையில் நிமிட்டி எடுத்து ஆராய்வது போல் தன் உள்ளங்கையில் வைத்து மலர்ச்சியுடன் பார்த்தார். முத்துக்கறுப்பன் சிரித்தவாறே சாப்பிட ஆரம்பித்தார்.

“முந்திரிப் பருப்பை சாப்பிடாதவன் வாழ்வென்ன வாழ்வா” என்று நான் நாற்பதுகளில் கலங்கியிருக்கிறேன் - இப்போ எங்கும் தாராளமாகக் கிடைக்குது. இருந்தாலும் இப்படித் தாளித்துப் போட்ட பருப்புக்குத்தான் என்ன ருசி.”

தண்ணீர் கொண்டு வந்தவளிடம் முத்துக்கறுப்பன் ஏதோ சொல்லியனுப்பினார். அவள் திரும்பி இரண்டு வாழைப்பழங்களுடன் வந்தாள்.

“நீங்க மத்தியானம் ஒண்ணும் சாப்பிடல்லே. இதை எடுத்துக்குங்கோ” என்று இரண்டையும் பாலகிருஷ்ணன் தட்டில் வைக்கச் சொன்னார்.

கல்யாணம் முடிந்து உணவு விடுதியொன்றில் சாப்பிட்டு முடிந்ததும் ‘எடித்’ தன் தகப்பனாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தாள் - கல்யாணம் பண்ணிக்கொண்டோம் என்று. தகப்பனார் வாழ்த்துச் சொன்னார். தாயாரிடம் பேசுகையில் மட்டும் அவள் சிறிது கலங்கினதாக பாலகிருஷ்ணனுக்குத் தோன்றியது. தனது முடிவை ஏற்கனவே தெரிவித்திருந்தபடியால் நடந்து முடிந்துவிடும் என்பது பெற்றோருக்குத் தெரியும் - அவர்கள் சம்மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.

கல்யாணம் நடந்த இரண்டாம் வருடம் எடித் தனது பாதி காலை இழந்தாள். அது பாலகிருஷ்ணன் ஊருக்குப் போய் வரலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருந்த நேரம்.

“வெள்ளரிக்காய் ஏதாவது சேர்த்துக் கொள்ரேளா” என்று கேட்டு, “நான் அடிக்கடி பலகாரத்துடன் சேத்துப்பேன். எனக்கு ஒத்து வருகிறது” என்றார் முத்துக்கறுப்பன்.

“கொஞ்சம் போதும் - அங்கேயும் கிடைக்கிறது.”

“பிறகுதான் ஸான்பிரான்ஸிஸ்கோ வந்தோம். நல்ல வேலை கிடைத்தது. அவளுக்கு நிம்மதியாகவிருக்க வசதிகள் செய்து கொடுத்தேன். எனது பணக் கஷ்டமெல்லாம் தீர்ந்தபோது – பணத்தை துச்சமாக மதிக்கத் தொடங்கியிருந்தபோது – அவள் பெற்றோர் அந்த விவசாயப் பண்ணையை எடித் பெயருக்குத் தந்து விட்டார்கள்.”

“இன்னுங் கொஞ்சம் உப்புமா.”

“வேண்டாம் - போதும்.”

சம்பாஷணையிடையே இருவரும் யோசித்துக் கொண்டும் இருந்ததாகத் தெரிந்தது. சாப்பிட்டு முடியும் தறுவாயில் பேச்சே இல்லை. எந்த வகையான வருத்தமும் இல்லாது எந்த மாதிரியான கொள்கையை பின்பற்றியுமில்லாது அமைபவைகள் மௌனத்தில்தான் முடியும் போலும். பிள்ளையின் உடம்பு மீது படர்ந்த சொறி சிரங்கை பெற்றவள் பார்த்து ஆராய்வது போல அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

யோசிப்பது பழக்கத்தில் வந்து பாதிப்புதான். அச்சாபீசில் வேலை பார்த்து வந்தபோதே முத்துக்கறுப்பன் முடிவு கட்டியதுண்டு – கொடுமைகள் மனித குலத்தின் அவசியமாக மாறிவிட்டதன் ஆரம்பமே இந்த யோசிப்பால்தானென்று.

அந்த அச்சகத்தில் வேலை செய்து வந்தபோது அத்தனை யோசனை செய்வதற்கு நேரம் இருந்ததில்லை. சிறிதளவு நேரம் இருந்ததென்றால் வேலைக் குறைவுதான் காரணம். முதலாளி மக்கு - இரண்டு இனிப்புகள் வேண்டும் தினசரி – குறிப்பிட்ட ஹோட்டலில் இருந்து வரவேண்டும். அவர் மனைவி நோயாளி – பெண் பட்டதாரி.

எப்போதோ நடந்திருக்க வேண்டிய நிகழ்ச்சி பின்னர் நடந்தது. அச்சகம் உடுப்பி ஹோட்டல்காரனுக்கு விலை பேசப்பட்டது. பெண்ணிற்கு கல்யாணம் பண்ணுவதைவிட மனைவியின் நோய் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியதாயிற்று. குடும்பம் பாண்டிச்சேரிக்குப் பெயர்ந்து போக வேண்டியதவசியம். அதுதான் முதலாளியின் சொந்த ஊர்.

முத்துக்கறுப்பன் தனது வீட்டின் கீழ்ப் பகுதியை முப்பது ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருந்தான். மேலேயிருந்த அறையில் தங்கிக்கொண்டு இரவில் சமைத்துச் சாப்பிட்டான். சித்தப்பா ஊரிலிருந்து வந்திருந்தபோது இவன் சரியாகப் பேசவில்லை என்ற புகாரோடு போய் விட்டபிறகு ஊர் ஆட்களென்று யாரையுமே பார்த்தது கிடையாது. முதலாளி வீட்டில் இரண்டொரு தடவை சாப்பிட்டிருக்கிறான். அந்த நோயாளியம்மாள் இவனிடம் கதை பேசுவதுண்டு. அவளது தெலுங்குத் தமிழ் முத்துக்கறுப்பனுக்குப் புரிந்தது.

அந்தப் பெண் படிப்பில் சுறுசுறுப்பானவள் போலும். எப்பொழுதும் படித்துக் கொண்டிருப்பாள். அவனிடம் பேசியதேயில்லை.

ஆனால் அப்படிப்பட்ட பெண் அவர்கள் பாண்டிச்சேரிக்குப் போக வேண்டிய நாளிற்கு முன்தினம் இவன் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதிருக்கிறாள். “எனக்கு இந்த ஊரை விட்டுப் போக இஷ்டமில்லை – நான் யாருக்கும் பிரயோசனமில்லாதவளாப் போயிட்டேன் - உனக்குங்கூட” என்று அழுதாள்.

இரவில் அறை ஜன்னலின் அருகே நின்றுகொண்டு இந்த நெடுஞ்சாலையின் ஒவ்வொரு சீவராசியையும், சீவனில்லாத ராசிகளையும் பார்த்து காலத்தைக் கழித்து வரும் முத்துக்கறுப்பன் இந்த அழுகையைக் கண்டு மட்டுமே வியப்புற்றான். “பிரயோசனம்” என்று அவள் பயன்படுத்தியச் சொல்லைக் கேட்டு அவ்வாறு இருக்கவும் முடியுமா என்று வியந்தான்.

அவர்கள் எல்லோரையும் அவன் வண்டி ஏற்றிவிட்டு வந்தான். திரும்பி வருகையில் டிராம் வண்டியைத் தவிர்த்து நடந்து வந்தான். வெயிற்காலம் வருவதால் ஒரு மின்விசிறி வாங்கலாமா என்று யோசித்தான். அந்தப் பெண்ணின் வாழ்வு இனியொரு ஓட்டத்தில் கலந்து கொள்ளும் - தனது காலை பிடிக்க வேண்டிவராது என்று நம்பினான் - வேறு வழியில் ஓர் இக்கட்டு வந்தாலும் அது பெரிய விஷயமில்லை என்றும் ஓர் எண்ணம்.

பின்னர் நல்ல மழை நாளொன்றில் அவன் கடிதமெழுதினான் - அது பதில்க்கடிதம். அந்த நெடுஞ்சாலை ட்ராம் நிறுத்தத்தில் பின்னர் அவள் வந்திறங்கியது – வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அவளை அழைத்துச் சென்றது – காலைப் பிடித்து அழுததிலிருந்து இதுவரை நடந்தவைகள் யாவும் வாழ்வோடு சேர்த்தியானவைதாம் என்பதாக அவர்கள் மணஞ்செய்து கொண்டது - இவை பற்றி இரவு நேரங்களில் நெடுஞ்சாலை உலகு உறங்கும் அழகைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நினைவு எழும். கூடவேயே அந்த நெடுஞ்சாலையானது தன் பக்கமாக அவனை இழுத்துக் கொண்டுவிடும்.

“நீங்க இரண்டாம் உலக யுத்த சமயத்திலே இங்கேதானே இருந்தீங்க” என்று கேட்டார் பாலகிருஷ்ணன். சாப்பிட்டு முடித்து விட்டனர். சாலையில் போக்குவரத்து மிக அதிகமாகியிருந்தது.

“ஆமா - இங்கதான். நல்ல ஞாபகமிருக்கு. விளக்கெல்லாம் அணைச்சு ஊரடங்குச் சட்டமோ என்னவோ ஒண்ணு இருந்தது. நான் அப்ப மட்டும் வெளியே நடந்து வருவேன். அவ கோவிச்சுப்பா.”

“நான் அப்போ கானடா – அங்க ஒண்ணுமில்லே... ஆனா தினசரி இத்தனைப் பேர் செத்தாங்கன்னு பேப்பர்லே படிக்கறதுக்கு நாம் இருந்த இடத்திலேயே குண்டு விழணுமா என்ன... அதுசரி இப்ப மட்டும் என்ன வாழுதாம். வரலாறும் நிலநூலும் மீசை வைத்துக் கொண்டு பிறக்கவில்லை” என்று முடித்தார் பாலகிருஷ்ணன்.

முத்துக்கறுப்பன் பேசவில்லை. நான்கு மணிக்கு எதிரே டீக்கடை சுறுசுறுப்படையத் தொடங்கிற்று. அந்தப் பிச்சைக்காரி வந்து நிற்கத் தொடங்கினாள்.

() () ()

குழந்தை எழுந்து விட்டது. முகம் கழுவி அதைத் தூக்கிக் கொண்டு நடையருகே வந்து நின்றாள் வேலைக்காரப்பெண். கடந்து செல்லும் கார்களை பெருவிரலைத் தவிர மற்ற விரல்களால் எண்ணிக் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ படீர் என்று சப்தம், நெடுஞ்சாலை மக்கள் விரைந்து தங்கள் இருப்பிடங்களிலிருந்து வந்து பார்த்துவிட்டு என்னவென்று தெரிந்து கொள்ளாமலேயே உள்ளே திரும்பிக் கொண்டனர்.

“மிஸ்டர் பாலகிருஷ்ணன், எத்தனை நாள் இங்கே?”

“வந்த வேலை முடிஞ்சது. போக வேண்டியதுதான்.”

“வேறே இடங்க ஒண்ணும் பாக்காண்டமா?”

“இல்லே – திண்டிவனமும் இந்தப் பட்டணமும்தான்.”

“உங்க மனைவிக்கு தாஜ்மகால் அப்படியிருப்படின்னு காட்ட வேண்டாமா?”

“இல்லே – அவளுக்குப் பிரயாணம்தான் பிடிக்கும் - கட்டடங்கள் இல்லே – ஊர்களைப் பார்க்கணும்னு சொல்லுவா.”

முத்துக்கறுப்பன் சிறிது நேரம் பேசாமலிருந்தார். பிறகு சொன்னார்.

“நானும் அது போலத்தான்னு நினைக்கிறேன். ஊரையும் கொஞ்சம் சுருக்கி தெரு மட்டுமே போதும் என்றாகிவிட்டது. இப்போ ஒரேயொரு வீட்டை மாத்திரம் பாக்கவே நமக்கு நாள் போதாதுன்னு தெரியுது... உங்க மனைவி கேட்டது சரிதான். திண்டிவனத்தை நினைத்துக் கொண்டு திருக்குறள் படித்தால் நன்றாகத்தானிருக்கும். எந்த உரையை வைத்துக் கொண்டு எதைப் படித்துத் தேறப் போறமோ தெரியலே. இப்போதிருக்கிற இந்த இடம்தான் நாம போய்ச் சேர வேண்டிய இடம்தான்னு எனக்குத் தோணுது... என்ன சொல்றீக?”

அதன் பிறகு அவர்கள் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தனர். மணி ஆறு அடிக்ககையில் பாலகிருஷ்ணன் புறப்பட்டார். “அவ வர நேரந்தான் - உங்களைப் பாத்தா சந்தோ‘ப்படுவா. நீங்க உங்க வீட்டீலே நாளைக்கு அழைச்சுகிட்டு வரலாமே” என்று சொல்லி எழுந்து நின்றார் முத்துக்கறுப்பன்.

“நாளைக்கு வந்து போவது சிரமம். பத்து மணிக்கே புறப்படணும். இப்ப நான் சந்தோஷமாயிருக்கேன். உங்களைப் பத்திச் சொன்னா எடித் சந்தோஷப்படுவா.”

பாலகிருஷ்ணன் கை கூப்பினார். விடை கொடுத்து அனுப்ப தெரு நடை வந்தார் முத்துக்கறுப்பன். ஞாபகத்துடன் கேட்டார்.

“பாலகிருஷ்ணன் - மறந்திட்டேளே – நீங்க பாக்கலியே – அந்த அறை - மேலே” என்று கை தூக்கிக் காட்டினார்.

இரண்டு அடிகள் அந்தப் பக்கமாகச் சென்றவர் திரும்பி வந்தார்.

“நாங்க ஒரு தடவை கான்ஸாஸ் ஸிட்டி வரை பஸ் பயணம் செய்தோம். வழியிலே ஒரு கிழவி – நூறு வயது சொல்லலாம் - பஸ் படிக்கட்டில் ஏற முடியாமல் - ஆனால் - கம்பீரமாக முயன்று கொண்டிருந்தாள். எடித் முதலில் அவளை ஏற்றி சீட்டில் உட்கார வைத்தாள். ரொம்ப காலமாகிப் போச்சு – நேற்றைக்கு திண்டிவனத்தில் பஸ் ஸ்டாண்டில் ஒரு கிழவி பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன் - அந்த கான்ஸாஸ் ஸிட்டி சம்பவம் அவளுக்கு ஞாபகமேயில்லை.”

விட்டத்தை ஒரு தடவைப் பார்த்துவிட்டு ‘வேண்டாம்’ என்றார். “நமக்கு கூடிப்போனால் இன்னும் இருபது வருசம் ஆயுளிருக்கும்-அது போதாது – என்ன தோன்றுகிறது என்றால்...”

ஆனால் முடிக்கவில்லை. இல்லை என்பது போல தலையசைத்துக் கொண்டார். இருவருக்கும் ஒரே சமயத்தில் ஏற்பட்ட சிரிப்பால் ஒரு புது மலர்ச்சி தோன்றிற்று. “நான் போய் வாரேன்” என்று பாலகிருஷ்ணன் இறங்கி அந்தச் சாலையிலே ஆசையாய் நடந்தார்.

சிறுகதைகள்

{load position article1}

 

சித்தி

அங்கே மைதானங்கள் குறைவு. அவன் ஓடிக் கொண்டிருந்த அந்த இடம் காவல்துறைக்குச் சொந்தமானது. ரொம்ப நேரம் அவனைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த காவல்காரர் ஒருவர் இடையே அவனது ஓட்டத்தைத் தடை செய்தார். ‘‘தம்பி - இங்கே ஓட அனுமதி வாங்க வேண்டும்’’ என்று கூறி ‘‘ஆனாலும் நீ நன்றாக ஓடுகிறாய். முன்னுக்கு வருவாய்’’ என்றும் சொல்லி சிறிது நேரம் பேச்சுக் கொடுத்தார்.

அந்த நாட்டில் விளையாட்டிற்கு அத்தனை மதிப்பு இருந்ததாகத் தெரியவில்லை. இருந்த போதிலும் வீரர்களைப் பற்றி தொலைக்காட்சி - செய்திகள் மூலமாக மக்கள் அறிந்து கொண்டிருந்தார்கள். கஷ்டம் நிறைந்த வாழ்க்கையை எந்தவித உணர்வுமில்லாது இயல்பாகவே அவர்கள் ஏற்று நடத்திக் கொண்டிருந்தபடியால் விளையாட்டுகள் அங்கு எடுபடவில்லை. காலங்காலமாக அவர்களுக்குத் தெரிந்திருந்த விளையாட்டிலேயே ஈடுபட்டு திருப்திப்பட்டுக் கொண்டனர். ‘‘ஒலிம்பிக்’’ போட்டிகளைப் பற்றி கேள்வியோடு சரி . அந்த மண் உலகிலே ஒரு விசேடமான மண் போலும். அங்கேதான் அவன் ஓடிக் கொண்டிருந்தான்.

‘‘நீ என்ன படிக்கிறாய்?’’

காவல்காரர் கேட்டார். அவன் அதற்குச் சொன்ன பதிலை காதில் வாங்கிக் கொள்ளாமலே தொடர்ந்து கூறினார்.

‘‘நீ இப்படி ஓடுவதற்கு முன்னே சில அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் - நானும் ஒரு காலத்தில் ஓடினேன். அதைத் தொடரவில்லை. என் அந்தக் கால வயதுத் திறனைவிட நீ அதிகமாக இப்போது பெற்றிருக்கிறாய்-ஒன்று செய்யலாம்-கேட்பாயா.’’

அவன் தலையசைத்தான்.

‘‘நான் தரும் முகவரிக்குப் போ. அந்தப் பெரியவரோடு பேசு. உனக்கு நல்லது கிடைக்கும்.’’

அவன் மெதுவாக நன்றி சொன்னான். அன்றைக்கு அவன் முடிவெட்டிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்தப் பணம் செலவாகிவிட நேரும். அது ஆபத்து - மீண்டும் பணம் கிடைப்பது அரிது. இந்நிலையில் அந்தக் காவலரின் யோசனைக்கு அவன் பதிலும் நன்றியும் திருப்திகரமாகச் சொல்லியிருக்க முடியாது. ஆனாலும் அவர் ஒரு முகவரியைக் கொடுத்து உற்சாகப்படுத்தி அவனை அனுப்பி வைத்தார்.

தன்னை செம்மைப்படுத்திக் கொண்டு அவன் மறுநாள் இரண்டு மைல் தூரத்திலிருந்த அந்த வீட்டிற்குச் சென்றான். பெரிய மாளிகை போன்ற வீடு - வீட்டின் முழு பார்வையும் விழ, தெருவிலிருந்து காம்பவுண்ட் சுவரைத் தாண்டி மரங்களடர்ந்த பாதை வழி நடக்க வேண்டும். அந்தப் பாதையில் அவன் கால் வைத்தபோது - அதன் அழகான நீட்சியில் - அந்தக் கால்கள் ஓடுவதற்குத் தயாராயின. மாசு மறுவற்ற அந்தப் பாதை வீட்டைச் சுற்றிலும் இருக்க வேண்டும் என்று நினைத்தான். வீட்டின் முகவாயிலில் நாற்காலியில் செடிகள் சூழ்ந்த இடத்தில் அவர் உட்கார்ந்திருந்தார்.

பெரியவர் அவனை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் வருபவனுடைய நடை அவருக்கு எதையோ ஞாபகப்படுத்தியிருக்க வேண்டும். தூரத்தில் வந்து கொண்டிருந்தவனை ஆவலுடன் பக்கத்தில் காணவிழைந்தார். ‘‘நமது நாடு பாழ்பட்டு விட்ட நாடு. இதை இளைஞர்கள்தாம் காக்க வேண்டும் - இல்லையா’’ என்று இரந்து கேட்டார். நடப்பதற்கு முன்பே ஓட ஆரம்பித்துவிட வேண்டுமென்று கூறி சிரிப்பு மூட்டப் பார்த்தார்.

பெரியவருக்கு வயது அறுபதிருக்கும். விளையாட்டு விஷயங்களிலேயே தன்னை மூழ்கடித்துக் கொண்டவர். அவைகளைத் தவிர உலகிலுள்ள எல்லாக் காரியங்களையும் இயந்திரங்களைக் கொண்டு நடத்தி விடலாம் என நம்புகிறவர். அந்த நாட்டின் எல்லா செய்தித்தாள்களிலும் வந்த படம் இவருடையதாகவேயிருக்கும். சீடர்கள் அதிகமிருந்திருக்க முடியாது. இருந்தவர்களில் பெரும்பாலோர் காவல் துறையில் சேர்ந்திருப்பார்கள்.

‘‘நான் எனது நாட்டிற்காக என் விளையாட்டுக் கலையை அர்ப்பணித்தவன்.’’

அவர் கண்கள் ஜொலித்தன. உண்மையில் அந்தக் கண்களில் அவர் சொன்னது தெரிந்தது. அவர் பொய் சொல்பவராகத் தெரியவில்லை.

பல மாதங்கள் அவரிடம் தனது விளையாட்டுக் கலையின் பயிற்சிகளைப் பெற்றான் அவன். காலையிலெழுந்து-சூரியன் உதிக்கும் முன்னர்-நெடுஞ்சாலைகளில் ஓடினான். தனது தம்பியை தோளில் ஏறச் சொல்லி அவனைத் தூக்கிக் கொண்டு மைல் கணக்கில் ஓடி பயிற்சி பெற்றான். அவனது சாப்பாட்டிற்கு பெரியவர் ஏற்பாடு செய்திருந்தார். பிரியமான கொழுப்புச் சத்துப் பொருட்களை பெரும்பாலும் தள்ளி ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு அவ்வுணவுகளை நேரந் தவறாது உண்டான். பிற நாட்டு வீரர்கள் - போட்டிகள் பற்றி அவ்வீட்டிலேயே திரைப்படங்கள் காட்டப் பெற்றன. அவன் அந்த நாட்டின் சிறந்த சிறந்த ஓட்டப் பந்தய வீரனாக ஆக்கப்பட்டான்.

ஒரு தடவை மல்யுத்தப் போட்டிகளின் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கையில் பெரியவர் அந்த இரு நாடுகளைப் பற்றி விளக்கினார். அவன் கண்டு கேட்டறியாத சங்கதிகள் - நாடு - மக்கள் - இனங்கள் - இவைகளின் உணர்வு பூர்வமான விளக்கம் - ஏறக்குறைய ஒரு சொற்பொழிவு.
அவன் மீண்டும் அந்த வீடியோ காட்சிகளில் ஆழ்ந்தான். போட்டியினிடையே காட்டப் பெறும் மக்களின் ஆரவாரம் அவனுக்குப் புதிதல்ல. இருப்பினும் வேற்று நாட்டுக்காரன் குத்து வாங்கி மூக்கு நிறைய இரத்தம் விடுகையில் பார்த்தவர்களின் சப்தம் - இடையே ஒரு பார்வையாளன் முடித்துவிட்ட தனது சிகரெட் துண்டை ஆக்ரோஷத்துடன் கீழே நசுக்கி துவம்சம் செய்தல் - இவ்வகைக் காட்சிகளைக் கண்டு முடிக்கையில் அவன் தனக்குள் ஏதோ ஒன்று ஏற்பட்டிருப்பதாக உணர்ந்தான். அது பயம் என்று பின்னர் தெரிந்து கொண்டான்.

அன்றிரவு தொலைக்காட்சியில் ‘‘இந்த நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்’’ என அவன் அறிமுகப்படுத்தப்பட்டான். அவனது படம் நன்றாக இருந்ததாக பலர் சொன்னார்கள். அவ்வாறு சொன்னது பொய்யென்று அவனுக்குத் தோன்றிற்று.

ஆனால் நெடுஞ்சாலைகளில் அவனது அதிகாலை ஓட்டம் தொடர்ந்தது. மைதானங்களில் ஓடுவதைவிட இதைச் சிறந்ததாகக் கருதினான். அடிவானத்தைப் பார்த்தவாறு, இருபக்கங்களிலும் மரங்கள் தன்னைக் கடந்து செல்ல, கால்கள் மாறி மாறித் தரையைத் தொட்டு ஓடுகையில் இதுவரை ஆபாசம் என்று அவன் கருதிக் கொண்டிருந்தவை யாவும் தன்னைவிட்டு அகல சுத்த சுயம்புவாக எங்கோ சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தான். வானமும் தரையும் சுற்றுப்புற சீவராசிகளும் தானும் வெவ்வேறல்ல என்று தெளிந்த வகையில் அவன் ஓட்டமிருந்தது.

அன்று அவன் ஓடிய ஓட்டம் பொழுது நன்கு விடிந்து விட்டதாலும் புறநகர்ச் சாலைகளில் நடமாட்டம் ஏற்பட்டதாலும் இருபத்திரண்டு மைல்களுக்குள் நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. சில சமயம் பெரியவர் மாளிகையின் கேட்டைத் திறந்து அங்கிருந்து தொடங்கிய நடைபாதையிலும் ஓட்டம் தொடரும். நெடுஞ்சாலையில் ஓட முடியாதபோது அந்த வீட்டைச் சுற்றி ஓடுவான். சில மணி நேரங்கழிந்து யோசனையோடு பெரியவர் வெளிவந்து அவனை நிறுத்தும் போதுதான் முடியும். ஓட்ட அளவை நாளறிக்கையில் குறித்துக் கொண்டே அவர் பலவித கணக்குகளைப் போட்டுப் பார்ப்பதை அவன் காண்பான். தான் ஓடிய ஓட்டம் எவ்வளவு என்று கூட கணக்கு மூலம் கண்டறிய முடியாதவனிடம் அவர் விளக்கிச் சொல்வார். இத்தனை தூரம் தொடர வேண்டியதில்லை என்றும் உலக ரிக்கார்டை அவன் நெடுஞ்சாலைகளிலேயே முறியடித்து விட்டான் என்றும் சொல்லி மகிழ்வார். அவனுக்கு கீழ் நாடுகளில் பயிலும் யோகாசனம் பற்றியும் சொல்லித்தர வேண்டியதவசியம் என எண்ணினார். ‘‘யோகா’’ என்ற பெயரில் ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள் அந்த நாட்டில் பிரபலமடையத் தொடங்கியிருந்தன.

‘‘ஒரு மராத்தன் தேறிவிட்டான்’’ என்றும் ‘‘இந்த நாடு தலைநிமிரும்’’ என்றும் ஆணித்தரமாக பத்திரிகை நிருபர்களிடம் கூறினார்.

அவன் இருபத்தேழு மைல்கள் ஓடி தொலைக்காட்சியிலும் செய்திகளிலும் அடிபட்டபோது உலக நாடுகள் அவனைக் கவனிக்கத் தொடங்கிவிட்டன. அடுத்த ஒலிம்பிக் வீரனென பேசப்படுபவர்களில் ஒருவனானான். அவனது விவரங்கள் பேசப்பட்டன. அவன் பெயர் பலவாறு உச்சரிக்கப்பட்டது. ‘கார்போ’ என்று சோவியத்தில் அவன் பெயரைத் தவறாகச் சொன்னார்கள். ஐரோப்பிய நாடுகளில் அவன் ‘கிரிப்ஸ்’ - கிழக்கே அவனை ‘கிருஷ்’ என்று சொல்லியிருப்பார்கள். தென்புலத்தில் ‘கறுப்பன்’ என்று இருந்திருக்கக் கூடும்.

அன்றுதான் அவனது பெயர் அதிகாரபூர்வமாக வெளிவரவேண்டும் - ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்பவனாக. விளையாட்டரங்கு ஒன்றில் பத்திரிகையாளர் பேட்டி நடந்தது. கையில் ஒரு சுருட்டுடன் பொpயவர் சிறிது தூரத்தில் உட்கார்ந்திருந்தார். அவர் புகைபிடிப்பது அபூர்வம். பேட்டி பின்வருமாறு இருந்தது.

‘‘நீஙகள் போட்டியிடும் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி தானே.’’

‘‘எனக்கு ஓடுவதில் ரொம்பவும் மகிழ்ச்சி.’’

‘‘நமது நாட்டிற்கு பெருமை தேடித் தருவீர்கள் அல்லவா.’’

‘‘ஓடுவது ரொம்பவும் நன்றாகவிருக்கிறது.’’

‘‘போன ஒலிம்பிக்கில் வென்ற வீரர் பற்றி உங்கள் கருத்து?’’

‘‘ஓடுபவர்கள் எல்லாருமே மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் எல்லாரையும் நினைத்தால் நான் சமாதானமடைகிறேன்.’’

‘‘நமது நாடு விளையாட்டில் முன்னேறுமா?’’

அவன் பேசாதிருந்தான். பெரியவர் தலை குனிந்திருந்தார். கேள்வி திரும்பவும் கேட்கப்பட்டது.

‘‘எனக்கு ஓட மட்டுமே தெரியும். அதிலே எனக்கு கிடைப்பது தான் நான் ஓடுவதற்கு காரணம். நான் எனக்காகவே ஓடுகிறேன். ஓட்டத்தின் சிறப்புத்தான் அதன் காரணம். நான் பொய் சொல்ல முடியாது - எனக்கு வேறெதுவும் தெரியாது.

பெரியவர் கையிலிருந்த சுருட்டு காலடியில் கிடந்தது. முகம் பல மேடு பள்ளங்களாக மாற காலால் சுருட்டை நசுக்கித் தள்ளினார். பின்பு மெதுவாக கைகளை தளரவிட்டு எழுந்து நின்றார். அப்போது பேட்டி முடிந்துவிட்டது.

சிறிய நிலவுடன் இரவு முன்னேறுகின்ற நேரம். அந்தக் கட்டடத்தின் வெளியே வண்டியருகே நின்று கொண்டிருந்த அவர் பக்கம் வந்து நின்றான் அவன். சிறிது நேரம் வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தார் பெரியவர். பின்னர் தோள்களை குலுக்கிக் கொண்டே காரின் கதவைத் திறந்தார்.

அவன் வெகு தூரத்திற்கப்பாலிருந்த குன்றுகளைப் பார்த்தவாறே அவரிடம் கெஞ்சலுடன் கூறினான்.

‘‘இந்த அருமையான நிலவில் ஓட முடிந்தால் எப்படி இருக்கும் என்கிறீர்கள்? காலையில் அந்தக் குன்றுவரை சௌகர்யமாக ஓட்டம் முடிந்தது.’’

பெரியவர் காரின் உள்ளே நுழைந்து உட்கார்ந்து கதவைச் சாத்திக் கொண்டார். தலையை மட்டும்; வெளியே நீட்டி ‘‘நன்றாக இருக்கும் - வேண்டுமானால் நீ இப்பவே ஓடு. அந்தக் குன்றின் உச்சிக்கே போய் அங்கிருந்து கீழே குதித்து செத்துத் தொலை’’ என்று கூறிவிட்டு காரை ஓட்டிச்சென்று விட்டார்.

 


சிறுகதைகள்

முன்றில்

வீடுபேறு

மைலாப்பூர்...

 

மைலாப்பூர்


ஒரு மின்வெட்டுப் போல்தான் அது வந்து போயிற்று. வாங்கியிருந்த பயணச்சீட்டு கையிலிருந்தது. பஸ் இதுவரை வந்திருக்க வேண்டும்.

கண் விழிக்கையில் ஊரைக் காணவில்லை. தூரத்தில் கடல் சிறிதாகத் தெரிந்தது. அதைத் தவிர வேறு எல்லாமே வற்றியிருந்தது. அந்த இடம் எதுவென்று தெரிந்தது. ஆனால் அவன் மட்டுமே அங்கு நின்று கொண்டிருந்தான்.

நடந்து செல்கையில் பல வருடங்களுக்கு முன்னர் அவன் சென்றுலாவிய அந்தப் பூங்காவில் இரண்டு செடிகள் மட்டும் சிறியதாகத் தெரிந்தன. பூங்கா இல்லை. நிறையக் கட்டிடங்கள் முழுதாகவும் பாதியாகவும் முகப்பில் மாசு படிந்த பெயர்ப் பலகைகளுடன் நின்றன. அசைவற்றும் பழுதடைந்தும் கார்கள் - நடுத்தெருவிலே ரிக்ஷாக்கள் - போக்குவரத்து அதிகமான நேரத்தில் அது நடந்திருக்க வேண்டும்.

சைக்கிள் வண்டிகள் எராளமாகக் கிடந்தன. தூசுப் படலம். ஒரு சினிமாத் தியேட்டர் முகப்பில் பாட்டுப் பாடி கையை உயர்த்தி அசைவற்றிருக்கும் நடிகன் படம் பாதியாக நின்றது.

அஞ்சல் பெட்டியின் துவாரத்தில் ஒரு கவர் தெரிந்தது. கீழே அடுத்த நேரம் ஐந்து மணி எனத் தகவல்.

துணிக் கடைகளின் சரக்குகள் காற்றில் பறந்து கீழே தாழ்ந்து வீழ்ந்து கொண்டிருந்தன. அவைகளின் நிறங்களில் வேற்றுமை தெரிந்தது.

தூரத்துக் கோபுரமும் அதைச் சுற்றியுள்ள இடமும் அடையாளம் கூடவே பெற்றுத் திகழ்ந்தன.

அவன் நடக்கையில் அவனது சப்தம் மட்டுமே கேட்டது. சந்தியில் நான்கைந்து போக்குவரத்து வண்டிகள் விர்ரென்று வந்து இடப்பக்கம் ஒடித்துப் பாதிவரை திரும்பி பிறகு அந்த இடத்திலேயே நின்றிருக்க வேண்டும். போக்குவரத்துத் தீவுகள் இடிந்திருந்தன.

தெருவில் சாக்லேட் கவர்கள் காலில் உரசின. நடைபாதைக் கடைச் சாமான்கள் சிதறிக் கிடந்தன. சில ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பத்திரிகைகள் காற்றில் பறந்தன.

காற்று - அது வீசிக் கொண்டிருந்தது - கடற்காற்று - பக்கத்தில் அது வேண்டிய மட்டும் கொட்டிக்கிடக்கிறது.

அவனுக்கு எதுவும் புரிய வேண்டிய அவசியமில்லையென்பதுபோல நடந்தான். பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையென்னும்போது - அது அப்பட்டமாகத் தெரியும்போது - வியப்பு எங்கேயிருந்து வந்து விடும்? ஓட முடியவில்லையென்பதால் நடந்தான். மனிதர்களேயில்லாத வீடுகள் - சீவராசிகளேயில்லாத ஊர் - கோவிலும் குளமென்று சொல்லத்தக்க பள்ளமும் அவனுக்கு வழி காட்டின. கோவில் பக்கம் சில மின்சார விளக்குகள் எரிந்தன. சில கம்பிகள் தொங்கின.

அவன் வள்ளுவர் சிலை பார்க்க ஆசைப்பட்டிருந்தான் - ரொம்பக் காலமாக. கோவில் இருக்குமானால் அந்தச் சிலையும் இருக்குமென நம்பினான். திறந்தபடியிருந்த ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் தொங்கிய குலையிலிருந்து அழுகிய வாடைப் பழங்களைப் பிய்த்தெடுத்துச் சாப்பிட்டான். எந்த நினைவுமில்லாமல் செயல் நடந்து கொண்டிருந்தது.

தரையில் கரப்பான் பூச்சிகள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தன. எறும்புகள் எங்குமில்லை.
ஏதோ நினைவில் அவன் காறியுமிழ்ந்தான்
‘‘யாரது?’’

நாற்சந்தியோரமாக அவள் உட்கார்ந்து செருப்புத் தைத்துக் கொண்டிருந்தாள். ஆடைகள் புதிது. இன்றுதான் கடையிலிருந்து எடுத்து வந்து போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
அவளது எதிரில் சொல்லி வைத்தாற்போல் நின்றான். அவள்தான் கேட்டாள்:
‘‘யாரது?’’

‘‘நடுத்தெருவுக்குப் போகணும்.’’

எப்படிப் போக வேண்டுமென்று அவன் கேட்கவில்லை. செருப்பை உறுதி பார்த்துக் கொண்டே அவள் கூறினாள்.

‘‘எல்லாத் தெருவும் ஒண்ணுதான்.’’

சிறிது சிரிப்பு அவள் முகத்தில் தோன்றினாற் போலிருந்தது. களையாக வெள்ளை வெளீர் என்றிருந்தாள். கட்டுமஸ்தான உடம்பு.

‘‘செருப்புக் கடையில்லையா? புதுசா எடுத்திருக்கலாமே.’’

‘‘இல்லை - துணிக் கடையெல்லாம் திறந்திருக்கு. செருப்புக் கடையில்லை - அன்றைக்கு வெள்ளிக்கிழமை. திறக்கல்லே பூட்டியிருக்கு - உடைக்கணும்.’’

‘‘எத்தனை நாள் ஆச்சு?’’

‘‘தெரிஞ்சு இரண்டு நாள். குளக்கரை பஸ்லேதானே நீ வந்தே - பார்த்தேன். நீ மட்டும்தான் உள்ளேயிருந்தே. இரண்டு நாள் அப்படியே இருந்தே.’’

‘‘நாம மட்டும் எப்படி?’’

‘‘அது தெரியலே - நான் தெரியாத்தனமா காப்பி குடிச்சேன். அதிலே ஒரு கரப்பான் பூச்சியிருந்தது.’’

‘‘அவன் காறித் துப்பினான் - நான் தெரியாத்தனமா காப்பி குடிச்சேன். அதிலே ஒரு கரப்பான் பூச்சியிருந்தது.’’

அவன் காறித் துப்பினான்-ஏதோ நினைவு தெரிந்தவனாக.

‘‘அவைகளெல்லாம் எங்கே?’’

‘‘மிச்சம் மீதியா? - தெரியல்லே - எதுவும் தெரியல்லே. மற்றதெல்லாம் இருக்கு. சைக்கிள்-மோட்டார்-பண்டங்கள்-அதிலே பாத்தியா எனக்கு ஆச்சர்யப்படணம்னே தோணலே. உன்பெயர் என்ன?’’

‘‘முத்து-முத்துக்கறுப்பன்.’’

‘‘தெற்கத்திப் பேராயிருக்கு-மதுரையா?’’

‘‘அதுக்கும் தெக்கே-உன்பேர்?’’

‘‘காயத்ரி.’’

‘‘எப்படிச்சாப்டறே?’’

‘‘அது சௌகர்யமாயிருக்கு - சமைக்கவே செய்யலாம். ஹோட்டல் வேண்டிமட்டுமிருக்கு. ரொட்டிக் கடை நிறைய.’’

‘‘அரிசி?’’

‘‘தாராளமா இருக்கு. பாரேன் எத்தனை கடை?’’

‘‘தெக்கே இப்போ பஞ்சம்-அரிசி கொண்டு போகலாம்.’’

காயத்ரி அவனை நிமிர்ந்து நோக்கினாள். ‘‘முத்துக்கறுப்பன்’’ என்று முழு உச்சரிப்போடு கூப்பிட்டாள். வானத்தைப் பார்த்துக் கொண்டாள்.
‘‘யாருக்காக முத்துக்றுப்பன்?’’

‘‘என் பிள்ளைகளுக்கு’’ என்று சொல்ல வாயெடுத்தவன் நிறுத்தினான். அந்தப் பெண் அமைதி பெற்றுத் தனது தையலை முடித்தாள்.

அதிசயங்கள்
விளைவதில்லை
யாரும்
அதிசயங்கள்
படைத்ததில்லை
அதிசயங்கள்
வேண்டுமானால்
சற்றுப்
பாருங்களேன்.

‘‘எங்கே படுத்துக் கொள்றே?’’

‘‘எங்கே யுந்தான் - இப்போ இந்த பாங்க் உள்ளே - இடம் நல்லாவேயிருக்கு.’’

இருவரும் டீக்கடையொன்றில் நுழைந்து பானம் தயாரித்து அருந்தினார்கள். பிஸ்கட் நிறையவிருந்தது.

‘‘நிறைய பல சரக்குக் கடை - நல்ல பருப்பு. எதிர்க் கடையில் மட்டும் நூறு முட்டையிருக்கும்.’’

‘‘நான் சமைப்பேன் காமாட்சி.’’

‘‘காயத்ரி - காமாட்சியில்லே - இரண்டு பேர் இருந்தா பெயர் அவசியம்.’’

‘‘நீ இந்த ஊர்ப் பெண்ணா, படிச்சிருக்கியா-படிச்சிருக்கணும்.’’

வெயிலில் அந்த ஊர் உருகுவதுபோல் இருந்தது. முத்துக்கறுப்பன் அந்த ஹோட்டலுள் நுழைந்து ஸ்டோரில் தானியங்களை அளவாகக் கலந்து ஊறப்போட்டான். இரவிற்குள் அரைத்துவிடலாம். அரவை இயந்திரங்கள் ஏராளமாகக் கிடந்தன.

அவள் கையில் இரண்டு முட்டைகளுடன் வந்து சேர்ந்தாள். வெயில் சிறிதும் தணியவில்லை. முதன்முறையாக அவனது கண்களில் வியப்புத் தோன்றிற்று.

‘‘நீ இதெல்லாம் சாப்பிடமாட்டேன்னு நினைச்சேன்.’’

‘‘ம்.’’

‘‘நான் சாப்பிடறதில்லே.’’

‘‘சரி-பிரிஜ்ஜிலே இதுதான் கடைசி. வேறு கடை தேட வேண்டியதுதான்.இதோ ஜெலுசில் மாத்திரை-நீ சாப்பிடுவியா.’’

முத்துக்கறுப்பன் பேசாதிருந்தான். அவனுக்குப் பசி போய் விட்டாற் போலிருந்தது.

வெளியே வந்து நடைபாதைப் பழைய புத்தகக் கடையருகே உட்கார்ந்தான். பானங்கள் கலக்கப்படும் சப்தம் முடிந்த சிறிது நேரத்தில் காயத்ரி வெளிவந்தாள்.

இவள் பச்சை முட்டையையே சாப்பிட்டிருப்பாள் என்று நினைத்தான் அவன்.

‘‘ஆச்சா’’ என்றான் இகழ்ச்சியோடு.

அவள் தலையசைத்துப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

‘‘வெயில் அதிகம்.’’

‘‘இது மாசம் சித்திரை.’’

‘‘தேதிதான் தெரியாது.’’

‘‘நான் பஸ்லே வந்து சேர்ந்தது இருபதாம் தேதி.’’

‘‘அது சரி- இன்னிக்குத் தேதி தெரியாதில்லே.’’

சிறிது நேரங்கழித்து அவன் சொன்னான்.

‘‘அமவாசை வரும். அப்போ கண்டு பிடிச்சிடலாம்.’’

கையில் அகப்பட்டது பழைய புத்தகம் - தேவாரம் - அவன் அதைப் புரட்டும்போது வாய்விட்டுப் படிக்க வேண்டும் போலிருந்தது. அவளைக் கேட்டான்.

‘‘உனக்குத் தமிழ் படிக்க வருமா?’’

‘‘எழுத்துக் கூட்டிப் படிப்பேன்.’’

‘‘வீட்டிலே என்ன பாஷையிலே பேச்சு.’’

‘‘வீட்டிலே பேச்சே இல்லை - யாருடனும் - பாச்சாகிட்டேதான் பேசுவேன்.’’

‘‘யாரு-உன் தாத்தாவா?’’

‘‘பாச்சா-என் பூனைக்குட்டி.’’

‘‘ஓ-என்கிட்ட பூனை இல்லே. நாய் வளர்த்தேன்.’’

‘‘நாய்தானே - அது அஞ்ஞானமான பிராணி - பூனை மாதிரியில்லே.’’

‘‘தெரியுது.’’

‘‘ஆனா இந்த உரோடு அந்த என் பு+னையும் போச்சு. நான் கண்விழித்தபோது தெருவில் கிடந்தேன் - எத்தனை நாளோ - எனக்குப் புரிந்தபோது - நம்பமாட்டே - நான் சந்தோஷப்பட்டேன். ஆனா என் பு+னை போச்சு - என் புத்தகங்களும் போச்சு.’’
உயரே மிகவும் கூர்மையாகப் பார்த்து, தான் பார்த்தது ஒரு குருவி இல்லை - இலைதான் - என்று கண்டு பிடித்தான் முத்து. அவள் பேசிக் கொண்டிருந்தாள்.

‘‘எனக்கு என் கூட்டம் பிடிக்கல்லே-உன் கூட்டமும் ஆகாது - வித்யாசமேயில்லை.’’

தன் கையிலிருந்த புத்தகத்தைத் தூர வீசி எறிந்தாள் அவள்.

அது ஒரு மாலை நேரமாக மாறிற்று. சூரிய ஒளி பழைய மாதிரி வழக்கமான மாலை நேரத்திற்கானதாய்த் தெரியவில்லை. கடற்கரைச் சாலை வழியாக இருவரும் நடந்து கொண்டிருந்தனர்.

‘‘ஒரு கார் எடுத்துக் கொண்டு போகலாம்’’ என்றான் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு.

‘‘உனக்குக் கார் ஓட்டத் தெரியுமாக்கும்.’’

‘‘சைக்கிளே தகராறு.’’

‘‘எனக்குத் தெரியும். காலையிலே போகணும். சைக்கிள் நல்லது. சாலையிலே நிறைய கார் மறித்துக் கொண்டிருக்கு. பிளாட்பாரத்திலேயே சைக்கிள் விடலாம்.’’

‘‘எங்கே?’’

‘‘கன்னிமரா நூல் நிலையத்திற்கு.’’

‘‘ஏன்?’’

‘‘சிலது படிக்கணும்-புத்தகங்களைத் தேடணும்.’’

‘‘ஓ.’’

‘‘அதெல்லாம் உனக்குப் புரியாது-இது தேவாரமில்லே.’’

‘‘அது உண்மைதான். ஆனா எனக்கு அந்தப் புத்தகம் இப்பவும் நிம்மதியாயிருக்கச் செய்யுது.’’

‘‘இப்பவுமா-ஆகா?’’

கைகளைக் கழுத்தளவு உயர்த்தி இகழ்ச்சியாகக் கூறினாள். அவளது பக்கம் முட்டையோடு வேறு பலவற்றின் வாசனை பரிணமித்ததை அவன் உணர்கிறான்.
கடல் வித்தியாசமில்லாமல் இருந்தது-சப்தம் சீராக. அங்கே சிறிது நேரம் அவர்கள் பேச்சுத் தொடரவில்லை.
மணலில் கரப்பான் பூச்சிகள் ஊர்ந்தன. நேரமாவது தெரியாது உட்கார்ந்திருந்தனர். கைமீது ஏறிய ஒரு பூச்சியைத் தட்டி விடாது அவள் பார்த்து கொண்டிருந்தாள். இருட்டியது.

‘‘இங்கே முப்பது லட்சம் இந்தப் பூச்சிகள் இருக்கும். முன்னாலும் இருந்தது.’’

‘‘நீ நாளைக்கு எப்போ நூல் நிலையம் போறே.’’

‘‘விடிந்ததும் - நீயும் வரயா?’’

‘‘இல்லே - நான் கடல் பக்கமாவேயிருக்கேன். இந்த சர்ச் பக்கத்திலே இருக்கட்டுமா. இல்லே உள்ளே வந்து குளக்கரைப் பக்கம் இருக்கட்டுமா?’’

‘‘எதுக்கு?’’

‘‘கன்னிமரா நூல் நிலையத்திற்கு.’’

‘‘ஏன்?’’

‘‘சிலது படிக்கணும் - புத்தகங்களைத் தேடணும்.’’

‘‘ஓ.’’

‘‘அதெல்லாம் உனக்குப் புரியாது - இது தேவாரமில்லே.’’

‘‘அது உண்மைதான். ஆனா எனக்கு அந்தப் புத்தகம் இப்பவும் நிம்மதியாயிருக்கச் செய்யுது.’’

‘‘இப்பவுமா - ஆகா?’’

கைகளைக் கழுத்தளவு உயர்த்தி இகழ்ச்சியாகக் கூறினாள். அவளது பக்கம் முட்டையோடு வேறு பலவற்றின் வாசனை பரிணமித்ததை அவன் உணர்கிறான்.
கடல் வித்தியாசமில்லாமல் இருந்தது - சப்தம் சீராக. அங்கே சிறிது நேரம் அவர்கள் பேச்சுத் தொடரவில்லை.

மணலில் கரப்பான் பூச்சிகள் ஊர்ந்தன. நேரமாவது தெரியாது உட்கார்ந்திருந்தனர். கைமீது ஏறிய ஒரு பூச்சியைத் தட்டி விடாது அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். இருட்டியது.

‘‘இங்கே முப்பது லட்சம் இந்தப் பூச்சிகள் இருக்கும். முன்னாலும் இருந்தது.’’

‘‘நீ நாளைக்கு எப்போ நூல் நிலையம் போறே.’’

‘‘விடிந்ததும்-நீயும் வரயா?’’

‘‘இல்லே - நான் கடல் பக்கமாவேயிருக்கேன். இந்த சர்ச் பக்கத்திலே இருக்கட்டுமா. இல்லே உள்ளே வந்து குளக்கரைப் பக்கம் இருக்கட்டுமா?’’

‘‘எதுக்கு?’’

‘‘நீதானே கேட்டே.’’

‘‘நீ வரயான்னு கேட்டேன். நான் திரும்பி இங்கே வரதா சொல்லலை. கன்னிமராப் பக்கம் ரொட்டிக் கடை நிறைய இருக்கும்.’’

‘‘முட்டையும் இருக்கும்.’’

‘‘ஆமாம்.’’

தெரியாத கடற்பரப்பை அவன் ரொம்ப ரேம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, திடீரெனக் கேட்டான்.

‘‘நீ இப்பவே போனாலென்ன?’’

‘‘லைபரிக்கா?’’

‘‘ம்.’’

‘‘போலாம். திறந்துதான் இருக்கும். இரவிலே இனி எனக்கென்ன பயம். ஆனா எங்கே விளக்கிருக்குமோ என்னவோ - படிக்கணுமே - பிரயோசனமில்லாமப் போயிடும்.’’

‘‘நான் அதுக்குச் சொல்லலே. யாராவது ஒருவர் போய் விடுவது நல்லது.’’

காயத்ரி மூச்சு விட்டாள்.

‘‘ஆமாம். அதைத்தான் நானும் நினைச்சேன். நல்லது - கொட்டது - கலாச்சாரம் - பண்பாடு - ஆன்மீகம் எல்லாவற்றையும் பத்தி யோசிக்கத்தானே வேணும். நில நடுக்கோடு எங்கேயிருக்குன்னு கண்டு பிடிக்கணும். அங்கிருந்து கணக்குப் பார்த்துச் சொந்த ஊரைத் தெடிப் பிடிக்கணும். அங்கிருந்து கணக்குப் பார்த்துச் சொந்த ஊரைத் தேடிப் பிடிக்கணும். நானும் நீயும் ஒரு இடத்தில் இருக்க முடியாது.’’

‘‘இந்த இடம் உனக்குப் பிடித்தமானதாகயிருந்தால் சொல்லு - நான் இப்பவே போயிடறேன்.’’

‘‘எனக்கு ஆட்சேபணையே இல்லை. எனக்கு என் கரப்பான் பூச்சிகளே போதும்.’’

‘‘நீ அசிங்கியமானவ.’’

‘‘நீ மட்டமானவன்.’’

அவர்கள் வெவ்வேறு திசைகளில் நடந்து சிறு பூச்சிகள் போல் மறைகின்றனர்.

எந்தச்சப்தமும் இல்லாது அந்த ஊர் மட்டும் நின்று நிலைக்கிறது.

 


சிறுகதைகள்

{load position article1}

 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved